மிகவும் சக்தி வாய்ந்த ஆயுதம் பேனா என்பார்கள். காகிதங்களின் மேல் எழுதிய எழுத்துக்கள் பல தேசங்களின் தலை எழுத்தையே மாற்றியதாக வரலாறுகள் சொல்கின்றன. எனவே இந்த மின்னிதழை ஆரம்பிக்கும் போது விளையாட்டாக ஆரம்பிக்கவில்லை. மிகப்பெரும் சமூகப்பொறுப்புடனேயே ஆரம்பித்தோம். ஆனால் சமகால சூழலில் நம் தேசத்து அரசியல் பேசாதிருப்பதே எம்மை சார்ந்தவர்களுக்கு செய்யும் மிகப்பெரிய உதவி என்பதை உணர்ந்து கொண்டோம்.
நித்தமும் மாறும் அரசியல் சூழலில் உண்மையை ஆய்ந்து எழுதுவது மிகக் கடினமென்பதுடன் நம்பி உடன்வரும் இளையவர்களின் எதிர்காலமும் எமக்கு முக்கியமாகப்பட்டது. எனவே மண்ணின் அரசியல் தவிர்த்தே துமி துமித்து வந்தது.
மூத்தோரின் ஆலோசனைகளையும் உள்வாங்கிய இளையவர்களின் இந்தப் பயணம் ஒரு சமூகம் எவ்வாறு தலைமுறைகளை ஒருங்கிணைத்து இயங்க வேண்டும் என்பதற்கு நல்ல உதாரணமாக இருக்கும் என்று நம்புகிறோம்.
இலக்கங்களில் என்றுமே நம்பிக்கை இருந்ததில்லை. இலக்குகள் மீதே எங்கள் நம்பிக்கை என்றும் இருக்கும். இதுவரை துமியின் தனிப்பட்ட கொண்டாட்டங்களுக்காக துமி உறவுகள் ஒன்றுகூடியதில்லை. 50 என்பது இலக்கல்ல என்ற போதும் கொண்டாட்டத்திற்குரியதாகலாம் என்கிற துமி உறவுகளின் கருத்துக்களுக்கு ஏற்பவே இந்த இணையவழி சிறு விழா நடைபெற்றது.
அத்தியாவசிய தேவைகளுக்கே மணிக்கணக்கில் வரிசையில் நிற்கும் சூழலில் தம் நேரங்களை ஒதுக்கும் துமியின் உறவுகளுக்கு என்றும் மாறாத அன்பும் நன்றியும் உடையோம். மேலும் பல புதிய இளையவர்களுக்கு களம் அமைத்துக் கொடுக்க காத்திருக்கிறோம். ஆர்வமுள்ள அனைவரையும் அன்புரிமையோடு அழைக்கின்றோம்!
தமிழால் இணைந்தோம்!
தமிழால் உயர்வோம்!
1 comment