இதழ் 76

குழந்தைகள் உலகம் எப்போதும் அழகானது

எல்லோரது கண்களுற்கும் தெரிவது ஒரே உலகம்தான். ஆனால் எல்லாரது உலகமும் ஒன்றல்ல.. ஒருவன் கண்களில் உலகம் அற்புதமானது. இன்னொருவன் கண்களில் உலகம் ஆபத்தானது. பொல்லாதது உலகம் என்பான் ஒருவன். வெறும் பொய் உலகம் என்பான் இன்னொருவன்.

ஆனால் இந்த உலகம் அழகானது என்று சொல்கிற சில கண்கள் இருக்கிறதே, அவை யாருடைய கண்கள் தெரியுமா?

குழந்தைகளது கண்கள்.. ஆம்.. குழந்தைகளின் கண்களில் தான் உலகமும் தன்னை அழகானதாய் காண்கிறது. குழந்தைகளின் கண்களில் தெரிவன யாவும் அழகுதான். அலங்கோலம், அநாகரிகம் ஆபத்து ஆகிய வார்த்தைகள் குழந்தைகளிற்கு தெரியாது. அந்த வார்தைகளின் பின்னுள்ள வன்மங்களும் குழந்தைகளிற்கு தெரியாது.

நாம் கண்டும் அறியாதிருந்த, கவனிக்க தவறிய காட்சிகளை ஒரு குழந்தையின் கண்களினூடு காண்கிற போதுதான் வாழ்வின் அருமையையே பல நேரங்களில் உணரமுடிகிறது.

அட்டைப்படத்தை பாருங்கள்..
ஒரு பெண் குழந்தை.. யாருக்கோ அக்காவாகத்தான் இருக்கும். இந்த அக்காமார்களிற்குத் தான் இந்தப்பழக்கம் உண்டு..

பெரும்பாலும் குழந்தைப்பருவத்தில் சில அக்காமார்களை சந்தித்திருப்போம். அவர்கள் உடனே தான் வளர்ந்தும் இருப்போம். எப்போதும் அந்த அக்காமார்கள் செய்கிற காரியத்தையே கண் வெட்டாமல் ஆவலோடு பார்த்துக் கொண்டிருப்போம். அந்த அக்காமார்களும் அப்படித்தான்- யாராவது குழந்தைகள் தன்னையே உற்றுகவனித்துத்திக் கொண்டிருப்பதை உணர்ந்தே கவனமாக நிதானமாக நளினமாக இரசனையுடன் அந்த காரியங்களை ஆற்றுவார்கள். குழந்தைப்பருவத்தில் இதை விட சிறந்த பொழுதுபோக்கு வேறு இருந்திருக்கிறதா நமக்கு.

மீண்டும் அப்படியொரு குழந்தை மனநிலையில் அந்த அட்டைப்படத்தைப் பாருங்கள்.

குப்பி விளக்கொளியில் கோபுரம் கட்டும் அந்த அக்காவைப் பாருங்கள்… குப்பியின் அருமை நாட்டில் பட்டம் பெற்ற எல்லோருக்கும் தெரிந்திருக்கும். எத்தனை வர்ணங்களில் வகைகளில் விளக்குகளில் ஒளிர்ந்தாலும் ஒற்றை இரவின் குப்பி வெளிச்சம் போதும் உலகை வென்றிடலாம். அந்த வெளிச்சத்தில் கோபுரம் கட்டி அதன் உச்சத்தை உற்றுநோக்கிக் கொண்டிருக்கும் இந்தப் பெண் குழந்தையை நினைத்துப் பாருங்கள்.

ஒரு தேசத்தின் சொத்து களஞ்சியங்களில் இல்லை – அவை பள்ளிக்கூடங்களில் உள்ளது. குழந்தைகளே எம் முதல் சொத்து. உலகத்தில் மிகச்சிறந்த நாடு எதுவென்றால், சிறுவர்கள் மிகவும் பாதுகாப்போடு வளரக்கூடிய சூழலை எந்த ஒரு நாடு கொண்டிருக்கிறதோ அதுதான்.

எம் அரும்பெருஞ் சொத்தை பராமரிக்க தவறி வேகநடையில் ஓடும் எம் வாழ்வில் நாம் எதனை வென்று காட்டப்போகிறோம் என்பதுதான் விளங்கவில்லை.

சிறுவர்கள் தினமாய் வருகின்ற இன்றைய நாளில் நாம் எல்லோரும் கொள்ள வேண்டிய உறுதியில் இதுவே முதன்மைபெற வேண்டும்.

