டெல்லி பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய அரசியல்!
இக்காலம் டெல்லி பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய அனுபவங்களை பதிவதும், பகிர்வதும் பொருத்தமாக இருக்கும். இலங்கையும் ஜனாதிபதி தேர்தலில் புதியதொரு மாற்றத்திற்குள் பயணித்துள்ளதும் இம்மாற்றத்தில் இளைஞர்களின் பங்கும் அதிகளவு அவதானிக்கப்படுகின்றது. அதன் பின்னால் தென்னிலங்கை பல்கலைக்கழக மாணவர் ஒன்றியங்களில் ஆதிக்கம் செலுத்தும் ஜே.வி.பி இளம் செயற்பாட்டாளர்களின் தாக்கம் முதன்மையானதாகும். இலங்கை பல்கலைக்கழகங்களில் மாணவர் ஒன்றியங்களில் அதிகம் அரசியல் கட்சிகளின் செல்வாக்கு காணப்படுவதில்லை. எனினும் புரட்சி இயக்கங்களின் செல்வாக்கு வரலாறு தோறும் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய செயற்பாடுகளில் அதிகம் பிணைந்துள்ளது. இவ்வரிசையிலேயே ஸ்தாபன வரலாற்றில் புரட்சி பாரம்பரியத்தை பகிரும் ஜே.வி.பி தலையீடும், தென்னிலங்கை பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய செயற்பாடுகளில் இன்றும் அவதானிக்க கூடியதாக உள்ளது.
இலங்கை பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய செயற்பாட்டு அறிமுகம், டெல்லி பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய செயற்பாடு பற்றிய குறிப்புகளிற்கு முன் அவசியமானதாகும். இவ்அடையாளப்படுத்தலை முன்வைப்பதனூடாகவே டெல்லியில் கிடைக்கப்பெற்ற அனுபவத்தின் பெறுமதியை உணரக்கூடியதாக அமையும்.
எனது இளங்கலைமானி பட்ட கற்கையின் போது யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் என்ற ஒன்றிய செயற்பாடுகளில் ஓரளவு நிறைவான முன் அனுபம் உண்டு. இரண்டாம் வருடத்தில் வருடப்பிரதிநிதியாகவும், மூன்றாம் வருடத்தில் மாணவர் ஒன்றியத்தின் மீதான அதிருப்தி செயற்பாட்டாளராகவும், நான்காம் வருடத்தில் கலைப்பீட மாணவ ஒன்றியத்தின் பத்திராதிபராகவும் (Editor) மாணவ ஒன்றிய செயற்பாடுகளில் முன் அனுபவத்தை கொண்டுள்ளேன். எனினும் டெல்லி பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய செயற்பாடுகள் ஆரம்பம் முதல் அண்ணாந்து பார்க்கும் வியப்புகளையே ஏற்படுத்தியது. மலையும் மடுவமாகவே அதனை ஒப்பிட முடியும். யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய வரலாற்றிலும் ஈழத்தமிழர்களின் அரசியல் செல்வாக்கு அதிகம் இணைக்கப்பட்டுள்ளது. முன்னரே குறிப்பிட்டது போன்று இலங்கை பல்கலைக்கழகங்களில் புரட்சிசார் இயக்கங்களே செல்வாக்கு செலுத்தக் கூடியது. அவ்வரிசையில் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் தமிழ்த் தேசியம் சார் அரசியல் இயக்க செயற்பாடு வரலாற்றில் இணைந்துள்ளது. இவ் வரலாற்று தொடர்ச்சியில் எமது கால பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய செயற்பாட்டில், மூன்றாம் வருடத்தில் அதிருப்தி செயற்பாட்டாளர்களாக அரசியல் கைதிகளின் விடுதலை கோரி நாங்கள் சுயாதீனமாக மேற்கொண்ட ஒரு நாள் உண்ணாவிரத போராட்டமும்; நான்காம் வருடத்தில் மாணவர் ஒன்றிய உறுப்பினராக தமிழ் பரப்பில் உள்ள அரசியல் கட்சிகளை ஒன்றிணைத்து ஜனாதிபதித் தேர்தலை கையாள்வது தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட அரசியல்லகட்சி சந்திப்புக்களும் 13 அம்ச கோரிக்கையும் குறிப்பிடத்தக்கதாகும். இங்கு எமது அரசியல் செயற்பாடுகள் சாதாரண