இதழ் 52

சித்திராங்கதா – 50

போர் முரசு

விநாசகாலம் யாழ்ப்பாணத்தை சூழ்ந்துவிட்டது. எந்த மகாராஜாவின் ஆணையாலும் அதன் விபரீதங்களை தடுத்த நிறுத்த முடியாது. பத்துத்தலை பாராக்கிரமம் கொண்டிருந்த இராவணேசுவரனின் அழிவு கூட அப்படித்தானே நேர்ந்தது.

பூநகரியில் பாசறையிட்ட போர்த்துக்கேயப்படையணி குடாக் கடலை கடந்து யாழ்ப்பாணத்துள் நுழைய எவரும் ஒரு கட்டுமரம் கூட தந்துதவக்கூடாது என்பது மாமன்னர் சங்கிலியர் இட்ட ஆணை. ஆனால் போர்த்துக்கேய வெள்ளெலிகளின் நுழைவு எப்படியோ யாழ்ப்பாணத்திற்குள் ஆரம்பித்துவிட்டது. பூநகரியின் அதிகாரி வன்னிவேந்தன் வன்னியத் தேவனே அரச கட்டளையை மீறி இதை நடத்தியிருக்க வேண்டும்.

யாழ்ப்பாணத்திற்குள் நுழைந்த பறங்கியர்களின் அன்றாட ஆக்கிரமிப்புக்கள் மக்களிடையே பல புதிய சர்ச்சைகளை உண்டாக்கிக் கொண்டிருந்தன. சங்கிலி மன்னருக்கு எதிரான கலவரங்களின் கோசம் உரக்கத் தொடங்கியது. தெற்கிலிருந்து சிங்கள மக்கள் சிலரை அழைத்து வந்து அந்தக் கோசத்திற்கு வலுச்சேர்த்து தம் நரிப்புத்தி காட்டினர் பறங்கியர்.

தினந்தினம் மக்களிடையே பரபரப்பும், பயமும் பஞ்சமின்றி வளர்ந்து கொண்டிருந்தது.

இனி பொறுப்பதற்கில்லை. போர்முரசு அறையவேண்டிய நேரம் வந்துவிட்டது என்று நல்லூர்க் கோட்டைப் படையினர் ஒருபுறம் முழங்கத்தொடங்கினர்.

ஓர் இருண்ட பொழுதில் முப்படைக்கூடத்தின் முன்னே ஏரியின் அமைதியை அனுபவித்துக் கொண்டு நின்றார் மாமன்னர் சங்கிலியர்.

‘வருந்துவதற்கிடமில்லை வேந்தே, இது பறங்கியர்களிடம் நாம் என்றோ எதிர்பார்த்த ஒன்று தானே”

பின்னே வந்து நின்றான் வருணகுலத்தான்.

‘அவர்கள் நட்புறவு, தர்மம் எல்லாம் இந்தளவே தான். தங்கள் இலக்கையடைய எத்தனை கீழ்த்தரமாகவும் செயலாற்ற வல்லவர்கள் அவர்கள். அவர்களிடம் பரிவு, நியாயம் என எதிர்பார்ப்பது அர்த்தமற்றது வேந்தே, அந்த வெள்ளெலிகளை அடியோடு வெட்டிவீசவேண்டிய நேரம் இது. தங்கள் ஆணைக்காகவே நல்லை மண் முழுதும் காத்திருக்கிறது. ஆணையிடுங்கள் வேந்தே! ஒலிவேராவின் பறங்கிப்படை விரைந்தோடிய செய்தி விரைவில் உங்கள் செவியை சேரும். என்று வாள் வழங்கும் விழாவில் வாங்கிய வாளை உயர்த்திப்பிடித்தவாறே உறுதிமொழி அளித்தான் வருணகுலத்தான்.

‘தஞ்சைப்பெரு வீரரே, போர்த்துக்கேய பொல்லாத்தனம் எல்லை மீறி ஊடுறுவுவதை நானும் உணர்கிறேன். யாழ்ப்பாணம் உருக்குலைகிறது என்று எல்லாப்பக்கமும் சேதி வந்து கொண்டிருக்கிறது. வன்னியத்தேவன் வஞ்சகனே என் ஆணையை மீறி பறங்கியனிற்கு உதவியுள்ளான். அந்நியரிற்காய் எம்மவரை பகைத்தல் ஆகாதென்றே அவன் விடயத்தில் அமைதிகாத்து வந்தேன். ஆனால் எல்லாம் எல்லை மீறிவிட்டது.”

