இதழ்-34

சித்திராங்கதா – 33

‘இறந்தகாலத்தின் பெருமை குறித்து நாம் மார்தட்டிக் கொண்டிருந்தாலும், அந்தப் பெருமைகள் இறந்தகாலத்தோடே நின்றுவிடுமாயின் அது அந்த இனத்தின் – இராச்சியத்தின் மலட்டுத்தன்மையை காட்டி நிற்கிறதல்லவா? பொறுப்பற்ற காரியங்கள் நாம் இனியும் ஆற்ற நேர்ந்தால் வருங்காலம் எமை வசைபாடித் தீர்க்கும் என்பதை நாம் மறத்தல் கூடாது. இது குறித்து வன்னியர்களுடன் நான் உரையாடவே இவ்வன்னியர் விழா திடீர் ஏற்பாட்டை மேற்கொண்டிருந்தேன். கூடி நிற்கின்ற இந்தப் பெருங் கூட்டம் போல எம் கொள்கைகளும் கூடி நிமிர்ந்தால் வீண் கவலைகள் விடுத்து வெற்றிக் கனியை நாம் எட்டிப்பறிக்க இன்னும் அதிகவேளை பொறுத்திருக்க வேண்டியதில்லை வேந்தர்களே!
தக்க வளமும் தஞ்சை சேர் திட வீரப் படையும் துணையிருக்கையில் நாம் இனித் தாமதிக்க தருணமில்லை. அது குறித்த ஆலோசனை கூட்டத்திற்கே தங்களை அவசரமாக அழைக்க நேர்ந்தது. இராஜ விருந்து நிறைவுற்றதும் வன்னி வேந்தர்களை தனியாலோசனை கூடத்தில் சந்திக்கிறேன்’
என்று கூறி வணங்கிய கரங்களோடு அவையிலிருந்து விடைபெற்றார் மாமன்னர் சங்கிலிய மகாராஜா.

வந்திருந்த விருந்தினர் அனைவருக்கும் ராஜவிருந்து வழங்கப்பட்டது. தொடர்ந்து வன்னி வேந்தர்கள், மந்திரி ஏகாம்பரனார், மகிழாந்தகன் இவர்களுடன் வருணகுலத்தானும் தனியாலோசனை கூடத்தில் அமர்ந்திருந்தான். சங்கிலிய மகாராஜா அவ்விடம் வந்து அமர்ந்தார்.

‘வன்னி வேந்தர்கட்கு மீண்டும் என் வணக்கம். இத்தனியாலோசனையின் நோக்கம் எதுவென்று இப்போது வன்னி வேந்தர்கள் அறிந்திருப்பர் என்று நம்புகிறேன். பறங்கியனது நயவஞ்சகத்திட்டங்கள் எல்லை மீறிப் போகின்றன. நம் பொறுமைக்கும் எல்லை காண வேண்டிய வேளை வந்துவிட்டது. தஞ்சையிலிருந்து மாவீரர் படையணியினர் வந்து கோப்பாய் அரச மாளிகையில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பறங்கியனை எதிர்த்து நிற்க நாம் இனி தாமதிக்க வேண்டிய அவசியமில்லை. அதேநேரம் இந்த முன்னெடுப்பு வேளையில் தமிழ் மண்ணின் நல்வேந்தர்கள் அனைவரினதும் எண்ணம் குறித்து அறியும் அவசியமும் நான் உணர்கிறேன்’

மன்னரின் வார்த்தைகளை பொறுமையுடன் கேட்டுக்கொண்டிருந்த அவையில் மூத்தவரான திருமலை பூபால வன்னியர் பேசத்தொடங்கினார்.

