இதழ் 51

சித்திராங்கதா – 49

புள்ளி மான் கொம்பு

யாழ்ப்பாணத்தில் அறுபத்து மூன்று நாயன்மார்களிற்கும் ஒரே இடத்தில் மடாலயம் அமைக்க வேண்டுமென்று ஆசை கொண்டான் யாழ்வேந்தன் குணபூஷண சிங்கையாரியச் சக்கரவர்த்தி. அவனது மந்திரி ஒருவரினால் அந்த ஆசை நிறைவேற்றப்பட்டது. அறுபத்து மூவரும் ஒன்றாய் மடமிருந்த அந்த இடம் அன்றுமுதல் ‘நாயன்மார்க்கட்டு’ என்று வழங்கப்பட்டது.

நல்லூர்க்கோட்டைக்கு நேர்கிழக்கே அமையப்பெற்றிருந்த நாயன்மார்க்கட்டிற்கு சங்கிலியனும் இராஜமந்திரியாரும் இந்த நடுநிசிப்பொழுதில் அவசரமாக வந்தடைந்தனர்.

ஒளிச்சுடர்களால் மின்னிக்கொண்டிருந்த ஒரு மண்டபத்தின் முன் அவர்களது இரதம் வந்து நின்றது.

இராஜரதம் வாசலில் வந்ததைக் கண்டதும் ஆச்சாரமான ஓர் இந்துமதகுரு அணியினர் அவசரமாக வாசலை நோக்கி வந்து மன்னனை வரவேற்றனர்.

வணங்கிய கரங்களோடு அவர்கள் பாதங்களில் வீழ்ந்து வணங்கினான் சங்கிலியன்.

‘தலை சிறந்த வேந்தன் தயவால் இந்த நாயன்மார்க்கட்டு வைத்தியகூடம் நன்முறையில் இயங்கி வருகிறது. தற்சமயம் தங்கள் மேலான வரவு எமக்கு மகிழ்ச்சி தருகிறது’ என்றார் அந்தக்கூட்டத்தின் தலைமை மதகுரு.

நாயன்மார்க்கட்டு வைத்திய கூடத்தின் தலமை வைத்தியர் அவர்தான். அந்தக்கூட்டத்தில் இருந்தவர்கள் அனைவருமே அங்கு சேவைபுரிகின்ற வைத்தியக்குருக்கள்மார் ஆகும்.

‘எல்லோரையும் சந்தித்தது எனக்கும் சந்தோசம் வைத்தியரே. தாங்கள் இருக்கும் இடத்தில் பணிகள் யாவும் தடையின்றி நடக்கும் என்கிற துணிவிலே இங்கு வருவதற்கு போதிய நேரம் இல்லாமல் போனாலாம் அது குறித்து வருத்தமின்றி இருந்தேன்’ என்று மலர்ந்த முகத்தோடு கூறினான் சங்கிலியன். வைத்திய குருமார்களின் சகல உபசரிப்புக்களையும் ஏற்றுக்கொண்டு சங்கிலியன் மண்டபத்திற்குள் நுழைந்தான்.

அனைத்து ஊழியர்களும் தாங்கள் ஆற்றிக்கொண்டிருந்த காரியம் மறந்து மன்னர் எதிர்ப்பட வணங்கி நின்றனர். எல்லோரையும் வணங்கியபடியே சங்கிலியனும் இராஜமந்திரியாரும் அந்த மண்டபத்தின் உப்பரிகை நோக்கி விரைந்து கொண்டிருந்தனர்.

அந்த மண்டபத்தின் உப்பரிகையில் (மேல்மாடத்தில்) திடீர் சுகவீனமுற்று சிகிச்சை பெறுகிற பெருவணிகர் எச்சதத்தரை சந்திக்க வேண்டும் என்கிற அவசரத்திலே சங்கிலியனும் இராஜமந்திரியாரும் இந்நடுநிசிப் பொழுதிலும் நாயன்மார்க்கட்டு வைத்தியகூடத்திற்கு வரவேண்டி இருந்தது.

உப்பரிகையில் ஒரு தனியான இடத்தில் சோகமும் பதற்றமும் கலந்த முகத்தோடு ஏதோ சிந்தனையில் உறக்கமின்றி கிடந்தார் எச்சதத்தர். அருகில் இருந்த சுவரில் தெரிந்த கொம்புகள் விரிந்த ஓர் அழகிய மானின் ஓவியத்தை அவ்வளவு நேரம் கூர்மையாக பார்த்துக் கொண்டிருந்தார். அந்த ஓவியத்தின் சிந்தனையில் இருந்தவரிற்கு மன்னர் வந்த விடயம் கூடத் தெரியவில்லை.

