இதழ் 70

யாருக்கானது இந்த முட்டாள் தினம்..?

பிரச்சினைகளுக்கு நிரந்தரமான தீர்வைக் காண்பதை விடவும், ஊதிப் பெருப்பித்து, பிரச்சினையில் குளிர்காயவே ஒரு சிலர் நினைக்கின்றர். ஒரு சிறு தணலைக் கனலாக்கும் அளவுக்கு, தலைகீழாகச் சிந்திக்கும் திறமை, அந்த ஒருசிலருக்கே உண்டு.

ஊதிப் பெருப்பிக்கப்பட்டமையால், இரண்டு சமூகங்களுக்கு இடையே ஏற்படும் பிரிவினை சதாகாலமும் தீர்க்கமுடியாது, புகைந்துகொண்டே இருக்கும்.

இரண்டு ஊர் மக்களிடத்தில் கசப்புணர்வுகள் ஏற்படுமாயின், அறிவு பூர்வமான மக்கள், ஒப்புக் கொள்ளக்கூடிய பல சமாதானங்களைக் கூறி, அம்மக்களின் விரோத மனப்பான்மையைப் போக்கும் வகையில் செயற்படச் சிந்திப்பர்.
ஆனால், ‘ஊர் இரண்டு பட்டால், கூத்தாடிக்குக் கொண்டாட்டம்” என்பர். அதாவது, கூத்தாடிக்கு வருமானம் அதிகரிக்கும்.

கூத்தாடிகளே இன்று எல்லா துறையிலும் அதிக இலாபம் கண்டு உயர்ந்து கொண்டிருக்கின்றனர். அரசியல், வியாபாரம், மதம், சமூக சேவை என எல்லா பரிமாணங்களிலும் கூத்தாடிகளே மக்களை முட்டாளாக்கி இலாபம் காண்கின்றனர்.

அவர்களது ஒரே நம்பிக்கை, ஒரே மூலதனம் – முட்டாளாயுள்ள மக்கள் மட்டுமே! தொடர்ந்தும் மக்களை முட்டாளாய் வைத்திருப்பதற்கான வழிமுறைகளையும் அவர்கள் தொடர்ந்து பேணி வருகிறார்கள்.

மக்கள் தம்முடையே உள்ள முட்டாள்தனத்தை உணராமல் அடுத்தவர்களை முட்டாள்கள் என்று முத்திரை குத்தும் முயற்சியிலே மும்முரம் காட்டுகின்றனர்.

புதுமை வாதிகள் பழமை விரும்பிகளிற்கு முட்டாள் முத்திரை குத்துகின்றனர். பழைமை வாதிகள் புதிய கொள்கைகள் கொண்டவர்களை முட்டாள் என்று அறிமுகப்படுத்துகின்றனர். ஒரு மதத் தத்துவங்களை கொண்டாடுபவர்கள் இன்னொரு மதத்தினரை முட்டாள் என்றே நம்புகின்றனர். வியாபாரிகள் மக்களை முட்டாள் என்று முடிவெடுத்தே வியாபாரம் செய்கின்றனர். நுகர்வோரும் வியாபாரிகளை முட்டாளாக்கி கொள்வனவு செய்ய தொடர்ந்தும் முனைகின்றார்கள். அரசியல் என்பதே முட்டாள்களின் கூடாரம் என்று சொல்லக்கூடிய வகையில் இன்று ஆகிவிட்டது.

இப்படி எல்லோரும் இன்னொருவரை முட்டாளாக்கி தம்மை புத்திசாலியாக காட்டிக் கொள்ளும் முயற்சியிலே இவ்வுலகம் இச்சமயம் இயங்கிக் கொண்டிருக்கிறது.

உலக அளவில் மகளிர் தினம், நண்பர்கள் தினம், தந்தையர் தினம், காதலர் தினம், குழந்தைகள் தினம், தொழிலாளர்கள் தினம் என்று மக்களுக்குப் பலவிதமான தினங்கள் இருப்பது போலவே முட்டாள்களுக்கும் என்று ஒரு தினம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் ஏனைய தினங்களுக்கு உரிமை கொண்டாடுவதைப் போல இத்தினத்தில் தமக்கும் பங்கிருப்பதாகச் சொல்லிக் கொள்ள எவரும் முன்வருவதில்லை.