‘மாமன்னரே, இதில் எமது நிலைப்பாடு மாத்திரம் எங்ஙனம் வேறுபடப்போகிறது? எம் இராச்சியத்தை நிலைநிறுத்த நாம் பறங்கியனை வென்றாக வேண்டியது காலத்தின் அவசியமாகும். அதற்கான முயற்சியில் முழுதாய் திருமலை வன்னிமை துணைநிற்கும் என்பதில் மாமன்னருக்கு ஐயம் வேண்டாம்’

‘அறிவாற்றலிலும் அனுபவத்திலும் மூத்தவரான திருமலை பூபால வன்னியர் மீது நான் எப்போதாவது ஐயங் கொண்டதாய் உண்டா? சபையில் தங்கள் கருத்தை பகிரங்கப்படுத்தவே கோரினேன். தங்கள் மீதான நம்பிக்கை என் உடல் அழிந்தாலும் அழியாது வேந்தரே’ என்று இணக்கமான குரலில் பூபால வன்னியரை நோக்கி கூறினான் சங்கிலியன்.

தொடர்ந்து புத்தளத்து ராஜவன்னியர்களை நோக்கினார் மன்னர்.

‘எங்கள் கருத்தும் பூபால வன்னியரின் நிலைப்பாடுதான் வேந்தே, பறங்கியனை போராடி சாய்க்கவேண்டியது தவிர்க்கப்படமுடியாததாகும். ராஜவன்னியர்கள் அதற்கு பெருந்துணையாய் உடனிருப்பர்’
என்றார்கள் ராஜவன்னியர்கள்.

சபையில் எல்லா வன்னியர்களும் இதே கருத்தினை கூறிக்கொண்டிருந்தாலும் வன்னியத்தேவன் மாத்திரம் தொடர்ந்தும் அமைதியாகவே இருந்தான்.

மாமன்னன் சங்கிலியன் வன்னியத்தேவனை நோக்கிக் கேட்டான்
‘ வன்னியத் தேவரே, தாங்கள் மட்டும் ஏன் பேரமைதியில் மூழ்கியிருக்கிறீர்கள்? தங்கள் நிலைப்பாட்டையும் பகிரங்கமாய்க் கூறினால் நன்றாக இருக்குமல்லவா?’

‘அரசே, வன்னி வேந்தர்கள் யாவரினதும் நிலைப்பாட்டிலிருந்து நான் மட்டும் ஏன் மாறுபடப்போகிறேன்? என் நிலைப்பாடும் அதுவே தான் அரசே; பறங்கியர்களை சாய்த்துத்தான் ஆகவேண்டும். இல்லாவிட்டால் நாமெல்லாம் அடியோடு சாய நேரிடலாம்’

‘நாமெல்லாம் சாய்வதா? அதுவும் அந்நியராலா? என்ன அர்த்தமற்றும் பேசுகிறீர் வன்னியத்தேவரே’ என கோபமாகக் கேட்டார் ராஜவன்னியர் ஒருவர்.

‘கோபம் கொள்ள வேண்டாம் ராஜவன்னியரே, அவ்வாறு நிகழும் என்றா உறுதியாய்க் கூறினேன்? நிகழக்கூடிய அபாயம் இருக்கிறது என்பதை வலியுறுத்தினேன். அவ்வளவுதான். போரென்று புறப்பட முன் இவை குறித்தும் நாம் தெளிவு கொள்ள வேண்டுமல்லவா? பெரும்போரில் சிறு கரணம் தவறினாலும் பேராபத்து எம்மைச் சூழ்ந்து கொள்ளும்’

‘பேராபத்து எம்மை எங்ஙனம் சூழும் வன்னியத்தேவரே? பெரும்படை எம்மிடமிருக்கையில் பேராபத்து என்பது அந்நியன் படையை சூழ்ந்து அவர்களையே அநாதரவாக்கும்’ என்றார் திருமலை பூபால வன்னியர்.

