இதழ் 36

சித்திராங்கதா – 35

கலாராணியின் இரசிகனாய்

பொழுது போக்க வழியறியாத இரண்டு ஊர்ப்பெண்கள் சித்திராங்கதா வீட்டு வாசலில் பொழுதைப் போக்க வந்தனர்.

‘சித்திராங்கதாவின் நிலையை எண்ணும் போது மிகவும் பரிதாபமாகத்தான் இருக்கிறது அக்கா. அவள் ஆடற்கலைக்கு இப்படியொரு சோதனை வந்திருக்கக்கூடாது’ என்றாள் ஒருத்தி.

‘சோதனை எல்லாம் தானாக வந்ததென்றா நினைக்கிறாய்? எல்லாம் அவரவர்கள் தேடி உழைத்துக் கொண்டதுதானே. ஆடற்கலையினில் தன்னை மிஞ்ச இங்கு யாருமே இல்லை என்ற நினைப்பில் இருந்தாளே, அதற்காகத்தான் இந்தத் தண்டனை. அனுபவிக்கத்தானே வேண்டும். இதில் நீ ஏன் பரிதாபப்படுகிறாய்’ என்றாள் மற்றையவள்.

‘நீங்கள் ஏனக்கா இப்படிப் பேசுகிறீர்கள்? அவளுடைய ஆட்டத்தை அன்று வீரமாகாளி கோயில் வாள் வழங்கும் விழாவில் பார்த்தவர்கள் எல்லோருமே வாய்பிளந்து நின்றார்களாமே, ஊரெல்லாம் சொல்வதைக்கேட்டு நானும் அவள் அகிலத்திற் சிறந்த ஆடலரசி என்றுதானே நினைத்திருந்தேன்’

‘அடி பெண்ணே, ஊர்வாய்க்கு பத்தை பத்தாயிரமா கதைக்கிறதுதானே பிராக்கு, ஏன்? அன்றைய அந்த ஊரே வாய்பிளந்த ஆட்டத்தை அரசர் காணவில்லையா? கண்டிருந்தவர் தானே இன்று அந்த ஆட்டம் அரங்கேற வேண்டாம் என்று தடை விதித்திருக்கிறார். அப்படியென்றால் குற்றம் எதில் என்று இன்னும் உனக்கு விளங்கவில்லையா?’

‘அப்படியென்றால் சித்திராங்கதாவின் ஆட்டத்தில் குறை கண்டுதான் அரசர் அரங்கேற்றம் அரசவையில் வேண்டாமென்று மறுத்துவிட்டார் என்கிறீர்களா அக்கா? நான் என்னவோ வன்னியர் விழாவினால்த்தான் அரங்கேற்றம் தடைப்பட்டுவிட்டது என்று நினைத்திருந்தேன்’

‘பேதைப் பெண்ணே, அது கௌரவத்திற்காக கூறிக்கொள்வது. அரசர் கூட ஏதோ பரிதாபத்தில் அப்படியே இருக்கட்டும் என்று விட்டுவிட்டார் போலும். அதற்காக அதுதான் காரணம் என்று நினைப்பது பெரும் முட்டாள்தனமல்லவா? உண்மை என்னவென்று கொஞ்சம் யோசித்தாவது புரிந்து கொள்ள வேண்டாமா?’

‘ஆனால் எனக்கென்னவோ உங்கள் கூற்றில் இன்னும் நம்பிக்கையில்லையக்கா. ஒருவர் இருவர் என்றல்லா சித்திராங்கதாவின் நாட்டியம் பற்றி நல்லோர்க்கோட்டை முழுவதுமே புகழ்ச்சொற்கள் எப்போதும் இருந்து கொண்டுதானே இருக்கின்றன. அவையெல்லாம் பொய்யாக இருக்குமா?’