அதே நேரம் தம்மை அடையாளப்படுத்திக் கொள்ளாமல் அடுத்தவரை முட்டாளாக்க முனையும் ‘முட்டாள்தனமான அறிவாளிகளின் தினம்’ என்று இன்றைய தினத்தைக் கூறினாலும் பிழையாகாது. ஆம்..நாமெல்லாம் பள்ளிப் பருவத்தில்..சக நண்பர்களிடம், வீட்டில் உள்ளவர்களிடம் அன்று ஏமாறாமல் இருக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்ட நாட்களை மறக்க முடியாது.

அதேபோல ஒருவரையாவது ஏமாற்றி விட வேண்டும் என்ற விளையாட்டுத்தனமும் அதில் இருந்த ஆர்வமும் மறக்க முடியாது. உன் சட்டையிலே என்ன கறை ? உன் பின்னால் பாம்பு..? என்று ஆரம்பித்து பல ஏமாற்றுக் கேள்விகளை நண்பர்களிடம் சொல்லி…ஏமாற்றி விளையாடி இருப்போம்.. அதுதான் இந்த ஏப்ரல் முதல் தேதியாகும். ஏமாற்றுவதையும் ஏமாறுவதையும் சிரித்துக்கொண்டே ஏற்றுக்கொள்ளும் ஒரு தினம்.

ஆனால் வளர்ந்த பின்னர் இவை சாரமற்றுப் போய்விட்டன. ஒருவரை நாம் ஏமாற்றினால் நம்மை இன்னொருவர் ஏமாற்றுவார்கள் என்று வாழ்க்கை சில பல பாடங்களை அழுத்தமாகச் சொல்லிக் கொடுப்பதால் இதுபோன்ற சிறு பிள்ளைகளின் விளையாட்டுத் தனங்களில் பெரும்பாலனவர்கள் ஈடுபவடுவதில்லை. ஆனாலும் குழந்தை மனம் கொண்ட சிலர் ஏப்ரல் ஃபூல் செய்வதை இன்னும் கடைபிடித்து வருகிறார்கள். 

உலகம் முழுவதும் பலரைக் குழந்தைப் பருவத்துக்கு அழைத்துச் செல்லும் இந்த தினம், எப்படி உருவானது? அதன் வரலாற்றுப் பின்னணியில் பல கதைகள் உண்டு. 1500-களில் ஐரோப்பியர்கள் கடைப்பிடித்த ஒரு வழக்கமாக ஏப்ரல் 1 கூறப்படுகிறது. அப்போது, அந்த நாளின் பெயர் ஏப்ரல் மீன்கள் தினம். ஏப்ரல் மாதத் தொடக்கத்தில் ஃபிரான்ஸ்ஸில் உள்ள ஆறுகளிலும் நீரோடைகளிலும் நிறைய மீன்கள் இருக்குமாம். அதனால் அந்தச் சமயத்தில் மீன்பிடிப்பது மிகவும் சுலபம். ஆகையால் மீன்கள் ஏமாறும் தினமாக ஏப்ரல் 1 கருதப்பட்டது.

காலப்போக்கில் மனிதர்களை ஏமாற்றும் தினமாக அது மாற்றம் கண்டதாம். ஏப்ரல் 1-ம் தேதி, முட்டாள்கள் தினம் என ஆனது.

புராதன வரலாற்றில் ரோமானிய நாட்காட்டியின்படி ஏப்ரல் 1-ம் தேதிதான் வசந்தம் ஆரம்பிக்கும் பொன்னாளாகும். புராதன வரலாற்றில் புத்தாண்டுக் கொண்டாட்டங்களை மிகுந்த உற்சாகத்தோடு கொண்டாடியதற்கான வரலாற்றுக் குறிப்புகள் காணப்படுகின்றன.

