இதழ் 53

அதிசய மீன்களின் இறுதி யாத்திரை

பூக்கள் இருந்தாலும் இவற்றை தாவரங்களாய் கருதுவதில்லை. எந்நேரமும் தண்ணீரியே இருந்தாலும் போதை இவற்றுக்கு ஏறியதே இல்லை. ஆம். இயற்கையின் ஆச்சரியங்கள் மீன்களாலும் தான் எழுதப்பட்டிருக்கின்றன. கடல் நீரில் வாழும் மீனினங்களால் நன்னீரில் வாழ முடியாது. அதே போன்று நன்னீரில் வாழும் மீன்களால் கடல் நீரில் வாழ முடியாது. காரணம் உப்பு. உப்புச் செறிவுகளின் மாறுதலுக்கேற்ப தம்மை உடனடியாக தகவமைத்துக்கொள்ள அவற்றுக்கு இயலுவதில்லை. ஆனால் ஒருவகை மீன்களால் கடல் நீரான உப்பு நீரிலும் வாழ முடியும். கரை நீரான நன்னீரிலும் வாழ முடியும். அவை தான் சால்மன் (Salmon) மீன்கள்.

சால்மன்! வயிற்றிற்கும் வாய்க்கும் நெருக்கமான பெயராக இருக்கிறதா? ஆம் அதுவே தான். பதனிடப்பட்டு, ரின்களில் அடைக்கப்பட்டு, கடைகளில் விற்பனைக்கு வந்து, விருந்துகளில் ருசி சேர்க்கும் செமன் எனப்படும் சால்மன் மீன்களைத்தான் சொல்கிறேன். உங்கள் வீடுகளின் சுடுநீரில் கொதிக்கும் இந்த சால்மன் மீன்கள் நன்னீரில் பிறந்து, கடல் நீரில் வளர்ந்து மீள நன்னீரிலேயே சாகும் கதை தெரியுமா உங்களுக்கு?

பொதுவாக எல்லா மீனினங்களையும் போன்ற உடலமைப்பைத்தான் இவையும் கொண்டுள்ளன. நன்கு வளர்ந்த ஒரு சால்மன் மீனின் நீளம் ஒன்றரை அடி வரை இருக்கும். நான்கு முதல் ஐந்து வருடங்கள் வரை இவை உயிர் வாழும். அவற்றின் உடல் சிவப்பு நிறத்திலும் தலையும் வாலும் பச்சை நிறங்களிலும் இருக்கும். ஆண் மீனின் முகம் நீண்டும் அவற்றின் வாய்கள் முன்னோக்கி நீண்டு வளைந்தும் வாயில் கூறிய பற்களும் இருக்கும். நன்னீரிலும் உப்பு நீரிலும் வாழத்தக்க அமைப்பில் அவற்றின் உடல் உற்பாகங்கள் வடிவமைக்கப்பட்டும் இருக்கும்.

கிட்டத்தட்ட மூன்று வருடங்கள் கடலிலே நன்றாக வளரும் சால்மன் மீன்கள் தாம் இனப்பெருக்கப் பருவத்தை அடைந்ததையும் இன்னுமொரு வருடத்திற்குள் தமது ஆயுள் முடிந்துவிடப் போவதையும் உணர்ந்து கொள்கின்றன. எனவே, தம் உயிர் பிரிவதற்குள் தமது சந்ததியை உருவாக்கிவிட வேண்டும் என்பதற்காக எந்த மீன்களும் செய்யத்துணியாத அற்புதம் ஒன்றை சால்மன் மீன்கள் நிகழ்த்துகின்றன. அதுதான் சால்மன் மீன்களின் தியாகங்கள் நிறைந்த தேசாந்திரப் பயணம்.

இறப்பதற்கு முதல் எல்லா மனிதர்களும் தாங்கள் கடந்து வந்த பாதையை நினைத்துப் பார்க்க வேண்டும் என்பார்கள். ஆனால் இந்த சால்மன் மீன்கள் நினைத்து மட்டும் பார்க்காமல் கடந்து வந்த பாதை வழியே மீள பயணித்து தம் பிறப்பிடத்தை அடைகின்றன. சவால்களும் தியாகங்களும் நிறைந்த இந்த தேசாந்திரப் பயணத்தைப் பற்றி பார்ப்போம் வாருங்கள்.