எம் அடுத்த தலைமுறையை – நாம் விட்டுச் செல்லும் அத்தனையையும் கொண்டு நடத்தப்போகும் இன்றைய சிறார்களை வழி நடத்தும் பணியில் நாம் எல்லோரும் இறங்க வேண்டும். என் குடும்பம் என் குழந்தை என்றல்ல. வீதியில், பேருந்தில், பள்ளியில் , ஆலயத்தில் எங்கெல்லாம் சிறார்களை காண்கிறோமே அவர்களின் எதிர்காலம் குறித்த பொறுப்பு நம்மிடமும் உள்ளதை உணருங்கள். அவர்களை வழிநடத்துங்கள்..

பேருந்தில் ஏறும் கர்ப்பிணிப் பெண்ணிற்கு இடந்தர துணிவது பரிதாபத்தால் அல்ல. அது எம் அடுத்த தலைமுறையை சுமந்து வரும் பெண்ணிற்கு செய்கிற மரியாதை நிமித்தமே ஆகும்.

அடுத்த தலைமுறையை அனைவரும் பொறுப்பெடுத்து வழி நடத்த வேண்டியதன் கட்டாயத்தை உணருங்கள்.

எங்கோ ஒரு பிள்ளை தற்கொலை செய்து கொள்கிறது என்ற செய்தி கேட்டு உங்களால் நகரமுடிகிறதா? பரீட்சை பெறுபேறின்றியோ, அல்லது என்ன காரணத்திக்கோ ஒரு பிஞ்சுஉயிர் தன்னையே அழிக்க துணிகிறது என்றால் சொல்லுங்கள்.. அதற்கு நீங்கள் கரணமில்லையே.. நீங்கள்- நான் எல்லோருமே காரணம்தான். நாம் இருக்கும் சூழலில் அப்படியொரு அவலம் நிகழாது என்று உறுதி எடுங்கள்.

மாறாக இறந்து விட்ட குழந்தைகள் பற்றி வாய்க்கு வந்த கதை அளக்காதீர்கள். பெற்றவர் உள்ளம் வேறு மற்றவர் உள்ளம் வேறு என்பதை உணர்ந்து பேசுங்கள். காலச்சக்கர சுழற்சியில் எதுவும் எங்கும் யார்வீட்டிலும் நிகழலாம். பொறுப்புள்ள தலைமுறையாய் எம் அடுத்த தலைமுறையை வழி நடத்தும் பணியில் இன்றே இறங்குகள்.

இதுவரை செய்து வந்தால் பெரிய நன்றி. செய்யவில்லை என்றால் இன்றே தொடங்குங்கள்.
‘இந்தங்கால பிள்ளையள் சொன்னா எங்க கேக்குதுகள்?’ இந்த பயனற்ற சோம்பல் வார்த்தைகளை இன்றோடு விடுங்கள். நீங்கள் சொன்னீர்களா? சொல்லிப்பாருங்கள் .. கேட்பார்கள்…

“குழந்தைகளோடு சேர்ந்து விளையாடினால், அவர்களை எப்படியும் திருப்பலாம்” என்பது ஒரு ஜெர்மனிய பழமொழி. முயற்சி செய்வோம். கடமை உணர்ந்து.

இனி இந்த உலகல் சிறுவர்களிற்கு துஷ்பிரயோகமோ, துர்மரணமோ என்று எந்த அவலமும் நிகழ கூடாது. சின்னஞ் சிறுவர்கள் தற்கொலை செய்து கொள்கிற செய்தி இனி செவிகளில் விழக்கூடாது.

தூய கண்களால் உலகம் அழகானது என்று நம்பிக்கையின் சுடரை அண்ணாந்து பார்க்கும் அந்தக்குழந்தையின் கண்களில் தெரியும் அழகை உண்மையாக்குங்கள். நிரந்தரமாக்குங்கள். உலகின் அழுக்குகள் எம் தலைமுறையோடு போகட்டும். நீங்கள் நாங்கள் என எல்லோரும் இருக்கும் இடத்தில் இனி குழந்தைகள் வளமாய் வளர்வார்கள் .

கிழவர்களும் குழந்தைகளும் இல்லாத வீட்டில் வேடிக்கையும் கலகலப்பும் இருக்கமாட்டாது. வீடுகள் யாவும் இன்ப மயமாய் இருக்க முதியோர் மற்றும் சிறுவர் தின வாழ்த்துகள்.

Related posts

மனதை அறிந்து கொள்வோம்

Thumi202121

வினோத உலகம் – 39

Thumi202121

என் கால்கள் வழியே… – 09

Thumi202121

Leave a Comment