இதழ் 65

சித்திராங்கதா -61

சித்திராங்கதா திருமணம்

நல்லை நடுக்கூடத்தில் கவிழ்ந்திருந்ந ஆடலரசியின் சிரம் அவையோரை நோக்கி நிமிர்ந்தது. அதீத வேகத்தில் அவள் விழிகள் விரிந்தன. நெற்றி சுருங்கியது. சித்திராங்கதாவின் அந்த தீவிர வதனத்தை எதிர்கொள்ளும் துணிச்சல் நல்லை அரசவையில் யாருக்கும் இருக்கவில்லை.

எல்லோரும் என்ன நடக்கப்போகிறது என்கிற ஆச்சரியத்தில் அமைதி காத்தனர். அனைவரினதும் சரீரங்கள் சிலிர்க்கும்படி சித்திராங்கதா சிரிக்கத் தொடங்கினாள். ரீங்காரமாய் ஓயாது ஒலித்த அவள் சிரிப்பொலி நல்லை அரசவையையே அந்தகணம் உரப்பியது. விடாது சிரித்தாள்.

அந்த சிரிப்பொலி அடங்க அடங்க அவையில் நிரம்பியது ஒரு பூதாகர அமைதி. அங்கிருந்த அனைவருக்குள்ளும் அந்த அமைதி ஒருவித அச்சத்தை விதைத்தது. ஒரு புயலிற்கு முந்தைய பூமியின் அமைதி எல்லோர் நினைவிலும் வந்து போனது.

சித்திராங்கதாவின் குரல் அவையை நிரப்பத் தொடங்கியது.

‘சூழ்ந்து நிற்கிற வல்லோரே.. நல்லூரின் நல்லோரே… கேட்டீர்களா… அரசரதும் அவர்தம் மணிக்கரமான மந்திரியாரது கதையையும்…. முந்தைய கணம் வரை இந்த தேசத்தின் கொடுங்குற்றவாளி.. பெண்வர்க்கத்தின் முதல் குற்றவாளி… ஈழத்தில் எந்தப் பெண்ணும் செய்யாத கொடும்பாவத்தை செய்த கொலைகாரி… இந்த கணந்தொட்டு நல்லை தேசத்தின் ஏக போக விருந்தாளி… ‘ மீண்டும் அதே போல் சிரித்தாள்.
‘என்னை இனிமேல் காவல் செய்ய போகிறதாம் நல்லை அரசு… யாரிடமிருந்து யாரை காப்பது..…? உயிரழிந்து கிடக்கும் பிணத்திற்கு வல்லூறுகள் காவலாம்… ’ அவள் சிரிப்பொலி மீண்டும் அவையோரை உரப்பியது.

அவளது அந்த கொடூர சிரிப்பையும் அதற்கிடையிலான அமைதியையும் பொறுத்துக் கொள்ள இயலவில்லை சங்கிலியனால்
‘பெண்ணே… சித்திராங்கதா.. தணலில் மெழுகாய் தவிக்கும் என் உள்ளத்தை உன் வார்த்தைகளால் மேலும் உருக்குலைக்காதே…
தஞ்சைவீரர் மனம் அறியாமல் உன் மனம் நோக கருமமாற்றியது எம் தவறுதான். எம்மீதான குற்றங்களை ஏற்கிறோம். நிவர்த்திக்க ஒரு வாய்ப்பும் கேட்கின்றோம் உன்னிடம்..’

‘ஆகா.. ஆகா… எத்தனை நல்லவர்கள் நீங்கள்… நல்லை மாந்தர் இந்த வேந்தனை மகத்தானவன் என்று நம்ப எதையும் எந்த நேரத்திலும் செய்ய தயங்கமாட்டார் என்பதை நான் அறியமாட்டேனா?’