பொது மக்களின் அரசியல் பிரதிபலிப்புகளாகவே காணப்பட்டிருந்தது. எந்த ஒரு அரசியல் கட்சியின் பிரதிநிதியாகவோ உறுப்பினராகவோ மாணவர் ஒன்றிய செயற்பாடுகள் இடம்பெற அனுமதிப்பதில்லை. குறிப்பாக எமது கால யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய செயலாளர், ஒரு கட்சியின் மீது அதிக விசுவாசத்தை முன்னர் வெளிப்படுத்தியிருந்தார். இந்த பின்னணியில், அவர் தெரிவு செய்வதில் அதிக சச்சரவுகள் காணப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
எனினும் டெல்லி பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய செயற்பாடுகள் முழுமையாக அரசியல் கட்சி ஆதிக்கம் கொண்டதாகவே அமைந்துள்ளது. மாறாக சுயாதீனமாக சுயேட்சையான செயற்பாடு வலுவிழந்ததாகவே காணப்படுகின்றது. அரசியல் கட்சி பின்புலம் கொண்ட மாணவர் குழுக்களே மாணவர் ஒன்றியத்தில் ஆதிக்கம் செலுத்துகின்றது. பாரதிய ஜனதா கட்சியின் மாணவர் கிளை ABVP எனப்படும். அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் மாணவர் கிளை NSUI என அழைக்கப்படும். அத்துடன் இடதுசாரி பாரம்பரியத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) கட்சியின் மாணவர் கிளை SFI என அழைக்கப்படும். இவர்கள் தங்களை சுயாதீன குழுவாக குறிப்பிடுவார்கள். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) தாராள கட்யின் மாணவர் கிளை AISA என அழைக்கப்படும். இதனை தவிர சுயாதீன குழுக்களாக DUSA அடையாளப்படுத்தப்படுகிறது. இந்த வகையில் டெல்லி பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தெரிவு குழுக்களின் பிரதிநிதிகளாகவே தெரிவுகள் தேர்தல் மூலமாக இடம்பெறும்.
டெல்லி பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தெரிவுசார் தேர்தல் இரண்டு வருடமும் வேறுபட்ட அனுபவங்கள் கிடைக்கப்பெற்றது. முதலாவது, நான் டெல்லிக்கு சென்று ஒரு வார கால பகுதிக்குள்ளையே செப்டம்பர்-22அன்று டெல்லி பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தேர்தல் நடைபெற்றிருந்தது. டெல்லி பல்கலைக்கழகம் மாணவர் ஒன்றியம் ஆங்கில சுருக்கக் குறியீட்டில் DUSU (டுசு) என அழைக்கப்படும். இந்த டுசு தெரிவுக்கான தேர்தலில் ஏறத்தாழ ஒரு லட்சத்திற்கும் அதிகமான வாக்காளர்கள் காணப்படுகின்றார்கள். இங்கு ஆரம்பித்தது எனக்கான ஆச்சரியம். அது தொடர்ச்சியாக டெல்லி பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய அல்லது அது சார் செயற்பாடுகளில் முழுக்க ஆச்சரியங்களையும் முன்அனுவம் இல்லாத திகைப்புகளையும் ஏற்படுத்தியது.
முதலாவது தேர்தல் காலப்பகுதியில், என் முதல் அனுபவம் NSUI சார்ந்து உருவாகியது. காரணம் நான் ஆரம்பத்தில் தங்கியிருந்த தமிழ்நாட்டு நண்பர்களின் விடுதி ஒரு வகையில் NSUI அணியின் பிரச்சார அலுவலகமாகவே தொழில்பட்டிருந்தது. டெல்லி பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தேர்தல் பிரச்சாரத்திற்காக குறித்த குழுக்களின் கட்சி பிரதிநிதிகளும் மாணவர்கள் அல்லாதவர்களும், குறித்த தேர்தல் காலப் பகுதியில், டெல்லியில் வந்து தங்கி பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபடுவது உண்டு. அந்தவகையில் NSUI ஆதவாளர்கள் சிலர் எங்கள் விடுதியிலும் தங்கி இருந்தார்கள். எங்கள் தமிழ்நாட்டு நண்பர்களும் ABVP எதிர்ப்பு என்ற மனநிலையில் NSUI ஆதரித்திருந்தார்கள்.
