இதழ் 55

இறுதிநாள்

அன்று மாலை மூன்று மணியிருக்கும். மழைக்கால மையிருட்டு. நானும் என் நண்பனும் மேயவிட்ட எருமைகளைப் பட்டி நோக்கிச் சாய்த்துக் கொண்டிருந்தோம். ஓரிரண்டு கன்றுகள் அருகிலிருந்த குட்டைக்குள் மிதந்துகொண்டிருந்தன.

”டேய்… உந்தக் கண்டுக்குட்டிகளப் போய்ச் சாய்ச்சிட்டு வா. நான் உதுகளக்கொண்டு போய் வேளைக்கு அடைக்கிறன். மழையும் வரப்போது வேகமா வா..”

அவன் எருமைகளைச் சாய்த்துக் கொண்டு பட்டியைநோக்கிப் புறப்பட்டான். நானும் குட்டைக்குள் இறங்கிக் கன்றுகளைச் சாய்த்துக்கொண்டு வருவதற்குள் அவனைக் காணவில்லை. மாடு மேய்ப்பதில் அவனை அடிக்க எங்கள் ஊரில் யாருமில்லை என்று சொல்லுமளவிற்கு, மாடு மேய்ப்பதற்குரிய நுட்பங்களை எல்லாம் அனுபவத்தால் அவன் கற்றிருந்தான். அவன் சொல்லிவிட்டுப்போன மாதிரியே கன்றுகளைச் சாய்த்துக் கொண்டு வருவதற்குள் போதும்போதுமென்றாகிவிட்டது. கன்றுகளைப் பட்டிக்குள் அடைத்துவிட்டு வீடு செல்வதற்குள் மின்னி, முழங்கி மழையும் ஒருபாடு அடித்து ஓய்ந்தது. வந்த வேகத்தில் நான்கு வாளி வார்த்துவிட்டுத் தலையை உலர்த்திய குறையோடு கட்டிலில் சரிந்தேன். நேரம் மூன்றரையைத் தாண்டிக்கொண்டிருந்தது.

‘அண்ணா.. அண்ணா.. உன்ர போன் அடிக்குதுதண்ணா…”
சத்தம் போட்டபடி என் தங்கச்சி ஓடிவந்தாள். மாடு மேய்த்த அலுப்பில் நித்திரைத் தூக்கத்தோடு கைபேசியை வாங்கிக் காதில் வைத்தேன்.

‘குட்ஈவினிங்… ஜப்(க)னா யூனிவே சிற்றி, ஆட்ஸ் டீன் ஒப்பீஸ்ல இருந்து கதைக்கிறம். உங்களுக்கு அசிஸ்ரண்ட் லெக்சரர் வேர்க் கிடைச்சிருக்கு. நீங்க மண்டே வந்து அப்பொயிண்மெண்ட் லெட்டர் எடுக்கலாம்.”

அவ்வார்த்தைகள், எனக்கு மீண்டும் ஒருதடவை மின்னி, முழங்கி மழைபெய்து ஓய்தாற்போலிருந்தது. தங்கச்சி ஓடிப்போய் அம்மாவுக்குப் பறையடித்தாள். மகிழ்ச்சிப் பூரிப்பில் கட்டிலில் குதித்தேன். சைக்கிளை எடுத்துக்கொண்டு மலையடிவாரத்திற்குப் போய்க் கூவென்று கத்தினேன். எனக்குப் போட்டியாய் நரிகளின் ஊளைச்சத்தம், மலைகளில் எதிரொலித்துக் காட்டையே அமைதியாக்கிற்று.