அருகில் நின்ற வைத்திய சேவகனே எச்சதத்தரின் சிந்தனையினை கலைத்து மன்னர் வந்து நிற்பதை அவரிற்கு உணர்த்தினான்.

நிலை தடுமாறி திடுமென எழும்ப எத்தனித்தவரை சங்கிலியன் அவசரமாக இடைமறித்தான்.

‘நீங்கள் ஓய்வெடுங்கள் பெருவணிகரே, வன்னியர் விழா நெருக்கடிகளை நான் தங்களின் மேல் அளவுக்கதிகமாய் சுமத்தி விட்டேன் போலும். தங்களின் இந்த நிலைக்கு நானும் ஒரு காரணமாகி நிற்பதை நினைத்து பெரிதும் வருந்துகிறேன்’ என்றான் சங்கிலியன்.

‘ஐயகோ, அப்படி அல்ல வேந்தே, அரச கடமைகளை ஆற்ற நான் எக்காலத்திலும் பின்னின்றவனல்ல.? வன்னியர் விழா எனக்கு எந்த நெருக்கடியையும் தரவில்லை. ஆனால் இது எதனால் என்றும் தெரியவில்லை. திடீரென்று மார்பில் ஏற்பட்ட ஒரு வலி என்னை இயங்கவிடாமல் சிலகணம் செய்து விட்டது. நிலைமறந்து மூர்ச்சையாகிப் போய்விட்டேன். யாரோ சிலர்தான் என்னை இங்கு அழைத்து வந்தனர். வைத்தியகுருவின் சிகிச்சையால் இப்போது மீண்டும் உயிர் பெற்று நிற்பது போல் உணர்கிறேன்’ என்றார் எச்சதத்தர்.

‘தங்களைப்போன்ற அர்ப்பணிப்பு மிக்கவர்கள் இந்த தேசம் எங்கும் பரந்திருக்கிறார்கள். வைத்தியகுருவும் அப்படிப்பட்டவர்தான். உங்களைப் போன்றோரால் தான் என்னால் அரசவையில் இருந்து நிம்மதியாக நாடாளமுடிகிறது. தங்கள் தேகநலம் எனக்கும் இந்த தேசத்திற்கும் மிகத்தேவையானது பெருவணிகரே’ என்று எச்சதத்தர் தோள்களைத்தட்டி பெருமிதத்தோடு கூறினான் சங்கிலியன்.

இராஜமந்திரியாரும் அதை ஆமோதிப்பது போல் எச்சதத்தரை பார்த்து தலையசைத்தார்.

‘அது இருக்கட்டும் பெருவணிகரே, தங்கள் ஆடற்புத்திரி சித்திராங்கதா எங்கே? இங்கு காணவேயில்லையே?’ என்று சங்கிலியன் கேட்டதும் எச்சதத்தர் முகத்தில் மீண்டும் அந்தப்பழைய சோகம் பற்றிக் கொண்டது.

சுவரில் இருந்த அந்த மானின் ஓவியத்தை திரும்பி பார்த்தார். அவர் கண்கள் மெள்ள மெள்ள ஈரமாகிக்கொண்டிருந்தன.

‘என்ன பெருவணிகரே, என்ன ஆனது தங்கள் புதல்விக்கு? இங்ஙனம் தங்கள் முகம் வேதனை கொள்வது ஏன்?’
என்று அவசரமாக கேட்டான் சங்கிலியன்.

‘அரசே…. அந்த மானைப் பாருங்கள், எத்தனை அழகு அதன் விரிந்த கொம்புகள். அந்த கொம்புகளை பார்ப்பவர்கள் எல்லோருக்குமே ஒரு மகிழ்ச்சி உண்டாகும். ஆனால் எனக்கோ அந்த கொம்புகளை பார்க்கும் போது மிகுந்த அச்சமாக இருக்கிறது வேந்தே…

சித்திராங்கதாவினை நினைக்கையில் அந்த அழகிய கொம்புகள் ஏதோ கொடூர ஆயுதம் போல் எனக்குத் தெரிகின்றன….’

