இதழ் 50

காயமே அது பொய்யடா

‘சவப்பெட்டிக்கடை சச்சிதானந் தத்தின் மனுசி சாந்தி செத்திட்டாம். சவம் எடுக்கிறது பின்னேரம் மூண்டுக்காம்”

இன்று எங்கள் ஊரின் முக்கியத்தலைப்புச் செய்தி இதுதான். தகவல் தெரிந்ததும் கூட்டம் கூட்டமாக சனம் கூடத் தொடங்கிவிட்டது. சமூக இடைவெளி சமாச்சாரங்களும், மரண வீடுகளுக்கான கட்டுப்பாடுகளும் காலாவதியாகிவிட்ட காலமென்பதால் கூடிய கூட்டத்தால் வீட்டாருக்கு வாட்டம் ஏதும் இல்லை. இதே போன வாரம் என்றால் கூட்டம் இந்தளவுக்கு இருந்திருக்காது. வரிசையில் நிக்கிறதையே வேலையா வைச்சிருந்த வாரம் அது. பெற்றோலுக்கு ஒருநாள், மண்ணெண்ணெய்க்கு மறுநாள், அங்கருக்கும் சீனிக்கும் அடுத்த நாள், கோதுமைமாவுக்கு நான்காம் நாள், அரிசிக்கு ஐந்தாம் நாள், ஆஸ்பத்திரியில் மருந்துக்கு ஆறாம் நாள், காஸ் சிலிண்டருக்கு ஏழாம் நாள் என்டு ஏழு நாளும் வரிசையில் நின்றால் எப்பதான் தொழிலுக்கு போறது? ஆனால் இந்த வாரம் அப்படி இல்லை. ‘கைவசம் ஒன்னும் இல்லை! கப்பலால இறங்கினாத்தான் உண்டு” என்டுட்டாங்கள். அதால இப்ப வரிசையில் நிற்பதில்லை சனம்.

இந்த சமாச்சாரங்கள் ஏதும் தெரியாமல் அமைதியாக ஒரு சவப்பெட்டியினுள் படுத்திருந்தாள் சாந்தி. இது தன் மனைவிக்கானது என்று இந்த பெட்டியை செய்தபோது சச்சிதானந்தத்திற்கு தெரிந்திருக்காது. இதுதான் வாழ்க்கை.

‘ஜனனமும் பூமியில்
புதியது இல்லை
மரணத்தைப் போல் ஒரு
பழையதும் இல்லை
இரண்டுமில்லாவிடில்
இயற்கையும் இல்லை
இயற்கையின் ஆணைதான்
ஞானத்தின் எல்லை”


அடுத்தவர் மரணத்தை எதிர்பார்த்திருக்கும் சவப்பெட்டிக் கடைக்காரர்கள் பொதுவாக நன்றாக வாழ்ந்ததில்லை என்று ஊருக்குள் ஒரு பேச்சு. இதனாலேயே சச்சிதானந்தத்திற்கு ஒருவரும் பெண் கொடுத்தாரில்லை. வயதும் போய்க்கொண்டிருந்தது. சாந்தி க்கும் சச்சிதானந்தத்திற்கும் காதல் எப்படி வந்ததென்றே தெரியாது.

‘சவப்பெட்டி சவப்பெட்டி என்று இளக்காரமா கதைக்கிறியள். அந்த மனுசன் இல்லாட்டி எல்லாரின்ட சாவும் எப்படி நாறிப்போகும் என்டு யோசிச்சுப்பாருங்கோ”


என்டு காதலுக்கு தடையாக வந்தவர்களுக்கு கடிவாளம் போட்டுவிட்டு சச்சிதானத்தை திருமணம் செய்தவள் சாந்தி. இன்று பேச்சு மூச்சின்றி படுத்துக்கிடக்கிறாள்.

‘எள்ளுவய பூக்கலயே
ஏறெடுத்தும் பாக்கலயே
ஆளான ஒன் சிரிப்பு கொள்ளுதய்யா
அச்சறுந்த ராட்டினம் போல
சுத்துதய்யா”

மரண வீடுகளில் சித்தர் பாடல்கள் பாடுவதற்காக பாட்டுக்காரர்களை வரவழைப்பார்கள். வாழும் போது விளங்கி கடைப்பிடிக்க வேண்டிய பாடல்களை இறந்த பின்பு பாடுகிறார்கள். விந்தணுக்களின் பயணப்பாதைகளையும் கருவின் வளர்ச்சிகளையும் விஞ்ஞான உலகம் கண்டறிய முன்பே ஞானத்தால் உணர்ந்து பாடிய பட்டினத்தாரின் ஒரு அருமையான பாடலை பாட்டுக்காரன் பாடுகிறார்.

