காதல் அச்சம்
காரிருள் வடிந்து முடிந்தது. பூவுலகை கதிரவன் எட்டிப்பார்க்க தயாரான வேளை அவன் கண்களிற்கு விருந்தானது அந்த அபூர்வக் காட்சி. அன்றைய நாளிற்கான தன் முதல் தரிசனத்தை எண்ணி கதிரவனின் உள்ளம் கூட குளிர்ந்திருக்கும்.
அதிவேகமாக வந்து கொண்டிருந்த புரவியின் மீது இரு அமைதியான உயிர்கள். அஸ்வதமங்கலத்தின் மீது வருணகுலத்தானும் சித்திராங்கதாவும் அமர்ந்திருக்கின்றனர்.
காதல் கொண்டுவிட்டால் – பார்வை அழகு. ஸ்பரிசம் அழகு. பயணம் அழகு. இவை எல்லாம் ஒன்றாய் சேர்ந்துவிட்டால் அங்கே அது அழகின் சாம்ராச்சியமல்லவா?
அந்த சாம்ராச்சியத்தின் மகா ராஜாவாகவும் மகாராணியாகவும் வருணகுலத்தானும் சித்திராங்கதாவும் கம்பீரமாய் அமர்ந்து சென்று கொண்டிருக்கின்றனர். தங்கள் உள்ளத்திலும் கூட அவர்கள் இப்போது ராஜா ராணிதான். நடந்தது – நடக்கப்போவது எதுவாயினும் நடந்து கொண்டிருப்பதை அனுபவிப்பதில் தானே இன்பம் உருவாகிறது. அந்த இன்பத்தில் அவர்கள் இருவரும் எல்லாம் மறந்து மூழ்கி இருக்கின்றனர்.
அவர்கள் சென்று கொண்டிருப்பது வன்னியத்தேவன் வரவேற்பை ஏற்று வன்னி மாளிகைக்குத்தான். எங்கு செல்வது ராஜதுரோகம் என்று வருணகுலத்தான் கருதினானோ அங்குதான் இப்போது சென்று கொண்டிருக்கிறான். சித்திராங்கதாவோடு செல்கிறான். சித்திராங்கதாவிற்காக செல்கிறான். அவள் கேட்டதனால் மாத்திரம் செல்கிறான். எப்படிச் சொன்னாலும் உண்மை என்பது யாவரும் அறிந்ததே. அவன் காதல் அவனை ஆள்கிறது!
எந்த மாவீரனை தொலைதூரத்திலிருந்தே சித்திராங்கதா நேசிக்கத் தொடங்கினாளோ அந்த மாவீரனோடு இத்தனை அருகில் அமர்ந்து பயணிப்பதை அவள் தனக்குள் மீண்டும் மீண்டும் நினைத்துப் பார்த்து பூரித்துக் கொண்டாள்.
‘இந்த சந்தோசம் இப்படியே தங்கிவிடக்கூடாதா? இந்த நொடியே இறந்துவிட்டால் என்ன?”
என்ற சிந்தனைகள் அவள் உள்ளத்தில் வந்து மோதின. அதுவரை காலமும் காதல் கொண்டு சேர்த்து வைத்திருந்த அவளது ஆனந்தக் கனவுகள் நனவாகின்ற நொடிகளை அவள் முழுமையாய் இப்போது அனுபவித்துக் கொண்டிருந்தாள்.
இன்பத்தின் உச்சம் தொடும் கணமே அதன் அநித்தியம் குறித்த அச்சமும் உருவாகத் தொடங்கும். சித்திராங்கதாவிற்கும் தொடங்கியது.
அவள் இப்போது எதிரியாய் நினைப்பது மாமன்னரையோ, மந்திரியாரையோ இல்லை. மாருத வல்லியைத்தான். தன் இன்பங்களின் எல்லையில் மாருதவல்லியே நின்று கொண்டிருப்பதாய் அவள் உணரத்தொடங்கினாள்.
அச்சம் மேலெழ அமைதியை குலைத்தாள் சித்திராங்கதா.
‘தளபதியார், ஈழத்தில் தன் புரவியில் ஏற்றுச் செல்லும் இரண்டாவது மங்கை நான் தான் என்று நினைக்கிறேன். சரிதானா?”
‘ஏன் இரண்டாவது என்கிறீர்கள் தேவி….?”
‘அன்று மாருதவல்லியை அந்தக்கொடிய அரக்கன் மிக்கபிள்ளையிடமிருந்து மீட்டு இதே புரவியில் அழைத்துச் சென்றதை நானுந்தானே கண்டிருந்தேன்.. என் கண்ணில் பட்டவரை நான்தான் இரண்டாவது மங்கை என்று நினைத்தேன்… அப்படியில்லையோ?”
‘ஓகோ..! மாருதவல்லியை அன்று கொண்டுவந்தது என் நினைவில் இருக்கவில்லை தேவி. இந்த அஸ்வதமங்கலத்தில் என்னுடன் பயணிக்கும் முதல் மங்கை தாமே என்றுதான் நான் நினைத்திருந்தேன்.” என்றான் வருணகுலத்தான்.
‘தங்கள் மறந்துவிட்டாலும் உண்மை எது என்பதை உலகம் மறக்குமா என்ன…? “
‘ஆனாலும் கூட அன்றும் இன்றும் எனக்கு ஒன்று போல் தோன்றவில்லை தேவி…” என்று கூறிப் புன்னகைத்தான் வருணகுலத்தான்.