‘எதனால் அங்ஙனம் கூறுகிறீர்கள் பெருவணிகரே?சித்திராங்கதாவின் அழகில் அப்படி என்ன ஆபத்தைக் கண்டீர்?’ என்று கேட்டார் இராஜமந்திரியா்.

‘சொல்கிறேன் மந்திரியாரே, நிச்சயம் சொல்கிறேன். அதைச் சொல்வதற்காகத்தானே தங்களை அவசரமாக சந்திக்க வேண்டும் என்று காத்தவராயனிடம் சொல்லியிருந்தேன்.

என் மகள் தன்னையறியா காரியங்களை ஆற்றத்துவங்கி விட்டாள். இப்படி எங்ஙனம் அவள் ஆனாள் என்று மட்டும் எனக்கு இப்போது வரை புரியவில்லை’ என்று கூறியவர் அதற்கு மேல் பேசமுடியாமல் அமைதியானார்.

மன்னரும் அமைதியாக காத்திருந்தார்.

‘மன்னிக்க வேண்டும் மன்னா, நான் நடந்ததை இப்போது கூறுகிறேன். வன்னியர் விழா நிறைவுற்று நான் இல்லம் வந்த வேளை சித்திராங்கதா அங்கிருக்கவில்லை. என்ன ஏது நடந்தது என்றறியாமல் அலைந்து திரிந்தேன். ஊருக்குள் சிலர் சில வேண்டாத கதைகள் சொன்னனர். அவர்கள் கதைகள் எல்லாம் கேட்ட பின்னரே என் மார்பில் அப்படியொரு வலி ஏற்பட்டது. பின் இங்கு வந்தபின் இதோ.. இந்த சேவகன் மூலந்தான் நானே உண்மைகளை அறிந்து கொண்டேன்’ என்று அங்கு நின்றுகொண்டிருந்த சேவகனை காட்டி கூறினார் எச்சதத்தர்.

‘சட்டநாதர் கோயிலில் பாதுகாப்பு பணியில் இருக்கையில் ஒரு நாள் சித்திராங்கதாவை அங்கு கண்டதாய்க் கூறினான்….’ என்று தொடங்கி அந்த சேவகன் மூலம் தான் அறிந்த அனைத்தையும் மன்னருக்கும் மந்திரியாருக்கும் முழுமையாக கூறிக்கொண்டிருந்தார் எச்சதத்தர்.

‘சிறிய வயதிலே தன் தாயை இழந்த வலிக்கு ஒரு மீட்சியாய் இருக்கட்டும் என்றே அவளிற்கு ஆடற்கலையை பயிற்றுவிக்க நினைத்தேன். அந்தக் கலை கொடுக்கும் இன்பம் அவளிற்கு ஆறுதல் அளிக்கும் என்று நம்பினேன். அங்ஙனமே ஆடலரசியாய் இன்பத்திற்கு குறைவின்றி வளர்ந்தாள். ஆனால் இன்று இங்ஙனம் ஓர் அபாயத்திற்கு அந்தக்கலையே அவளை அழைத்துவரும் என்பதை நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை வேந்தே…’ என்று கூறி கண்கலங்கினார் எச்சதத்தர்.

எச்சதத்தர் கூறுவதை பொறுமையுடன் கேட்டுக் கொண்டிருந்த சங்கிலியன்
‘வருந்தாதீர்கள் பெருவணிகரே, சித்திராங்கதாவின் கோபம் நியாயமானதுதான். அவள் ஆடற்திறமை என்பது அவனியிலுள்ள அனைவராலும் கொண்டாடப்பட வேண்டியதே… அந்த அரங்கேற்ற விழாவை நிகழ்த்த முடியாமல் போன சூழ்நிலை ஏற்பட்டதை எண்ணி நான் இன்றும் வருந்திக்கொண்டிருக்கிறேன். அவ்வளவு அபாரமானது அவள் திறமை. அந்தத்திறமைக்கு ஒரு தடைக்கல் உண்டான போது அவளிற்குள் எழுந்த கோபம் நியாயமானது என்பதால் நான் அவள் விடயத்தில் பொறுமை காத்தேன். ஆனால் அந்தக் கோபத்தில் இருந்த நியாயத்தை யாரோ இங்ஙனம் இடையில் தவறாக திசை திருப்பியுள்ளார்கள் என்பதை என்னால் கூட நம்ப இயலவில்லை’.