சித்திராங்கதா இவ்வாறு கூறியதும் மஞ்சரிதேவியின் பதற்றம் அதிகரித்தது. அரசர் பக்கத்தில் நின்ற தேவி பொறுக்க இயலாமல் சித்திராங்கதாவின் அருகில் விரைந்து வந்தார்.
‘பெண்ணே… இப்போதாவது கொஞ்சம் பொறுமை கொள்… அரசரிடம் பேரவையில் பேசுகிறோம் என்பதை நினைவில் அழிக்காதே.. நாட்டு குடிமகளாய் அரசரின் பேச்சை மதிக்கவேண்டியது உயிருள்ளவரை உன் கடமையே. விதி மீறாதே.. ‘

‘யாரது.. ? இந்த அவையின் புடவை கட்டிய புத்திசாலி மகாராணி மஞ்சரி தேவியா? இத்தனை நேரம் பொறுமையாக இந்த கூடத்தில் குற்றவாளியாய் கிடந்த சித்திராங்கதாவை உங்கள் கண்கள் காணவில்லையா தேவி… எல்லாவற்றையும் கண்டு கேட்டு மௌனங் காத்த மகாராணி இப்போது என்னிடத்தில் அமைதி கொள்ளச் சொல்வது நியாயமாகுமா… ?சற்றேனும் சிந்தியுங்கள் ராணி… இச்சந்நிதியில் நான் பட்ட பாட்டை தாங்கள் பெற்ற மகள் பட்டாலும் பேணிவீர்களா இவ்வமைதி.. பெண்ணான என்னை சிறைபடுத்தி விதி மீறலாம் அரசு என்றால் அப் பெண் அவையில் அவளிற்காக பேசுவது மட்டும் விதிமீறலா? சொல்லுங்கள் தேவி… ‘

மஞ்சரிதேவி உட்பட்ட அவையே மௌனித்து நின்றது.
‘அப்படி விதி மீறுகிறாள் சித்திராங்கதா என்றால் என்னை ஏன் விட்டுவைத்துள்ளீர்கள் இதுவரை… கொன்றுவிட வேண்டியது தானே… மாட்டீர்கள்… நீங்கள் பணயமாய் அனுப்பிய என்னவர் வந்து கேட்டால் என்ன பதில் சொல்வது என்கிற புது அச்சம் தானே தங்களை இப்படியெல்லாம் பேசவைக்கிறது . மாட்டேன்… வன்மத்தை என் மீது கொட்டிய நல்லை அரசவை அதிகாரங்களிடத்தில் நான் மட்டும் நியதி அறிந்து அமைதி காக்க வேண்டுமா? முடியாது.. இப்பேரவையில் இனி என் பேச்சிற்குத் தான் இடமுண்டு’

அவள் கூறிய தொனி அங்கிருந்த அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது. மாருதவல்லி தொடர்மூச்சு வாங்கியபடி மஞ்சரிதேவியின் அருகில் சென்று தேவியின் கரங்களை இறுகப்பிடித்துக் கொண்டு நின்றாள். சித்திராங்கதாவின் பேச்சில் உள்ள நியாயத்தை உணர்ந்தது போல் சேனாதிபதி மகிழாந்தகனும் அமைதியாக தலைகுனிந்து நின்றான்.

‘பெண்ணே சித்திராங்கதா… தவறு நடந்தது உண்மைதான் என்பதை யாரும் இங்கு மறுக்கவில்லை’ இராஜமந்திரியார் கனிவான குரலில் தன் ஆசனத்தை விட்டெழுந்து பேசினார்.
‘ஆனால் உன்னை தண்டிக்க வேண்டும் என்ற நோக்கமும் வன்மமும் எம்முள் தங்கியிருந்ததாய் நீ கூறுவது உண்மையல்ல தாயே… உன்னைக் காவல் செய்ய கைது செய்யும்படி உன் தந்தையாரே அரசரிடம் கேட்ட போது கூட அதை மனம் விரும்பாது மறுதலித்து வந்தார் அரசர் இத்தனை நாளும்.. இப்போதும் சூழ்நிலை அச்சம் காரணமாகவே இப்படியொரு முடிவு எடுக்க நேர்ந்துவிட்டது. அரச சிம்மாசனத்தில் அமரும் வேந்தன் நாட்டில் நிகழ்வன கண்டு அவசரமாய் சில முடிவுகள் எடுக்க வேண்டியது கட்டாயமாகிறது. அதிலிருக்கும் தவறுகள் பற்றி சிந்திக்க அவகாசம் பலநேரம் வாய்ப்பதில்லை. காலமும் சூழ்நிலையுமே எல்லாவற்றிற்கும் காரணம். மாறாக நீ சொல்வது போல் அரசர் வன்மம் கொண்டு கருமமாற்றினார் என்பது தவறான குற்றச்சாட்டு என்பதை புரிந்து கொள் மகளே..’

