இதழ் 53

சித்திராங்கதா – 51

கல்யாணி தேவி

‘எல்லாமே உண்மைதானா வேந்தே…? அரியணை மீது அவாக்கொண்டு அநியாயம் நிகழ்த்தியே ஆட்சிபீடமேறினார் சங்கிலிய மகாராஜா என்பதும் உண்மைதானா? தன்னிகரில்லா தமிழ்வேந்தன் ஒரு பச்சிளம்பாலகனை கொன்று ஆட்சிபீடம் ஏறினான் என்பது முறையற்ற வடு என்பதை எங்ஙனம் மறந்தீர்கள் வேந்தே?’ வருணகுலத்தான் கண்கள் துடிதுடிக்க சங்கிலிய மகாராஜாவை பார்த்து இந்தக்கேள்வியினைக் கேட்டான்.

சிறிதும் சலனமின்றி நின்றான் சங்கிலியன்.

‘நிதானம் கொள்ள வேண்டும் வருணகுலத்தாரே, தாம் என்மீது கொண்ட மரியாதையில் குற்றம் சூழ்ந்துவிட்டதாய் குழப்பம் கொள்கிறீர்கள் என்பதை நான் அறிகிறேன். நான் கூறுவதை முழுதாய்க் கேளுங்கள். பின் தங்கள் முடிவு எதுவாகினும் வரவேற்கின்றேன். போரினின்று விலகி தாம் தஞ்சை திரும்ப விரும்பினும் அதற்கு முழுமையான சுதந்திரம் அளிக்கிறேன். அது குறித்து தஞ்சை இரகுநாதநாயக்கரிடம் கூட எக்குற்றமும் உரைக்க மாட்டேன் என்று உறுதியளிக்கிறேன். ஆனால் அதற்குமுதல் தாங்கள் என்னுடன் வரவேண்டும். நான் சொல்வதை சிறிது கேட்கவேண்டும்’ என்று வருணகுலத்தான் தோள்களை பற்றியவாறே யமுனா ஏரியின் மறு கரை நோக்கி அழைத்துச் சென்றான் சங்கிலியன்.

‘இதோ… இந்த இடத்தில்தான்… நான் முறையற்ற விதத்தில் கொன்றதாய் தாங்கள் அறிந்தீர்களே, அந்தக் கொலை நடந்த களம் இதுதான். இந்த அரியணையில் நான் அமர்த்தப்பட்ட சாட்சியம் இங்குதான் உருவானது. என் மனம் சிரமம் கொள்ளும்போதெல்லாம் இந்த யமுனா ஏரி நோக்கி நான் வருவதும் அதனால்த்தான். இந்த ஏரியின் சுகமான தென்றல் எப்போதும் என்மீது மட்டும் சுமையாகவே வீசும். அந்த சுமையை அனுபவிக்க விரும்பியே இவ்விடம் வருவேன். ஆம் வருணகுலத்தாரே… இந்த ஆட்சிபீடம் என்பதும் நான் விரும்பி அனுபவிக்கின்ற ஒரு சுமைதான்…’

வருணகுலத்தான் எதுவும் புரியாமல் விழித்துக் கொண்டிருந்தான்.

‘உடன் வாருங்கள் வருணகுலத்தாரே, மேலும் விளக்கமாக விளம்புகிறேன்’ என்று கூறி ஏரியின் ஒரு முனையில் இருந்த பெரிய கற்றூணை தன் புஜபலத்தை பயன்படுத்தி மெள்ள அசைக்கத் தொடங்கினான் சங்கிலியன். அந்த கற்றூணின் அடியில் படிக்கட்டுகளால் ஒரு பாதை புலப்படுவதை வருணகுலத்தான் பார்த்துக் கொண்டிருந்தான்.

கையில் தீப்பந்தத்தை எடுத்துக் கொண்டு அந்தப்பாதை வழியே சங்கிலியன் வருணகுலத்தானை அழைத்துச் சென்றான். அந்தத் தீப்பந்த வெளிச்சத்திலேயே அந்தச் சுரங்கப்பாதை ஓர் அழகிய மாளிகை போல் இருப்பதை வருணகுலத்தான் ஆச்சரியத்தோடு கவனித்தான்.