அதுவரை அமைதி காத்த ராஜமந்திரியார்
‘மன்னா, சித்திராங்கதாவை இங்ஙனம் மடைமாற்றம் செய்து நம் எதிரிகளால் எதை சாதித்துவிட முடியும் என்று நினைக்கிறீர்கள்? மாவீரன் வருணகுலத்தான் வீரத்தில் மட்டுமல்ல உள்ளத்திலும் திடம் மிக்கவர். பகைவர்களின் இப்படியான வலைகளில் சிக்கிக் கொள்பவர் அல்ல அந்த மாவீரன். ஆதலால் இது குறித்து தாம் அதிகம் வருத்தம் கொள்ளத் தேவையில்லை பிரபு’ என்று உறுதியாய்க் கூறினார்.

பின் கலங்கிய கண்களோடு நின்ற எச்சதத்தரை நோக்கி ‘ பெருவணிகரே தங்கள் மகள் மாவீரன் வருணகுலத்தானுடன் வன்னிமாளிகையிலோ அல்லது வேறு எங்கிருந்தாலும் அது தங்கள் மகளிற்கு பாதுகாப்புத்தான். தஞ்சைதளபதியாலே இன்று என்புதல்வி மாருதவல்லி என்னுடன் இருக்கின்றாள். அந்த உறுதியிலே கூறுகிறேன். தாங்கள் அமைதியாக ஓய்வெடுங்கள்’ என்று பெருவணிகரை தேற்றும்படி கூறினார்.

‘மாவீரன் வருணகுலத்தான் அப்படிப்பட்டவர் என்பது உண்மைதான் மந்திரியாரே, ஆனால் என் புதல்வி சித்திராங்கதா ஒரு பேதைப்பெண். அவளது ஏதாவது சிறுசெயல் நாட்டில் பேரழிவை உண்டாக்கிவிடுமோ என்கிற பயம்தான் என் உள்ளத்தில் இப்போது வியாபித்திருக்கிறது. அப்படியேதும் கோரசம்பவம் நிகழ்ந்து அதற்கு என் மகளே காரணம் என்கிற கொடும்பழியை என் செவிகள் கேட்கக் கூடாது மன்னா, அதனால்த்தான் தங்களிடம் தயவாய் ஒரு வேண்டுகோள் விடுக்கிறேன்’ என்று இரஞ்சும் குரலில் கேட்டார் பெருவணிகர் எச்சதத்தர்.

‘என்னிடம் கேட்க ஏன் தாமதிக்கிறீர்கள் பெருவணிகரே, தங்கள் உள்ளத்து நேர்மைக்கு எனக்கு சாட்சியம் தேவையில்லை. தாராளமாய்க் கேளுங்கள்’

‘மன்னா, மேலும் மோசமான அசம்பாவிதங்கள் ஏதும் நேர்ந்துவிடாமல் இருக்க வேண்டும் என்றால், என் உடல்நிலை சீராகும் வரை என் மகளை அரண்மனையில் தங்கவைக்க வேண்டும்!’

‘நிச்சயம் பெருவணிகரே, சித்திராங்கதா அதுவரை அந்தப்புரத்திலே இருக்கட்டும். எந்த ஒரு குறையும் இன்றி ராணி அவளை பார்த்துக் கொள்வார்.’

‘இல்லை மன்னா… ‘ என்று அவசரமாக அதை மறுத்தார் எச்சதத்தர்.
‘அது சாத்தியமாகாது.. அந்தப்புரத்தில் தங்க அவள் எந்நிலையிலும் சம்மதிக்க மாட்டாள். அரசவை மீதும் அங்கிருப்பவர்கள் மீதும் அவளிற்குள்ள கோபம் அதற்கு அவளை அனுமதிக்காது. அங்ஙனம் அவள் அந்தப்புரத்தில் இருப்பதும் சரியாகாது மன்னா’

‘பிறகு என்ன செய்ய கூறுகிறீர்கள் பெருவணிகரே?’
குழப்பத்துடன் கேட்டான் சங்கிலியன்.