‘பூபால வன்னியர் அவர்களே, போர் என்பது இது போன்ற வாதங்களில் வெல்வதன்று. நிதர்சனத்தை உணர்ந்து கொண்டே போருக்குப் புறப்பட வேண்டும் என்கிற எச்சரிக்கையாகவே கூறினேன். ஏன்? சிங்களக்கோட்டை இராச்சிய வேந்தர்களின் நிலையை அறிவீர்கள் தானே? வர்த்தக வாசல் வழியே பறங்கியனை வரவேற்று பெருலாபம் காணப் பிரயத்தனம் கொண்டனர் சிங்கள வேந்தர். ஆனால் இன்று அவர்கள் இராச்சியமே பறங்கியர் கைவசம் இருக்கிறது. கண்டி மன்னன் கூட இப்போது பறங்கியனிற்கு எதிரான போராட்டத்தில் எமக்குதவ முடியாதென கைவிரித்து விட்டதாய் அறிந்தேன். பறங்கியனை நாம் மட்டும் அவ்வளவு சுலபமாக எண்ணிவிடக்கூடாது வேந்தர்களே’

‘ஆதலால் தாம் கூறவிளைவது என்ன வன்னியத்தேவரே?’
என்று கேட்டான் சங்கிலியன்.

‘அரசே, நான் கூறவிளைவது யாவும் எச்சரிக்கைச் செய்தி மாத்திரமே, கூடுதல் கவனத்தோடு நாம் கருமமாற்ற வேண்டும் என்கிறேன். அன்றி போர் தொடங்குவதை நான் மறுத்துப்பேசவில்லை வேந்தே. போரிட வேண்டியது கட்டாயமானதுதான்.ஆனால் …’
என்று கூறியபடி தயங்கி நின்றான் வன்னியத்தேவன்.

‘ஆனால் என்ன வன்னியத்தேவரே? கூறுங்கள்’ என்றான் சங்கிலியன் மிகுந்த பொறுமையுடன்.

‘பறங்கியரை எதிர்த்துப் போரிட தஞ்சைப்படைகள் தரித்து நிற்கின்றன என்பது மகிழ்ச்சிதான். ஆனால் எம் சேனைப்படைகளையும் நாம் தயார்ப்படுத்த வேண்டியது அவசியமாகுமல்லவா வேந்தே’

‘நிச்சயமாக வன்னியத்தேவரே, சேனாதிபதி மகிழாந்தகன் தலைமையில் நம் சேனாவீரர்கள் தயாராகிக்கொண்டு தான் இருக்கிறார்கள்’

‘நல்லது அரசே, ஆயினும் இவ்வேளை நாம் நமது பெரும் எதிரி பறங்கியனை சரிக்க வேண்டின் திறன் மிக்க நம் வீரர்களை நாம் தயார்படுத்தியாகவேண்டும். ஆகையால் நிகழப்போகும் யுத்தத்திற்கு சிறையிலிருக்கின்ற மாவீரர்களையும் நாம் பயன்படுத்தியாக வேண்டியது அவசியமாகும் வேந்தே’

‘தாம் பேசுவது யாரைப்பற்றி என்று நான் அறிந்து கொள்ளலாமா வன்னியத்தேவரே’ என்று கேட்டான் சங்கிலியன்.

‘வீரத்தில் தலைசிறந்து விளங்கிய நம் கடற்படைத்தளபதி பெரியபிள்ளை ஆராச்சியின் புதல்வன் மிக்கபிள்ளை ஆராச்சியைப்பற்றித்தான் கூறுகிறேன் அரசே’

‘வன்னியத்தேவரே, அந்த மாபாதகனின் விடுதலை பற்றிய எண்ணத்தை அடியோடு அழித்து விடுங்கள். அரச பெண்களை கவர்ந்து சென்ற கோழைப்பிறவியை வீரன் என்று கருதி போருக்கு அனுப்ப வேண்டுமா? அது ஒருபோதும் நிகழாது வன்னியத்தேவரே..’

‘அரசே, மிக்கபிள்ளை உண்மையில் தலைசிறந்த வீரனாவான். சிந்தனை குன்றி இவ்வீனச்செயலை செய்து விட்டான். ஆனால் இப்போது நம் பொது எதிரியை சாய்க்க அவனை உபயோகப்படுத்திக் கொள்வதே உத்தமம் என்று அறிகிறேன் வேந்தே’

சங்கிலியன் முகம் மேலும் கோபங்கொண்டதாய்த் தெரிந்தது.
‘வன்னியத்தேவரே, இந்த சபையில் அறுதியாய்க் கூறுகிறேன். மிக்கபிள்ளை ஒருபோதும் விடுதலை பெற மாட்டான். இதுபற்றி இனி நீர் இயம்பாமல் இருப்பதே தமக்கு உத்தமமாகும்’
கோபத்தில் சுட்டெரிக்கும் வார்த்தைகளை உதிர்த்தான் சங்கிலியன்.