சால்மன் மீன்களின் பிறப்பிடம் நன்னீரான ஆற்றுநீர் உற்பத்தியாகும் மலைப்பகுதிகள். உப்பு நீரில் சால்மன் மீன் முட்டைகள் பொரிக்காது. அப்படியே பொரித்தாலும் சிறிய மீன் குஞ்சுகளால் அந்த உப்புச் செறிவில் வாழ முடியாது. எனவே, இனப்பெருக்க காலம் நெருங்குவதை உணரும் போது சால்மன் மீன்கள் நன்னீர் நோக்கி பயணப்படத் தயாராகின்றன. உப்புச் செறிவு நிறைந்த கடல் நீரில் கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் வாழ்ந்து பழக்கப்பட்டு விட்ட சால்மன் மீன்களால் உடனடியாக நன்னீர் ஆறுகளுக்குள் நுழைந்து விடமுடியாது. ஆற்று நீர் கடல் நீரோடு சங்கமிக்கும் முகத்துவாரப் பகுதிகளை முதலில் அடையும் சால்மன் மீன்கள் அங்கு மெல்ல மெல்ல தமது உடலை நன்னீருக்கேற்ப தகவமைத்துக் கொள்கின்றன. அப்படி சில வாரங்கள் இந்தப் பயிற்சி தொடரும்.

நன்னீருக்கேற்ப தமது உடல் தயாரானதும் முகத்துவாரத்திலிருந்து ஆற்று நீரோட்டத்திற்கு எதிராக நீந்தத் தொடங்கிவிடுகின்றன. நீரோட்டத்திற்கு எதிராக நீந்துவது என்பது மனிதர்களுக்கே சவாலான விடயம். ஆற்றிலிருந்து கடலுக்குப் போவதுதான் வழக்கம். பொதுவாக எல்லா மீன்களும் நீரோட்டப் பாதையிலேயே பயணிக்கும். இங்கே வழக்கத்திற்கு விலக்கு அளித்து கடலில் இருந்து ஆற்றை நோக்கி நீரோட்டத்திற்கு எதிராக தமது முழு சக்தியையும் பயன்படுத்தி, தம் சந்ததிக்காக சால்மன் மீன்கள் நீந்துகின்றன. எவரும் பயணிக்காத பாதைகளில் பயணிக்கும் இந்த மீன்கள் ஆச்சரியத்தின் ஆசான்கள்.

ஒருவர் வழக்கத்திற்கு முரணாகப் பயணப்படும் போது எதிர்நோக்கும் சவால்கள் ஏராளம். சால்மன் மீன்களும் அதற்கு விதிவிலக்கல்ல. அவற்றின் முதல் சவால் ஆறுகளிலிருந்து கடலை நோக்கித் தீவிரமாகப் பாய்ந்து வரும் நீர்தான். அளவில் சிறிய இந்த மீன்கள் அந்த நீரின் தீவிரத்தை எதிர்த்து நீந்தி முன்னேறும் உடற் பலத்தையும் மனோபலத்தையும் பெற்றிருக்கின்றன.

இவற்றின் இரண்டாவது எதிரி செல்லும் பாதையில் குறுக்கிடும் நீர் வீழ்ச்சிகள். எதிர்த்திசையில் பிய்ச்சி அடிக்கும் நீரையும் எதிர்த்து சுமார் 20, 30 அடிகள் உயரமான நீர் வீழ்ச்சிகளையும் தாவிக் குதித்து நீந்தி மேலே ஏறிவிடுகின்றன.

சால்மன் மீன்களின் மூன்றாவது மிகப் பெரும் எதிரி மனிதன்தான். ஒவ்வொரு வருடமும் நடக்கும் இடப்பெயர்வின் பருவ காலத்தை அறிந்துவைத்திருக்கும் மீனவர்கள் இலட்சக் கணக்கில் படையெடுக்கும் இம் மீன்களை சமுத்திரத்தில் வைத்தும் முகத்துவாரங்களில் வைத்தும் வலைவிரித்தும் பாரிய மீன் பிடி இயந்திரங்களைப் பயன்படுத்தியும் பிடித்துவிடுகின்றனர். அவ்வாறு பிடிக்கப்பட்ட மீன்கள்தான் டின்களில் அடைக்கப்பட்டு எமக்கு உணவுக்காவும் வருகின்றன. சந்ததிக்காக சால்மன் மீன்கள் செய்ய இருந்த தியாகம் திசைமாற்றப்பட்டு எமக்கு உணவாவதும் உணவுச் சங்கிலிகளின் அவிழ்க்கப்படாத முடிச்சுக்கள்தான்.