அன்றொரு நாள் மந்திரிமனையிலிருந்து சட்டநாதர் கோயிலிற்கு சுரங்கப்பாதை வழியே சென்றதை வருணகுலத்தான் இப்போது நினைந்து கொண்டான். அந்தச் சுரங்க வழியில் கண்ட ஒரு நாற்சந்தியில் ஒரு பாதை வழியே சென்று அன்று சட்டநாதர் கோயிலை அடைந்தான். இன்னொரு பாதை கோப்பாய் மாளிகைக்கு செல்வதை அண்மையில் தான் அரசர் மூலம் அறிந்திருந்தான். அப்படியாயின் எஞ்சிய அந்தப்பாதை இந்த ஏரிக்கரை சுரங்க மாளிகைக்குத்தான் வருகிறது என்பதை வருணகுலத்தான் இப்போது ஊகித்து அறிந்து கொண்டான்.

உள்ளே நுழைய நுழைய அந்த மாளிகையின் கட்டுமானம் அவனை ஆச்சரியப்படுத்திக் கொண்டே இருந்தது. அதன் சுவர்களில் பலவர்ண சாயங்களால் தீட்டப்பட்டிருந்த ஓவியங்கள் ஒவ்வொன்றும் அவனை வந்து நின்று பார்க்கச்சொல்லி அழைப்பது போல் இருந்தன. பொன்முலாம் பூசிய மரச்சட்டங்களின் நடுவே சிம்மாசனத்தில் வீற்றிருக்கும் மன்னர்கள் பலரின் ஓவியங்களும் அங்கிருந்தன. அரசர்களை நேரில் காண்பது போலவே அத்தனை தத்ரூபமாக அந்த ஓவியங்கள் வரையப்பட்டிருந்தன. சங்கிலியன் கையிலிருந்த தீப்பந்தம் குறிப்பிட்ட ஒரு ஓவியச்சட்டத்தின் முன் நின்றது.

அங்கிருந்த அத்தனை ஓவியங்களிலும் இதற்கு இணை இல்லை என்பது போல இருந்தது அந்த ஓவியத்திலிருந்த மன்னரது சிம்மாசனக்காட்சி.

‘தஞ்சை வீரரே… தாங்கள் இப்போது பார்த்துக் கொண்டிருப்பது தான் நிஜமான மாமன்னர் சங்கிலிய மகாராஜா.. பறங்கி இனத்திற்கே சிம்ம சொப்பனமானவர். எத்தனை முறை பறங்கியன் படையெடுத்து வந்தானோ அத்தனைமுறையும் அவன் படையை தலை தெறிக்க ஓட வைத்த வீரவேந்தன். பறங்கியனிற்கோ பறங்கியை ஆதரிக்கும் சுதேசிக்கோஅவர் ஈவு இரக்கம் பார்த்ததில்லை. அரச ஆணையை மீறி மன்னாரில் அன்று மதம்மாறிய கிட்டத்தட்ட 600-700 சுதேசிகளையும் , அவர்களிற்கு தைரியம் அளித்த வன்னி அதிகாரி உரசிங்கனையும் ஒருவர் விடாமல் ஒரே சமயத்தில் கொன்றழித்து மதம் மாற நினைத்தோர் மனதில் அன்று பெருங்கிலி உருவாக்கினார் சங்கிலிய மகாராஜா. இத்தனை வெறி கொண்டு பறங்கியனை எதிர்த்த அந்த வீரவேந்தன் திருநாமத்தை எனக்கிட்டு என்னை இந்த அரியணையில் ஏற்றியது யார் தெரியுமா? வேறுயாருமில்லை. நீங்கள் நன்கறிந்த ராஜமந்திரி ஏகம்பரம் தொண்டமனார்தான்’

வருணகுலத்தான் கண்கள் ஆச்சரியத்தில் விரிந்தன.