ஹார்வி என்னும் வரலாற்றாய்வாளர் தனது குறிப்பில், பிரான்ஸ் தேசத்தின் அரசன் ஒன்பதாம் சார்லஸ் காலத்தில் மார்ச் மாதம் 25-ம் தேதியிலிருந்து ஒரு வார காலம் புத்தாண்டுக் கொண்டாட்டங்களில் ஈடுபட்டதாகக் குறிப்பிடுகிறார். திருவிழாவைப் போல் நடைபெறும் இந்தக் கொண்டாட்டங்களின்போது ஒருவருக் கொருவர் பரிசுப் பொருள்களையும், அன்பளிப்புகளையும் வழங்கி தங்கள் அன்பை வெளிப்படுத்திக் கொண்டதாகக் குறிப்பிடுகிறார். இந்த ஒரு வாரக் கொண்டாட்டத்தின் இறுதி நாளான ஏப்ரல் முதலாம் தேதி பெருவிருந்துடன் புத்தாண்டு விழா நிறைவெய்தியதாகக் குறிப்பிட்டுள்ளார். 1562-ம் ஆண்டில் போப் கிரிகோரி புதிய ஆண்டுத் தொடக்கத்தை நடைமுறைப் படுத்தும்படி அறிவித்தார். ஆண்டுத் தொடக்க நாளாக ஜனவரி 1-ம் தேதியை அறிமுகம் செய்து வைத்தார். இனிமேல் பிரான்ஸ் தேசம் முழுமையும் இந்த நாட்காட்டிதான் என்று ஊர்தோறும் அறிவிக்கப்பட்டது.

இந்த மாற்றத்தை ஏற்றுக் கொள்ளாதவர்கள் அல்லது போப்பின் அறிவிப்பை நம்பாதவர்கள் ஏப்ரல் 1-ம் தேதியையே புத்தாண்டுப் பிறப்பாகக் கொண்டாடினர். இந்தப் புதிய புத்தாண்டு தினத்தை ஐரோப்பிய தேசங்களும், அவற்றின் மக்களும் உடனே ஏற்றுக்கொள்ளவில்லை. அதற்குச் சில காலம் எடுத்தது. அதற்குப் பல காரணங்கள் உண்டு.
அன்றைய காலகட்டத்தில் இதுபோன்ற செய்திகள் அல்லது மாற்றங்கள் சகலரையும் சென்றடைவதற்குரிய தகுந்த சாதனங்கள் இருக்கவில்லை. அத்தோடு பழைய வழக்கத்தைப் புறம் தள்ளி புதிய வழக்கத்தை ஏற்றுக் கொள்வதையும் இம்மக்கள் மறுத்திருக்கலாம்.

ஆகவே இம்மக்கள் தொடர்ந்தும் ஏப்ரல் மாதம் முதலாம் தேதியையே தமது புத்தாண்டுத் தினமாகக் கொண்டாடி வந்தார்கள். எவ்வாறாயினும் பிரான்ஸ் 1852-ம் ஆண்டிலும் ஸ்காட்லாந்து 1660-ம் ஆண்டிலும், ஜெர்மனி, டென்மார்க், நார்வே போன்ற நாடுகள் 1700-ம் ஆண்டிலும், இங்கிலாந்து 1752-ம் ஆண்டிலும், இந்தப் புதிய புத்தாண்டு தினத்தை அதிகாரபூர்வமாக ஏற்றுக் கொண்டன.

புதிய வழக்கத்தை ஏற்றுக்கொண்டு ஜனவரி முதலாம் தேதியை புத்தாண்டாகக் கொண்டாடத் தொடங்கிய மக்கள், இந்த பழைய வழக்கத்தைப் பேணி ஏப்ரல் மாதம் முதல் தேதியில் புத்தாண்டைக் கொண்டாடுபவர்களை ஏப்ரல் முட்டாள்கள் என்று அழைத்தார்கள். இதிலிருந்து ஏப்ரல் முட்டாள்கள் தினம் ஆரம்பமாயிற்று என்பது பலராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கின்றது.

முட்டாள் தினம் பற்றிய இன்னொரு சுவாரஸ்யமான கதையையும் உண்டு. கதை இது தான். பண்டைய ரோமானிய அரசரான கான்ஸ்டன்டைன் என்பவரது ஆட்சி கடும் பிரச்னைகளுக்கும், பலத்த சர்ச்சைகளுக்கும் இடையே நடந்து வந்தது. அவசர காலத்தை சமாளிக்க தனது அரசவைக் கோமாளி கூகல் என்பவரை ஒரு நாள் மன்னராக இருக்கும்படி அறிவுறுத்தினாராம்.

கோமாளி என்று சொல்லப்படும் விதூஷகர்கள் மிகவும் புத்தி சாதுர்யம் வாய்ந்தவர்கள். ஆனால் முட்டாள்கள் என்றே மக்களால் அழைக்கப்படுவார்கள். அத்தகைய கோமாளிகள் ஆட்சி செய்த அந்த ஒரு நாளைத்தான் முட்டாள்கள் தினம் என்று ரோமானியர்கள் கொண்டாடத் தொடங்கி அது உலகம் முழுவதும் பரவியது என்கின்றனர் கதை சொல்லிகள்.

