எமது சகோதர, சகோதரியை முறையாக வழிப்படுத்தி சமூகத்தில் ஒரு நற் பிரஜையாக உருவாக்குவது சமூக நேயர்களான எமது எல்லோருடைய கடைமையாகும்.
“இருபதில் ஆடாமல் அறுபதில் ஆடி என்ன பயன்”, “அப்பனுக்குப் பிள்ளை தப்பாமல் பிறந்திருக்கு” என்ற பல பழ மொழிகள் எம் சமூகத்தில் பயன்படுத்தப்படுகின்றன. இவை எமது குணப்பணபுகள், நடத்தைகளை வெளிப்படுத்துவதாகவும் எமது பருவத்தைப் பற்றி எமக்கு நினைவு படுத்தி காட்டுவதாகவும் அமைந்துள்ளதை நாம் விளங்கிக் கொள்ள முடியும்.
நாம் வளர்கின்ற விடயத்தில் எமது வளர்ச்சி, விருத்தி தொடர்பாக ஒவ்வொரு பருவ கட்டங்களினை பற்றியும் பெற்றோர்கள் அறிந்திருப்பது மட்டுமல்லாமல் நாமும் அறிந்திருப்பது முக்கியமானதொன்றாகும். பொதுவாக வளரச் சி என்பது ஒரு குழந்தையின் பௌதீக ரதீயான உடல் நிறை, நிறைக்கேற்ப உயரம் என்பன தொடர்பிலும் உளவியல் ரதீயில் அவர்கள் கற்றுக் கொள்கின்ற திறன்கள், உணர்ச்சிகளைக் கையாளும் திறமைகள் தேர்ச்சிகள் மூலம் பெற்றுக்கொண்ட விடயங்கள் மூலமாக கனிக்கப்படுகின்றது.
இதேபோல் விருத்தி என்பது ஒரு குழந்தை தனது வயது நிறைக்கேற்ப வெளிப்படுத்துகின்ற நடத்தைகள் மற்றும் மனவெழுச்சி வெளிப்பாடுகள் போன்றவற்றைக் குறிக்கும். இவ் வளர்ச்சி, விருத்தி நிலைகள் எமது வளரப்பில் முக்கியம் பெறுகின்றனவாக உள்ளன.
அத்துடன் நாம் எமது வளர்ப்பில் அறிந்திருக்க வேண்டிய முக்கியமான விடயம் என்னவெனில் எமது வளர்ச்சிப் பருவங்கள் ஆகும். வளரச்சிப் பருவங்கள் ஒவ்வொன்றிற்கேற்ப எமது வளர்ச்சி விருத்திக் கட்டங்கள் வேறுபடுகின்றன. ஆகவே எமது வளர்ச்சிப் பருவங்கள் பற்றியும் வளர்ச்சி
விருத்தி நிலைமைகள் தொடர்பாகவும் பெற்றோர்கள் அறிந்திருப்பர். நாமும் அது பற்றிய அறிவைப் பெற்றிருப்பது முக்கியமானதாகும்.
நாம் முறையற்ற நடவடிக்கைகளையும், வழிப்படுத்தல்களையும் எமது வாழ்க்கையில் கடைப்பிடித்தலானது எம்மை பிறழ்வான பிள்ளைகளாகவும் சமூக வன்நடத்தையாளரகளாகவும் மாற்றி விடும் என்பதில் ஐயமில்லை. ஆகவே நாம் எமது பிறப்பிலிருந்து கட்டிளமைப் பருவம் வரை ஏற்படும் மாற்றங்கள் தொடர்பான அறிவைப் பெற்றிருப்பது எமது வாழ்க்கையை முறையாக வளப்படுத்திக் கொள்வதற்கு துணைபுரிகின்றது.
எமது பருவங்களை குழந்தைப்பருவம், பிள்ளைப்பருவம், கட்டிளமைப்பருவம், முதுமைப்பருவம் என பிரதானமாக பாகுபடுத்திக் கொள்ளமுடியும். நாம் பிறப்பிலிருந்து கட்டிளமைப் பருவம் வரை பிறரின் அவதானிப்பில் அதிகம் வளர்க்கின்றோம். ஆனால் கட்டிளமைப் பருவத்தினை நாம் எவ்வாறு வெற்றி கொள்வது என்பது எமக்கு சவால் நிறைந்த ஒன்றாகவே காணப்படுகின்றது.
கட்டிளமைப் பருவத்தினை எமது வாழ்க்கையில் “புயல் வீசும் பருவம்” என்று குறிப்பிடலாம். இப்பருவத்தில் தான் உடலியல் ரதீயான பல மாற்றஙக் ள் ஏற்படுவதுடன் ஆண், பெண் இருபாலரின் உடற்கூற்றிற்கு அமைவாக சுரக்கப்படும் ஓமோன்களின் தாக்கமானது எம்மில் உடல், உள ரீதியான பல மாற்றங்களை ஏற்படுத்துகின்றது. ஆகவே இப்பருவத்தில் உடல் உள ரீதியில் பல மாற்றங்கள் எதிர்கொள்வது என்பது இவ்வளவு காலமும் பெற்றோர் அல்லது பிறர் கட்டுப்பாட்டிற்குள் இருந்த நாம் அவர்களின் கட்டுப்பாடுகளை மீறி தன்னிச்சையாக செயற்படுகின்றோம் என உணரவைக்கின்றது. எனவே இப்பருவத்தினை நாம் எவ்வாறு வெற்றி கொள்வது என்பது பற்றி அறிந்திருப்பது முக்கியமானதாகும்.