‘ஆம் தளபதியாரே, இந்த ஜகமே என்னை எதிர்த்து நின்றாலும் நான் முழுதாய் நம்பும் ஒருவராய் இராஜமந்திரியார் இருப்பதற்கு அதுதான் காரணம். இந்த ஆட்சிபீடத்தில் நான் அமரவேண்டும் என்பது எனது கனவல்ல. இராஜமந்திரியாரது கனவு… ஆம் வருணகுலத்தாரே, தெளிவுறவே கூறுகிறேன்’ என்று அடுத்த ஓவியத்தை நோக்கி அழைத்துச் சென்றான் சங்கிலியன்.

‘இதோ இவர்தான் மாமன்னர் புவிராஜ பண்டாரம். இவரது அரசவையில் நம்பிக்கைக்குரிய மந்திரியாய் திகழ்ந்தவர்தான் ஏகாம்பரம் தொண்டமனார். சங்கிலிய மகாராஜாவிற்குப்பின் எத்தனையோ வேந்தர்கள் ஆண்டு போனாலும் மீண்டும் சங்கிலியமகாராஜா போல் அஞ்சாமல் பறங்கியனை முழுதாய் எதிர்த்தவர் இவரேதான். மன்னாரை பறங்கியனிடமிருந்த மீட்டெடுக்க பெரும் படை கொண்டு புறப்பட்டார். எதிர்பார்த்த வெற்றி எட்டப்படவில்லை. மாறாக பறங்கியன் படை யாழ்ப்பாணத்தை நோக்கி குறி வைத்தது. அந்தப் போரில் வீரமரணம் அடைந்த புவிராஜபண்டார மகாராஜாவின் தலையினை ஈட்டியில் குத்தி நடுக்களத்தில் அன்று வைத்தான் அந்தக் கொடும் பறங்கியன்.

அந்த சம்பவத்திற்குப் பின் அரியணை ஏற துணிந்தவர் எவருமின்றி யாழ்மண்ணில் அடிமை வாசம் வீசத் தொடங்கியது. அரச வம்சத்தில் தமக்கென்றொரு கைப்பொம்மையாய் எதிர்மன்ன சிங்கமகாராஜாவை தெரிந்தெடுத்து அரியணையில் அமர்த்தினர் பறங்கியர்’ என்று தீப்பந்த வெளிச்சத்தில் எதிர்மன்ன மகாராஜாவின் ஓவியத்தைக் காட்டினான் சங்கிலியன்.

‘அரியணையில் எதிர்மன்ன சிங்க மகாராஜா இருந்தாரே ஒழிய ஆட்சியும் அதிகாரமும் பறங்கியர் எண்ணப்படியே நடந்தது. சிந்தை தெளிவு வேந்தர்க்கு வந்து விடக்கூடதென்றே வடிவடிவான குப்பிகளில் மதுபானங்கள் அரசர்க்கு தினமும் அனுப்பிவைத்தனர் பறங்கியர். கொஞ்சம் கொஞ்சமாய் மதுவிற்கு மன்னர் அடிமையாக அவரது பழக்கவழக்கங்களும் முறை தவறி போய்க் கொண்டிருந்தது. மோகம் அடங்காதவராய் எண்ணிக்கையற்ற மனைவிகள் அவரிற்கு தேவைப்பட்டனர். மன்னரைப்பார்த்து நாட்டுமகளிர் பயந்து ஓடவேண்டிய சூழல் ஏற்பட்டது. போதை வெறி மன்னரை அங்ஙனம் உருக்குலைந்திருந்தது.

அன்று அவரை தட்டிக்கேட்கக்கூடிய தைரியம் மிக்க ஒருவராய் இருந்தவர் என் தாயார் வீரவாகினி மட்டுமே. ஆம் எதிர்மன்ன சிங்கமகாராஜாவின் உடன் பிறந்த ஒரே சகோதரி என் தாயாராவார். மன்னரது அநியாயங்கள் இதற்குமேல் பொறுப்பதற்கில்லை என்று ராஜமந்திரியார் தொட்டு அரசவையில் அனைவரும் கூற தன் சகோதரன் மீது நம்பிக்கை கொண்டு அரசரை சந்திக்க சென்றார் என் தாயார்.