இவற்றின் நான்காவது எதிரி கரடிகள். பனிக்காலம் முடிந்து ஆறு மாதங்களாக குகைக்குள் அடைந்து உறங்கிக் கிடந்த கரடிகள் பசியெடுத்து சால்மன் மீன்களின் இடப்பெயர்ச்சிக் காலத்தில்தான் வெளியேற ஆரம்பிக்கின்றன. ஆறு மாதகாலம் பசியுடன் இருந்துவிட்டு தீர்ந்துபோன கொழுப்புச் சத்தைச் சேகரிக்க நீர்வீழ்ச்சிகளில் சாலமன் மீன்களின் வருகையை எதிர்பார்த்து கூட்டமாக காத்திருக்கும் கரடிகள். நீர் வீழ்ச்சிக்கு எதிரே தாவித் தாவி இம் மீன்கள் மேலே ஏறும்போது கரடிகள் லபக் லபக் எனப் அவற்றைப் பிடித்து உண்டு ஏப்பம் விடும்.

இவை மட்டுமன்றி ஆங்காங்கே நரிகளும் ஓநாய்களும் கூட்டமாக வேட்டைக்குத் தயாராயிருக்கும். நன்னீர் ஏரிகளில் வாழும் அனகொண்டா வகை மலைப் பாம்புகளிடமிருந்தும் முதலைகளிடமிருந்தும் அவை தப்பிக்கவேண்டும். மேலும் பருந்து, கழுகு போன்ற இதர பறவைகளிடமிருந்தும் இவை தப்ப வேண்டும். இவ்வாறு பல்வேறு சவால்களையும் தாண்டித்தான் இந்த சால்மன் மீன்கள் தமது தேசாந்திரப் பயணத்தை வெற்றிகரமாக சென்று முடிக்கின்றன. இந்தக் கடினமான பயணத்தில் பல ஆயிரம் மீன்கள் இறந்துபோயிருக்கும். இந்தச் சவால்களையெல்லாம் கண்டு அவை தயங்குவதில்லை. வாழ்வு அல்லது சாவு என்ற திடமான நம்பிக்கையுடன் முன்னேறிச் செல்வது எமது வாழ்க்கைக்கும் மிகப்பெரும் பாடமாகும். இவ்வாறு சுமார் 7000 கி.மீ.களைக் கடந்து இவை பயணிக்கின்றன.

எத்தகைய பூட்டுகளுக்கும் சாவிகள் இருக்கத்தான் செய்கின்றன. அத்போல இவ்வகை வகையான ஆபத்துக்களிலிருந்து தப்பிக்கும் யுத்திகளையும் இயற்கை அந்த சால்மன் மீன்களுக்கு வழங்கியுள்ளது. ஒன்று சால்மன் மீன்களால் துரு துருவென அதி வேகமாக நீந்திச் செல்லமுடியும். மற்றையது அவை பயணிக்கும் நன்னீர் பாதையில் முழைத்திருக்கும் சிவப்புப் பச்சைப் பாசிகளின் நிறத்தில் சாலமன் மீன்களின் உடல் நிறமும் இருப்பதால் பறவைகளால் இவற்றைக் கண்டுபிடித்து வேட்டையாடுவது சிரமமாக இருக்கும்.

சாலமன் மீன்கள் புத்திக் கூர்மை மிக்கவை என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இவை தமது புத்திக் கூர்மையைப் பயன்படுத்தி தப்பிக்கவும் முயல்கின்றன. நீந்திச் செல்லுப்போது நீரில் ஏற்படும் அழுத்த மாற்றங்களைக் கணித்து திசையை மாற்றிக்கொள்கின்றன. கடலில் மீன் வலைத் தடுப்பு இருப்பதை உணர்ந்துகொண்டால் அவை ஒட்டு மொத்தமாக தகவல்களைப் பரிமாறிக்கொண்டு கடலுக்குள் பின்வாங்கி விடுகின்றன.

