ஏல விற்பனைச் சந்தையிலே
இலவசமாய் விலை போகிறது
இன்றைய நாட்டு நடப்பில்
அரிசியோ… பருப்போ… என எண்ணிடாதீர்!
அது தற்கொலை
தற்கொலைகள் ஆவிநிலை தருவனவடா
இது கருடனின் ஏகாந்தம்
எமனே! என் உயிரை எடுக்க நீ யாரடா?
நானே என் உயிரை மாய்ப்பேன் எனும்
அடாவடித் தனத்தின் உச்சகட்டம் தற்கொலை
காதல் தோல்வியா தற்கொலை
கடன் தொல்லையா தற்கொலை
திருமணப் பிரச்சினையா தற்கொலை
படிப்பின் உச்சகட்டமா தற்கொலை
பாலியல் தொந்தரவா தற்கொலை
பகிடிவதையா தற்கொலை
ஏதோ… உலக அரங்கில் ஓட்டப்பந்தயமாம்
இலங்கை நான்காம் இடமாம்…
ஓட்டப்பந்தயமல்லவே…
தற்கொலைகள் அதிகம் நிகழ்வதில்
இலங்கை பெற்ற இடமிதுவாம்.
நஞ்சுண்டு
தூக்கிட்டு
நெருப்பில் விழுந்து
கிணற்றில் பாய்ந்து
ஆற்றில் விழுந்து
கடலில் குதித்து
கழுத்தறுத்து
கையறுத்து
ரயிலில் பாய்ந்து
எத்தனையோ கன்றாவிகளை நேருக்கு நேர்
பார்த்துத் துடிக்கிறது எம் நெஞ்சம்
சாதனை வீரனாம் தற்கொலை புரிந்து விட்டேன்
என்னை உலகுக்கு நிரூபித்து விட்டேன்
என்பது முயலுக்குக் கொம்புள்ள
கதையாய் போனதடா…
மட்டக்களப்பு கல்லடிப் பாலத்தில்
மரண ஓலம் அடிக்கடி கேட்குதய்யா
உதிரம் கொடுத்து உயிர் தந்தாளே
உன் தாய் உனக்குத் தெரியவில்லையா?
உழைத்து உழைத்து உன் உடல் வளர்த்தாரே
உன் தந்தை உனக்குத் தெரியவில்லையா?
அர்த்தமற்ற சாவில் ஏதடா சரித்திரம்…?
பாடசாலை சீருடைக்காய் தூக்கிட்டாள்
ஓர் ஏழைச் சிறுமி
தூக்கிட்ட நாளிலே!
நல்லூரான் தலை மேலே தங்க ஓடு
கயிற்றில் கண்டம் நெரித்து
தூக்கில் நீ தொங்கிட வேண்டாம்
நஞ்சருந்தி நா எரிந்து
நாசமாய் போயிட வேண்டாம்
எண்ணெய் ஊற்றி எரியூட்டி – நீ
வெந்து நொந்து கருகிட வேண்டாம்
கடுகதியில் ஓடும் ரயிலில் பாய்ந்து
கை பாதி கால் பாதியாய் உருவிழந்து
உயிர் துடிக்க வேண்டாம்
அசடே!
வாழ நினைத்தால் வாழலாம்
வழியா இல்லை உலகினில்
உழைப்பவனது உதிரம் உறிஞ்சும்
பண முதலைகள் மட்டும்
உயிரோடிருக்க
உமக்கேன் தற்கொலை?
ஏதுமறியா பிஞ்சுகளை
நஞ்செண்ணம் கொண்ட வஞ்சகர்கள்
தம் வலையில் சிக்க வைத்து
சீரழித்து இன்பம் காணும்
ஈனப் பிறவிகள் மட்டும் உயிரோடிருக்க
உமக்கேன் தற்கொலை?
தற்கொலையின் விளைவு
சொர்க்கம் நரகம் இரண்டும் இல்லையடா
நடுவெளியில் அந்தரத்தில்
அலைவாய் ஆவியாக
நான் புதிதாய் சொல்லவில்லை
கருடன் சொன்னதடா
இதில் அர்த்தம் உள்ளதடா
சிந்திப்பதற்கு சிறுதுளி நேரம் காணும்
அஞ்சி அஞ்சி வாழ்ந்து
அவனியில் அமைதியிழந்து
துஞ்சி வாழும் கூட்டங்களாய்
கூனிக் குறுகிக் குவலயத்தில்
கண் விழிப்பதற்கு
நிமிர்ந்தெழு!
நீதிக்காய் குரல் கொடு!
உன் கண்ணெதிரே கலைந்திடும் தீயவர் கூட்டம்
அவர் மார்பிலே வேலைப் பாய்ச்சு
புது உலகம் படைத்திட கோலை ஓச்சு!
1 comment