அமெரிக்காவின் முன்னாள் வெளியுறவுச் செயலாளர் ஹிலாரி கிளிண்டன் தனது ஹார்ட் சொய்சஸ் (Hard Choices) என்ற புத்தகத்தில், 2012இல் விளாடிவோஸ்டோக்கில் பொருளாதார உச்சிமாநாட்டின் விளிம்பில் நடந்த ரஷ்சிய ஜனாதிபதி விளாடிமிர் புடினுடனான ஒரு உரையாடலை விவரிக்கிறார்:
ஹிலாரி 1941 மற்றும் 1944க்கு இடையில் நாஜிகளின் முற்றுகைக்குட்பட்ட நகரத்தில் உள்ள ஒரு நினைவுச்சின்னத்திற்குச் சென்றதாகக் குறிப்பிடுகிறார். அது புடினுடன் ஒரு நாணத்தைத் தாக்கியது. புடின் பிறந்த லெனின்கிராட் (இப்போது செயின்ட் பீட்டர்ஸ்பர்க்) பக்கமே திரும்பியது. 1944இல் மிருகத்தனமான ஜேர்மன் லெனின்கிராட் முற்றுகையின் போது, புடினின் தந்தை ஒரு சிறிய இடைவெளிக்காக முன் வரிசையில் இருந்து வீட்டிற்கு வந்தார். அவர் தனது மனைவியுடன் வசித்த அடுக்குமாடி குடியிருப்பை அணுகியபோது, தெருவில் குவியல் உடல்கள் அடுக்கி வைக்கப்பட்டிருப்பதையும், காத்திருக்கும் பிளாட்பெட் டிரக்கில் ஆட்களை ஏற்றிச் செல்வதையும் அவர் கண்டார். அவர் நெருங்கி வந்தபோது, ஒரு பெண்ணின் கால்கள் தனது மனைவியுடையதை ஒத்ததாக இருப்பதை உணர்ந்தார். அந்த பெண்ணின் காலணிகள் அதனை மேலும் உறுதிப்படுத்தின. ஓடிச்சென்று மனைவியின் உடலைக் கேட்டார். பெரும் வாக்குவாதத்திற்குப் பிறகு, அந்த உடல் ஒப்படைக்கப்பட்டது. புடினின் தந்தை அவரது கைகளில் எடுத்து, அவளைப் பரிசோதித்த பிறகு, அவள் இன்னும் உயிருடன் இருப்பதை உணர்ந்தார். அவர் அவளை தங்கள் குடியிருப்புக்கு அழைத்துச் சென்று நலம் பெறச் செய்தார். எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு, 1952இல், அவர்களின் மகன் விளாடிமிர் பிறந்தார்.
மேற்குறிப்பிட்டவாறு ரஷ்சியத் தலைவர் தனது பெற்றோரைப் பற்றிய ஒரு கதையைத் விபரித்ததாக ஹிலாரி குறிப்பிட்டுள்ளார். இவ்உரையாடலில் இதுவரை கேட்டிராத ஒரு கதையை ஹிலாரி பொதுவெளியில் தெரியப்படுத்தியுள்ளார். இது தொடர்பில், ரஷ்சிய வரலாற்று நிபுணர்களும் ஆச்சரியப்பட்டனர். இவ்உரையாடலின் நம்பகத்தன்மை தொடர்பில் பல மாறுபட்ட கருத்தாடல்கள் காணப்பட்டாலும், ஹிலாரியின் கருத்தாக அவரது நூலில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
அவர்களின் கருத்துப்பரிமாற்றம் ஒரு நிமிடம் நீடித்தது. இது புடினின் அரசியல், உளவியல் மற்றும் மேற்குலகில் ரஷ்சியாவின் அணுகுமுறை பற்றி மேலும் கூறுகிறது. பிறப்பை சரித்திரமாக அடையாளப்படுத்த விரும்பும் மனப்பாங்கை அல்லது பிறப்பின் சூழல் புடினை இயல்பாய் யதார்த்தவாதியாக (அராஜகவாதி) அரசியலில் உருவாக்கியுள்ளமையை ஹிலாரி – புடின் உரையாடல் அடையாளப்படுத்துகிறது.
புடினின் இயல்பை அவரின் பிறப்பின் சூழலோடு தொடர்புறுத்தும் தன்மை புடினின் ஆக்கிரமிப்புக்களின் போது பொதுவெளியில் அதிக முதன்மை பெறுகிறது. குறிப்பாக 2014ஆம் ஆண்டு ஹார்ட் சொய்சஸ் நூல் ஹிலாரியால் வெளியிட்ட போது கிரிமியா மீதான ரஷ்சியாவின் ஆக்கிரமிப்பு முதன்மை பெற்ற நிலையில் புடினின் அராஜக அரசியலுக்கான சூழலாய் அவரது பிறப்பு அடையாளப்படுத்தப்பட்டது. அதனை தொடர்புறுத்தி ஹிலாரி கிளின்டனும், ‘அடால்ஃப் ஹிட்லரைப் போல் தான் புடின் நடந்து கொள்கிறார்.” என்ற விமர்சனத்தை முன்வைத்தார். புடின் அதற்கு பதிலடியாக, ஹிலாரியை ‘பலவீனமானவள்” என்று முத்திரை குத்தி, ‘பெண்களிடம் வாக்குவாதம் செய்யாமல் இருப்பது நல்லது.” என்று கூறியிருந்தார்.