‘ஆனாலும் அரசே…’
என்று வன்னியத்தேவன் தொடங்கையில் பூபாலவன்னியர் வன்னியத்தேவனை தடுத்து நிறுத்துவது போல்
‘வன்னியத்தேவரே, வன்னியர் தம் ஒற்றுமை வேண்டின் மாமன்னர் ஆணைக்கு அடிபணியக் கற்றுக் கொள்ளும்’ என்றார்.

‘மன்னிக்கவேண்டும் அரசே’ என்று தலைகுனிந்தான் வன்னியத்தேவன்.

அதுவரை பொறுமையாயிருந்த மந்திரி ஏகாம்பரனார் இப்போது பேசத்தொடங்கினார்.

‘வன்னி மன்னர்களின் ஒற்றுமையை விரும்பாமல் இருப்பாரா வன்னியத்தேவர்? அதையே பெரும் ஆயுதமாக்கி அரசர்க்கு எதிராய்த் திருப்ப முயன்றவர் அல்லவா வன்னியத்தேவர்? அவர் எங்ஙனம் வன்னி மன்னர்களின் ஒற்றுமையை வேண்டாமல் இருப்பார்? ‘

‘என்ன கூறுகிறீர்கள் மந்திரியாரே?’

‘ஆம் பூபால வன்னியரே, இதேநாள் இவ்விழா நிகழாதிருந்தால் தங்கள் அனைவரும் இப்போது வன்னியத்தேவரது அரசவையில் இருந்திருப்பீர்கள். வன்னியர்கள் அனைவரையும் அழைத்து அரசர்க்கு எதிராய்ச் செயற்பட வியூகம் வகுத்திருப்பார் வன்னியத்தேவர்’

‘அப்படி எவ்வித அழைப்பும் எங்களிற்கு வரவில்லையே மந்திரியாரே’ என்று கேட்டார் ராஜவன்னியனார்.

‘வருவதற்கு முதலே வன்னியர் விழா பற்றிய அழைப்பை நாம் அனுப்ப நேர்ந்துவிட்டதே..’ என்று கூறிச் சிரித்தார் ராஜமந்திரியார்.

அவையிலிருந்த எல்லோருக்கும் வன்னியர் விழாவின் திடீர் ஏற்பாட்டுக்கான காரணம் இப்போது தான் முழுதாய்ப் புரிந்தது. வருணகுலத்தானிற்கும் இப்போதுதான் தெளிவு கிடைத்தது. சித்திராங்கதாவின் அரங்கேற்றத்தை அரசர் அவசரமாக தடுத்து நிறுத்தியதற்கான காரணமும் இப்போதுதான் புரிந்தது. ஆனால் இவை பற்றி எதுவுமறியாத சித்திராங்கதா இவ்வேளை எத்தகைய வேதனையில் மூழ்கியிருப்பாள் என்று எண்ணுகையில் அவன் முகம் மேலும் வாடிப்போனது. ஆனாலும் மந்திரியார் மேற்கொண்ட முடிவு மிகச்சரியானது என்பதை அவனும் இப்போது உணர்ந்திருந்தான். வன்னியத்தேவன் ஏற்பாடு செய்திருந்த அந்தச்சந்திப்பு மாத்திரம் நடந்திருந்தால்- அவன் தன் வாதத்திறமையால் வன்னி வேந்தர்களின் எண்ணத்தை மாற்றியிருந்தால் – தமிழ் வேந்தர்களின் ஒற்றுமை சிதைந்திருந்தால் – நடந்திருக்கக்கூடிய பேரழிவுகளை எண்ணுகையில் சித்திரை முழுநிலவு நாளிலே வன்னியர் விழாவை நிகழ்த்த போராடிய மந்திரியாரது சமயோசித புத்தி குறித்து அவன் தற்சமயம் பெருமிதமாய் உணர்ந்தான்.