‘நீயும் அவர்களைப்போலவே முட்டாளாக இருக்கிறாயேடி பெண்ணே; அவையெல்லாம் வெறும் புகழாரங்கள் மாத்திரமே! இப்போது நாட்டில் எங்கு பார்த்தாலும் அது மட்டுந்தானே மிஞ்சிக்கிடக்கின்றது. புகழாரங்கள் தாண்டி உருப்படியாய் இங்கு எந்தக்காரியமும் நிகழ்ந்ததாயில்லை. அப்படிப்பட்ட அநாவசிய புகழாரத்தில் ஒன்றுதான் சித்திராங்கதா விடயமும்’

வாய்க்கு வந்தபடி பேசிக்கொண்டிருந்தவர்களின் குரல் சித்திராங்கதாவிற்கு தெளிவாகவே கேட்டது. சிந்தனை முழுதும் வேதனையாக்கிக் கிடந்தவளை இந்த வார்த்தைகள் பெரிதும் துன்புறுத்தின. ஆனால் அவர்களை எதிர்த்து தக்க பதிலடி வழங்க திராணி அற்றவளாக அவள் வாசற்கதவோரம் அமர்ந்திருந்தாள். அந்த நேரத்தில் அவளிற்கு ஒரு மூன்றாம் குரல் கேட்டது.

‘அடி பெண்களே, பொழுது போக்க வழி தெரியாவிட்டால் இப்படி போதாத காலத்து கதைகளை கூறிக்கொண்டிருப்பீர்களா? அதுவும் ஆடலரசி சித்திராங்கதாவைப் பற்றியேவா? – செல்லுங்கள் வெளியே’ என்று உரத்துப் பேசியது அந்தக்குரல்.

‘யார் நாமா போதாத கதை கூறுகிறோம்? நீர் தான் கூறுகிறீர்? அரங்கேற்றமே நடவாதவளை இன்னும் எப்படித்தான் ஆடலரசி என்கிறீர்களோ?’

‘அரங்கேற்றம் நிகழவில்லை என்பதற்காக சித்திராங்கதாவின் ஆடற்கலையில் ஐயம் எழுப்ப முடியுமா? அவள் ஆட்டத்தை எங்கேனும் இதுவரை கண்டிருக்கிறீர்களா? வெறுமனே பொறாமை கொண்டு விலகித் திரிந்தவர்கள் இன்று சந்தர்ப்பம் வாய்த்ததும் வாயளக்க வந்துவிட்டீர்களோ? ‘ என்றது அந்த மூன்றாம் குரல்.

‘எம் வாயை அடக்குவதால் ஊர் பேச்சை மாற்ற முடியாது என்பதை மறவாதீர்- ஆடற்கலையின் அதிசயப் பிறவி என்று எல்லோரும் இப்படிப் பொய்ப்புகழ் உரைத்தே இன்றைக்கு இந்த நிலமைக்கு ஆளாக்கியிருக்கிறீர்கள்- இனியாவது திருந்தி நடவுங்கள்’

‘யாரைப்பற்றி பொய்ப்புகழ் என்கிறீர்கள்? ஆடற்கலையின் அடிப்படை கூட அறியாத நீங்களெல்லாம் ஆடலரசி பற்றி பேசிக்கொண்டிருக்கிறீர்கள். இதுவே பெரும் அபத்தமாகும். எல்லாம் காலத்தின் கொடுமை. இதற்கு மேல் இவ்விடம் நில்லாது விரைந்து விலகுங்கள்.. ம்…. செல்லுங்கள்’ என்று கோபமாக உரப்பியது அந்தக்குரல்.

பெண்கள் இருவரும் என்னவோ செய்யுங்கள் என்பது போல் அலட்சிய நடையுடன் விலகிச் சென்றனர்.

அந்த மூன்றாங் குரல் யாருடையது என்பது சித்திராங்கதாவிற்கு தெளிவாய்ப் புரியவில்லையாயினும் அந்தக் குரல் கூறிய பதில்கள் அவளிற்கு ஓர் இணக்கமான நிம்மதியைக் கொடுத்தது.

‘சித்திராங்கதா…. தேவி சித்திராங்கதா…’ என்று அந்தக்குரல் தன்னை அழைக்கும் சத்தம் கேட்டு மெதுவாய் எழுந்து சென்று வாசலருகே பார்த்தாள் சித்திராங்தா.

உக்கிரசேனன் நின்று கொண்டிருந்தான்.

உக்கிரசேனனின் குரல்தான் அந்த மூன்றாம் குரல் என்பது இப்போதுதான் சித்திராங்கதாவால் நினைவுபடுத்திக் கொள்ள முடிந்தது.
அவனைக் கண்டாலே கோபங் கொள்ளும் சித்திராங்கதாவிற்கு இப்போது கோபம் வரவில்லை. இருந்தாலும் கேட்டாள்.