‘சித்திராங்கதாவை சிறைபிடிக்க வேண்டும். ஆம் தாங்கள் ஆணையிட்டு என் மகளை சிறைபிடிக்க வேண்டும்’

‘என்ன பேச்சு இது பெருவணிகரே, தாம் சுயநினைவோடு தான் பேசுகிறீர்களா?
தங்கள் மகளை, அதுவும் இந்த நாடு கொண்டாடவேண்டிய ஆடலரசியை சிறையில் அடைப்பதா? என்மீதான அவள் கோபத்தை எங்ஙனம் சரி செய்வேன் என்று நான் எண்ணிக் கொண்டிருக்கையில் இப்படியொரு உபாயம் கூறுகிறீர்களே, இது எங்ஙனம் சரியாகும் பெருவணிகரே’ என்று கேட்டான் சங்கிலியன்.

இராஜமந்திரியாராலும் இதை ஏற்க இயலவில்லை. ‘பெருவணிகரே, ஈழநாட்டில் மங்கையரை சிறைபிடிக்கும் வழக்கம் இல்லை என்பதை மறந்து தாங்களே இங்ஙனம் உரைக்கலாமா? அதுவும் ஒரு பேதைப்பெண் அறியாமல் செய்த தவறிற்காய் சிறைபிடிப்பது என்பது எத்துணை பெரிய களங்கமாகும் நமக்கு’

‘அது களங்கம் என்பதை நானும் உணர்வேன் இராஜமந்திரியாரே, ஆனால் இதை ஆற்றாமல் விட்டால் தோன்றிவிடுமோ என்று அஞ்சுகின்ற அபாயத்தை விட தற்சமயம் இதுவே ஏற்றவழி என்று நான் கருதுகிறேன்.
என் உடல்நிலை சரியாக இல்லாத இச்சமயம் சேராதோருடன் சேர்ந்து மீளமுடியா கோரப்பழிகளை அவள் தன்வசம் வாங்கிக் கொள்ளப்போகிறாளோ என்று என்மனம் பதைத்துக் கொண்டிருக்கிறது பிரபு…
எப்படியாவது என்மகளை காப்பாற்றுங்கள். அறியாமல் அவள் ஆற்றுகின்ற காரியங்களை அவள் வாழ்நாளையே சீரழித்து விடாமல் இருக்க இச்சமயம் இதைவிட வேறுமார்க்கமில்லை மன்னா… என் மனதை கல்லாய் இறுக்கியபடியே கேட்கிறேன், எனக்காக இந்த உபாயத்தை செய்யுங்கள மன்னா..என் மகளை சிறையில் வைத்திருங்கள்’ என்று மன்றாடிக் கேட்டார் பெருவணிகர்.

‘பெருவணிகரே, தாம் இந்த தேசத்தின் மீது கொண்ட பக்தியை எண்ணி நான் மெச்சுகிறேன். ஆனால் ஏதுமறியாத அபலையான சித்திராங்கதாவிற்கு அப்படியொரு அநியாயத்தை இழைக்க என்மனம் இடந்தரவில்லை. தாங்கள் வருந்த வேண்டாம். தாங்கள் அஞ்சுவது போல சித்திராங்கதாவிற்கோ அல்லது சித்திராங்கதாவனாலோ எந்த அபாயமும் நேராமல் நான் பார்த்துக்கொள்கிறேன். அது என் பொறுப்பு. அவள் எனக்கும் புதல்வி போன்றவளே. தக்க சமயத்தில் தகுந்த முடிவை நான் எடுப்பேன். தாங்கள் நிம்மதியாக உறங்குங்கள். கூடிய விரைவில் குணமாகி வாருங்கள்’ என்று எச்சதத்தர் சிரசை தொட்டு வணங்கினான் சங்கிலியன்.

எச்சதத்தரின் உள்ளத்து பயம் உண்மையாகுமா? சித்திராங்கதாவிற்கு கொடும்பழி ஏதும் சேர்ந்துவிடுமா? அதற்காக ஆடலரசியை சிறையில் அடைப்பது சரியாகுமா? சங்கிலியனின் மனதில் உள்ள அந்தக்கேள்விகள் எமக்குள்ளும் கேட்கின்றன.

வரலாற்றில் இருந்து

யாழ்ப்பாண வேந்தர்களது மருத்துவ சேவைக்குச் சான்றாக அவர்களால் உருவாக்கப்பட்டு, நிர்வகிக்கப்பட்டு வந்ததே நாயன்மார்கட்டு சித்த வைத்தியசாலை.