‘என் தந்தை சொன்னாரா… ? என் தந்தை என்பதையும் தாண்டி அவர் தங்கள் அரண்மனை சேவகரல்லவா? எவனோ வந்து போனவன் வாய்ப்பறை கேட்டு நொந்து போய் நோயாளி ஆன என் தந்தை – மகள் நான் என்பதை மறந்து நாட்களாகி விட்டதே… அந்தளவு கொடும்பாவம் செய்த புத்திரி அல்லவா நான்… என்னை கைது செய்ய கட்டளையிட்ட தங்கள் பெருவணிகர்… அதற்காக என்மீது சுமத்திய குற்றம் தான் என்ன? அதை யாரேனும் உரைப்பீர்களா? கூறுங்கள்… ஈழத்தின் முதல் குற்றத்தை செய்துவிட்டு கைதான பெண் குற்றவாளி கேட்கிறேன்… கடைசியாய் ஒரு முறை கேட்கிறேன்… என்மீது சுமத்தப்பட்ட குற்றத்தை யாரேனும் என்னிடத்தில் தெரிவிப்பீர்களா?’
அவள் அனல் விழியால் புனல் வடித்தாள்.

நெகிழ்ந்த மனத்தினால் சங்கிலியன் தன் அமைதி கலைத்தான்.

‘பெண்ணே… தஞ்சை படை தளபதி வருணகுலத்தான் பறங்கியர் பக்கம் சாய துணைநின்றதாய் குற்றம் உன்மீது. குற்றமற்றவள் நீ என்பதை தஞ்சைவீரரே தரணிக்கு இந்த மடல் மூலம் உணர்த்தி விட்டார். இனி இங்கு யாருக்கும் ஐயமென்பது கிடையாது. உண்மை தெளிந்தோம் நாம்..
இதில் குற்றமென்று இருந்தால் அது எம்மிடமே.. மங்கையரை கைது செய்யும் வழக்கமற்ற திருநாட்டில் இப்படியொரு துர்ச்செயலை அவசரமாய் ஆற்றிய நானே தற்சமயம் குற்றம் சுமந்து நிற்கிறேன். ஆதலினால் …’ தன் இடையில் செருகியிருந்த வாளை உருவி உயர்த்திப் பிடித்தான் சங்கிலியன்.
‘என் முன்னை வேந்தர்கள் சாட்சியாக கூறுகிறேன்… இதோ இந்த வாளின் மேல் ஆணையாக என் குற்றத்திற்காக ஆடலரசி சித்திராங்கதாவிடம் மன்னிப்பு கோருகிறேன்.. இந்த மன்னன் சங்கிலியனது களங்கத்தை போக்க வாய்ப்பு கொடு மகளே..’ என்று தன் வாளினை அரண்மனை தரையில் வைத்தான் சங்கிலியன்.

‘மன்னிப்பு வேண்டுமா??மாமன்னர் சங்கிலிய மகாராஜாவிற்கு இந்த அற்ப மங்கையிடத்தில் மன்னிப்பு வேண்டுமா?… துயரில் தோய்ந்த சிரிப்பு சித்திராங்கதா பேச்சில் தெரிந்தது.
‘செய்த குற்றத்தின் சுமையை சிலநொடிகள் கூட பொறுக்கமுடியாமல் தவிக்கும் வேந்தரே… செய்யாத குற்றத்திற்காய் இத்தனைநாள் இந்த இழிவை தாங்கிய என் நிலையை எண்ணிப்பார்க்க இயலுமா தங்களால்… பெண்ணாய் பிறந்து ஆடற்கலையின் அதிரூபசுந்தரி என்று எண்ணியிருந்தவளை பெண்பிறவியிலே இழிபிறப்பாய் நல்லூர் எண்ணும்படி செய்தீர்களே.. இத்தனைநேரம் அத்தனை இழிமொழிகளையும் தாங்கி இந்தப்பேரவையில் தலை நிமிர முடியாத பாதகியாய் நின்றேனே அந்த வலி புரிகிறதா வேந்தே..’ அவளது கண்ணீர் நல்லூர் அரசவையின் அத்தனை கண்களையும் ஈரமாக்கியது.