போதை மயக்கத்தின் உச்சத்தில் இருந்த வேந்தர்க்கு வருவது யார் என்று கூட தெரியவில்லை போலும். அங்கு என்ன அசம்பாவிதம் நடந்ததோ தெரியாது. அன்று அரசர் என்ன சொன்னார் என்று கூடத் தெரியாது. என் தாய் மாளிகைக்குள்ளே தன்னை தீயிட்டு எரித்துக் கொள்ளத் துணிந்து விட்டாள்.

அந்த வயதில் என் தாய் வீரவாகினி என் கண்முன்னே தீக்கு இரையான காட்சி இன்னும் என் கண்களில் அப்படியே நிற்கின்றது தளபதியாரே’
சங்கிலியனின் குரல் உடைந்திருந்தது. அந்தத் தீப்பந்த வெளிச்சத்தில் அவன் கண்கள் குளமாகி இருப்பதை வருணகுலத்தான் கண்டான்.

தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டு சங்கிலியன் மேலும் தொடர்ந்தான்.
‘யாருமற்ற அனாதையாய் நின்ற எனக்கு ராஜமந்திரியாரே அன்று துணையாய் நின்றார். சிறிது காலம் தன் நண்பர் திருமலை வன்னியர் தனியுண்ணாப் பூபால வன்னியர் தயவில் என்னை திருகோணமலையில் வசிக்கச்சொன்னார் ராஜமந்திரியார். அவரது வாக்கை ஏற்று நானும் திருகோணமலைக்கு சென்றுவிட்டேன்.

அலையும் மலையும் கூடிக்களிக்கும் அந்த அமைதியான தேசத்தில்தான் நான் கல்யாணிதேவியை சந்தித்தேன். தனியுண்ணாப் பூபாலவன்னியரின் புதல்வி… என் வெறுமைகளை எல்லாம் தன் காதலை ஊற்றி நிரப்பிய பேரழகி. திருகோணமலையும் அவளுமாய் என் வாழ்வின் பேரின்பங்களை போதுமென்னும் வரை அனுபவித்துக் கொண்டிருந்தேன்.

ராஜமந்திரியாரை சந்திப்பதற்காக மட்டுமே நல்லைக்கு வருவேன். அப்படியொரு சமயத்தில் தான் மன்னர் எதிர்மன்ன சிங்கர் என்னை சந்திக்க விரும்பியதாய் மந்திரியார் கூறினார். மந்திரியார் கேட்டதனால் மட்டும் மன்னரை சந்திக்க சென்றேன். பொல்லாப்பழக்கங்கள் மிஞ்சியதால் உடல் பலவீனமுற்று நோய்களின் கைதியாய் படுக்கையில் கிடந்தார் மன்னர். என்னைக் கண்டதும் என் கைகளைப்பற்றிக்கொண்டு குலுங்கி அழ ஆரம்பித்து விட்டார். தன் ஆருயிர் சகோதரி வீரவாகினியின் கொடூர மரணத்திற்கு தானே காரணமாகிக் போனதை உணர்ந்து கண்ணீரால் என் கைகளை நனைத்தார்.
‘இந்தப் பாவியை உன்னால் மன்னிக்க முடியுமா? ‘ என்று அவர் கேட்டபோது என் கண்களும் அன்று கலங்கி நின்றன.

அப்போதுதான் அந்த அபாயகரமான வேண்டுகோளையும் என்னிடம் விடுத்தார்.
‘என் தங்கைக்கு நான் இழைத்த அநியாயத்திற்கு எனக்கொரு பிராய்சித்தம் தரமாட்டாயா… என் புதல்வி இராஜகாமினியை மணந்து இந்த நல்லை தேசத்தை எனக்குப்பின் நீ தான் ஆளவேண்டும். நீயே இந்த நாட்டினை கொடும்பிடியிலிருந்து மீட்க வல்லவன். கொடும்பாவம் புரிந்த உன் மாமனிற்காய் இந்த உபகாரத்தை நீ செய்வாயா?’ என்று மன்றாடினார்.

