தமிழ் பண்பாடு என்பது ஆயிரக்கணக்கான ஆண்டுகளின் வரலாற்றை தன்னுள் கொண்ட ஒரு மாபெரும் மரம். இந்த மரத்தின் வேர்கள் நம் முன்னோர்களின் வாழ்க்கை முறைகளிலும், பழக்கவழக்கங்களிலும் ஆழமாக பின்னிப்பிணைந்துள்ளன. ஆனால் இன்றைய நவீன உலகில், இந்த பாரம்பரிய மரம் பல கிளைகளை இழந்து வருவது வேதனை தருகிறது.
குறிப்பாக, இளைய தலைமுறையினருக்கு நம் பண்பாட்டின் சாராம்சத்தை உணர்த்துவதில் நாம் தவறிவிடுகிறோம். தமிழ் பண்பாட்டு விழாக்கள் என்பவை இதற்கான ஒரு சிறந்த வாய்ப்பு. ஆனால், இந்த விழாக்கள் வெறும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளாகவும் சமூக வலைத்தள காட்சிக்குரியதாகவும் மட்டுமே இருக்காமல், நம் பண்பாட்டின் மதிப்புகளையும், விழுமியங்களையும் எடுத்துரைக்கும் வகையில் அமைவதோடு எதிர்காலத்தினருக்கு உரிய வகையில் கடத்துமாறும் அமைதல் வேண்டும்.
எம்மவர் மத்தியில் இருந்த பல பண்பாட்டு விழுமியங்கள் இன்று வழக்கொழிந்து வருவது கவலைக்குரியது. நாகரீகத்தின் பேரில் பல முறைகளை இன்றைய தலைமுறை கைவிடும் அபாயம் காணப்படுகிறது. தரையில் பந்திப்பாய் விரித்து பத்மாசனத்தில் அமர்ந்து பந்தியில் உண்ணும் முறை என்பது வெறும் உணவுப் பழக்கம் மட்டுமல்ல. இது நம் முன்னோர்களின் சமூக உணர்வையும், பகிர்வின் தத்துவத்தையும் பிரதிபலிக்கிறது. பந்தியில் உண்ணும் போது, மக்கள் ஒன்றாக அமர்ந்து உணவு உட்கொள்வதால், அவர்களுக்குள் நல்லுறவு மேம்படுகிறது. மேலும், வாழை இலை என்பது நம் பண்பாட்டின் அடையாளங்களில் ஒன்று. வாழையிலையில் எப்படி உணவு பரிமாற வேண்டும் என்று சித்த மருத்துவத்திலேயே விரிவாக தரப்பட்டுள்ளதாம். வாழை இலையில் உண்ணும் போது, உணவு சுவையாக இருப்பதோடு மட்டுமல்லாமல், இயற்கையான வாசனை உணவுடன் கலந்து நம் உடலுக்கு நன்மை பயக்கும். ஆரோக்கியம் நிறைந்தது. நீரை தெளித்து வாழை இலையை கழுவி, அதன் மேல் நெய்யை தடவி, இலையில் சூடான உணவுகளை வைக்கும் போது, இலையில் சத்துக்களெல்லாம் குளோரோபில்லுடன் கரைந்து, உணவுடன் கலந்து விடுகின்றன. இதெல்லாம் சேர்ந்துதான் நமக்கும் ஆயுளை கூட்டுகிறது. சூடான சாப்பாட்டை வாழை இலையில் பரிமாறும்போது அந்த சூட்டில் இலை லேசாக வெந்து இலையின் பச்சையத்தில் உள்ள பாலிபீனால் சாப்பாட்டில் கலந்து விடும். இதன் மூலம் அதில் உள்ள விட்டமின் ஏ, சிட்ரிக் அமிலம், கால்சியம் மற்றும் கரோட்டின் ஆகியவை நமக்குக் கிடைக்கின்றன. வாழை இலையில் சாப்பிடுவதால், இளநரை வராமல் நீண்டநாட்கள் தலைமுடி கருப்பாக இருக்கும். மேலும், வாழை இலை உயிர்ப்பொருள் சிதைவுக்கு உட்படும் என்பதால், சுற்றுச்சூழலுக்கும் நன்மை பயக்கும்.
பாயாசம் என்பது நம் உணவுகளில் இன்றியமையாத ஒரு உணவு. வாழையிலையில் போடப்பட்ட உணவு உண்டு முடித்த பின்னர் பாயாசத்தை வாழை இலையில் போட்டு கைகளால் எடுத்து உண்ணும் வழக்கம் நம் முன்னோர்களின் பண்பாட்டின் ஒரு அங்கமாகும். ஆரோக்கியம் நிறைந்த இந்த முறையை இன்று விருந்துகளில் காண்பது அரிதாகி விட்டது. பிளாஸ்ரிக் கோப்பைகளில் பாயாசம் கரண்டியால் குடிப்பது நாகரீகமாகி சுற்றாடல் மாசடைவுகளுக்கும் காரணமாகிறது.
கொஞ்சம் யோசித்துப்பாருங்கள். இன்று ஆயிரம் பேருக்கு விருந்து வைக்கிறீர்கள் என்றால் எவ்வளவு பொலித்தீன் கடதாசி, பிளாஸ்டிக் குடிநீர் போத்தல், பிளாஸ்டிக் கோப்பைகள் என்பவற்றை இந்த சுற்றாடலுக்கு மாசாக்குகிறோம். இப்படி எத்தனை விருந்துகள் தினந்தோறும் நடக்கின்றன? சுற்றாடலுக்கு எந்த வித தீங்கும் விளைவிக்காத ஆரோக்கியமான விருந்தோம்பலை கொண்ட நாங்கள் ஏன் இந்த மாற்றத்தை ஏற்றுக் கொண்டோம் என்பது ஆச்சரியங்களின் உச்சம்!
வீடுகளில் சிறு நிகழ்வுகளிலாவது அல்லது பண்டிகைகளிலாவது எல்லோரையும் தரையில் இருத்தி வாழை இலையில் பாயாசம் வடையோடு உணவு பரிமாறுங்கள். மாதத்தில் ஒரு தடவையாவது உங்கள் பிள்ளைகள் எமது பாரம்பரிய முறையில் உணவு உண்ண வழிவகை செய்யுங்கள். ஆரோக்கியமும், உயர் விழுமியங்களும், சுற்றாடலுக்கு நன்மை தருவதுமான வாழையிலையில் உணவு உண்ணும் பழக்கத்தை அடுத்த தலைமுறைக்கு அறியச் செய்யுங்கள்.