யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி விற்பனைக்காக 1 கிலோ 135 கிராம் ஹெரோயின் போதைப் பொருளை கொண்டு சென்ற நாவற்குழி குடும்பஸ்தருக்கு 6 வருடங்களின் பின் வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் மரணதண்டனை வழங்கி சமீபத்தில் தீர்ப்பளித்தார். பலரது வரவேற்பையும் பெற்றுள்ள இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பானது போதைப்பொருளுக்கு எதிரான போராட்டத்தில் ஒரு முக்கிய மைல்கல்லாக பார்க்கப்படுகிறது.
2022 இல் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு,பொலிஸ் நிலையங்கள் மற்றும் ஏனைய நிறுவனங்கள் ஒன்றிணைந்து நாடளாவிய ரீதியில் மேற்கொண்ட சுற்றி வளைப்புகளையடுத்து ஹெரோயின் 1548 கிலோ கைப்பற்றப்பட்டது. இந்த ஹெரோயின் தொகையுடன் 46,258 சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டனர். இந்த புள்ளிவிபரங்களை பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப்பிரிவு வெளியிட்டுள்ளது. இவ்வாறு கைப்பற்றப்பட்ட ஹெரோயினின் பெறுமதி 2090 கோடி எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. போதைப்பொருளுடனான குற்றச்சாட்டுகளில் அதாவது குறிப்பாக போதைப்பொருள் பாவனையுடனான குற்றச்சாட்டுக்களின்கீழ் 5000 மாணவர்கள் தடுப்பு நிலையங்களில் இருக்கிறார்கள் என மேலதிக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் ஜெனரல் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார். இவர்கள் க.பொ.த சாதாரண தரம் மற்றும் க.பொ.த உயர்தரப் பரீட்சைகளில் சித்தியடைந்தவர்களென்றும் 22 முதல் 30 வயதுக்குட்பட்டவர்களெனவும் தெரிவித்துள்ள அவர் இவ்வாறு இளம் தலைமுறையினர் பெரும் எண்ணிக்கையில் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகியுள்ளமை நாட்டின் எதிர்காலத்தை சவாலுக்குட்படுத்தியுள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.
1970 தொடக்கம் 1980வரை சிங்கப்பூர் போதைப்பொருள் பாவனை, கடத்தல் மற்றும் அதனோடு தொடர்புடைய குற்றங்களால் மிகவும் பாதிக்கப்பட்ட போதும் 1973ம் ஆண்டு போதைப் பொருள் தொடர்பான கடுமையான சட்டங்களை அறிமுகப்படுத்தியதை தொடர்ந்து, இன்று போதைப்பொருள் பாவனை மிகவும் குறைந்த நாடாக சிங்கப்பூர் தன்னை நிலைநிறுத்தியுள்ளது. அத்துடன் உலக பொருளாதாரத்திலும் முக்கிய இடம் வகிக்கின்றது. போதைப்பொருள் தொடர்பான சிங்கப்பூரின் கடுமையான சட்டங்களை மனித உரிமை அமைப்புகள் கண்டித்தாலும் இன்றைய சிங்கப்பூரின் முன்னேற்றமடைந்த பொருளாதார நிலைக்கு இவ்வாறான கடுமையான சட்டங்களே அடித்தளம் இட்டன. அது போன்ற சட்டங்கள் எமது நாட்டிலும் அமுல்ப்படுத்தப்பட்டு, குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்கப்பட்டால்த்தான் போதைப்பொருளை வேரோடு களைய முடியும்.
குற்றவாளிகளையும் பாதுகாத்து, பொதுமக்களையும் சமரசப்படுத்தும் தீர்ப்புகளால் பயனில்லை. பொதுமக்களின் வரிப்பணத்தில் போதைப்பொருள் கடத்தல் வியாபாரிகள் சிறைச்சாலையில் இருந்துவிட்டு வருவது தடுக்கப்பட வேண்டுமென அண்மையில் பாராளுமன்றத்தில் கூட விவாதிக்கப்பட்டிருக்கிறது. இந்த விவாதங்கள் அப்படியே நீர்த்துப் போகாமல் அடுத்தடுத்த கட்டங்களுக்கு நகர்ந்து, போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனை செய்தல் போன்ற குற்றங்களுக்கு, குற்றவாளிகள் அச்சப்படும் வகையில் கடுமையான தண்டனைகள் நிறைவேற்றப்பட வேண்டும்.
தண்டனைகள் கடுமையானால்த்தான் குற்றங்கள் குறையும்