அது மட்டும் நடக்கவே நடக்காது என்று கூறிவிட்டேன். ‘எனக்கு எதுவும் தேவையில்லை. என்னை விட்டுவிடுங்கள். என் கல்யாணிதேவி எனக்காக காத்திருக்கிறாள்’ என்று கூறி நல்லைநகரை விட்டே வேகமாக விலகி வந்து விட்டேன்.

திருமலை கோணநாதர் சந்நிதானத்தில் எனக்கும் கல்யாணிதேவிக்கும் திருமணம் தனியுண்ணாபூபால வன்னியர் தலைமையில் சிறப்பாக நடந்தேறியது. என் வாழ்வில் முழுமதியாய் கல்யாணிதேவி என்னுடன்- எனக்காகவே வாழ்ந்து வந்தாள்.

என் கல்யாணியின் கண்கள் அத்தனை காதலோடு என்னைக் காண்கின்ற காட்சி இப்போதும் என் கண்களிற்கு தெரிகின்றது. எத்தனை இன்பமான நாட்கள் அவை… வாழ்வில் துன்பம் வந்தாலும் என் மகிழ்வை அவள் குறைய அனுமதிக்கமாட்டாள்.

சதியோ விதியோ தெரியாது. எங்கள் இல்லறத்தின் பரிசாய் வந்த முதல் மழலை இந்த மண்ணைப்பார்க்க முன்பே விண்ணடி சேர்ந்தது. அந்த துன்பத்திலும் கூட அவள் என் இன்பத்திலே தான் அக்கறை கொண்டிருந்தாள். தன் துன்பத்தை மறந்து என்னை மகிழ்விக்கவே அவள் அன்று முயன்றுகொண்டிருந்தாள் என்பதை இப்போது எண்ணுகையில் கூட எனக்கு துக்கம் தாளவில்லை.

எனக்காகவே எல்லாம் என்று வாழ்ந்த என் கல்யாணிக்கு நான் செய்த கைம்மாறு என்ன தெரியுமா வருணகுலத்தாரே?’

அதற்கு மேல் சங்கிலியனால் பேசமுடியவில்லை. மனதின் வலி தொண்டையில் வந்து நின்றது.

வருணகுலத்தானும் எதுவும் பேசமுடியாமல் நின்றான்.

பெருமூச்சோடு தன் சோகத்தை விழுங்கியவாறே சங்கிலியன் தொடர்ந்தான்.
‘மீண்டும் எக்காரணம் கொண்டும் நல்லைநகர் நோக்கி வரக்கூடாது என்ற முடிவோடு இருந்தேன். ஆனால் என் முடிவை நான் எடுக்க முடியுமா?… அப்படியென்றால் விதி என்ற ஒன்றுக்கு வேலை என்ன இருக்கும்?

ஒரு நாள் எதிர்மன்ன சிங்க மகாராஜா இறந்துவிட்டதாகவும், மன்னருடைய யாரோ ஒரு காதல் கிழத்திக்குப் பிறந்த மூன்று வயது பாலகனை அரியணையில் அமர்த்தி மன்னரின் ஒன்றுவிட்ட சகோதரனான அரசகேசரி ஆட்சியலுவல்களை கவனிக்க வேண்டும் என்று அரசன் சாசனம் எழுதி விட்டுச் சென்றதாய் ஊருக்குள் பேச்சு அடிபட்டது.

அதன் உண்மைத்தன்மை பற்றி நான் அறியேன். அறிய வேண்டிய அவசியமும் எனக்கில்லை என்றே கருதினேன் அன்று. ஆனால் நல்லைமண்ணில் நிகழ்ந்து கொண்டிருக்கின்ற நாசகாரிய செயல்களிலிருந்து எம் இராட்சியத்தை மீட்டெடுக்க அரசர் சொன்னபடி நானே அரசராக வேண்டும் என்று இராஜமந்திரியார் என்னை தொடர்ந்தும் வற்புறுத்திக் கொண்டே இருந்தார்.