மீண்டும் அரசவையில் அதே அமைதி.
கணநேரத்தில் என்ன நினைத்தாளோ தெரியாது. கண்ணீரைத் துடைத்து எழுந்தாள் சித்திராங்கதா.
‘தேவையில்லை எதுவும் தேவையில்லை… என் இருதயவலி இங்கிருக்கும் எந்த இரு விழிகளிற்கும் புலப்படாது. என் வேதனை புரிந்த அந்த இரு விழிகளும் இவ்விடத்தில் இல்லை… தஞ்சை வீரர்…. தஞ்சை வீரரை தவறான வழிக்கு நடத்தியதாய் குற்றச்சாட்டு என்மீது. தவறான வழி… நானும் தஞ்சைவீரரும் சேர்ந்து சென்ற அந்த வழி நல்லை அரசிற்கு தவறான வழி… அவ்வாறே சொல்லி என்னை முதல் பெண் குற்றவாளியாக்கி சபையில் நிறுத்தையில் இந்த நடனப்பெண்ணின் வழியே தன் தலைசிறந்த வழி என்று நாடு காக்க சென்ற என்னவர் தரணிக்கு நிரூபித்து காட்டிவிட்டாரே… அந்த மாவீரத்தின் மீதா நான் ஐயங் கொண்டேன்… இத்தனை நாள் அந்த மாவீரத்தின் மீதா கடுங்கோபம் கொண்டிருந்தேன்…. இந்தப்பேதை தன்நாட்டின் மீது கொண்ட அன்பை என்னவர் அறிந்திருப்பார் என்று என்மனம் இதுவரை நம்பவில்லையே.. அன்று புரவியில் எனக்களித்த வாக்கை மறந்து அதிகாரத்திற்கு அடிபணிந்து போரிற்கு சென்றுவிட்டார் என்று நான் கொண்ட தாபங்கள் அனைத்தையும் மிஞ்சி இன்று தன் காதலை சபையறிய சகலருக்கும் தெரிவித்து என் களங்கத்தை போக்கிய வீரருக்கு இணையாய் நான் செய்தது என்ன? எதுவுமேயில்லையே…

இதோ… இதோ.. இந்தப் பெட்டிக்குள் அவர் அனுப்பி வைத்தது எனக்கான மகுடமல்லவா? எந்த ஒரு கணத்தையும் கூட இனி நான் நம்பப் போவதில்லை. எந்தக் கணமும் எப்போதும் நான் நினைத்தது போல் இதுவரை நிகழவுமில்லை. எதற்காகவும் இனி நான் காத்திருக்கப் போவதில்லை. இதோ… இதோ… இப்போதே… இப்போதே… ‘ என்று அந்தப்பெட்டியை திறந்து அதற்குள் இருந்த முத்துமாலையை வாஞ்சையோடு தன் கரங்களில் பற்றினாள். கண்ணீர் நிரம்பிய அவள் கண்களில் தெரிந்த அந்த முத்துமாலையின் விம்பம் மாவீரன் வருணகுலத்தானையே அவள் தனக்குள் வாங்கிக் கொண்டாள் என்பதை உணர்த்தியது. அவள் கண்கள் அந்த நேரம் காட்டிய அபிநயம் அவளைத்தவிர எந்த ஆடலரசியாலும் இந்த உலகில் இதுவரை காட்டப்படாத அதிசயமாகும்.

‘மாவிலை தோரணங்கள் கட்டி மணமேடையில் என் தந்தை கன்னிகாதானம் செய்ய என்னைக் கரம்பிடிக்க கடல் கடந்து வந்து காத்திருந்த மன்னவரே… இப்போது இந்த கூடத்திலே என்னை மணந்து கொள்ளுங்கள்…. ‘ என்று கூறி அந்த வெண்முத்து மாலையை தன் கரங்களினால் தானே அணிந்து கொண்டாள்…
சித்திராங்கதா வருணகுலத்தான் திருமணம் அக்கணமே நடந்தது.
சித்திராங்கதாவின் பேச்சிலும் செயலிலும் உள்ள வேகம் சுற்றி நின்ற எல்லாரையும் வாயடைக்க செய்திருந்தது.