‘ஒரு மட மாதும் ஒருவனும் ஆகி
இன்ப சுகம் தரும் அன்பு பொருந்தி
உணர்வு கலங்கி ஒழுகிய விந்து
ஊறு சுரோணித மீது கலந்து

பனியில் ஓர் பாதி சிறு துளி மாது
பண்டியில் வந்து புகுந்து திரண்டு
பதுமம் அரும்பு கமடம் இதென்று
பார்வை மெய் வாய் செவி கால் கைகள் என்ற

உருவமும் ஆகி
உயிர் வளர் மாதம்
ஒன்பதும் ஒன்றும்
நிறைந்து மடந்தை
உதரம் அகன்று புவியில் விழுந்து
யோகமும் வாரமும் நாளும் அறிந்து

ஒளிந்கை ஊறல் இதழ் மடவாரும்
உவந்து முகந்திட வந்து தவழ்ந்து
மடியில் இருந்து மழலை மொழிந்து
வா இரு போ என நாமம் விளம்ப

உடைமணி ஆடை
அரைவடம் ஆட
உண்பவர் தின்பவர்
தங்களொடு உண்டு
தெருவில் இருந்து புழுதி அளைந்து
தேடிய பாலரொடு ஓடி நடந்து
அஞ்சு வயதாகி விளையாடியே”

அதோடு நின்றுவிடாத பட்டினத்தார் இளைமைப் பருவத்தின் கூத்துக்களையும் அழகாக காட்சிப்படுத்தி முதுமையின் கொடுமைகளையும் கண்முன் கொண்டு வருகிறார்.

‘உயர் தரு ஞான குரு உபதேச
முந்தமிழின் கலையும் கரை கண்டு
வளர்பிறை என்று பலரும் விளம்ப
வாழ் பதினாறு பிராயமும் வந்து

மதனசொரூபன் இவன் என மோக
மங்கையர் கண்டு மருண்டு திரண்டு
வரிவிழி கொண்டு சுழிய எறிந்து
மாமயில் போல் அவர் போவது கண்டு

மனது பொறாமல் அவர் பிறகு ஓடி
தேடிய மாமுதல் சேர வழங்கி
வளமையும் மாறி இளமையும் மாறி
வன்பல் விழுந்து இருகண்கள் இருண்டு

வயது முதிர்ந்து நரைதிரை வந்து
வாதவிரோத குரோதம் அடைந்து
செங்கையினில் ஓர் தடியுமாகியே
வருவது போவது ஒருமுதுகூனு

மந்தி எனும்படி குந்தி நடந்து
மதியும் அழிந்து செவிதிமிர் வந்து
வாய் அறியாமல் விடாமல் மொழிந்து
கலகல என்று மலசலம் வந்து

கால்வழி மேல்வழி சாரநடந்து
கடன்முறை பேசும் என உரைநாவு
தங்கிவிழுந்து கைகொண்டு மொழிந்து
கடைவழி கஞ்சி ஒழுகிடவந்து

பூதமுநாலு சுவாசமும் நின்று
நெஞ்சு தடுமாறி வரும் நேரமே
வளர்பிறை போல எயிரும் உரோமம்
உச்சடையும் சிறுகுஞ்சியும் விஞ்சு

மனதும் இருண்ட வடிவும் இலங்க
மாமலை போல் யமதூதர்கள் வந்து
வலைகொடு வீசி உயிர்கொடு போக
மைந்தரும் வந்து குனிந்தழ நொந்து

மடியில் விழுந்து மனைவி புலம்ப
மாழ்கினரே இவர் காலம் அறிந்து
வரிசை கெடாமல் எடும் எனஓடி
வந்து இள மைந்தர் குனிந்து சுமந்து

கடுகி நடந்து சுடலை அடைந்து
மானிட வாழ்வென வாழ்வென நொந்து
விறகுஇடை மூடி அழள் கொடுபோட
வெந்து விழுந்து முறிந்து நிணங்கள்

உருகி எலும்பு கருகி அடங்கி
ஓர்பிடி நீறும் இலாத உடம்பை
நம்பும் அடியேனை இனி ஆளுமே….”

