இலங்கை மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையில் நடைபெற்ற ஒருநாள் தொடர், இலங்கை அணியின் திறமையையும் வளர்ச்சியையும் வெளிப்படுத்தியது. தொடரின் முதல் போட்டியிலேயே இலங்கை அணி கடினமான நிலைமையில் இருந்து மீண்டு, ஆஸ்திரேலியாவை தோற்கடித்து சிறந்த தொடக்கத்தை ஏற்படுத்தியது.
முதலாவது போட்டியில், இலங்கை அணியின் டாப் ஆர்டர் தோல்வியடைந்தபோதும், கேப்டன் சரித் அசலங்கா தனியாக போராடி 126 பந்துகளில் 127 ரன்கள் எடுத்து அணியை 214 ரன்னுக்கு கொண்டு சென்றார். இந்த இலக்கை நோக்கி விளையாடிய ஆஸ்திரேலியாவை இலங்கை பந்துவீச்சாளர்கள் கட்டுப்படுத்தினர். அஷிதா பெர்னாடோ தொடக்கத்திலேயே அதிரடியாக இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றி ஆஸ்திரேலிய அணிக்கு அதிர்ச்சி அளித்தார். பின்னர், தீக்சனா தனது சூழ்ச்சியான ஸ்பின்னால் 4 விக்கெட்டுகள் வீழ்த்தி ஆஸ்திரேலிய அணியை 165 ரன்களுக்கு சுருண்டார்.

இரண்டாவது போட்டியில், இலங்கை அணி சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தியது. குசால் மெண்டிஸ் 101 ரன்கள், கேப்டன் அசலங்கா 78* ரன்கள் எடுத்து, இலங்கை 281 ரன்கள் என்ற வலுவான இலக்கை நிர்ணயித்தது. பந்துவீச்சில் வெல்லாலகே 4 விக்கெட்டுகள் மற்றும் அஷிதா பெர்னாடோ 3 விக்கெட்டுகளை வீழ்த்தியதால், ஆஸ்திரேலியா வெறும் 107 ரன்னில் அகப்பட்டு 174 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
இந்த தொடரின் வெற்றிகள் இலங்கை அணிக்கு முக்கியமான முன்னேற்றத்தை அளிக்கின்றன. அணியின் தன்னம்பிக்கை அதிகரிக்க, வீரர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்த, மற்றும் சரியான பயிற்சி முறையை பின்பற்றுவதற்கான வாய்ப்புகளை உருவாக்கியுள்ளது. குறிப்பாக, தமது சொந்த மண்ணில் விளையாடும் அணிகளுக்கு சாதகமான பீச்சுகளை உருவாக்குவது தவறாகக் கருதப்படக்கூடாது. இதுவே ஒரு அணிக்கு வெற்றியளித்து, அவர்களது திறமையை வெளிநாடுகளிலும் பயன்படுத்துவதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தும்.

இலங்கை அணியில் தற்போது பல்வேறு திறமையான பந்து வீச்சாளர்கள் உள்ளனர். வேகப்பந்து மற்றும் ஸ்பின் சமநிலையில் இருப்பதால் எதிர்பார்க்கும் விதத்தில் எதிரணி அணிகளை அழுத்தமளிக்க முடிகிறது. அணியின் வெற்றி கலாச்சாரம் தொடர்ந்து வளர்ந்தால், எதிர்காலத்தில் வெளிநாடுகளில் கூட நல்ல விளையாட்டை வெளிப்படுத்த முடியும்.
இந்த தொடரின் முடிவுகள், இலங்கை அணியின் வளர்ச்சியையும், சரியான திசையில் பயணிப்பதையும் உறுதிப்படுத்துகின்றன. அணியின் ஒற்றுமை மற்றும் புதிய வீரர்களின் திறமை வெளிப்படுவதை தொடர்ந்து, இலங்கை கிரிக்கெட் மீண்டும் தனது பழைய மகிமையை பெறும் என்பதில் சந்தேகம் இல்லை.