அதேபோன்று நீர் அருவிகளைக் கடந்துசெல்லும்போது அங்கே வேட்டைக்குக் காத்திருக்கும் கரடிகள், நரிகள், ஓநாய்கள் என்பற்றின் பிடியிலிருந்தும் மறைந்து தப்பித்துச் செல்லும் தொடர்பாடல் வழிமுறைகள் அவற்றிடம் உண்டு. நீரின் மேல் விழும் நிழல்கள் குறித்தும் அவை மிகக் கவனமாக இருக்கின்றன. இராஜாலிப் பருந்துகள் பறந்து வந்து மீன்களைத் தாக்குவதை இவை அவற்றின் நிழல்களை வைத்தே ஊகித்து திசையை மாற்றி மறைந்துவிடுகின்றன. தமது தேசாந்திர பயணத்தைத் தொடரும்போது ஏற்படும் ஆபத்துக்களிலிருந்து தப்பித்துக்கொள்ள இவ்வாறான பல்வேறு தற்காப்புத் திட்டங்களை அவை கொண்டுள்ளன.

இவ்வாறு பல தடைகளையும் தாண்டி இறுதியாக தாம் பிறந்த தாய் மண்ணை மீண்டும் இவை வந்தடைகின்றன. சமுத்திரத்தில் இருந்து இவ்வளதூரம் அவை பயணித்தது தாம் பிறந்த தமது பெற்றோர் தம்மை இவ்வுலகிற்கு அறிமுகம் செய்துவிட்டு இறந்த அந்த இடத்தை நோக்கித்தான். தாம் பிறந்த இடம் இதுதான் என்பதை சுமார் நான்கு ஆண்டுகள் கடந்த பின்னரும் அவை ஞாபகத்தில் வைத்துக்கொண்டு மீண்டும் அதே இடத்தை வந்தடைவது ஆராய்ச்சியாளர்களையே ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

குறித்த இடத்தை வந்தடைந்தபின்னர்தான் ஆண், பெண் சால்மன் மீன்கள் இணப்பெருக்கத்தில் இணைகின்றன. வாழ் நாளில் ஒரு முறைதான் இவை இனப்பெருக்கம் செய்கின்றன. இணைந்த சில நாட்களில் பெண் சால்மன் மீன் ஆற்றில் நீரோட்ட வேகம் குறைவான பாதுகாப்பான இடங்களில் தனது வாலினால் பள்ளங்களைத் தோண்டும். தோண்டி அங்கே முட்டைகளை இடும். ஒரு தடவையில் ஒரு பெண் மீன் 3000 முதல் 4000 வரையில் முட்டைகளை இடும். ஒரு சால்மன் மீன் இவ்வளவு தொகையான முட்டைகளை இடும் என்றால் அங்கே குழுமியிருக்கும் ஆயிரக் கணக்கான மீன்களும் எத்தனை முட்டைகளை இடும் என்று எண்ணிப் பாருங்கள்.

முட்டைகளை இட்டு ஓரிரு மாதங்களில் பெண் மீன்கள் எல்லாம் இறந்துபோகும். அம் முட்டைகளைப் பாதுகாக்கும் பொறுப்பு ஆண் மீன்களைச் சாரும். அடுத்த இரண்டு மாதங்களில் ஆண் மீன்களும் கொத்துக் கொத்தாக இறந்துவிடும். கடல் போன்று சரியான உணவு கிடைகாததும் நீரில் உள்ள குறைபாடுகளும் பல மைல்கள் தொடர்ந்து பயணித்து வந்த களைப்பு அனைத்தும் சேர்ந்து இவற்றை ஆட்கொள்ள இவை பலவீனப்பட்டு ஆற்று ஓரங்களில் உள்ள மர வேர்களுக்குள் தஞ்சம் புகுகின்றன. இறுதியில் பிறந்த மண்ணிலேயே அவை இறந்து விடுகின்றன.