சங்கிலியன் கண்கள் கோபத்தில் சிவந்திருந்தன. முகம் ஆக்ரோசமாக மாறியது. திரும்பி வருணகுலத்தானை நோக்கி

‘போருக்கான தருணம் அவசியமாகிவிட்டது தஞ்சைவீரரே. வந்தேறிகள் நம்மை அடக்க நினைப்பதே தவறென்று உணர வேண்டும். இனி நாம் ஆற்றப்போகும் காரியங்கள் அந்தப் பறங்கி இனத்திற்கே பதிலாக இருக்க வேண்டும். கோப்பாய் மாளிகையில் படைவீரர்கள் தயாரா தளபதியாரே?”

‘ஐயாயிரம் வீரர்களும் அரச ஆணைக்காகவே காத்திருக்கின்றனர் மன்னா! அத்தோடு இத்தனை நாட்களும் கூட அவர்கள் கோப்பாய் மாளிகையில் தங்கி ஓய்வெடுத்திருக்கவில்லை. மக்களோடு மக்களாய் அவர்களில் சிலர் யாழ்ப்பாணமெங்கும் பரவி தலைமறைந்துள்ளனர். பறங்கியர்களின் அக்கிரமங்களை அவ்வப்போது எதிர்க்க – தட்டிக்கேட்க மக்களிற்கு துணையாய் நிற்கும் சாதாரண குடிகளாய் அவர்கள் மக்களோடு ஐக்கியமாகி வாழ்கின்றனர்.

இரகசியமாகவே நான் அவர்களை சந்தித்து நாட்டு மக்களின் நிலவரப்போக்கை அவ்வப்போது கேட்டறிந்து வருகிறேன். போர் எப்போது என்பதுதான் அவர்களின் இப்போதைய ஒரே கேள்வியாக இருக்கிறது மன்னா. அறிவிப்பு கிடைத்ததும் கணநேரத்தில் ஒன்றுகூட அவர்கள் தயார் நிலையில் காத்திருக்கின்றனர்”
என்று பணிவோடு கூறினான் வருணகுலத்தான்.

‘அபாரம் தளபதியாரே, தங்கள் வியூகங்கள் என்னை வியக்க வைக்கிறது. தங்கள் உருவத்திலே இன்று என் நம்பிக்கை தெரிகின்றது. அந்த ஒலிவேரா திரட்டி வருகின்ற ஆயுதங்களும் படையும் தங்கள் எதிரில் தலைதெறிக்க ஓடுகின்ற காட்சி இப்போதே என் கண்களில் தெரிகின்றது!.. பெரும்படை புறப்பட இப்போதே ஆணையிடுகிறேன்….”
சங்கிலியன் குரல் கம்பீரமாய் ஒலித்தது.

‘யாரங்கே?… மகிழாந்தகனை உடன் வரச்சொல்லுங்கள்..”

சேனாதிபதி மகிழாந்தகன் போர் முரசு ஒலிப்பதற்கான நேரம் வந்துவிட்ட செய்தி கேட்டு துடித்தெழுந்து ஓடி வந்தான்.

‘மகாவேந்தே, இத்தனை காலம் தங்களது பொறுமையே எனக்கு வேதனையளித்து வந்தது. நாட்டில் நடந்து கொண்டிருக்கும் அட்டூழியங்களை கண்டு – கடந்தும் சேனாதிபதியாகிய நான் அமைதி காத்தது தங்கள் ஆணையை எதிர்பார்த்தே ஆகும். இன்று அந்த நாள் வந்துவிட்டது. அந்த வெள்ளையர்கள் அடியோடு அழியப் போகிறார்கள்… ஆம்… என்று வாளை உருவி உறுமினான் சேனாதிபதி மகிழாந்தகன்.

தொடர்ந்து போருக்கான ஆயத்தங்கள் குறித்து வருணகுலத்தான் மன்னருக்கு விளக்கமளிக்கத் தொடங்கினான்.

‘அரசே .. ஒலிவேராவின் படையை மட்டும் நாம் எதிர்க்க திட்டம் தீட்டக்கூடாது. பறங்கியர்கள் ஆபத்து நேர்கையில் பல வழிகளிலும் எம்மை சுற்றி வளைக்க எத்தணிப்பர். போர்த்துக்கேயரை யாழ்ப்பாணத்தை விட்டு முழுதாய் விரட்டியடிக்க எமக்கு கடற்படையும் பலமாகத் தேவை. உடனடியாக மலையாள நாட்டிலிருக்கும் குஞ்சாலி மரக்காயர்களின் கடற்படை உதவியை நாம் பெற வேண்டும். எம்மைப் போன்றே போர்த்துக்கேயரின் பகைவர்கள் அவர்கள். அவர்கள் மூலமே கோவாவிலிருந்து வருகின்ற போர்த்துக்கேய யுத்த மரக்கலங்களை வழிமறித்து போர் புரிய முடியும்.