இவ்வளவு நாள் பட்ட வேதனைக்கு இப்போதுதான் விடிவு கிடைத்திருப்பதாக நினைத்தேன். 1990ஆம் ஆண்டு இனப்பிரச்சினை மேலோங்கிய காலத்தில், எங்கள் ஊரைவிட்டு முல்லைத்தீவுப் பகுதிக்குப் பெற்றோர் இடம்பெயர்ந்திருந்தனர். அப்போர்ச் சூழலில்தான் நானும் பிறந்தேன். வன்னிப்போர் தந்த அவலங்களையெல்லாம் அனுபவித்து முள்ளிவாய்க்கால் முடிவோடு இராணுவத்திடம் சரணடைந்தோம். செட்டிக்குளம் ‘சோன் பைவ்” திறந்தவெளிச் சிறையில் சுமார் ஒரு வருடம் தங்கவைக்கப்பட்டுப் பின்னர் ஊருக்கு மீள்குடியேற்றம் செய்யப்பட்டோம். அது ஒரு யானைக்காடு. அங்கு மின்சாரமே இல்லை. காடுவெட்டித் தற்காலிகக் கொட்டில்போட்டு வசிக்கவேண்டிய சூழல். வறுமையே சூழ்ந்திருந்தது. கையில் பணமில்லை. தினக்கூலிசெய்து வாழவேண்டி நிலை. பட்டினி வேறு. அப்போது, நான் தரம் பதினொன்று படித்துக் கொண்டிருந்த காலம். பள்ளிக்கூடத்தில் கொடுக்கும் சாப்பாடுதான் அப்போது எங்களையெல்லாம் வாழவைத்துக் கொண்டிருந்தது.

ஊரிலே பயிர்கொடியே இல்லை. ஊருக்குள் வரும் காட்டுயானைகள் ஊரையே வெட்டையாக்கியிருந்தன. இரவில் படிப்பதற்குக்கூட சிறந்த விளக்கு இல்லை. ஜாம் போத்தல் விளக்குத்தான். விளக்கிற்கு எண்ணெய் வாங்கவே காசு இருக்காது. யானைக்குப் போடும் தீவறை வெளிச்சத்தில் எத்தனையோ நாட்கள் படித்த ஞாபகம் இன்னும்தான் என் மனதில் ஆழமாய்ப் படிந்திருக்கிறது.

‘சேர் வீட்ட கரண்ட் இல்ல சேர்… இரவில படிக்க முடியேல்ல… அப்பாக்கும் வேலையில்லை சேர்… வீட்ட கஷ்ரம் சேர். பள்ளிக்கூடத்தில தாற சாப்பாட்டத்தான் வாங்கிக்கொண்டுபோய் வீட்ட சாப்பிடுறனாங்கள் சேர். சேர் நான் நல்லா படிப்பன் சேர் இரவில பள்ளிக்கூட முன் மண்டபத்தில எரியிற லைற்றில இருந்து படிக்கவிடுவியளா சேர்?”

ஒருநாள் அதிபரின் முன் மண்டியிட்ட ஞாபகம் இன்றும் நினைவில் இருக்கிறது. மனம் கலங்கி விட்டார். அன்றிலிருந்து பள்ளிக்கூடத்து வெளிச்சத்திலேயேதான் இரவில் படிப்பதுண்டு. போருக்குப் பின்னர் புதிதாக மீள்குடியேற்றப்பட்ட ஊர் என்பதால் இங்கு எவ்வித வசதிகளும் இல்லை. எல்லாவற்றிற்கும் பட்டணத்திற்கே போயாக வேண்டும். அதனால் தனியார் வகுப்புக்களே எங்களுக்குத் தெரியாது. பள்ளிப்படிப்போடு ஒன்பது பாடங்களிலும் சித்தியடைந்தாலும், உயர்தரப்படிப்பு இல்லாத எங்க;ர் பள்ளிக்கூடத்தில் எப்படிப் படிப்பது? பட்டணம் போய்த்தான் படிக்க வேண்டும். படிப்பதற்கேற்ற வசதியும் இல்லை. அப்படியிருந்தும், என் தந்தை தினக்கூலி செய்து என்னைப் பட்டணத்தில் படிக்க வைத்தார்.

