இதழ் 46

யார் இந்த இராவணன்?

இரண்டு ஆண்டுகளுக்கு முன் நகரங்களை வர்ணமயமாக்கும் செயற்திட்டம் ஒன்று முன்னெடுக்க ப்பட்டது. ராவணன் படம் முதன்மை நகர்கள் அத்தனையிலும் வரையப் பட்டிருந்தன. கண்டி சிகிரியா மாத்தறை தம்புள்ளை போன்ற கலாச்சார நகர்களில் ராவணனின் ஓவியங்கள் பெரும்பான்மைச் சுவர்களை அலங்கரித்து இருக்கின்றன .

அதைவிட இருமொழிகளிலும் இராவணன் தொடர்பான தொலைக்காட்சித் தொடர்கள் ஒளிபரப்பப்பட்டு வருகின்றன. இராவண வம்சம் என்று அடையாளப்படுத்தும் பலரை சமூக ஊடக வெளிகளில் காணமுடிகிறது.

தமிழ் மரபில் இராவணன் பற்றிய குறிப்புகளை பலர் கம்பராமாயணம் மூலமே அறிந்து கொண்டிருக்கின்றனர்.அக் காவியத்தின் படி எதிர்நிலை காவியத்தலைவன், இலங்காபுரி ஆண்டவன், அரக்கர் குலத்தவன், சீதையை அபகரித்துச் சென்றவன், பத்து தலை உடைய வீரன், ராமனால் வதம் செய்யப்பட்டவன் என்பனவாகும். சோழர் காலத்தில் எழுந்த பெருங்காபபியத்தில் இவ்வாறு ராவணன் காட்டப்பட்டிருக்க பழந்தமிழ் இலக்கியங்களில் ஆங்காங்கே இராவணன் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன.

சங்க காலத்திலே வாழ்ந்த புலவர்களில் ஒருவர் ஊன்பொதி பசுங்குடையார் இவர் சோழன் செருப்பாழி எறிந்த இளஞ்சேட்சென்னி புகழ்ந்து பாடிய பாடல் ஒன்றில் இராவணன் பற்றிய குறிப்பு காணப்படுகிறது

‘கடுந்தெறல் இராமன் உடன்புணர் சீதையை
வலித்தகை அரக்கன் வெளவிய ஞான்றை
நிலம்சேர் மதர்அணி கண்ட குரங்கின்
செம்முகப் பெருங்கிளை இழைப்பொலிந்து ஆங்கு…….”

இச்செய்யுளில் கையாளப்பட்டுள்ள அணியிலே இராவணன் பற்றிய செய்தி உட் புகுத்தப்பட்டுள்ளது .

ராவணன் சீதையை கவர்ந்து செல்லும்போது சீதை அணிகலன்களை கானகத்தில் எறிந்து சென்றதாகவும் அதைக் கண்டெடுத்த வானரங்கள் முறைதவறி அடைந்ததாகவும் அதைப்போல மன்னன் அளித்த ஆபரணங்களை புலவர் சுற்றத்தார் இடம் தெரியாது அணிந்ததாக குறிப்பிடுகின்றார் .

புலவர் மன்னனின் வீரத்தையும் கொடையையும் பாடுவது பிரதான நோக்காக இருந்தாலும் இராவணன் பற்றிய குறிப்பு ஒன்றைத் தந்து விடுகிறார்.

சங்க காலப் புலவர்கள் வாழ்க்கையை இயற்கையோடு இணைத்து பாடியவர்கள்.
கபிலர் என்ற புலவர் நூறு மலர்களை குறிஞ்சிப்பாட்டில் நினைத்துப் பாடி இருக்கிறார் .

அந்த கபிலர் பாடிய குறிஞ்சித்திணை பாடல் ஒன்றில் இராவணன் கயிலை மலையைப் பெயர்க்க முற்பட்ட செய்தி கூறப்பட்டிருப்பதை காணலாம்

‘இமைய வில் வாங்கிய ஈர்ஞ் சடை அந்தணன்
உமை அமர்ந்து உயர்மலை இருந்தனனாக,
ஐ இரு தலையின் அரக்கர் கோமான்
தொடிப் பொலி தடக் கையின் கீழ் புகுத்து, அம் மலை
எடுக்கல் செல்லாது உழப்பவன் போல”

இந்த அகத்திணைப் பாடலிலே இராவணன் பத்துத் தலைகளை உடையவன் என்ற தொன்மமும் கூறப்பட்டிருப்பதை காணலாம் சங்க இலக்கியங்கள் இரண்டிலும் இராவணன் அசுரனாகவே காட்டப்படுகிறான். சிவன் பெருந் தெய்வமாக மாற்றப்படாத சங்க சூழலிலும் கைலாய மலை பற்றிய செய்தி செவி வழியாக மக்கள் மத்தியில் நிலவி வந்ததை காட்டுகிறது .