அரண்மனை மாளிகைத் தொட்டிலில் உறங்கிக் கொண்டிருந்த அந்த மூன்று வயது பாலகன் எங்கிருந்தோ வந்த சர்ப்பம் தீண்டி இறந்தான். சர்ப்பம் தீண்டியே அந்தப் பாலகன் இறந்ததை அரண்மனை ஊழியர்கள் பலர் கண்டுள்ளனர். ஆனால் அந்த பாலகனை நான் தான் கொன்றுவிட்டதாய் அரசகேசரி மக்களிடையே வதந்தியை பரப்பி என்னைக் கொல்வதற்காய் பெரும்படையோடு திருகோணமலைக்கு வந்தான்.

மந்திரியார் மூலம் இச்செய்தியை முன்கூட்டியே அறிந்த தனியுண்ணாப் பூபால வன்னியர் என்னை இரகசியமாக மந்திரி மனைக்கு அனுப்பி வைத்தார். நானும் பூபால வன்னியர் பேச்சினை மறுக்கமுடியாமல் சென்று விட்டேன்.

மந்திரிமனையின் வழியே இதோ இந்தச்சுரங்க மாளிகையில் தான் பதுங்கியிருந்தேன். இதோ இந்தத்தூணில் சாய்ந்து நின்ற வேளைதான் என் செவிகளில் இடியாய் அந்த செய்தி விழுந்தது.

அரசகுமாரனை கொன்றவனை தேடி வெறி கொண்ட புறப்பட்ட படை திருகோணமலையில் நான் இல்லாதது கண்டு கோபம் எல்லைமீறி என் கல்யாணிதேவியை மாளிகையோடு தீமூட்டி கொளுத்துவிட்டனராம்’

சங்கிலியன் கண்களில் நீர் பெருக்கெடுத்து ஓடியது.

வருணகுலத்தானும் கண்ணீர் ததும்ப சங்கிலியனை பார்த்தான்.

‘என் தாயை பலிகேட்ட தீ என் கல்யாணிதேவியையும் என்னிடமிருந்து பறித்துவிட்டது. பொல்லாப்பழியை என்னில் சுமத்தி என் கல்யாணிதேவியை கொன்ற அரசகேசரியை நினைக்கையில் என்னால் என்னை அன்று கட்டுப்படுத்தவே முடியவில்லை. நான் யாரோவாக மாறிப் போனேன்.

வெறி கொண்டு சுரங்கத்திலிருந்து வெளிப்பட்டேன். ஏரிக்கரையில் அரசகேசரியின் தலை என் வாளினால் துண்டாகி கீழே விழுந்த போதுதான் என் மனம் அன்று அமைதி அடைந்தது.

அதன் பின்னர்தான் மந்திரியாரின் வேண்டுகோளை அமோதித்து இந்த அரியணையில் அமர்ந்தேன்.

உங்கள் அனைவருக்கும் சிம்மாசனமாக தெரியும் இந்த அரியணை எனக்கு என் கல்யாணிதேவியின் சமாதியாகவே என்றும் தெரிகிறது…’ என்று கூறுகையில் சங்கிலியன் கண்களில் நீர் எல்லை மீறி பெருக்கெடுத்து ஓடிக்கொண்டிருந்தது.

வருணகுலத்தான் கண்களும் குளமாகி இருந்தன. மன்னரை நோக்கி இப்படியொரு கேள்வியை கேட்டுவிட்டதை எண்ணி அவன் கூனிக் குறுகி நின்றான்.

‘அரசே ,, தங்களைப்பற்றிய இழிமொழிக்கு செவி கொடுத்த என் செவிகளை இப்போதே வெட்டியெறியத் தோன்றுகிறது வேந்தே, அது குறித்து தங்களிடமே வினவிய இந்தக் குறைமதியாளனை மன்னித்து விடுங்கள் வேந்தே,’ என்று மன்னர் முன் மண்டியிட்டு விழுந்தான் வருணகுலத்தான்.

முடிச்சுக்கள் அவிழும்…

Related posts

அதிசய மீன்களின் இறுதி யாத்திரை

Thumi202121

பரியாரியார் Vs அய்யர் – 02

Thumi202121

காலமே கதை சொல்லடா

Thumi202121

Leave a Comment