‘தம்பி… எங்களிட்ட இப்ப ஒண்டுமில்லையப்பு.. உன்ர படிப்பு மட்டும்தான் எங்கட சொத்து! நாங்க படிக்காம விட்டிற்றம்.. நீ சாகிற வரைக்கும் நல்லா படிக்கோணும்… அதுமட்டும் போதுமப்பு.. நாங்க காணாத உலகத்தை நீ பார்க்கோணுமப்பு…”

அடிக்கடி அப்பா சொல்லும் இந்த வார்த்தைகள் இன்றும் நினைவில் இருக்கின்றன. இரவு தூக்கமே வரவில்லை. எப்போது விடியுமெனக் காத்திருந்து, காலையில் பேருந்து ஏறி யாழ்ப்பாணம் வந்துவிட்டேன். தொலைதூரப் பயணத்தால் சனி பறந்து ஞாயிறு மலர்ந்தது. திங்கள் காலை ஒன்பது மணியிருக்கும். நியமனக் கடிதத்தை வாங்கிக்கொண்டு தமிழ்த்துறைக்குச் சென்றேன். கிளாக் அண்ணனின் பற்கள் மின்னி ஒலித்து என்னை வரவேற்றன.

‘எஸ்கியூஸ்மி சேர்”
அமைதியாய் என் குரல் ஒலித்து ஓய்வதற்குள்,
‘ஓம் வா வா வா…”
துறைத் தலைவர் என்னைப் புன்னகைத்து வரவேற்றார். ஈழத்து நாவலிலக்கிய ஆய்வு உலகில் தனக்கான அடையாளத்தை உருவாக்கிய பேராசிரியர் அவர். நவீன – மரபு இலக்கியத்தில் நல்ல வாரப்பாடுடையவர். அவரிடத்தில் எனக்கும்தான் நல்ல வாரப்பாடு.

‘தம்பீ… இண்டையில இருந்து நீயும் எங்களில ஒருத்தன். யாற்ற தனிப்பட்ட வேலையும் நீ இஞ்ச செய்யக்கூடாது. டிப்பார்ட்மெண்ட் வேல மட்டும்தான் செய்யோணும்.”

‘சரி சேர்…”
கூனிக்குறுகி அமைதியாய் நின்றேன்.

‘எந்த மேசையில இருக்கப்போறாய்?”
திரும்பிப் பார்த்தேன். மூன்று மேசைகள். ஒவ்வொன்றும் ஒவ்வொரு திசைகள் நோக்கியிருந்தன.

‘சேர் நான் அந்த மேசையில இருக்கிறன் சேர்.”
முன்னுக்கு இருந்த மேசையைக் காட்டினேன்.

‘சரி நீ உனக்கு விரும்பின எந்த இடத்திலயும் இருக்கலாம்.”

‘சரி சேர்…”
ஓடிவந்து எனக்குரிய இருக்கையில் அமர்ந்துகொண்டேன். என் நீண்ட நாள் கனவு பலித்த தருணம். மனம் வானத்தில் இறக்கை கட்டிப் பறப்பது போலிருந்தது. பேராசிரியர்களும், விரிவுரையாளர்களும் வாழ்த்தி வரவேற்றார்கள். ஒரே குடும்பம்போல் உறவாடினார்கள். நாட்கள் நகர்ந்தன. எனக்குரிய கடமைகள் வகுக்கப்பட்டன. விரிவுரைகள் தவிர எனக்கு எந்த வேலைகளும் தரப்படவில்லை. நான் சுதந்திரப் பறவையானேன். படித்தேன்… எழுதினேன்… எழுத்துக்களால் என்னை வளப்படுத்தினேன்.

‘சேர் ரீ குடிச்சிட்டு வாறன் சேர்”
‘சேர் சாப்பிட்;டு வாறன் சேர்”
‘சேர் பாத்துரூம் போயிற்றுவாறன் சேர்”
என்று அவருக்கு முன்னால் அடிக்கடி போய்நிற்பதுண்டு.

‘தம்பீ பல்கலைக்கழகத்துக்குள்ள எங்க போறதெண்டாலும் என்னட்ட சொல்லத்தேவேல… நீ எங்கயெண்டாலும் போகலாம். உன் கடமையைச் சரியாய்ச் செஞ்சாச்சரி.”