டெல்லி பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தேர்தல்களில் இந்திய பாராளுமன்ற உறுப்பினர்களும் நேரடியாக தலையீடு செய்கின்றார்கள். NSUIக்கு ஆதரவாக தமிழ்நாடு விருதுநகர் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் அவர்களை, டெல்லியில் உள்ள அவருடைய பாராளுன்ற உறுப்பினர் விடுதியில் தமிழ்நாட்டு நண்பர்களுடன் சந்தித்தோம். நான் தமிழ்நாடு இல்லாத போதும், மொழியால் தமிழ் என்றதால் என்னையும் அழைத்து சென்றார்கள். இந்திய பாராளுமன்ற உறுப்பினரை சந்திக்க போறம் என்ற சிறுபிள்ளை புலுகம், விரிவுரைக்கு போகமா நியு டெல்லி மத்திய செயலக பிரதேசத்திற்கு, மெட்ரோல சென்றோம். இது என் முதல் மெட்ரோ பயணம். (எனது டெல்லி நாட்களில் மெட்ரோ நினைவுகளை தனிபதிவில் எதிர்காலத்தில் தொகுக்கிறேன்.) காலை 10.00 மணிக்கு சந்திப்பு என திட்டமிடப்பட்டது. 10.30க்கு எல்லாம் அங்கு போய்ட்டோம். ஆனா பாராளுமன்ற உறுப்பினர், மாலை 2.00 மணி போல தான் வந்திருந்தார். பாராளுமன்ற விவாதத்தில கலந்து கொண்டதால, எங்களுக்கு நேரம் ஒதுக்கியதை உதவியாளர் ஞாபகப்படுத்தவில்லையென கண்டித்தும் கொண்டார். என் மனதுக்குள் இதெல்லாம் நாங்க நிறைய தென்னிந்திய திரைப்படங்களில பார்த்திட்டோம்னு தான் தோனிச்சு.
காங்கிரஸ் பாராளுன்ற உறுப்பினரிடம் தமிழ்நாட்டின் நண்பர்கள் என்னை இலங்கையைச் சேர்ந்தவர் என்று அறிமுகப்படுத்திக் கொண்டார்கள். மாணிக்கம் தாகூர் அவர்கள், போருக்கு பின்னரான தன்னுடைய இலங்கை வருகையையும், அன்றைய ஜனாதிபதி உடனான சந்திப்புக தொடர்பிலும் சிறு அறிமுகத்தை வழங்கினார். உரையாடலுக்கு பின் நான் வெளியே வருகையில், அவ்விடுதியில் இருந்த ஏனைய காங்கிரஸ் அபிமானிகள் என்னிடம், “உங்களுக்கு எங்களை பிடிக்காது” என்றவாறு கேள்வி எழுப்பினார்கள். அவர்களின் கோட்டைக்குள் நின்றுகொண்டு, ‘ஆம்’ என்று சொல்வது சிரமம் தான். அதேநேரம் ‘இல்லை’ என்று சொல்லி என் மனதையும் நோகடிக்க விரும்பவில்லை. ஆக காலத்தின் மீது பழியை போட்டு ‘அது இரு தரப்பின் காலத்தின் தவறு’ என்றவாறு கூறிவிட்டு வந்தேன்.
இன்னொரு நாள் காங்கிரஸ் கட்சியின் மற்றொரு தமிழ்நாட்டு பாராளுமன்ற உறுப்பினரான வசந்த் அண்ட் கோ நிறுவனத்தின் தற்போதைய இயக்குனரும், தமிழ் திரைப்படங்கள் சிலவற்றில் நடித்துள்ள வசந்தகுமார் அவர்களை தமிழ்நாட்டு நண்பர்கள் சந்திக்க சென்றிருந்தார்கள். எனினும் கடந்த அனுபவம் நேர இழுத்தடிப்பால் வசந்தகுமார் உடனான சந்திப்பை நான் தவிர்த்து இருந்தேன். எனினும் சந்திப்பு முடிய வந்த நண்பர்கள் கூறிய விடயம் எனக்கு சிறு மன நெருடலை உருவாக்கியிருந்தது. டெல்லி வந்ததிலிருந்து நான் எங்கள் உணவை ருசிக்க முடியவில்லை. வசந்தகுமார் உடனான சந்திப்பு டெல்லியில் உள்ள தமிழ்நாடு பவனிலேயே இடம்பெற்றது. இங்கு தமிழ்நாட்டு உணவுகள் உண்டு. வசந்தகுமார், தமிழ்நாட்டு மாணவர்கள் காங்கிரஸ் மாணவர் கிளையான NSUIக்கு ஆதரவளிப்பதால், விருந்து வழங்கியிருந்தார்.
