இங்கிலாந்து
இறுதியாக நடந்த ரி20 உலக கிண்ணத்தில் இறுதிப் போட்டி வரை முன்னேறி தோல்வி அடைந்த இங்கிலாந்து, தற்போதைய ஒருநாள் சர்வதேசப் போட்டிகளின் சாம்பியன் மற்றும் மட்டுப்படுத்தப்பட்ட போட்டிகளில் மிகவும் பலமான அணியாக திகழ்கிறது. இவர்களின் துடுப்பாட்ட பாணி அதிரடியானது. மற்றைய அணிகளுடன் ஒப்பிடுகையில் இங்கிலாந்து துடுப்பாட்ட வீரர்கள் ரன்கள் எடுக்கும் வேகம் மிக அதிகமாக இருப்பது நேர்மறை, பந்துவீச்சாளர்களின் ரன்கள் கொடுக்கும் வேகமும் அதிகமாக இருப்பது எதிர்மறை.
2010 ரி20 உலகக் கிண்ணத்தில் வென்றதோடு 2016 இறுதிக்கு முன்னேறியது தவிர்த்து மற்றைய ரி20 உலகக் கிண்ண தொடர்களில் அரையிறுதிக்கு முன்னேறியதில்லை.
சகலதுறை வீரர் பென் ஸ்ட்ரோக்ஸ் மற்றும் வேகப் பந்து வீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சர் அணியில் இல்லாமை பின்னடைவாக இருந்தாலும் பலம் பொருந்திய அணியினை அறிவித்துள்ளது இங்கிலாந்து. முன்னணி வீரரான ஜோ ரூட் அணியில் இல்லை; இவருக்கு கடந்த 2019ம் ஆண்டிலிருந்து ரி20 அணியில் இடம் வழங்கப்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது நடைபெறும் ஐபிஎல் போட்டிகள் பின் ரி20 உலக கிண்ணம் என்று போட்டிகள் நடைபெறுகின்ற ஆடுதளங்கள் சுழற்பந்து வீச்சாளர் களுக்கு சாதகமாக இருக்கும் என்று மற்றைய அணிகள் சுழற்பந்து வீச்சுக்கு முன்னுரிமை கொடுக்க இங்கிலாந்து அணியில் அடில் ரசிட் என்ற ஒரேயொரு முதன்மை சுழற்பந்து வீச்சாளரே இடம்பெற்றுள்ளார். அதைவிடுத்து சுழற்பந்து வீசக் கூடிய மொயின் அலி தான் உள்ளார். வேகப்பந்து வீச்சாளர்களில் இடதுகை, ஸ்விங் மற்றும் வேகம் என பலவிதமான வீரர்கள் அணியில் உள்ளமை ரி20க்கு பலம் சேர்க்கும் வகையில் உள்ளது. துடுப்பாட்டத்தில் கலக்க இங்கிலாந்தின் அதிரடி வீரர்கள் இருக்கிறார்கள்.
கடந்த முறை விட்டதை இம்முறை இங்கிலாந்து சாதிக்குமா? என்று பொறுத்திருந்து பார்ப்போம்.
2016 ரி20 உலக கிண்ணத்திற்கு பின்னர் இங்கிலாந்து அணி, மொத்தமாக 50 சர்வதேச ரி20 ஆட்டங்களில் விளையாடி 29 வெற்றி, 19 தோல்வி 1 சமநிலை மற்றும் 1 முடிவற்ற நிலையும் பெற்றுள்ளது. இதுவரை மொத்தமாக 32 ரி20 உலக கிண்ண ஆட்டங்களில் விளையாடிய இங்கிலாந்துக்கு 15 வெற்றி, 16 தோல்வி மற்றும் 1 முடிவற்ற நிலையும் கிடைத்துள்ளது.
ரி20 உலகக் கிண்ணத்தில் இங்கிலாந்து சார்பாக அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள்.
மேற்கிந்தியத் தீவுகள்
ரி20 கிரிக்கெட் க்கென பெயர்போன இவர்கள்; அதிகமாக இருமுனை தொடர்களில் மேற்கிந்தியத் தீவுகளுக்காக பிரகாசிப்பது குறைவு, ஆனால் ரி20 உலகக் கிண்ணத்தில் வாணவேடிக்கை நிகழ்த்துவர்.
2016 ரி20 உலக கிண்ணத்திற்கு பின்னர் மேற்கிந்தியத் தீவுகள் அணி, மொத்தமாக 67 சர்வதேச ரி20 ஆட்டங்களில் விளையாடி 24 வெற்றி, 36 தோல்வி மற்றும் 7 முடிவற்ற நிலையும் பெற்றுள்ளது.
ரி20 உலகக் கிண்ணத்தை இருதடவை வென்ற அணி, இத்தொடரில் இருமுறை அரையிறுதிக்கும் முன்னேறியுள்ளது.
இதுவரை மொத்தமாக 31 ரி20 உலக கிண்ண ஆட்டங்களில் விளையாடிய மேற்கிந்தியத் தீவுகளுக்கு 17 வெற்றி, 12 தோல்வி, 1 சமநிலை மற்றும் 1 முடிவற்ற நிலையும் கிடைத்துள்ளது.
கடந்த 2016 இல் கடைசி ஓவரில் கார்லோஸ் பிராத்வைட் நான்கு சிக்சர் அடிக்க ரி20 உலக கிண்ணத்தை வென்று நடப்பு சாம்பியனாக உள்ள மேற்கிந்தியத் தீவுகள் இம்முறையும் கிண்ணம் வெல்லக்கூடிய பலம் பொருந்திய அணியாக திகழ்கிறது.
துடுப்பாட்டத்தில் மற்றைய அணிகளை துவம்சம் செய்ய கிறிஸ் கெய்ல், கிரான் போலாட், டுவைன் பிராவோ, அன்ரே ரஸ்ஸல் என்ற முன்னணி ரி20 நட்சத்திர வீரர்களுடன் ஹேட்மேயர், நிக்கோலஸ் பூரான், ரோஸ்டன் சேஸ், இவின் லூயிஸ் என்று தரமான இளம் நட்சத்திரங்கள் இருக்கிறார்கள். பந்து வீச்சாளர்களாக ஹைடன் வோல்ஸ் ஜூனியர் (leg spinner), அனுபவ வீரரான ரவி ராம்பால், தோமஸ், பவியன் அலன், மக்கோய் உள்ளனர்; இவர்களுடன் சகலதுறை வீரர்களான ரசல் பிராவோ போலாட் போன்றோரின் பந்து வீச்சும் மேற்கிந்தியத் தீவுகளுக்கு பலம் சேர்க்கும்.
தொடர்ச்சியாக இரண்டாவது முறை மேற்கிந்தியத் தீவுகள் வெல்லுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
மேற்கிந்தியத் தீவுகளுக்காக உலகக் கிண்ணத்தில் அதிக ஓட்டங்கள் எடுத்தவர்கள்.
ஆட்டம் தொடரும்…,