ஒருநாள் இவ்வார்த்தைகள் கட்டளையாய் என்னை வந்து சேர்ந்தன. அன்றிலிருந்து நான் பல்கலைக்கழகத்திற்குள் எங்கு செல்வதானாலும், அவரிடம் சொல்லாமலேயே சென்று வருவதுண்டு. இதனால் எல்லா நண்பர்களும் என் சுதந்திரத்தைப் பார்த்துப் பொறாமைப்பட்டதுமுண்டு.

‘நாங்க மாடுமாதி சாகிறம். டிப்பாட்மெண்டில அசைமண்ட் திருத்தி முடியாம வீட்டிலயும் கொண்டுபோய் திருத்த வேண்டியதாயிருக்கு. அதுமட்டுமில்லாம டிப்பாண்ட்மென்ட் ஹெட்டின்ர மோட்டசைக்கிளுக்கு பெற்றோலடிக்க லைன்லவேற நிக்கவேண்டியதாக் கிடக்கு. சீ… ஒரு சுதந்திரமே இல்லாம நாங்க இருக்கம். உனக்கென்னடாப்பா.. நீ சுதந்திரமா திரியுறா…”

‘ஓம்.. எங்கட டிப்பாட்மெண்டில எல்லாரும் தங்கட தங்கட வேலையத் தாங்களே செய்யிறதால எனக்குப் பறவாயில்லை. நான் எனக்குரிய வகுப்பை எடுத்திட்டு.. என்ர பாடத்துக்குரிய அசைமெண்ட்டத் திருத்திவைச்சாச் சரி. அதுதான் நான் சுதந்திரமாத் திரியிறன். லைபிறறி போறன்.. படிக்கிறன். எழுதிறன்…”

பிறதுறை நண்பன் என்னிடம் புலம்பிய வார்த்தைகளுக்குப் பதிலளித்துவிட்டு

‘எங்கட துறைத்தலைவர்போல யாரும் கிடைக்கமாட்டினம்”
என்று மனதுக்குள் நினைத்துக்கொண்டு புறப்பட்ட நாட்கள் கொஞ்சநெஞ்சமல்ல. காலை ஏழு மணிக்கே ஒப்பீஸ் வந்து தனக்கான கடமைகளைச் செய்ய ஆரம்பித்துவிடுவார். பன்னிரண்டிற்கு மதியச்சாப்பாட்டுக்குக் கிளம்புவார்.

‘தம்பீ சாப்பிட்டிற்றியே?”
அவர் மதியம்போய் வருகிறபோது இக்கேள்வியை என்னிடம் கேட்கத் தவறுவதில்லை.

‘சேர் இந்தக் கட்டுரைய ஒருக்காப் பாத்துத் தாங்க சேர்..”
ஆய்வுக் கட்டுரைகளை எழுதிவிட்டு அவரின் மேசையில் வைத்துவிடுவேன். என்ன வேலையிருந்தாலும் ஒவ்வொரு வரியாகப் பார்த்துத் திருத்தித் தருவார். தேவைப்படின் அறிவாலும் என்னைத் திருத்துவார்.
நாட்களும் நகர்ந்தன.. கிழமைகள் பெருகின.. மாதங்கள் கடந்தன..

‘வேலையும் முடியப்போது… இனி வீட்ட போய் என்னத்தச் செய்வன்?
விடையே தெரியாத இவ்வினா மனதில் ஆயிரம் தடவைகள் தோன்றி மறைந்தது. வருடம் ஒன்றாகியது.
அன்று வேலை இறுதிநாள். என் மகிழ்ச்சிக்கே இறுதிநாள் என்பது பின்புதான் தெரிந்தது. நண்பர்கள் வந்தார்கள், புகைப்படம் எடுத்தார்கள். மாணவர்கள் வந்தார்கள், பிரியாவிடை வைத்தார்கள். விரிவுரையாளர்கள், வந்தார்கள் ஆறுதல் கூறினார்கள். எதனையும் மனம் ஏற்கமறுத்து ஒப்பாரி ஓலத்தில் புலம்பி அழுதது. உள்ளம் உடைந்து உருகியது.