‘என்ன வேண்டும் உக்கிரசேனா? தந்தை நல்லூர்க் கோட்டை விழாவிற்கு சென்றிருக்கிறார். வருவதற்கு இரண்டு மூன்று நாட்கள் கூட ஆகலாம் என்று கூறியிருந்தார். நீர் சென்று பின்னர் வாரும்’ என்றாள்.

‘பெரு வணிகர் எச்சதத்தரின் கடமையுணர்வு கண்டு வியக்கிறேன் தேவி, தங்களது அரங்கேற்றத்தை நிறுத்தி நிகழ்கின்ற விழாவிற்காக கோட்டைக்கு சென்றிருக்கிறாரே’

‘அவர் கடமை தவறாத ஊழியரல்லவா; திறைப்பொருடகள் அதிகம் வந்து சேரும் வேளையில் பெருவணிகர் உடனிருக்க வேண்டும் என்று அரண்மனை ஆணை வந்தது. திரும்பி வருவதற்கு நாட்கள் ஆகலாம் என்று கூறிவிட்டு புறப்பட்டு விட்டார்’ ஒரு வெறுப்புக்கலந்த முகத்தோடு சொல்லிக் கொண்டிருந்தாள் சித்திராங்கதா.

‘ஆமாம் . ஆமாம் . திறைப்பொருட்கள் பெருமளவில் வரும் போது அரசர் எல்லாவற்றையும் மறந்து விடுவார் தானே; அதுதான் தங்கள் நாட்டிய அரங்கேற்றத்தை தடுத்து நிறுத்தியதை கூட மறந்து பெருவணிகரிற்கு அழைப்பு விடுத்திருக்கிறார். தாங்களோ இங்கு தனிமையில் இருந்தபடி ஊரவர்கள் பொழுதுபோக்க வாயளக்கும் புலம்பல் மொழிகளை எல்லாம் கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள்’

ஒரு பெருமூச்சு விட்டுக் கொண்டு தொடர்ந்தாள் சித்திராங்கதா.

‘அதற்கென்ன உக்கிரசேனா, சேற்றில் புதைந்த யானையை காகங்கள் குட்டத்தானே செய்யும். சேற்றில் புதைந்தாலும் நான் யானை என்பதை மறவேன்’

‘அற்புதம் தேவி, தங்களை யாராலும் சரித்துவிட முடியாது என்பது உண்மைதான். நான் தங்களைப் பார்ப்பதற்காகத்தான் இவ்வேளை இவ்விடம் வந்தேன்’.

‘என்னைப் பார்ப்பதற்கா? என்ன காரணம் உக்கிரசேனா? நீரும் அந்தக் காகக்கூட்டத்தில் ஒருவர் தானோ?’

‘அப்படியில்லை தேவி, நான் அந்தக்காகக் கூட்டத்தை கலைப்பதற்காகவே வந்தேன்’ என்று கூறி உரக்கச் சிரித்தான். ஆனால் சித்திராங்கதா அந்தச் சிரிப்பை பொருட்படுத்தாது நிற்பதை உணர்ந்ததும் தன் சிரிப்பை நிறுத்தி ‘இப்போது தங்களிடம் ஒரு முக்கியமான தகவலை கூறிவிட்டுப் போகத்தான் வந்தேன்’ என்றான்.

‘இனி என்ன முக்கியமான தகவல் எனக்கு தேவைப்படப்போகிறது. சரி கூறும். பார்க்கலாம்.’

‘அப்படியில்லை தேவி. இது மிகவும் இரகசியமானது. எனது பிரபு வன்னி வேந்தர் வன்னியத்தேவர் அவர்களிடம் தங்களைப்பற்றியும் தங்கள் ஆடற்கலை பற்றியும் நான் அடிக்கடி சொல்வதுண்டு. இப்போது தங்கள் அரங்கேற்றத்தை அரசர் தடுத்து நிறுத்து விட்ட செய்தி கேட்டு அவரும் அதிகம் வருத்தம் கொண்டார். வன்னியர் விழாவிற்காய் யாழ்ப்பாணம் வந்திருக்கும் அவர் தங்களை சந்திக்க விரும்புவதாய் கேட்டுக் கொண்டார்’

‘தமது மன்னரை நான்
எதற்கு சந்திக்க வேண்டும் உக்கிரசேனா?. ஒன்று கூறுகிறேன். புரிந்து கொள்ளும்.
யாழ்ப்பாண அரசவையிலே என் அரங்கேற்றம் நிகழ வேண்டும் எனத் துணிந்திருந்தேன். அன்றி வேறோர் அவையிலும் என் அரங்கேற்றம் நிகழ சாத்தியமேயில்லையாகும்’ என்றாள் உறுதியான குரலில் சித்திராங்கதா.