இராவணனால் சீதை அபகரித்துச் சென்றதாக மக்கள் மத்தியில் கதையாடல் ஒன்று நிலவி வந்தது என்பதையும் இப்பாடல்கள் காட்டி நிற்கிறது.

பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் சங்கமருவிய காலத்தில் எழுந்தன. தமிழ்ச்சூழலில் பேரிலக்கியம் ஒன்றும் இக்காலத்திலேயே எழுகிறது. பழமொழி நானூறு இக்காலத்தில் எழுந்த அற இலக்கியங்களில் ஒன்று. அறங்களை அடிநிலை மக்களிடம் உட்செலுத்துவதற்கு இந்நூல் இயற்றப்பட்டது என்பர் ஆய்வாளர்கள்.

இந்நூலின் பாடலொன்றில் இராவணன் பற்றிய குறிப்பு மட்டுமன்றி விபீடணன் பற்றிய குறிப்பு ஒன்றும் காணப்படுகிறது. இராமனின் ஆதரவோடு விபீடணன் ஆட்சி பெற்றான் என்கிறது அப்பாடல்

பொலந் தார் இராமன் துணையாகப் போதந்து,
இலங்கைக் கிழவற்கு இளையான், இலங்கைக்கே
பேர்ந்து இறை ஆயதூஉம் பெற்றான்;-பெரியாரைச்
சார்ந்து கெழீஇயிலார் இல்”

-பழமொழி நானூறு

தமிழில் முதல் எழுந்த காப்பியம் சிலப்பதிகாரம். இக்காவியத்தில் திருமால் அவதாரம் பற்றி பேசப்படும் ஆச்சியர் குரவையில் இராவணன் பற்றிய குறிப்பு காணப்படுகிறது. இராமனால் இலங்கை அழிக்கப் பட்டது என்பதை

‘சோ அரணும் போர் மடிய தொல் இலங்கை கட்டழித்த…..”

என்ற அடிகளால் காட்டப் பட்டிருக்கிறது. இலங்கை அழிக்கப்பட்டது என்ற அடிகளால் குறிப்பால் இராவணன் அழிக்கப்பட்டதை குறிக்கின்றது

பக்தி இலக்கியங்களில் இராவணன் பற்றிய செய்திகள் அதிகம் எடுத்தாளப் பட்டிருப்பதை காணலாம். சிவனின் பெருமைகளை எடுத்துக் கூறுவதற்கு இச்செய்திகள் அதிகம் கூறப்படுகிறது .சங்கமருவிய காலத்தில் சிவன் பெருந்தெய்வமாக மாற்றப்படுகிறார். பார்ப்பனிய கலப்பும் தமிழகச் சூழலில் ஏற்படுகிறது .காரைக்கால் அம்மையார் இம் மரபைத் தொடக்கி வைத்தவர் ஆக காணப்படுகிறார் .

திருஞானசம்பந்தர் தனது பதிகங்களில் ராவணன் பற்றிய குறிப்புகளை எட்டாவது பாடலில் வைத்துப் பாடுகிறார்

‘கரையார் கடல்சூழ் இலங்கை மன்னன் கயிலை மலைதன்னை
வரையார் தோளா லெடுக்க முடிகள் நெரித்து மனமொன்றி
உரையார் கீதம் பாட நல்ல வுலப்பி லருள்செய்தார்
திரையார் புனல்சூழ் செல்வ நறையூர் சித்தீச் சரத்தாரே….”

போன்ற பாடல்களை உதாரணமாகக் காட்டலாம்.
சம்பந்தர் பாடல்களில் பெரும் பாலானவற்றில் இராவணன் கயிலை மலையைப் பெயர்க்க முற்பட்டமை, சாமகானம் இசைத்து மந்திரவாள் பெற்றமை போன்ற சம்பவங்கள் பாடப்பட்டுள்ளன.சங்ககாலத்தில் மக்கள் மத்தியில் வழக்கிலிருந்த இக்கதை மரபுகள் பக்தி இலக்கியங்களால் விதந்து போற்றப்பட்டு இக்கதை வடிவங்களுக்கு சிற்ப அங்கீகாரம் கொடுக்கப்பட்டதையும் காண முடிகிறது.