பாட்டுக்காரன் பாடிய இந்த பாடல்கள் சச்சிதானந்தம் காதுகளுக்குள் சென்று மேலும் கவலையை அதிகரித்தது. வருத்தமே இல்லாமல் வாழ்ந்தவள் திடீரென ஒருநாள் காய்ச்சலால் படுத்துவிட்டாள். அதுவரை சமையல் வேலைகளையும் வீட்டு வேலைகளையும் தனியாளாக செய்தவள் படுத்துவிட்டதால் சச்சிதானந்தம் ஸ்தம்பித்துப் போய்விட்டாள். முதல்தடவையாக கடையில் சாப்பாடு எடுக்கப்பட்டது.

‘எல்லாரும் பூவோடும் பொட்டோடும் போகத்தான் ஆசைப்படுவினம். ஆனா நான் உன்னை அனுப்பிட்டுத்தாய்யா போகனும். நான் இல்லாம நீ தனிய கஷ்டப்படுவாய்யா”

‘இப்ப என்னத்துக்கு இந்த இழவுக்கதைகள். பேசாம இருப்பியா!”

அன்றைக்கு படுத்தவள்தான். கொஞ்ச நாளிலேயே நிலைமை மோசமாகி விட்டது.

‘பாசம் உலாவிய
கண்களும் எங்கே?
பாய்ந்து துழாவிய
கைகளும் எங்கே?
தேசம் அளாவிய
கால்களும் எங்கே?”

சச்சிதானந்தத்தை திருமணம் செய்தபின் சாந்தி பெற்றவை அதிகம். பிறந்த வீட்டு கௌரவத்தை கெடுத்தவளானாள். சவப்பெட்டிக்கடைக்காரி ஆனாள். மலடி எனும் பெயரும் பெற்றாள். மங்கல நிகழ்வுகளில் பின்வரிசையில் ஆசனம் பெற்றாள். இவை எல்லாவற்றையும் தாங்கிக்கொள்ளுமளவிற்கு தன் கணவனிடமிருந்து காதலைப் பெற்றாள்.

‘மரணத்தினால் சில
கோபங்கள் தீரும்
மரணத்தினால் சில
சாபங்கள் தீரும்
வேதம் சொல்லாததை
மரணங்கள் கூறும்
விதை ஒன்று வீழ்ந்திட
செடிவந்து சேரும்”

இருக்கும் போது அவளை பேசிய ஊர்வாய்கள் எல்லாம் இன்று அவளது உடம்புக்கு முன் நின்று வாழ்த்தி வாழ்த்தி அழுகின்றன. இதில் பத்தில் ஒருபங்காவது அவள் வாழும் போது கிடைத்திருந்தால் சாந்தியின் மனம் எப்போதோ சாந்தி அடைந்திருக்கும்.

‘இரவல் தந்தவன் கேட்கின்றான்
அதை இல்லை என்றால்
அவன் விடுவானா
உறவைச் சொல்லி அழுவதனாலே
உயிரை மீண்டும் தருவானா?”

சச்சிதானந்தம் சாந்தியின் உடலையே விறைத்துப் பார்த்துக்கொண்டிருந்தான். அவள் இல்லாத உலகமென்பதை இன்றுவரை அவன் கற்பனைகூட செய்து பார்க்கவில்லை.

‘கொடுத்தவனே பறித்துக் கொண்டான்டி
மானே வளர்த்தவனே வெறுத்து விட்டான்டி”

எல்லோருக்கும் தேவைப்பட்ட ஒருவன் என்றாலும் எல்லோராலும் ஒதுக்கப்பட்டவன் சச்சிதானந்தம். இன்றுவரை அவனுக்கு மரியாதை அளித்த ஒரே ஜீவனும் இனி இல்லை. அவனுக்கு எல்லாமுமாக இருந்தவள் இனி எதுவாகவுமே இல்லை.

‘கூக்குரலாலே கிடைக்காது
இது கோட்டைக்குப்
போனால் ஜெயிக்காது
அந்தக் கோட்டையில்
நுழைந்தால் திரும்பாது
போனால் போகட்டும் போடா”

மரணம் என்பது இயற்கை தான். எல்லோருக்கும் என்றோ ஒருநாள் அது வந்தே தீரும். ஆனால் அதை ஏற்றுக்கொள்ளும் பக்குவத்தைத்தான் இறைவன் எல்லோருக்கும் கொடுப்பதில்லை.

‘வந்தது தெரியும் போவது எங்கே?
வாசல் நமக்கே தெரியாது!
வந்தவரெல்லாம் தங்கிவிட்டால்
இந்த மண்ணில் நமக்கே இடமேது?
வாழ்க்கை என்பது வியாபாரம்!
வரும் ஜனனம் என்பது வரவாகும்!
அதில் மரணம் என்பது செலவாகும்!”