சந்திப்புக்கு சென்று இருந்த நண்பர்கள் அளவின்றி சாப்பிட்டதாக கூறினார்கள். ருசியான சாப்பாட்டில் இருந்த ஏக்கம் நெருடலை ஏற்படுத்தியது.
மாணவர் ஒன்றிய தேர்தலில் என் உறவு NSUI உடன் மட்டுப்படவில்லை. தமிழ்நாட்டு நண்பர்களின் பழக்கம் NSUI அறிமுகப்படுத்தியது. அதுபோல பல்கலைக்கழக நண்பர்களினால் பாரதிய ஜனதா கட்சியின் மாணவர் கிளையான ABVP அறிமுகம் கிடைக்கப்பெற்றது. தேர்தல் காலப்பகுதியில் பல்கலைக்கழகத்திற்கு அருகிலேயே ABVP அலுவலகமும் இயங்கிக் கொண்டிருந்தது. அங்கு மூன்று நேரமும் உணவுகள் வழங்கப்பட்டது. என்னுடைய நண்பன் பிரதீப் என்பவன் ஆர்.எஸ்.எஸ் செயற்பாட்டாளன். அவன் ABVP தேர்தல் அலுவலகத்திலேயே தங்கி இருந்தான். ஆதலால் மதிய நேரம் தன்னுடன் எங்களை அழைத்துச் சென்று ABVP தேர்தல் அலுவலகத்தில் உணவு எடுத்து தருவான். நான், பிரதீப் மற்றும் சத்யபிரகாஷ் மூவரும் தேர்தல் காலப்பகுதியில் மதிய சாப்பாடு ABVP அலுவலகத்திலேயே பெற்றுக் கொண்டோம். சிற்றுண்டிச்சாலை உணவுச் செலவை மீதப்படுத்திக் கொண்டோம்.
ஆக நான் டெல்லி சென்ற முதல் வாரத்திலேயே இடம் பெற்ற மாணவர் ஒன்றிய தேர்தலில் NSUI மற்றும் ABVP ஆகியவற்றின் தேர்தலுக்கான செலவும், நேரடி அரசியல் தலையீடுகளும் புதியதொரு பிரமிப்பை உருவாக்கியது. பிரமிப்பிலிருந்து வெளி வருவதற்குள்ளேயே தேர்தல் முடிந்து, ABVP போட்டியாளர்கள் தலைவர் மற்றும் பொருளாளர் பதவியில் வெற்றி பெற்றிருந்தார்கள். NSUI போட்டியாளர் செயலாளர் பதவியில் வெற்றியும் பெற்றிருந்தார். எனவே மாணவர் ஒன்றிய ஆதிக்கம் ABVP வசம் சென்றது.
தேர்தலுக்கு முந்தைய நாட்கள் எல்லாம் வன்முறைகள் உச்சளவில் இடம் பெற்றது. எதிர் போட்டியாளர் மீது தாக்குதல்கள். உயர்ந்த பட்சம் எதிர் போட்டியாளரின் வாகனம் தீக்கிரியாக்கப்பட்டது. இச்செய்திகளை குழுக்களில் பார்க்கும் போதும், நண்பர்கள் உரையாடும் போதும் இது இந்திய நாட்டுக்கான தேர்தலா? மாணவர் ஒன்றிய தேர்தலா? என்பது அதிகம் குழப்பங்களையே ஏற்படுத்தியது. என்னுடைய கடந்த கால யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய செயற்பாட்டு அனுபவங்களில் தேர்தல் காலத்தில் உயர்ந்தபட்சம் வார்த்தை போர்களே காணப்பட்டிருந்தது.
‘நாங்கள் முன்னேற இடமுண்டு’ இக்கூற்று மாணவர் ஒன்றிய தேர்தல் அனுபவத்திற்கு பொருத்தமில்லை. ஆனா மாணவர் குழுக்களின் செயற்பாட்டில் புரிந்து கொண்டேன்.
என் புரிதலை தொடர்ந்து பார்ப்போம்…..