ஈழத்து இலக்கிய வரலாற்றைப் பொறுத்தவரையில் 19ஆம் நூற்றாண்டு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஆண்டாகக் கொள்ளப்படுகின்றது. இக்கால ஆங்கில ஆட்சியானது பல்வேறு வகையிலும் சிறப்பு பொருந்தியதாக அமைந்திருந்தது. இக்கால கட்டத்திலேயே பெருந்தோட்டப் பயிர்செய்கையின் பொருட்டு பல பாகங்களில் இருந்தும் மக்கள் கூலிகளாக வரவழைக்கப்பட்டனர். அவர்களின் கடினமான உழைப்பால் இலங்கை தேசம் வலுவும் வனப்பும் பெற்றது. இவ்வாறு கூலிகளாக அழைத்து வரப்பட்டவர்களே இன்று மலையகச் சமூகம் என்றொரு தனிச் சமூகமாக வாழ்ந்து வருகின்றனர்.
சுமார் இருநூறு ஆண்டுகளாக இம் மக்கள் எதிர்கொண்ட இன்னல்கள் எண்ணிலடங்காதவை. இவர்கள் கூலிகளாக மட்டுமன்றி அடிமைகளாகவும் நடத்தப்பட்ட மையானது மிகப் பெருந்துயரச் சம்பவமாக மட்டுமன்றி இன்று வரை ஆறாத வடுவாக அமைந்திரு க்கின்றது. இவர்களின் உழைப்பால் ஆங்கிலேயர்கள் மட்டுமல்ல இலங்கை நாடும் பல்வேறு நன்மைகளைப் பெற்றது. ஆனால் இலங்கையின் சுதந்திரமானது இவர்களை சுதந் திரமற்றவர்களாக மாற்றியது. அதுவரை காலமும் தன் மொத்த உழைப்பையும் இந்நாட்டுக்காக வழங்கிய இவர்களில் பலர் நாடு கடத்தப்பட்டனர்.
சுதந்திர இலங்கையின் சுதந்திர மற்றவர்களாக ஆக்கப்பட்ட இவர்கள் இரண்டு நாடுகளுக்கு இடையில் பங்கிடப்பட்டனர். 1948ஆம் ஆண்டு 18ஆம் இலக்க குடியுரிமை சட்டம் மலைநாட்டு மக்களின் வாழ்க்கையையே கேள்விக்குட்படுத்தியது. சிறிமா சாஸ்திரி ஒப்பந்தத்தின் விளைவால் இம் மக்கள் பண்டங்களாகக் கருதப்பட்டு இரண்டு நாடுகளுக்கு மிடையே பங்கிடப்பட்டனர். இது இவர்களின் துயர வரலாறு. இதனை ஒரு சரித்திரமாக எங்கும் காண முடியாது.
ஆனாலும் ஈழத்து மலையக இலக்கியங்கள் இவர்களுடைய அடிப்படைப் பிரச்சினைகளைப் பதிவு செய்வதாக அமைந்துள்ளன. மலையக எழுத்தாளர்கள் பலர் மலையக மக்களின் பிரச்சினைகளைத் தங்களது எழுத்துருவின் மூலம் வெளிகாட்டுகின்றனர். மலையக மக்களின் குடியுரிமைப் பிரச்சினை பற்றி பல சிறுகதை எழுத்தாளர்கள் முன்வந்து எழுதியுள்ளார்கள். அவர்களுள் மலையக மக்களின் உணர்வுகளைப் புரிந்து அவர்களின் நிலையினை வெளியுலகிற்கு காட்டும் வகையில் சிறுகதைகளை எழுதுபவராக மு.சிவலிங்கம் காணப்படுகின்றார்.
மு.சிவலிங்கம் சிறுகதை உலகில் தனக்கென ஒரு தனிப்பாதையை வகுத்துக் கொண்டவர். இவர் மலையக மக்களின் பிரச்சினை களைக் கலைப்பாங்குடன் எள்ளலும் எரிச்சலும் ஒருங்கே தோன்றும் வகையில் எழுதியுள்ளார். இவர் தனது சிறுகதைகளில் பல பிரச்சினைகள் பற்றி பேசியுள்ளார். இவற்றுள் மலையக மக்களுடைய குடியுரிமைப் பிரச்சினை பற்றிய ஒரு தெளிவான பார்வையை தனது சிறுகதைகளில் முன்வைத்துள்ளார். அதனால் மனதளவில் மலையக மக்கள் கொண்ட துன்பங்களையும் தனது சிறுகதைகளில் உணர்வு பூர்வமாகப் பதிவு செய்துள்ளார்.
மலையக மக்களின் குடியுரிமை பிரச்சினைப் பற்றி பேசும் இவருடைய சிறுகதைகளாக பேப்பர் பிரஜைகள், மதுரகீதம், ஆயிரத்து தொளாயிரத்து நாற்பத்தெட்டு, ஒப்பாரிக் கோச்சி முதலான சிறுகதைகள் அமைந்துள்ளன. இச்சிறுகதைகளினூடாக மலையக மக்களது குடியுரிமை பிரச்சினை பற்றிய பார்வையினை எவ்வகையில் வழங்கியுள்ளார் என்பது பற்றி நோக்கும் போது ‘மலைகளின் மக்கள்” எனும் தொகுதியில் இடம் பெற்றுள்ள முதலாவது சிறுகதையாக ‘பேப்பர் பிரஜை” என்ற சிறுகதை அமைந்துள்ளது.
