
பெண்ணே..
மீசைகளெல்லாம் பாரதியுமில்லை
தாடிகள் எல்லாம் தாகூரும் இல்லை
அதுபோல
ஆண்கள் எல்லாம் உன்னை
அடக்குபவர்களும் இல்லை…
ஆள்பவர்களும் இல்லை…
ஒரு பானைக்கு
ஒரு சோறு பதமில்லை..
ஆணாக நான் அனுபவிக்க
ஆயிரம் உண்டு உலகினில் என்றால்
பெண்ணாக நீ அனுபவிக்குவும்
அதே ஆயிரம் உண்டு!
சமத்துவம் என்பது
கொடுப்பதல்ல! பகிர்வது!
இன்பங்கள் பகிர்வோம் வா!
துன்பங்கள் பகிர்வோம் வா!
வாழ்க்கையை பகிர்வோம் வா!
உலகத்தை பகிர்வோம் வா!
இனியவன்
கற்பனைச்சிறகுகளில் மட்டும் பறந்தவள்
விற்பனைப்பொருளாய் மட்டும் பார்க்கப்பட்டவள்
பறக்கிறாள்…
நிஜமாக பறக்கிறாள்…
சமூகத்தின் போலிக் கட்டுக்களை
உடைத்து உயரப் பறக்கிறாள்…
எங்கிருந்தோ ஒருவன்
அங்கே அவள் பறப்பதை தடுக்கிறான்..
அருகிலிருந்த ஒருவன்
அந்த தடையை தகர்க்கிறான்..
இன்னும் உயரமாக அவள்
இப்போது பறந்து கொண்டிருக்கிறாள்…
கண்ணம்மா
கல்விக்கல்ல கலவிக்கே பெண்கள் என்ற
இறுமாப்பைக் கொஞ்சம் தளர்த்து விடுங்கள்.
உங்கள் உயிரைக் காக்கும் மருத்துவராகலாம்.
பெண் கடவுள் கையில் உள்ள
ஆயுதத்தையும் சுவடிகளையும்
பெண்களிடமும் கொடுங்கள்.
உங்கள் பாதுகாப்பை உறுதி செய்யலாம்.
செவ்வாய் தோசத்தால் கட்டிப் போடப்பட்டப்
பெண்களை அவிழ்த்து விட்டால் ஒருவேளை
செவ்வாய் கிரகத்துக்கே கருவி அனுப்பி
தோசத்தைத் துடைக்க முயற்சி செய்யலாம்.
சந்திரனார்
உலகமே,
உன் காலடியில் இருக்க விரும்புகிறேன்
சிறைக்கைதியாக அல்ல
சிறகடிக்கும் தேவதையாக!
கனவு எனும் சுமையை
சாதனைச் சுவராக்க
சிறகடிக்கிறேன்.
கயவனே,
சிந்தை மயங்கி என்னை
சீரழிக்க நினைத்தால்…
சீறி எழுவேன்
சினம் கொண்ட தேவதையாய்!
சிறிது சிந்திப்பாயாக,
இவளும் உன் சகோதரியே!
இவள் வரைபி
ராமனின் சீதை
நளனின் தமயந்தி
கோவலனின் கண்ணகி
சத்தியவானின் சாவித்திரி
ராவணனின் மண்டோதரி
பாண்டவர்களின் பாஞ்சாலி
அம்பிகாபதியின் அமராவதி
இவர்களோடு…
அவனின் அவள்!
திருமதி……………
மொழியருவி
வீடுகளுக்குள்ளேயே அடக்கப்பட்டு ஒடுக்கப்பட்ட பெண்கள் சுதந்திரம் கேட்டார்கள். கொடுக்கப்பட்டதாக சொல்லப்பட்டது. கற்க அனுமதிக்கப்பட்டது. வேலைக்கு செல்ல அனுமதிக்கப்பட்டது. ஆடைகளில் கலாசாரக் கேள்விகளுடனேயே அனுமதி வழங்கப்பட்டது.
கொடுமையிலும் கொடுமை தெரியுமா?
சமமாக வாழ வேண்டிய சக உயிருக்கு சுதந்திரம் கொடுக்க நீங்கள் யார்? அர்த்தநாரீசுவரரை வணங்குகிறீர்கள். ஆனால் அது சொல்லும் தத்துவத்தை தரையில் போட்டல்லவா மிதிக்கிறீர்கள்.
வழங்கியதாக சொல்லப்பட்ட சுதந்திரமாவது பூரணமாக வழங்கப்பட்டதா?
வீட்டுக்குள்ளேயே சிறை வைக்கப்பட்டவளை உலகமெங்கும் உலவித்திரிய விட்டு சிறை வைத்திருக்கிறீர்கள்.
சசி