கட்டிளமை பருவத்தினை 13 வயது தொடக்கம் 19 வயதுக்குட்பட்ட நிலை என்று வரையறுத்தாலும் அது 20 தொடக்கம் 23 வயது வரை நீடிக்கின்றது எனலாம். முதிர்ச்சிக்கும் குழந்தை தனத்திற்கும் இடையிலான நிலைமாறும் பருவமே இதுவாகும். இப்பருவத்தில் தான் ஒருவர் தன் அடையாளத்தை ஏற்படுத்த உந்தப்படுகின்றார். இப்பருவத்தில் தான் படிப்படியாக குடும்பத்தில் இருந்து விலகுதல், சுதந்திரமாக தன் ஒத்த வயதினருடன் அதிக நேரம் செலவழித்தல், செயலாற்றும் திறன்களை விருத்தி செய்தல் என்பவற்றுடன் தனித்தன்மையை நிலைநாட்ட போராட தொடங்குகின்றனர் எனலாம்.
எமக்கும் பெற்றோருக்குமான தொடரப்பானது எமது வளர்ச்சி பருவங்களில் பிறப்பிலிருந்து கட்டிளமைப் பருவம் வரை செல்லும் போது குறைந்து கொண்டு செல்கின்றது எனவும் மாறாக நண்பர்கள், ஊடகங்களுடனான தொடர்பு அதிகரித்துச் செல்கின்றது எனவும் சான்றுகள் கூறுகின்றன. இப்பருவத்தில் பாலியல் ரதீயான உணர்வுகள் உருவாக்கம் பெறுவதற்கான வகையில் உடலியல், உளவியல் வளர்ச்சி மற்றும் விருத்தி மாற்றங்கள் ஏற்படுவதை அவதானிக்க முடியும். அத்துடன் எதிர்பால் கவர்ச்சி, சமூக அங்கீகாரம் பெறும் பணிகளை கற்றுத் தேருதல், பொருளாதார சுதந்திரம் பெறுதல், மனமுதிர்ச்சி பெறல் போன்ற தனிச்சிறப்பு கொண்ட பண்புகள் இப்பருவத்தில் தோன்ற ஆரம்பமாகின்றன.
இப்பருவத்தில் நாம் பக்குவம் அற்றவர்களாகவும், அச்ச உணர்வு, சந்தேகம் கொண்டவராகவும் இருப்போம். பிறப்பிலிருந்து நாம் பெற்றோரின் கட்டுப்பாட்டின் கீழ் வாழ்ந்த நாம் இப்பருவத்தில் கட்டுப்பாடுகளை விரும்பாது நம் தேவைகளை நாமே நிறைவு செய்ய வேண்டும் என எண்ணவும். தனிமையை நாடுவதும், எடுத்ததற்கெல்லாம் கோபப்படுதல், தனது சுய கௌரவத்தின் மீது அதீத அக்கறை கொள்கின்றவராகவும் இருப்பார்கள். தம் செயல்பாடுகளில் வெளித்தலையீடுகளை விரும்பாதவர்களாகவும் நாம் இப்பருவத்தில் பல முரண்பாடான நிலைகளை எதிர்கொள்வோம்.
இத்தகைய நிலையில் கட்டுப்பாடுகளை மனம் ஏற்க மறுக்கும். இதன் விளைவாக நாம் தீய நண்பர்களுடனான சேர்க்கை மற்றும் சமூக விரோத நடவடிக்கைகளில்
ஈடுபடுதல் போன்ற செயற்பாடுகளில் ஈடுபடக்கூடும்.
எனவே இப் பருவத்தினை ஆரோக்கியமான முறையில் நகர்த்தி செல்வதற்கான சில வழிமுறைகளாக நாம் பெற்றோருடனான சினேக பூர்வமான உறவு நிலையை வளர்த்துக் கொள்ள வேண்டும். பெற்றோருடன் நாம் சினேக பூர்வமான உறவு நிலையை உருவாக்கிக் கொள்வதன் மூலம் எமது தேவைகள், விருப்பங்களை பயமின்றி வெளிப்படுத்த முடியும்.