எவ்வாறாயினும் புடினின் அராஜகத்தன்மை சமகால சர்வதேச அரசியல் கோட்பாட்டில் முதன்மை பெறும் யதார்வாதத்தின் பிரதிபலிப்புக்களாக அமைவதனால், மேற்கு ஊடகங்கள் பிரச்சாரப் படுத்துவது போல் உலகத்திற்கு ஒவ்வாத அரசியலென ஒதுக்கிவிட இயலாது. ஆதலால் உலக ஆளுமைகளில் ஒருவராக புடினை பற்றிய வரலாறும் அரசியலும் தேடிக்கற்க வேண்டிய பெறுமதி யானவையாகவே காணப்படுகிறது.
முன்னாள் ரஷ்சியா உளவுத்துறை அதிகாரியான விளாடிமிர் புடின் 2012 முதல் தொடர்ச்சியாக ரஷ்சியாவின் அதிபராக உள்ளார். இதற்கு முன்பு 1999 முதல் 2008 வரையிலும் முக்கிய பதவி வகித்துள்ளார். அவர் 16 ஆண்டுகள் ரஷ்சியாவின் உளவுத்துறை நிறுவனமான KGB வெளிநாட்டு உளவுத்துறை அதிகாரியாக பணியாற்றினார். 1991இல் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் அரசியல் வாழ்க்கையைத் தொடங்குவதற்கு முன்பு இராஜினாமா செய்தார். சோவியத் ஒன்றியத்தின் இறுதி ஜனாதிபதி மைக்கேல் கோர்பச்சேவுக்கு எதிரான ஆட்சி கவிழ்ப்பைத் தொடர்ந்து, அவர் என்ன நடந்தது என்பதில் உடன்படவில்லை மற்றும் புதிய நிர்வாகத்தில் உளவுத்துறையின் ஒரு பகுதியாக இருக்க விரும்பவில்லை.
சோவியத் ஒன்றியத்தின் பிளவு புடினை ரஷ்சிய அரசியலுக்குள் இழுத்தது. அவர் ஜனாதிபதியாக இருந்த முதல் பதவிக் காலத்தில், நாட்டின் பொருளாதாரம் தொடர்ந்து எட்டு ஆண்டுகளாக வளர்ச்சியடைந்தது. ரஷ்சிய ஏற்றுமதியில் பெரும்பகுதியை உள்ளடக்கிய எண்ணெய் மற்றும் எரிவாயு விலையில் ஐந்து மடங்கு அதிகரிப்பு, கம்யூனிசத்திற்குப் பிந்தைய மந்தநிலை மற்றும் நிதி நெருக்கடிகளில் இருந்து மீள்வது, வெளிநாட்டு முதலீட்டின் அதிகரிப்பு மற்றும் விவேகமான பொருளாதார மற்றும் நிதிக் கொள்கைகள் ஆகியவற்றின் விளைவாக இந்த வளர்ச்சியை புடின் சாத்தியப்படுத்தினார்.
புடின் ரஷ்சியாவின் பொருளாதாரத்தை சீர்ப்படுத்தியதன் பின்னர், அகண்ட சோவியத் ஒன்றியத்தினுள் இணைந்திருந்த முன்னாள் சோவியத் குடியரசுகள் மீதான அமெரிக்காவின் ஆதிக்கம் மற்றும் நேட்டோ விஷ்தரிப்பு தொடர்பிலான தனது கரிசணையை வெளிப்படுத்த ஆரம்பித்தார். அதன் முன்னகர்வாகவே 2008ஆம் ஆண்டு நேட்டோவில் இணைய விருப்பம் தெரிவித்த ஜோர்ஜியா மீது ஆக்கிரமிப்பு யுத்தத்தை நிகழ்த்தி ஐந்து நாட்களில் வெற்றியை அறிவித்ததுடன், ஜோர்ஜியாவின் இரு பிராந்தியங்களை தன்சார்பான தன்னாட்சி தேசங்களாக பிரகடனப் படுத்தியிருந்தது. அவ்வாறானதொரு ஆக்கிரமிப்பு யுத்தத்தையே 2022 – பெப்ரவரி இறுதியிலிருந்து உக்ரைன் மீது ரஷ்சியா நிகழ்த்தி வருகின்றது. ஜோர்ஜியா மற்றும் உக்ரைன் மீதான ஆக்கிரமிப்பு போர்கள் உலக ஆதிக்க போட்டியின் நிகழ்ச்சி நிரல்களின் ஒரு பகுதி என்பதில் எவ்வித சந்தேகங்களுமில்லை.
புடினின் அராஜகத்தையும் அதனால் ஏற்படும் உயிரிழப்புக்களையும் ஏற்றுக் கொள்ள முடியாததாயினும், மேற்கு ஊடகங்கள் பிரச்சாரப் படுத்துமளவிற்கு அமெரிக்கா நீதி தேவதையாகவும் புடின் அராஜகத்தின் முழு உருவமாகும் எனும் கருத்துக்களையும் ஏற்றுக்கொள்ள இயலாத நிலையே காணப்படுகின்றது. அதிகாரத்தை மையப்படுத்தும் உலக ஒழுங்கில் இருபத்தொராம் நூற்றாண்டின் இரும்பு மனிதனாக புடின் காணப்படுகின்றார். புடின் எனும் ஒரு ஆளுமையை எதிர்கொள்ள அமெரிக்க நிர்வாகம் நேட்டோ எனும் இராணுவக் கூட்டணியில் 32 நாடுகளின் கூட்டையும், ஜி-07 என்ற கட்டமைப்பூடாக உலக பொருளாதாரத்தில் முதன்மை பெறும் 07 நாடுகளின் திரட்சியையும் ஒன்றினைத்திருப்பதும்; வெற்;றி கொள்ள இயலாது திணருவதும் புடின் இரும்பு மனிதன் என்பதையே மீள மீள உறுதி செய்கிறது.