இன்னும் சில புனைவுக் கதைகள் இருந்தாலும், ஏப்ரல் ஒன்று மட்டுமல்ல வருடம் தோறும் வாழ்நாள் தோறும் நம்மை முட்டாளாக உணரச் செய்யும் ஆற்றல் ஆளும் வர்க்கத்தினருக்கு மட்டுமே உள்ளது என்பது வரலாறு தாண்டிய உண்மை.

உண்மையில் எந்த மனிதனும் தனது முட்டாள்தனத்தையும் அறியாமையும் ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் இருப்பதில்லை. அதுவே மனிதன் தொடர்ந்தும் முட்டாளாய் இருப்பதற்கு மூலகாரணமாகிறது.

இந்த நுட்பத்தை பயன்படுத்தியே கூத்தாடிகள் மக்களை முட்டாளாய் வைத்திருக்கும் முயற்சியில் வெற்றி கண்டு வருகின்றனர்.

படித்திருக்கும் ஒரே காரணத்திற்காக ஒருவர் புத்திசாலி என்று அர்த்தமல்ல. இன்று கல்வி என்பதற்கு பொருள் நீங்கள் பட்டம் பெற்றிருக்க வேண்டும் என்பதாகும். புத்தகத்தில் எழுதப்பட்ட சில கருத்துக்களை மனனம் செய்து தேர்வில் எழுதுகிறீர்கள், அவ்வளவுதான்.

ஆனால் நாம் அனைவரும் பார்க்கும் இந்த படிப்பு என்ற செயல்பாட்டில் ஞானத்திற்கு இடமில்லை. இதன் விளைவாகப் படித்த முட்டாள்களை ஆங்காங்கே நாம் அடிக்கடி பார்க்கிறோம். இணையத்தை எளிதாக அணுக முடிவதால் பல சமூக ஊடக தளங்களில் பயனற்றதாக இருந்தாலும் பலர் தங்கள் கருத்துக்களை எளிதாகப் பகிர்ந்து கொள்ளலாம். இவைகளில் சில கொண்டிருக்கும் முட்டாள்தனமான கருத்துகளை எழுதியவர்கள் படித்தவர்கள் தானா என்ற ஐயம் ஏற்படுவது உண்மை தான்.

அட்டைப் படத்தில் காட்டப்பட்டுள்ளது போல முகத்தில் அரிதாரம் பூசுவதால் மட்டும் ஒருவர் கோமாளியாகிவிட முடியாது. அதே போல இன்னொருவர் முகத்தில் அரிதாரம் பூசி விடுவதால் மட்டும் அவரை கோமாளியாக்கி விட முடியாது. இதனை உணர்ந்து கொள்ளுங்கள்.ஒவ்வொரு மனிதரிடத்திலும் மனிதாபிமானம், அன்பு, பாசம், ஒற்றுமை ஆகியன வளர்க்கப் பட்டுள்ளன. அதற்குள் புகுந்து கூத்தாடத் துடிக்கும், ‘கூத்தாடிகள்” தொடர்பில் அவதானமாக இருக்கவேண்டுமென்பதே எங்களது அவதானிப்பாகும்.

இறுதியாக, யாருக்கானது இந்த முட்டாள் தினம் என்கிற தலைப்பின் பதிலைக் கூறாமல் வாசகர்களையும் முட்டாளாக்கி விட்டுச் செல்ல நாங்கள் தயாராக இல்லை.யாவருக்குமானது இந்த முட்டாள்கள் தினம் என்பதுதான் நிதர்சனம். முட்டாளாகமல் நீங்கள் இருக்கிறீர்கள் என்றால் சமூகத்தோடு நீங்கள் ஒன்றித்து இருக்கவில்லை என்பது புலனாகிறது. ஆக, அனைவருக்குமான ஒரு தினத்தை அனைவரும் பெருமனதோடு ஏற்று கொண்டாடுவோம்.

அனைவருக்கும் முட்டாள் தின வாழ்த்துகள்…!

Related posts

வினோத உலகம் – 33

Thumi202121

நம் எதிரிகள்……..!

Thumi202121

செயல்வீரர் அல்லவா? அவர் சிறப்பெல்லாம சொல்லவா?

Thumi202121

1 comment

Leave a Comment