இலங்கைத் தீவிலேயே முதன்முதலாக நோயாளர்கள் தங்கியிருந்து வைத்தியம் பெற்றுக் கொள்ளக் கூடிய வசதிகளுடன் நிறுவப்பட்ட வைத்தியசாலை என்ற பெருமைக்குரியது நாயன்மார்கட்டு சித்த வைத்தியசாலையாகும். நாட்டில் ஆங்கிலேயரின் ஆட்சிக் காலத்திலேயே தீவின் பல பகுதிகளிலும் நோயாளர்கள் தங்கியிருந்து வைத்தியம் பெறக் கூடிய அரச வைத்தியசாலைகள் நிறுவப்பட்டன.
ஆனால் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு போர்த்துக்கேயர் இந்நாட்டில் அடியெடுத்து வைத்து ஆக்கிரமிப்பு செய்வதற்கு முன்பே அரச ஆதரவுடன் சட்டவிதிகளுக்கமைய யாழ்ப்பாணத்தில் மேற்படி வைத்தியசாலை இயங்கியுள்ளது என்பதை ஆவணங்கள் மூலம் அறிய முடிகின்றது.

குடிமக்களுக்கு மட்டுமல்ல காயமடைந்த போர் வீரர்களுக்கு சத்திர சிகிச்சை உட்பட மற்றும் பல வைத்திய வசதிகளை வழங்குவதற்காகவே இவ்வைத்தியசாலை நிறுவப்பட்டுள்ளது. இவ்வைத்தியசாலையில் இந்து மதகுருமார் தங்கியிருந்து வைத்தியம் பெற்றுக் கொள்வதற்காக தனியான விடுதிகளும் நிறுவப்பட்டிருந்தன.

மேல்மாடம், சமையலறை, சத்திர சிகிச்சைக்கூடம், பிரேத அறை என்பவற்றையும் கொண்டதாக சகல வசதிகளுடனும் இயங்கிய இந்த சித்த வைத்தியசாலை போர்த்துக்கேயர் யாழ்ப்பாண இராச்சியத்தைக் கைப்பற்றுவதற்காக நடத்திய போரின் போது சிதைக்கப்பட்டுள்ளது. போர்த்துக்கேயரதும், ஒல்லாந்தரதும் ஆட்சி முடிவுக்கு வந்து ஆங்கிலேயர் ஆட்சிக்கு உட்பட்ட போது 1838 ஆம் ஆண்டு அவர்களது ஆட்சியில் மேற்படி சித்த வைத்தியசாலை மீளமைக்கப்பட்டு இயங்கத் தொடங்கியது.

போர்த்துக்கேயரின் படையெடுப்பால் வைத்தியசாலை சிதைக்கப்பட்ட போது அங்கிருந்த வைத்திய குடும்பத்தினர் மட்டுவிலுக்குத் தப்பியோடியதாகவும் அங்கிருந்து வைத்தியப் பணியைத் தொடர்ந்து செய்ததாகவும் கூறப்பட்டுள்ளது. அத்துடன் அங்கு நடைபெற்ற அநீதிக்கெதிராக அக்கினி வைரவரை ஸ்தாபித்து வழிபாடும் செய்துள்ளனர். அவர்களால் அன்று தாபிக்கப்பட்ட அக்கினி வைரவர் ஆலயம் இன்றுமுள்ளது.

இந்து சமயத்தவரின் சமூகநல அடிப்படைக் கோட்பாட்டின்படி நிறுவப்பட்ட நாயன்மார்கட்டு சித்த வைத்தியசாலை முற்றுமுழுதாகத் தமிழ் அரசர்களின் ஆதரவுடனேயே இயங்கி வந்துள்ளது. மன்னர் காலத்தில் வரையப்பட்ட மான் சித்திரம் ஒன்று அண்மைக் காலம்வரை அங்கிருந்தமை குறிப்பிடத்தக்கது.

செகராசசேகரன், பரராசசேகரன் ஆகிய தமிழ் அரசர்கள் வைத்தியத்துறையில் புலமை பெற்றவர்களாக, நிபுணத்துவம் பெற்றவர்களாக விளங்கியுள்ளனர். பரராசசேகரன் கீர்த்தி மிகு வைத்தியராக விளங்கியுள்ளார்.
வாதரோக நிதானம், சன்னிரோக நிதானம், பாலரோக நிதானம், கெற்பரோக நிதானம் ஆகிய மருத்துவ நூல்கள் பரராசசேகர மன்னனால் ஆக்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாணத்தில் விளையும் மூலிகைகளைக் கொண்டே மருந்து தயாரிக்க இந்நூல்கள் உதவியுள்ளன.