அருகில் நின்ற மகிழாந்தகனை வணங்கிய கரங்களோடு நோக்கினாள் சித்திராங்கதா.‘நல்லை தேசத்து சேனாதிபதி மகிழாந்தகரே.. தாமே இந்த மாலையை என்னவரிடத்தில் இருந்து கொண்டு வந்தீர். தாமே எம் திருமணத்தில் நித்திய சாட்சியுமாவீர்கள்… போரிற்கு சென்ற என்னவர் மீண்டு வருவார். நிச்சயம் வென்று வருவார்.. அவர் வருகின்ற நாளில் என்னவரிடத்தில் சொல்லுங்கள்..அவர் என்னை மணந்து கொண்ட செய்தியை என்னவரிடத்தில் தெரியப்படுத்துங்கள்…. ‘

மகிழாந்தகன் கண்களும் நனைந்தன. ‘ எதனால் இத்தனை அவசரம் பெண்ணே… வீரத்தை பறைசாற்றி மாவீரர் வென்று வந்தபின் நல்லூரே வியக்க தங்களது திருமணம் நடக்க வேண்டியதல்லவா? இப்படி அவசரங் கொண்டது ஏன் பெண்ணே?’

‘இல்லை… சேனாதிபதியாரே.. காலத்தை இனி நம்பமாட்டாள் சித்திராங்கதா. மற்று இந்த அரசவையில் இருப்போரது பேச்சையும் இனி ஒரு போதும் நம்ப நான் தயாரல்ல.. என்னவரை மணந்து கொள்ள காத்திருக்கும் அவகாசம் என்னிடத்தில் இல்லை… பெருஞ் சபையோரே… என்னவர் வரும் நாளில் நல்லூரில் மிஞ்சி நிற்கும் நல்லோரே… அந்நாளில் அவரிடத்தில் தவறாமல் அவர் மனைவி ஆனாள் சித்திராங்கதா என்பதை தெரியப்படுத்துங்கள்… உங்களனைவரிடமும் இக்கன்னிகையின் கடைசி வேண்டுகோள் இதுவே’

அதன் அர்த்தம் புரியாமல் குழம்பித்தவித்தனர் அவையோர்.
அவையோரின் குழப்பத்தை போக்கும் அந்தக் கேள்வியை கேட்டார் மந்திரியார்.

‘என் அருமைப் பெண் பாவாய்.. நீ பேசுவதன் பொருள் என்ன தாயே… தஞ்சைவீரர் வரும் வரை தலைசிறந்த ஆடலரசி உன்னைக் காப்பது எம் நாட்டின் பெரும்பணி ஆகிவிட்ட நிலையில் தஞ்சைவீரர் வரும்போது தகவல் சொல்லும்படி நீ சொல்லுவதன் பொருள் என்ன ? வீரத்தளபதி வென்று வரும் போது வெற்றித்திலகமிடுவது அவர் ஆசைக்கன்னிகை உன் பணியல்லவா? அப்படியிருக்க நீ இப்படி கூறுவதன் பொருள் எமக்குப் புரியவில்லையே தாயே… இத்தனை நாள் நீ பட்ட துன்பங்கள் கரைகின்ற பொழுதில் உன் பேச்சிலும் செயலிலும் தெரியும் அவசரத்தின் அர்த்தம் என்ன தாயே.. உன் தந்தை ஸ்தானத்தில் நின்று கேட்கிறேன். என் மகளும் உன்னைப்போல் ஒருத்தியே… என் பேச்சைக் கொஞ்சம் கேளம்மா’

‘தந்தை ஸ்தானமா… என் தந்தையே தன் ஸ்தானத்தை மறந்து நிற்கையில் இனி யாரை தந்தை என்று நம்புவேன்.. என் காதலின் பெரிய எதிரி என்று நினைந்தவர் இப்போது எனக்கு தந்தை என்கிறார்… எதற்காகவும் யார் பேச்சையும் இனி இந்த சித்திராங்கதா நம்பப் போவதில்லை.. இதே உதடுகள் தானே கடந்த கணத்தில் ஈழத்தின் துரோகி என்றது என்னை… அப்போதே முடிவை எடுத்துவிட்டாள் சித்திராங்கதா…’
தெளிவாய் ஒரு முடிவோடு தான் அவள் அவையில் பேசிக்கொண்டிருந்தாள்..

நம் ஆடலரசி எடுத்த அந்த முடிவுதான் என்ன?

Related posts

உளவியல் ஆய்வுகளில் எதிர்கொள்கின்ற சவால்கள்

Thumi202121

மூளைசாலிகள் வெளியேற்றமும் மருத்துவக்கல்வியின் எதிர்காலமும்

Thumi202121

போதை உனக்கு பாதையல்ல !

Thumi202121

Leave a Comment