‘தங்கள் எண்ணம் நான் நன்கறிவேன் தேவி. ஆனால் தங்களிற்கு தற்சமயம் உதவ வல்லவர் வன்னியத்தேவரே என்று நான் கருதுகிறேன். ஆதலால் வன்னியத்தேவரை தாங்கள் சந்திப்பது தங்களிற்கு அனுகூலமாய் அமையும் என்று கருதுகிறேன்’.

‘எத்தகைய அனுகூலம் இனி அமையப் போகிறது உக்கிரசேனா? அது எத்தகையதாய் இருந்தாலும் எனக்கு இனி அவசியமில்லை. நீர் செல்லலாம்’ என்றாள் சித்திராங்கதா.

‘தேவி, தாங்கள் எடுக்கும் முடிவுகளில் எவ்வளவு உறுதியானவர் என்பதினை யாவரும் அறிவர். இருந்தாலும் நான் தங்களை வற்புறுத்துவது ஏனென்றால் வன்னி சிற்றரசரை தாங்கள் சந்திப்பதில் வன்னி சிற்றரசர் பெரிதும் மகிழ்ச்சியடைவார். தங்கள் ஆடற் திறமைக்கு அப்படியொரு இரசிகர் அவர். அவர் யாழ்ப்பாணம் வரும் போது தங்களை எப்படியாவது சந்திக்க வேண்டும் என்று என்னிடம் கேட்டுக் கொண்டார். ஆடற் கலாராணி தன் இரசிகன் ஒருவனாய் அந்த வன்னி சிற்றரசரை சந்தித்தால் என் தொழில்தர்மத்தை நான் மீறாதவனாகிவிடுவேன்’ என்று மன்றாடிய குரலோடு கேட்டான் உக்கிரசேனன்.

தன் நாட்டியத்திறமை மீது எப்போதுமே தாளாத கர்வம் கொண்டிருந்த சித்திராங்கதாவின் மனது சில நொடிகளிற்கு முன் பேசிச்சென்ற அந்த இரண்டு பெண்களின் இழிமொழிகளைக் கேட்டு பெரிதாய் காயமடைந்திருந்தது. அவ்வேளையில் உக்கிரசேனன் தன் ஆடற்திறமை பற்றி புகழுரைத்து அந்த இருவரையும் விரட்டியடித்ததில் அவள் உள்ளம் குளிர்ந்து போனது என்பதும் மறுப்பதற்கில்லை. வன்னி சிற்றரசர் பற்றி அவள் ஏதுமறியாதவள் ஆயினும் இப்போதிருந்த மனநிலையில் தன் திறமைக்காக மீண்டும் ஓர் கௌரவம் கிடைக்கிறது என்கிற மிதப்பில் வன்னி சிற்றரசரை சந்திப்பதற்கு சம்மதம் தெரிவித்தாள்.

நன்றி கூறி விடைபெற்றான் நயவஞ்சகன் உக்கிரசேனன். தான் எதிரில் நின்றாலே எரிந்து விழுபவளை தன் வாக்கிற்கு கட்டுப்பட வைக்க அவன் மேற்கொண்ட முயற்சி இன்று வெற்றி பெற்றுவிட்டது. அந்தக் களிப்பில் அவன் கர்வத்தோடு நடந்து சென்றான். அந்த இரண்டு பெண்களிற்குமான சன்மானம் வன்னிமை அரசிடமிருந்து முறையாய் வழங்கப்பட்டது.

Related posts

விநோத உலகம் – 02

Thumi202121

2021 ஐ.பி.எல் இல் சிறந்த வீரர் யார்?

Thumi202121

நஞ்சுணவும் இயற்கை முறை விவசாயமும்

Thumi202121

Leave a Comment