எனினும் பல பெற்றோர் பிள்ளைகளின் தேவை, விருப்பங்களை விளங்கிக் கொள்ளாத நிலையும் உள்ளது. தண்டித்தல், முரண்படல் போன்ற எதிர்மறையான செயல்களை மேற்கொள்வர். இந்தநிலையில் தீய நண்பர்களுடனான சேர்க்கை, சமூக வன்நடத்தை போன்ற செயல்களில் ஈடுபடக்கூடிய நிலை உருவாகலாம். எனவே இநந் நிலையில் பெற்றேரின் தண்டித்தல் முரண்படுதல் எல்லாம் எமது நன்மைக்கான செயற்பாடுகளே என்று உணர்ந்து செயல்படுவது சிறந்தது. எப்போதும் பெற்றோருடன் சினேக பூர்வமான உறவு நிலையைப் பேணுதலானது எமது வாழ்க்கையை சிறப்பாக அமைத்துக்கொள்ள ஒரு சிறந்த வழியாகும்.
அடுத்த வழிமுறையாக இப்பருவமானது தனக்கான மாதிரியினை உருவாக்கி தன்னை அடையாளப்படுத்த ஆரம்பிக்கும் பருவமாகும். எனவே நாம் எமக்கான மாதிரிகளாக வெற்றிகண்ட சாதனையாளர்களையும், தலைவர்களையும் பின்பற்றவேண்டும். எடுத்துக்காட்டாக எம்.ஜி.ராமச்சந்திரன் ,இந்திராகாந்தி போன்றோரைக் குறிப்பிடலாம். இத்தகைய தலைவர்களை பற்றி அறிந்து அவர்களை மாதிரியாக கொண்டு செயல்படுவதனால் இப்பருவத்தில் வெற்றிகண்டு எதிர்காலத்தை வளமுள்ளதாக்கலாம்.
இன்றைய காலகட்டத்தில் எமது பெற்றோர் எமக்கு அதீத சுதந்திரங்களை வழங்குகின்றனர். நாம் கல்வி பயிலும் காலங்களிலேயே தொலைபேசி வலையமைப்பு என பல தொழில்நுட்ப சாதனங்களை இப் பருவத்திலே கையாளுவதற்கு சுதந்திரம் தருகின்றனர். இந் நிலையானது அவர்கள் எம் மீது கொண்ட அன்பும், நம்பிக்கையும் தான். எனவே இதனை நாம் தவறான வகையில் பிரயோகிக்கக் கூடாது.
தொழில்நுட்ப சாதனங்களை சரியான முறையில் பயன்படுத்தி புதிய புதிய விடயங்களை அறிந்து கொள்ள வேண்டும். “தேடல் உள்ள உயிரகளுக்கே தினமும் பசியிருக்கும்……” என்ற பாடல் வரிக்கிணங்க நாம் இப்பருவத்திலிருந்தே தேடல் திறமையினை அதிகரித்துக் கொள்ள வேண்டும். தொழிநுட்ப சாதனங்களில் எந்த அளவுக்கு நன்மைகள் உள்ளதோ அதே அளவுக்கு தீமை உள்ளது என்பதனை அறிய வேண்டும். இருப்பினும் அதனை நாம் நன்மை தரும் வகையில் பயன்படுத்துவது சிறந்தது.
தனிமையை குறைத்து நண்பர்களுடன் சேர்ந்து பல சமூக செயற்பாடுகளில் ஈடுபடுவதன் மூலமும் எமது இப்பருவத்தை சிறப்பாக அமைத்துக் கொள்ளலாம்.
நாம் உறவினர்கள், பண்டிகைகள், சமூகச் செயற்பாடுகள், விழாக்கள், ஆன்மீகம் தொடர்பான விடயங்களில் எம்மை ஈடுபடுத்திக் கொள்கின்ற போது எம்மில் பல மாற்றங்களை இப்பருவத்தில் உணர்ந்து கொள்ளலாம்.
தேவையற்ற சிந்தனைகள் நீங்கி நல்ல ஒரு சமூக நேயனாகவும் சிறந்த பிரஜையாகவும் நாம் எமது சமூகத்தில் மதிக்கப்படும் ஒரு நபராக உருவாவதற்கான அடித்தளத்தினை இப்பருவமே எமக்கு அமைத்துக் கொடுக்கின்றது. நூலகங்களுக்குச் சென்று சிறந்த நல்ல புத்தகங்களை வாசித்தல், சிறந்த கருத்தரங்குகளில் கலந்து கொள்ளல் போன்ற செயற்பாடுகளினாலும் இப்பருவத்தினை வெற்றிகரமாக கடந்து எதிர்காலத்தை வளமாக்கி கொள்ளலாம்.
எனவே இப்பருவத்தில் நாம் தவறான வழிமுறைகளை கைவிட்டு முறையான வழிமுறைகளை பின்பற்றி எமது சமூகத்தில் ஆரோக்கியமான தலைமுறையினை உருவாக்க வேண்டும். எனவே இப்பருவத்தில் நாம் பெற்ற அனுபவத்தையும், அறிவையும் கொண்டு எமது எதிர்கால சந்ததியினரை சிறந்த வழிகாட்டல்கள் மூலம் வளர்த்தெடுப்பதற்கான நடவடிக்கைகளில் நாம் அக்கறை கொள்ள வேண்டும்.