‘தாம் அரசகுலத்தவர். மங்கை மாருதவல்லியும் அரசகுலத்தவர். நீங்கள் இருவரும் ஒரே புரவியில் செல்வதும் நாம் இப்போது செல்வதும் எப்படி ஒன்றாகும்? நிச்சயமாக வேறுவேறுதானே?”
‘புரவியில் செல்வதற்கும் குலத்திற்கும் என்ன சம்பந்தம் தேவி…? குலத்தினால் அல்ல. உண்மையினிலே இந்தப்பயணம் எனக்கு புதியதாகத்தான் தெரிகிறது.”
‘ஆமாம்.. புதியவளின் அருகில் செல்லும் பயணம் புதியதாகத்தானே தெரியும். மாருதவல்லி தங்களிற்கு மிகவும் பழக்கமானவள். நெருக்கமானவள். மந்திரிமனையில் தங்களின் நெருங்கிய துணை மாருதவல்லி என்று எல்லோருமே கூறுகிறார்கள். தங்களைச் சேர வேண்டிய ஓலையைக்கூட நான் மாருதவல்லியிடம் தானே கொடுத்தனுப்ப வேண்டியிருந்தது. அவ்வளவு நெருக்கமான மாருதவல்லியை ஏற்றி வந்த புரவியில் என்னை ஏற்றிச் செல்வது தங்களிற்கு நிச்சயம் புதியதாகத்தான் இருக்கும்…….”
சித்திராங்கதாவின் உள்ளத்து பயம் அவளை இப்படியெல்லாம் பேச வைத்தது.
இனி பேசுவதால் பயனில்லை என்பதை தெளிவாய் உணர்ந்த வருணகுலத்தான் ஆரோகித்து சிரிக்க ஆரம்பித்தான். அந்த சிரிப்பினால் சித்திராங்கதா முழுவதுமாய் குழம்பிப்போனாள்.
அதுவரை நேரமும் பாதுகாப்பாய் புரவியின் வடத்தை பிடித்து அமர்ந்திருந்தவள் திடீரென நிலை தவறியவளாய் தன் பின்னால் அமர்ந்திருந்த வருணகுலத்தான் கரங்களை தேட ஆரம்பித்தாள்.
கணநேரத்தில் அவள் அச்சத்தை உணர்ந்த வருணகுலத்தான் தன் இடது கையினால் அவள் இடையை அணைப்பது போல் பிடித்துக் கொண்டான்.
இருவருக்குமிடையே இருந்த வார்த்தைகள் எல்லாம் மௌனமாகின. அவள் கேள்விற்கான பதிலும் கிடைத்துவிட்டது. எந்த வகையில் இந்த பயணம் வித்தியாசமானது என்பதை வருணகுலத்தான் இப்போது கூறி விட்டான். இனி இறந்தே விடலாம் என்பது போல் இருந்தது சித்திராங்கதாவிற்கு. ஆனால் இப்படியே கனதேசம் செல்ல வேண்டும் என்றிருந்தது வருணகுலத்தானிற்கு.
தன்னை அணைத்துக் கொண்ட வருணகுலத்தான் கரங்களை பற்றியபடியே சித்திராங்கதா கேட்டாள்.
‘ராஜதளபதி தாங்கள் இப்படி சாதாரண வணிகர் மகளை புரவியில் அணைத்து ஏற்றிச் செல்வதை பார்த்தால் பார்ப்போரின் குற்றம் என் மீதல்லவா இருக்கும்?”
‘குற்றம் என்பது பார்ப்பவர்களுடைய தவறல்லவா சித்திராங்கதா? நம் தவறு அதில் என்ன இருக்கிறது?”
‘என்ன சொன்னீர்கள்…?”
‘நம் தவறு அதில் இல்லை என்றேன்.”
‘நான் அதைச் சொல்லவில்லை.”
‘பிறகு?”
‘சித்திராங்கதா என்று அழைத்ததாய் கேட்டது…”
‘அப்படியா கேட்டது… அது தானே தங்கள் பெயர் தேவி சித்திராங்கதா….”
‘ஓகோ! இப்போது தான் தெரிந்ததா தங்களிற்கு…”
என்று கூறியவளின் இரகசிய சிரிப்பு எல்லை கடந்து வெளிப்பட்டது. வருணகுலத்தானின் ஆரோகித்த சிரிப்பும் அதனுடன் இணைந்து கொண்டது.
இருவரும் ஏகோதித்து சிரித்த குரல் கேட்டு அஸ்வதமங்கலம் கூட சிரிக்க முயன்று பார்த்தது. முடியவில்லை.
வன்னி மாளிகையில் அவர்களிற்காய் காத்திருக்கும் ஆச்சரியங்களையும் ஆபத்துக்களையும் பற்றிய சிந்தனையே இல்லாமல் அவர்கள் இருவரும் இப்போது இன்ப வெள்ளத்தில் முழுமையாக மூழ்கி இருக்கின்றனர்.
காதல் கொண்டவர்கள் உள்ளத்தில் தோன்றுகின்ற இன்ப துன்பங்கள் யாவும் இடம் பொருள் ஏவல் அறியாத விசித்திரங்களாகத்தானே இருக்கும். ஆனால் எல்லாவற்றையும் விட எதார்த்தம் என்பது இன்னும் விசித்திரமானதல்லவா?
விசித்திரங்கள் அரங்கேறும்….