‘கற்றனன் கயிலை தன்னை காண்டலும் அரக்கன் ஓடி
செற்றவன் எடுத்த வாறே சேயிழை அஞ்ச ஈசன்
உற்றிறை ஊன்றா முன்னம் உணர்வழி வகையால் விழுந்தான்
மற்றிறை ஊன்றி னானேல் மறித்துநோக் கில்லை யன்றே.”

போன்ற அப்பரின் தேவாரப் பாடல்களிலும் இராவணன் பற்றிய செய்திகளை காணக்கூடியதாக இருக்கிறது. சிவன் பற்றிய கட்டுமானத்தையும் அவைதீக நெறிகள் செல்வாக்குப் பெற்றிருந்த அக்காலப்பகுதியில் அருட் செயல்களை விதந்து போற்ற வேண்டிய தேவைப்பாடு எழுந்தது. அதனாலே ராவணன் பற்றிய கருத்தாடல்கள் தேவாரப் பதிகங்கள் இடம்பெற்றிருக்கின்றன.

‘தாங்கி இருபது தோளும் தடவரை போங்கு எடுத்தவன் ஒப்பில் பெருவலி அங்கு தெரிந்தது அமரா என்று அழைத்த பின் நீங்கா அருள்செய்தான் நின்மலன் தானே”

என்று திருமூலர் திருமந்திரப் பாடலில் இராவணன் பற்றிய குறிப்பைத் தருகிறார். இராவணனுடைய தோற்றப்பொலிவு அவன் ஆற்றல் இங்கே விவரிக்க பட்டிருப்பதைக் காணலாம்.

இவ்வாறு கம்பராமாயணம் தோன்றுவதற்கு முன்னரான காலப்பகுதியில் எழுந்த இலக்கியங்களில் இராவணன் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன.காப்பிய இலக்கியமாக கம்பன் பாடுவதற்கு முன்னரே ராம கதை மக்கள் மத்தியில் புழக்கத்தில் இருந்து வந்ததை காட்டுகிறது .

ஆழ்வார் பாசுரங்களில் இராமனை புகழ்ந்துரைக்கும் போது இராவணன் பற்றிய செய்திகளை குறிப்பிடுவதைக் காணலாம்.

பழந்தமிழ் இலக்கியங்களில் எதிர்நிலை பாத்திரமாக காட்டப்பட்ட இராவணன் தொடர்பான பார்வை இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் மாற்றமுருவத்தைக் காணலாம் .
திராவிட இனம் பற்றிய கருத்துருவாக்கம் தமிழகச் சூழலில் மேல் எழுந்ததை தொடர்ந்து ஆரிய-திராவிட மோதல்கள் உச்சம் பெறுகிறது. ராமனை ஆரிய இனத்தவனாகவும் இராவணனை திராவிட இனத்தவர் ஆகவும் கருதிய கருத்துநிலை மோதல்கள் ஒரு புதிய போக்கு இலக்கிய உருவாக்கத்திற்கு வழி அமைக்கிறது.

‘பழைய கதைகளையோ அல்லது கதை குறிப்புக்களையும் தொடக்கமாகக் கொண்டு தன் மனோபாவத்திற்கு இயைந்த மாற்றங்களைச் செய்து புதுவது புனைந்தல் மற்றொருவகை” என்கிறார் பேராசிரியர் கைலாசபதி. திராவிட இயக்க செயற்பாட்டாளர்கள் பலரை ஈர்த்த இராவண பாத்திரம் பழங்காலத்திலிருந்தே புழக்கத்தில் இருந்து வருகிறது. மத மயமாக்கப்பட்ட தமிழ் சூழலில் இருந்து வந்த இக்கதை மரபு பின்வந்த ஆழ்வார்களும் நாயன்மார்களும் கொண்டாடப்பட்டிருக்கிறது.

மனுதர்மத்தை கம்பராமாயணம் வலியுறுத்துவதாக எதிர்க்க தொடங்கிய திராவிட இயக்கத்தினர் அக்காவியத்தின் எதிர்நிலை பாத்திரமாகிய ராவணனை முதன்மைப்படுத்த தொடங்குகின்றனர். திராவிட இயக்கக் கவிஞர் பாரதிதாசன் பாடல் ஒன்றிலே

‘தென்திசையை பார்க்கிறேன்
என் சொல்வேன் என்றன்
சிந்தையெல்லாம் தோல்கள் எல்லாம் பூரிக்கு தடா அன்றலர்ந்த கையினை ஆண்ட மறத்தமிழன்
ஐயிரண்டு திசை முகத்துடன் புகழை வைத்தோன்! குன்ற டுக்கும் பிறந்தோம் கொடை கொடுக்கும் கையான்….”

