2006ம் ஆண்டு யூன் மாத இறுதியில் ஒரு கிரிக்கெட் போட்டி நடந்தது இங்கிலாந்தில்; 19 வயதுக்கு உட்பட்ட அணியின் ஆரம்ப பந்து வீச்சாளர் ஒரு புதிய வீரர் ஆடுகளம் நுழைவதை அவதானித்தார். ஆனால் வந்த துடுப்பாட்ட வீரனோ ஒரு பெண். ஆம், அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ண் நகரின் பிரபல தனியார் பாடசாலையின் ஆண்கள் அணி சார்பாக களம் கண்டவர் பதின்நான்கு வயதான துடுப்பாட்ட வீராங்கனை. அவர் வேறு யாரும் அல்ல, சேஸிங் குயின் என்றும் மெகா ஸ்டார் என்றும் கொண்டாடப்படுகிற, அவுஸ்திரேலிய மகளீர் துடுப்பாட்ட (Cricket) அணியின் தலைவி மற்றும் மட்டையாளர் (Batter) தான்; 30 வயதான மெக்கானன் மொய்ரா லேனிங்.
இவர் சிங்கப்பூரில் 1992ம் ஆண்டு மார்ச் மாதம் 25ம் திகதி பிறந்திருந்தாலும், சிறு வயதிலேயே இவரது குடும்பம், அவுஸ்திரேலியாவின் சிட்னி நகருக்கு குடிபெயர்ந்தது. இதன் மூலம் தன் கிரிக்கெட் பயணத்தை பத்து வயதிலேயே ஆரம்பித்து நியூ சவுத் வேல்ஸ் பிராந்திய அணியை பிரதிநிதித்துவம் செய்தார். மீண்டும் இவரது குடும்பம், மெல்பேர்ண் க்கு குடிபெயர்ந்த நிலையில், அங்கு மகளீர் அணி இல்லாத காரணத்தால் ஆடவர் அணியில் விளையாடினார். இதன் விளைவாக மேற்குறிப்பிட்ட நிகழ்வு நடந்தது.
இதன் மூலம் 14 வயதில் முதல் தெரிவு பதினொருவர் அணியில் விளையாடிய முதல் பெண் என்ற சாதனையை படைத்தார்.
அவுஸ்திரேலியா உள்ளூர் தொடரான மகளீருக்கான தேசிய கிரிக்கெட் லீக்கில் விக்டோரியா பிராந்திய அணி சார்பாக 2008ம் ஆண்டு டிசம்பரில் தனது உள்ளூர் (Domestic) கிரிக்கெட் பயணத்தை ஆரம்பித்தார். பின், 2010ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் கால்பதிக்க வாய்ப்பு கிடைத்தது. ஒரு ரி20 போட்டியின் போது தன் சர்வதேச கிரிக்கெட் அறிமுகத்தை (2010, டிசம்பர்) மேற்கொண்டிருந்த லேனிங் க்கு, சர்வதேச ஒருநாள் ஆட்டத்தில் அறிமுகமாகும் வாய்ப்பும் (2011, சனவரி) கிடைத்தது. முதல் ஆட்டத்தில் 20 ஓட்டங்கள் மட்டுமே எடுத்த லேனிங், தன் இரண்டாவது சர்வதேச ஒருநாள் ஆட்டத்தில் சதம் விளாசிய லேனிங், சர்வதேச கிரிக்கெட்டில் ஆஸி சார்பாக இளம் வயதில் மூன்று இலக்க ரன்கள் எடுத்த வீரர் என்ற சாதனையைப் படைத்தார். இவர் முறியடித்த இந்த சாதனை ரிக்கி பாண்டிங் வசம் இருந்தமை குறிப்பிடத்தக்கது.
சர்வதேச கிரிக்கெட்டில் இலக்கை துரத்தி அடிக்கும் சேஸிங் குயின் ஆனது, ரிக்கி பாண்டிங் தலைமை தாங்கிய ஆஸி அணியின் வெற்றிகளுக்கு சவால் விடும் அதை மிஞ்சிய ஒரு ஆஸி அணியின் தலைவி ஆனது என்பன அடுத்த இதழில்…..