இதழ் 20

ஆசிரியர் பதிவு

தெரியாதவற்றை தெரியப்படுத்தும் ஆசானாக இன்று இணையம் இருக்கிறது. உண்மையோ, பொய்யோ நாம் தேடுகின்ற தகவல் சம்பந்தமாக தன்னிடமுள்ளவற்றை எல்லாம் எம்முன் கொட்டி விடுகிறது இணையம். அவற்றுக்குள் நம்பகத்தன்மை நிறைந்த வலைத்தளங்களின் தகவல்களை மட்டும் தெரிந்தெடுக்க வேண்டியது எங்கள் பொறுப்பு. ஆனால் பலர் அவற்றில் முதற் தெரிவுகளாக காட்டுகின்ற சில தகவல்களோடு தங்கள் தேடலை நிறுத்திக் கொள்கிறார்கள். எனவே தவறான தகவல்களோடு தேடல் முடித்துக்கொள்ளப்படுவதற்கான சந்தர்ப்பம் அதிகம்.

இன்று இணையத்தில் கர்ணன் என்று தேடினால் அண்மையில் வெளியாகவுள்ள ஒரு புது திரைப்படம் சார்ந்த தகவல்களும், படங்களும்தான் நிரம்பி வழிகிறது. மகாபாரத கர்ணன் மறைந்து கொண்டிருக்கின்றான். எங்களில் பலருக்கும் கர்ணனை அறிமுகம் செய்து வைத்ததே சினிமாதான் என்பதையும் மறுக்க முடியாது. ஆனால் இன்று அதே சினிமா கர்ணனை மறைக்கப்பார்க்கிறது.

இணையத்தோடு தங்கள் தேடலை நிறுத்திக்கொள்பவர்கள் அதிகரித்து வருகிறார்கள். மேலோட்டமாக தேடினால் அவர்களுக்கு மகாபாரத கர்ணன் கிடைக்கவே மாட்டான். இது ஒரு பாரதூரமான விடயம். ரோமியோ ஜூலியட் கதாப்பாத்திரங்களை நாங்கள் கேள்விப்பட்டது போல எங்களின் கதாப்பாத்திரங்களை கேள்விப்படும் ஒரு பிறமொழிக்காரன் ஆர்வ மிகுதியில் அக்கதாப்பாத்திரத்தேயோ, அல்லது ஒரு வரலாற்று நாயகனையோ இணையத்தில் தேடும் போது அந்த பெயர் சார்ந்த திரைப்படம் அவனை திசை திருப்பினால் அது எவ்வளவு அபத்தம்! ராஜராஜ சோழனை கடாரம் கொண்டான் என்றும் அழைப்பார்கள். இதை அரைகுறையாக கேள்விப்பட்ட ஒரு அன்னிய மொழிக்காரனுக்கு அண்மையில் வெளிவந்த விக்ரமின் கடாரம் கொண்டான் திரைப்படத்தை இணையம் அறிமுகம் செய்து வைத்தால் எப்படி இருக்கும்?

சினிமா என்பது இன்று தவிர்க்க முடியாத சக்தி வாய்ந்த ஊடகமாக இருக்கிறது. கட்டபொம்மன், கர்ணன், அம்பிகாபதி, அர்ஜூனன், அகத்தியர், போதி தர்மர் என வரலாற்று மற்றும் இதிகாச நாயகர்களை காலமுள்ளவரை நிலைக்கச் செய்திருக்கிறது இந்த சினிமா. இவர்களை எம்மில் பலருக்கு அறிமுகம் செய்து வைத்தது கூட இந்த சினிமா தான்.

திரைக்கதைக்கு நேரடி சம்பந்தம் இல்லாத போது இலக்கியம், வரலாறு சார்ந்த பெயர்களை திரைப்படத்தின் பெயர்களாக வைக்காதீர்கள். இது நீங்கள் தமிழுக்கும் தமிழருக்கும் செய்யும் மிகப்பெரிய உதவியாக இருக்கும்.

இருநூற்றி நாற்பத்தேழு எழுத்துக்களை கொண்ட ஒரு மொழியில் சொற்களுக்கா பஞ்சம்.

Related posts

மந்திர மெஸ்ஸி – 6

Thumi2021

ஒரு துண்டுப் பலாக்காய் – சிறுகதை

Thumi2021

வழுக்கியாறு – 14

Thumi2021

Leave a Comment