பாட்டுக்காரர்களும் விடாமல் பாடிக்கொண்டே இருந்தார்கள். உணர்ந்து பாடுகிறார்களோ தெரியாது. ஆனால் அவர்களால்த்தான் பல அரிய சித்தர் பாடல்கள் இன்னும் நிலைபெற்று இருக்கின்றன.

‘காயமே இது பொய்யடா
வெறும் காற்றடைத்த பையடா
மாயனார் குயவன் செய்த
மண்ணு பாண்டம் ஓடடா
உப்பு மண்ணும் ஓட்டை மூங்கில்
ஒட்டி வைத்த கூடடா
உழுத்த நரம்பும் வெளுத்த தோலும் இளுத்துக் கட்டின கூட்டா
புனல்கள் ஊறும் கேணியடா
இது பொய் நிறைந்த வீட்டா
வெந்த சோறும் நொந்த காயும் போட்டடைத்த பையடா
மனமே இந்தக் காயம் மீது
ஒன்பது கோட்டை வாசலடா
ஒரு நாளைக்கு குளிக்காவிட்டால்
நாற்றம் வீசும் ஓடடா
குப்பைக் கீரை முளைத்தது போல்
கூடு கட்டின காடடா
ஐஞ்சு பஞ்ச பூதம் மீது
அல்லும் பகலும் வாசமே
ஆறு கரடி துஷ்ர மிருகம்
போர் செய்திடுமே
அத்தி மரத்துக் கனியைப் போல
ஆடுமாடு தூலமே
தட்சனத்தில் வேடர் ஆள
தண்டெடுப்பது முன்னமே “

எலும்புகளை இழுத்துக்கட்டி தசைகளால் போர்த்து மூடிய இந்த உடலில் உயிர் மட்டும் இல்லை என்றால் எவ்வளவு நாற்றமடிக்கும் தெரியுமா? இவ்வாறு நிலையற்ற இந்த உடலுக்காக வாழும்போது எவ்வளவு போராட்டம் நடக்கிறது?

‘தீ உண்டதென்றது
சாம்பலும் இங்கே
கண்ணில் தெரிந்தது
காற்றுடன் போக
மண்ணில் பிறந்தது
மண்ணுடன் சேர்க
எலும்பு சதை கொண்ட
உருவங்கள் போக
எச்சங்களால் அந்த
இன்னுயிர் வாழ்க”

அந்த உயிர் அதுவரை வாழ்ந்த வாழ்க்கையில் செய்த நல்லது கெட்டதுகளும் தான் நினைவுகளாக தொடருமே தவிர மனித உடல் என்பது நிலையற்ற பொய் என்பதே நிலையான உண்மை.

‘தாயாலே வந்தது, தீயாலே வெந்தது!
மெய்யென்று மேனியை யார் சொன்னது?”

சாந்தியின் உடலும் சச்சிதானந்தத்தை விட்டு பிரியும் நேரம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. சாந்தியின் இறுதிப் பயணத்திற்கான சடங்குகள் நடந்து கொண்டிருக்கின்றன.

‘பூமிக்கு நாம் ஒரு
யாத்திரை வந்தோம்
யாத்திரை தீரும் முன்
நித்திரை கொண்டோம்
நித்திரை போவது
நியதி என்றாலும்
யாத்திரை என்பது
தொடர்கதையாகும்”

மரணத்தின் காயத்தை ஆற்றும் ஒரே ஒரு மருந்து மறதி. ஆனால் அந்த மருந்து அவ்வளவு சீக்கிரமாக சச்சிதானந்தத்திற்கு கிடைத்துவிடப் போவதில்லை. மனைவியின் உடல் பின்னே வர, உறவுகளும் நண்பர்களும் சூழ வர, சுடுகாட்டை நோக்கி நடக்கலானான்.

‘பிறப்பு இல்லாமலே
நாளொன்று இல்லை
இறப்பு இல்லாமலும்
நாளொன்று இல்லை
நேசத்தினால் வரும்
நினைவுகள் தொல்லை
மறதியைப் போல்
ஒரு மாமருந்தில்லை”

Related posts

சித்திராங்கதா – 48

Thumi202121

நெல்சன் மண்டேலா
ஒரு சகாப்தம்

Thumi202121

துமியின் வெள்ளம்
மடை திறந்து ஓடட்டும்

Thumi202121

Leave a Comment