ஆனாலும் எனக்கு ஒரு நம்பிக்கை. இப்போதெல்லாம் நான் என்னைக் கற்றல், கற்பித்தல் ரீதியில் பலப்படுத்தியிருந்தேன். ஆய்வுலகில் ஈடுபாடு காட்டிக்கொண்டிருந்தேன். தொடர்ச்சியான வாசிப்புக்களாலும், எழுத்துக்களாலும் என்னை வளர்த்துக்கொண்டிருந்தேன். துறைத்தலைவர், திறமை அடிப்படையில் எனக்கு மறுபடியும் ஒரு வருடம் வேலை வழங்குவார் என்று மனதில் உறுதியுடன் இருந்தேன். அவரிடம் அவ்வளவு நம்பிக்கை இருந்தது. என்னை வளர்த்துவிட்ட பெருந்தகை, என்னை நூலறுந்த பட்டமாய் விட்டுவிட மாட்டார் என நம்பியிருந்தேன். பல துறைகளில், இரண்டு வருடங்களாகத் தொடர்ந்தும் சில தற்காலிக விரிவுரையாளர்கள் பணியாற்றிக் கொண்டிருப்பதும் என் நம்பிக்கையைப் பலப்படுத்தியிருந்தது.

என் நண்பர்கள், விரிவுரையாளர்கள் என்று எல்லோரும், எனக்கு மறுமடியும் வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையையும் ஏற்படுத்தியிருந்தனர். அவர் என் பேராசிரியர். என் குருநாதர். என்னை வளர்த்து விட்டவர். எனக்கு வேலை தந்தவர். என்னைக் கைவிட மாட்டார் என்ற சிந்தனைகள் மனதில் ஓடித்திரிந்துகொண்டிருக்கப் பல்கலைக்கழக வளாகத்தைச் சுற்றிவந்து நினைவுகளை அசைபோட்டேன். சுயநினைவுக்கு வந்தவனாய் அலுவலகத்தை அடைந்து இருக்கையில் அமர்ந்தேன். மேசையில் தலை சாய்ந்தேன். நேரம் வேகமாய் நகர்ந்து நான்கு மணியானது. துறைத்தலைவர் ஏதோ எழுதிக்கொண்டிருந்தார். எழுந்து அருகில் சென்றேன்.

‘சேர்.. போயிற்று வாறன் சேர்”
‘ம்;;;;… சரி! பிறகு சந்திப்பம்”
வேறு வார்த்தை வரவில்லை. அண்ணாந்து பார்த்துவிட்டு மீளவும் குனிந்து எழுதத்தொடங்கினார். மனது வெடித்துக் கதறியது. உள்ளம் குமுறியது… உடல் படபடத்தது..கண்கள் குளமாகக் கிளாக்கைப் பார்த்துத் தலையசைத்து விடை பெற்றபடி நானிருந்த மேசையைத் திரும்பிப் பார்க்கிறேன்…

கண்ணீர், துளிகளாகி நிலத்தை நனைத்தன. காத்திருந்து காத்திருந்து காலைவாரிய உலகத்தில், திறமைக்கு அடையாளம் தந்து என்னைச் செதுக்கிய உத்தமர் இறுதியில் மௌனமாய் விடைதந்து நின்றார். பிரியா விடைதந்து நின்றார். மேய்ப்பனை இழந்த மந்தையானேன். காரணம் அறியாமலேயே என் கால்கள் பேருந்துச்சாலையை நோக்கி நகர… விம்மி விம்மி ஆட்பரித்து அழுகின்றேன். என் கிராமத்து வயல்வெளிகளும், எருமை மாடுகளும், வரண்ட மலைக்காடுகளும் என் கண்முன்னே வந்து செல்கின்றன….

Related posts

காலம் போல நாமும் புதுப்பித்துக் கொள்வோம்

Thumi202121

வினோத உலகம் – 20

Thumi202121

சித்திராங்கதா

Thumi202121

Leave a Comment