முட்டையிட்டு சரியாக நான்கு மாதங்களில் குஞ்சு சால்மன் மீன்கள் முட்டைகளை விட்டு வெளியே கிளம்பும். இலட்சக் கணக்கில் வெளிக்கிளம்பும். இக்குட்டி மீன்களுக்கு சுமோல்ட் என்று பெயர். உடல் பலம் பெறும் வரையில் அங்கேயே சில வாரங்கள் காத்துக்கிடந்துவிட்டு தமது பெற்றோர் எவ்வழியில் இங்கே வந்து சேர்ந்தார்களோ அதே வழியில் மீண்டும் இந்தக் குஞ்சுகள் அநாதையாக கடலை நோக்கிப் பயணிக்க ஆரம்பிக்கின்றன. இவை அளவில் மிகச் சிறியவையாக இருப்பதனால் பெரிய மீன்கள் வரும்போது இருந்த மிகப் பெரும் சவால்கள் இவற்றுக்கு இருப்பதில்லை. நீரின் திசையிலேயே இவை செல்ல வேண்டி இருப்பதனால் மிக இலகுவாக கடலைச் சென்றடைய முடியும். கடலை நோக்கிச் செல்லும் பயணத்தை சுமோல்டிபிகேஷன் (Smoltification) என்பார்கள்.

குதித்தோடும் நீர்வீழ்ச்சிகளிலும் பாய்ந்தோடும் பள்ளத்தாக்குகளிலும் பல ஆயிரம் கி.மீ. தூரம் பயணம் செய்து இறுதியாக நன்னீர் கடலில் வந்துகொட்டும் முகத்துவரங்களை இவை வந்தடைகின்றன. வந்தவுடன் கடலுக்குள் பிரவேசித்தால் இக் குஞ்சு மீன்கள் உடனடியாக உயிரிழக்கவேண்டி ஏற்படும் என்பதனை இவற்றுக்கு யார் கற்றுக்கொடுத்திருப்பார்கள்? இயற்கையின் ஆச்சரியங்களில் இதுவும் ஒன்று. இவை உப்பு நீரில் வாழத்தக்கவாறு தமது உடலைத் தயார் படுத்திக்கொள்ள சில நாட்கள் முகத்துவாரங்களில் இருந்து பயிற்சி எடுக்கும். பயிற்சியை முடித்துக்கொண்டு ஒன்றன் பின் ஒன்றாக சமுத்திரத்திற்குள் பிரவேசித்துவிடும்.

மீண்டும் வழமைபோல் அவற்றின் சமுத்திர வாழ்க்கை ஆரம்பமாகும். அங்கேயே உண்டு அங்கேயே வளர்ந்து மூன்று வருடங்களை ஓட்டிவிட்டு இனப்பெருக்கம் செய்யும் பருவத்தை அடைந்ததும் மீண்டும் இவை தமது பெற்றோர் பயணம் செய்தது போன்று, தாம் சிறு பருவத்தில் எந்த வழியில் கடலை வந்தடைந்தனவோ அதே வழியில் மீண்டும் தமது பிறப்பிடம் நோக்கிச் செல்ல ஆயத்தமாகும். இவ்வாறு ஒவ்வொருவருடமும் இந்த சால்மன் மீன்களின் தேசாந்திரப் பயணம் தொடர்ந்துகொண்டேதான் இருக்கும்.
(சால்மன் மீன் பற்றிய தகவல்களுக்கு நன்றி:- அஷ்.எம்.என்.ஆலிப் அலி (இஸ்லாஹி) B.A)

அவ்வாறு சமுத்திரத்திற்குள் பிரவேசித்த மகிழ்ச்சியில் சால்மன் மீன் குஞ்சு ஒன்று துள்ளிக் குதித்த போது தருணம் பார்த்துக் காத்திருந்த அந்த நீர்ப் பறவையின் அலகுகளுக்குள் அகப்படப் போகும் அந்த தருணத்தை அட்டையில் பார்க்கிறீர்கள். இயற்கையின் சவால்களை எதிர்த்து பெற்றவர்களின் தியாகத்தால் பிறந்த மீன் குஞ்சு இறுதியில் அந்த பறவைக்குத்தான் உணவாகும் என்றால் இயற்கையின் நியதிகளையும் நீதிகளையும் என்னவென்று சொல்வது? இவற்றை யார் வெல்வது?

Related posts

ஈழச்சூழலியல் 39

Thumi202121

சித்திராங்கதா – 51

Thumi202121

காலமே கதை சொல்லடா

Thumi202121

Leave a Comment