1948ஆம் ஆண்டில் பிரஜாவுரிமை மறுக்கப்பட்ட இம் மக்களுக்கு 1957இல் தற்காலிக பிரஜாவுரிமை சான்றிதழ் வழங்கப்பட்டது. இதனை அவர்கள் எந்த நேரமும் கையில் வைத்திருக்க வேண்டும் என பணிக்கப்பட்டிருந்தனர். இதனை தொலைத்தாலோ அல்லது கிழித்தாலோ மீண்டும் வழங்கப்பட மாட்டாது என்ற சட்டமும் பிறப்பிக்கப்பட்டிருந்தது. இந்த தற்காலிக் பிரஜாவுரிமை பத்திரத்தை தொலைத்த ஒரு மலையக சமூகத்தைச் சேர்ந்தவனுக்கு அரசாங்க வேலை இல்லாமல் போகின்றது என்ற கருவினைக் கொண்டு இந்தச் சிறுகதை உருவாக்கப்பட்டுள்ளது.
ஒரு சாதாரண தோட்டத் தொழிலாளியின் மகனான சுப்பையா பெரும் சிரமங்களுக்கு மத்தியில் படித்து ஒரு தொழிலிற்காகக் கொழும்பிற்கு பயணமாகின்றான். இப் பிரஜாயுரிமை என்ற ஒன்றால் ஒரு சமூகத்தின் கனவே கலைக்கப்படுகின்றது.
‘இந்த நாட்டு பிரஜைக்குத்தான் இந்த வேலையை வழங்க முடியும் உங்களை இந்த நாட்டு பிரஜையென்று நிரூபிக்க தகுந்த சான்றுகள் போதாது” என்ற உயர் அதிகாரியின் வார்த்தைகளானது 200 வருடங்களுக்கு மேற்பட்டு வாழும் ஒரு சமூகத்தின் இருப்பையே கேள்விக்கு ள்ளாக்குவதாக அமைகின்றது.
ஒரு நாட்டில் ஐந்து வருடங்கள் தொடர்ச்சியாக வாழ்பவர்களுக்கு அந்த நாட்டின் பிரஜாவுரிமை வழங்கும் போது இத்தனை ஆண்டுகளாக வசிக்கும் இம் மக்களுக்கு பிரஜாவுரிமை வழங்குவதில் இந் நாட்டு அரசாங்கம் சுயநலமாக செயற்பட்டுள்ளமையினை இதனூடாக அறியக் கூடியதாக உள்ளது.
‘நான் ஒரு பேப்பர் பிரஜை, பதிவு பிரஜை இந்த பிரபஞ்சத்திலேயே கடதாசி பிரஜைகள் என மகுடம் சூட்டப்பட்டு அவமானப்படுத்தப்பட்டு கொண்டு இருப்பவர்கள்தான் என் பரம்பரை” என்ற சுப்பையாவின் எண்ணம் ஒட்டு மொத்த மலையகச் சமூகத்தின் குரலாகவே அமைந்துள்ளது. இச் சிறுகதை குடியுரிமைப் பிரச்சினையால் தாழ்த்தப்பட்ட ஒரு சமூகத்தின் முன்னேற்றத்திற்குத் தடை கல்லாக இருப்பதனையும் அதன் விளைவால் அம்மக்களுக்கு ஏற்படும் மன உளைச்சல்களையும் தருவததாக அமைந்துள்ளது.
‘மலைகளின் மக்கள்” என்ற இத்தொகுதியிலே அமைந்த மற்றுமொரு சிறுகதையாக ‘மதுர கீதம்” என்ற சிறுகதை அமைந்துள்ளது. இச்சிறுகதை சிறுவயது முதல் காதலித்து வரும் இரண்டு உள்ளங்கள் இக் குடியுரிமை பிரச்சினை காரணமாகப் பிரிந்து செல்வதனைக் காட்டுவதாக அமைந்துள்ளது. இச் சிறுகதையில் வரும் சீனிக்கும் மாரிகுட்டிக்கும் மங்களப் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுக் கொண்டிருந்தது. இதற்கிடையில் வந்த பிரிவு பற்றி ஆசிரியர் அழகாக எடுத்துக்காட்டுகின்றார்.
‘நாட்டின் குடிமக்கள் என்ற ஒரு உடலை இனத்தாலும் மொழியாலும் பிளவுபடுத்திக் கூறுபோட்டு பங்கு பிரித்துவிட்டது அரசு என்ற ஒரு சக்தி” இதனால் மாரிக்குட்டியின் குடும்பம் இந்தியா செல்ல வேண்டிய நிலை உருவாகியது.
‘சீனி மாமா சீனி மாமாவோ..!
மாரி பொண்ணு என் உயிரே..! “
என்ற இவர்களுடைய வரிகள் கடலின் கொந்தளிப்பை விட மனதின் கொந்தளிப்பு அதிகமானது என்பதைக் காட்டுவதாக அமைந்துள்ளது. இவ் வகையில் இக் குடியுரிமைப் பிரச்சினையால் நினைத்தவரோடு வாழ முடியாமல் மனச்சுமையோடு வாழ வேண்டிய மக்களின் மனநிலையினை எடுத்துக்காட்டியுள்ளார். ஆனால் இறுதியில்
‘ஆத்துக்கு அந்தபுறம் காக்கா.. “
என மாரி பாட அது சீனிக்கு இழவுக் குரலாக இருந்தது. ஆனால் மாரி மனதால் அவனுடன் செல்வதால் அவளுக்கு மதுர கீதமாக இருக்கின்றது.
தொடரும்…