மேற்படி நாயன்மார்கட்டு சித்த வைத்தியசாலையில் இருந்த பெறுமதி மிக்க பல வைத்திய நூல்கள் 1995 ஆம் ஆண்டின் இறுதியில் நிகழ்ந்த இடப்பெயர்வின் போது அழிக்கப்பட்டன. பண்டைய தமிழரின் சிறப்புமிக்க வரலாற்று ஆதாரங்கள் பல அப்போது அழிக்கப்பட்டன.

யாழ்ப்பாண அரசர்கள் வைத்திய பாரம்பரையினரை அரவணைத்து உதவியுள்ளனர். அவர்களுக்கு சில கட்டுப்பாடுகளையும் விதித்திருந்தனர் என்பதை அறிய முடிகின்றது.
யாழ்ப்பாணத்திலுள்ள சட்டநாதர் சிவன் கோயில், சந்திரசேகரப் பிள்ளையார் கோயில், கொழும்புத்துறை வதிரிபீட விநாயகர் கோயில் ஆகியவற்றின் பாதுகாவலர்களாகவும் மேற்படி நாயன்மார் கட்டு சித்த வைத்திய குடும்பத்தினரை யாழ்ப்பாணத் தமிழ் அரசர்கள் நியமித்துள்ளனர்.

அரச கட்டளையில் வைத்தியராவதற்கான தகைமைகள் பின்வருமாறு கூறப்பட்டுள்ளன. சைவ சமய விதிப்படி விசேட தீட்சை பெற்றவராய், வியபிசாரம், மது மாமிச போசனம் இல்லாமை, பொய், சூது போன்ற குற்றங்களற்றவராய் நல்லொழுக்கம் உள்ளவராய் இருத்தல் வேண்டும். இவ்வாறான தகைமை கொண்டவர்களாக வைத்தியர்கள் இருப்பதுடன் அவர்களுக்காக கடமைகளும் வகுத்துக் காட்டப்பட்டுள்ளன.

நோய்கள் ஆன்மீகம் பௌதீகம் தெய்வீகம் என்று மூன்று பிரிவுகளாக வகுக்கப்பட்டே வைத்தியம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இரசாயனத் தொற்று நீக்கி இல்லாத அக்காலத்தில் சத்திர சிகிச்சை மேற்கொண்ட பின்னர் தையலிடுவதற்கு வெங்காயத்தில் அவித்த தும்பு நார் பயன்படுத்தப்பட்டுள்ளது.
சித்த ஆயுள்வேத முறைப்படி கண்டறியப்பட்ட ரோகங்களின் (நோய்களின்) எண்ணிக்கை 4448 ஆகும். அத்தனை நோய்களுக்கும் ஆயுள்வேத சித்த வைத்திய முறையில் மருந்துகள் கண்டறியப்பட்டுள்ளன. எலும்பு முறிவு போன்ற உள்ளுறுப்புத் தாக்கங்களுக்கும் மேற்படி வைத்தியசாலையில் மருத்துவம் நடைபெற்றுள்ளது. இதுவும் யாழ்ப்பாண அரசர் கால வைத்தியப் பணியின் மகத்துவத்தை வெளிப்படுத்த சான்றாயமைகின்றது.

மேலும் ஆங்கிலேய தேசாதிபதி மனிங், சேர். பொன் இராமநாதன், முன்னாள் ஜனாதிபதி ஜே. ஆர். ஜயவர்தனவின் தந்தையார் போன்றோரும் அவ்வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுள்ளனர் என்பதை அங்கிருந்த ஆவணங்கள் மூலம் அறிந்து கொள்ள முடிந்தது.

(உதவி மூலம் : “யாழ். இராச்சிய மன்னர்களின் சிறப்புமிகு வைத்தியப் பணிகள்”, த. மனோகரன்துணைத் தலைவர், கல்விக் குழுச் செயலாளர், அகில இலங்கை இந்து மாமன்றம்)

Related posts

வினோத உலகம் – 16

Thumi202121

முந்தைய என்னவள்

Thumi202121

படைத்தல் மட்டுமல்ல வரலாறு

Thumi202121

Leave a Comment