எனப் புகழ்ந்து பாடி இருப்பதை காணலாம் .திராவிட இயக்கத்தினர் கம்பராமாயணத்தை கேள்விக்குட்படுத்தி கவிதைகள், கட்டுரைகள், புனைவுகள் என்று ஓர் எழுத்து நிலைப்படுத்தப்பட்ட போராட்டத்தை முன்னெடுக்கின்றனர்.

எழுத்து அரசியல் ஆக்கப்படுகிறது வால்மீகி ராமாயண சம்பாஷனைகள், ராமாயண குறிப்புகள், ராமாயண பாத்திரங்கள் போன்ற நூல்கள் வெளிவர தொடங்குகிறது .

திராவிட இயக்கத்தினரின் குடியரசு இதழில் ராமனை கேள்விக்குட்படுத்தி தொடர் கட்டுரைகள் வெளிவந்ததை காண முடிகிறது.

இத்தகைய கம்பராமாயண எதிர்ப்புகளால் இராவணன் முதன்மை படுத்தப்பட்டு இராவணன் திராவிட இனத்தவர் என்ற கருத்துநிலை உருவாக்கப்படுகிறது .

தமிழ்ச்சூழலில் மிக நீண்ட காலத்திற்குப் பிறகு காவியம் ஒன்று இராவணனை முதன்மை பத்திரமாக வைத்து இயற்றப்படுகிறது புலவர் குழந்தை அவர்கள் இயற்றிய இராவண காவியம் நான்கு நூற்றாண்டுகள் கழித்து தமிழ்ச் சூழலில் எழுந்த காவிய இலக்கியம்.

அசுரன் போன்ற புனைவுகளும் இராவணனை முதன்மைப்படுத்தி வெளிவந்திருக்கின்றன. இந்த இராவண முதன்மைப்படுத்தலுக்கு தமிழகச் சூழல் திராவிட இயக்கச் செயற்பாடுகள் பெரிதும் காரணமாக அமைந்திருக்கிறது.

ஈழத்தில் எழுந்த சிங்கள இலக்கியங்களிலும் இராவணன் பற்றிய குறிப்புகள் ஆங்காங்கே காணப்படுகிறது. .அண்மைய கட்டுரையொன்றில் என். சரவணன் ‘வன்னி ராஜா வலிய” என்ற நூல் பற்றிய குறிப்பு ஒன்றை தருகிறார். இதில் இராவணன் பற்றிய செய்திகள் காணப்பட்டதாக சில நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளதை மேற்கோளாகக் காட்டுகிறார்.

1940 பின்னரான பகுதியில் இராவணன் பற்றிய நாடக உருவாக்கங்கள் சிங்கள சமூகத்திடையே அதிகரித்து வருகிறது. மேடை நாடகங்கள் தொடக்கம் தற்கால தொலைக்காட்சி நாடகங்கள் வரை இராவண பாத்திரம் முதன்மை இடம் பெற்றிருப்பதை காணலாம்.

தமிழ்ச்சூழலில் அதிலும் குறிப்பாக ஈழத்தில் இராவணனை சித்தர், கடவுள் என்று வழிபடும் மரபு அண்மைக்காலமாக அதிகரித்து வருகிறது. தமிழ் வழிபாடுகள் மீள மெல்லத் துளிர்விட்டு உள்ள சூழலில் இராவணன் முதன்மைப்படுத்த படுகிறார். சிவலிங்கத்தின் கீழான ராவண சிற்பம் பத்து தலைகளைக் கொண்ட ராவணன் சிற்பம் போன்றவை அமைக்கப்பட்டு வழிபட்டு வருவதை காண முடிகிறது

தற்போது ராவணன் யாருக்கானவன் என்ற உரிமைக் குரல்கள் தொடர்ந்து இடம் பெற்று வருகிறது.பாராளுமன்றத்தில்கூட இராவணன் தொடர்பான விவாதங்கள் இடம்பெற்றதை அறிக்கைகள் காட்டி நிற்கிறது. செவி வழியாய் இலக்கிய வழியாய் நிலைநிறுத்தப்பட்ட பாத்திரம் தெய்வ உருவாக்கத்திற்கு உட்படுத்தப்பட்டு யாருக்குடையது என்ற சர்ச்சை களத்தில் நிற்கிறது.

Related posts

கேள்வியின் நாயகனே..

Thumi202121

வினோத உலகம் – 12

Thumi202121

என்னவன் அவன்

Thumi202121

Leave a Comment