அவையிலிருந்த அனைவருமே இப்போது அதனை உணர்ந்து கொண்டனர். தலைகுனிந்திருந்த வன்னியத்தேவன் மெதுவாய்ப் பேசத் தொடங்கினான்.

‘மாமன்னரே, மந்திரியார் என் மீது அபாண்டமாய்ப் பழிபோடும் காரணம் குறித்து நான் அறிந்திலேன். வன்னியர் சந்திப்பொன்றை நான் சித்திரை முழுநிலவு நாளில் திட்டமிட்டிருந்தது உண்மைதான். ஆனால் அது மாமன்னருக்கு எதிரான வியூகம் என்று கூறுவது உண்மையிலேயே அபத்தமாகும் அரசே, பறங்கியரை எதிர்ப்பது குறித்து வன்னியர்தம் ஒற்றுமையை அறிந்து கொள்ளவே நானும் அச்சந்திப்பை நிகழ்த்த திட்டமிட்டிருந்தேன். அதுவே வன்னியர் விழாவாய் நிகழப்போகையில் நான் என் முயற்சியை கைவிட்டேன். ஆனால் மந்திரியார் இவ்வேளை கூறுகின்ற அபத்தவார்க்கைகள் எனக்கு வேதனையளிக்கிறது’ என்று சோகமான குரலில் சொல்லிமுடித்தான் வன்னியத்தேவன்.

சங்கிலியன் வன்னியத்தேவனை நோக்கி
‘நடந்து முடிந்தவற்றை பேசுவதில் பயனில்லை வன்னியத்தேவரே, தங்களது நிலைப்பாட்டை நாம் தெளிவாகவே அறிந்து கொண்டோம். இனி வருத்தம் விடுங்கள்’ என்று லேசான புன்னகையுடன் கூறினான் சங்கிலியன்.

வன்னியத்தேவனும் அமைதியாகவே அதை ஏற்பது போல தலையசைத்தான். அவன் முகம் அமைதியாக இருந்தாலும் உள்ளம் எவ்வளவு கொந்தளித்துக் கொண்டிருக்கிறது என அந்த அவையில் யாரும் அறிந்திருக்க மாட்டார்கள்.

சங்கிலியன் மீண்டும் அவையோரை நோக்கி
‘தமிழ் வேந்தர்கள் தம் ஒற்றுமை தலைப்பட்டு நிற்குமாயின் நாம் பறங்கியன் படையினை பயந்தோடச்செய்வது திண்ணமாகும். அதிக இலாப மோகம் காட்டி கோட்டை இராச்சியத்தையே தன் கைக்குள் கொண்டுவந்து விட்டது ஈழவேந்தர்களுக்கு பேரச்சமூட்டும் என பறங்கியன் எண்ணுவது அவன் மடத்தனம். எம் இராச்சியத்தை நாம் எதற்காகவும் பறங்கியனிடம் விட்டு விட மாட்டோம் என்கிற நம் உறுதி பற்றி அனைவரும் அறியும் வண்ணம் செய்ய வேண்டும். நாமெல்லாம் அதைச் செய்து காட்டுவோம்’ என்று கம்பீரமாய்க் கூறி முடித்தான் சங்கிலியன்.

அவன் கூறியது போல் ஆள்பவர்கள் யாவரும் ஒன்றுபட்டு நின்றால் எம் உரிமை என்பது எவரிடமும் அடிபணிய அவசியமற்றதாகும் என்பதே உண்மையாகும். ஆனால் அதுதான் எக்காலத்திலும் நிகழ்ந்ததில்லையே!

காத்திருங்கள்…

Related posts

வெளியில் வாருங்கள் குழந்தைகளே!

Thumi202121

விழித்து கொள்வோம்!

Thumi202121

Covid-19 நோய்த்தொற்று பரவல் காலப்பகுதியில் வாய் சுகாதாரத்தினை பேணுதல்

Thumi202121

Leave a Comment