நகைப்பட்டிணத்திலிருந்து தாக்க முற்படும் படையை தகர்க்க பழவேற் காட்டிலிருக்கும் டச்சுக்காரர்களின் உதவியை நாம் நாடலாம். முள்ளை முள் கொண்டு எடுப்பது போல் எம் எதிர்த்தாக்கம் இடம்பெற வேண்டும். டச்சுமரக்கலங்கள் நாகைப்பட்டிணத்தை தாக்கினால் அதைக்காக்க போர்த்துக்கேய மரக்கலங்கள் அங்கு விரைந்தாக வேண்டும். தரைப்படையில் என் படை இருக்கும். ஒலிவேராவை புறமுதுகிட்டு ஓடச்செய்வது என் பொறுப்பு . அச்சமயம் நல்லைக்கோட்டையினை சூழ சேனாதிபதியின் படை நிற்க வேண்டும். இதற்கு மேல் வெள்ளையனால் எதுவும் செய்ய இயலாமல் போகும்..ஓடி ஒளிவதை விட அவனிற்கு வேறு மார்க்கமில்லை.”

‘வருணகுலத்தாரே தாம் சாமான்ய வீரனல்ல என்பதை இப்போதே உணர்கிறேன். ஈழநாடு செய்த நற்றவப்பேறு தக்க சமயத்தில் தாங்கள் எம்முடன் இருப்பது. தாங்கள் கூறிய வியூகப்படியே எல்லாம் நிகழட்டும். விரைந்து நடக்கட்டும் ஆயத்தங்கள்”
என்று ஆணையிட்ட வண்ணமே அரண்மனை நோக்கி விரைந்தார் சங்கிலிய மகாராஜா.

‘அரசே!…”
அவசரமாக மறித்தான் வருணகுலத்தான்.

‘தமிழ் தலைநிமிர்ந்து ஆள்கின்ற இந்த நல்லைக் கோட்டையில் தங்கள் ஆட்சி நிலைக்க இன்னுயிரையும் இன்பமாய் துறக்க துணிந்தே ஈழம் வந்தவன் நான். தங்கள் இராச்சிய பலமே நான் காண விரும்பும் வெற்றியாகும். என் உடலில் உயிர் இருக்கும் வரை தாங்கள் போர்முனைக்கு வருதல் வேண்டாம் என்று வேண்டுகிறேன் வேந்தே. மகிழாந்தகன் தலைமையிலான நல்லைப்படை கோட்டைக்குள் எந்த ஆபத்தும் வராமல் பார்த்துக் கொள்ளும். என் மீது நம்பிக்கை கொண்டு அரசர் இதை ஏற்க வேண்டும் என்று பணிகிறேன்.” என்று பொறுமையோடு வேண்டினான் வருணகுலத்தான்.

தஞ்சைவீரர் கூறுவதில் ஒரு காரணம் இருப்பதை உணர்ந்த மகிழாந்தகனும் அதை அமோதிப்பதாய் அமைதியாய் நின்றான்.

ஆனால் சங்கிலிய மகாராஜா மனம் சஞ்சலப்பட்டது.

‘ஆபத்து நெருங்காமல் பாதுகாப்பாய் இருப்பதா வேந்தன் தொழில் தஞ்சை வீரரே? அதை விட தமிழ்மண் காக்க என் தலை போவதையே நான் பெருமையாய் எண்ணுகிறேன்.”

‘ஆனால் என் தலை இருக்கும் வரை தங்கள் தலையை எவராலும் இங்கு நெருங்க முடியாது வேந்தே. நல் வேந்தனான தாங்கள் சிறிதும் தகுதியற்ற போர் ஒழுக்கமறியா பறங்கியினம் முன்பு நேருக்கு நேர் நிற்பதே அநாவசியம் வேந்தே. நல்லை மக்களின் சேவகனாய் என்னை நீங்கள் ஏற்றது உண்மையாயின் இந்த சேவகனின் பணிவான வேண்டுதலையும் தாங்கள் சிரத்தில் நிறுத்து சிந்தித்துப் பாருங்கள் மகாராஜா!” என்று மன்றாடினான் வருணகுலத்தான்.

சங்கிலியன் நீண்ட சிந்தனையில் மூழ்கினான். பின் தீர்க்கமான ஒரு முடிவுக்கு வந்தவன் போல் வருணகுலத்தான் தோள்களை பற்றிக்கொண்டு பேசினான்.

‘வருணகுலத்தாரே ..தங்கள் வார்த்தைகளையும் தம் வியூகங்களின் தீர்க்கத்தையும் நான் முழுதாய் நம்புகிறேன். தமக்காக தமது இந்த சிக்கலான வேண்டுகோளையும் நான் ஏற்கிறேன். ஆனால் போர் முனையில் வஞ்சகம் மிஞ்சி தங்களிற்கு எதிர்பாரா ஆபத்து ஏதும் என்று செய்தி அறிந்தால் இந்த சங்கிலியன் தலமையிலான நல்லைப்படை போர்க்களம் புகுவதை யாராலும் தடுக்க முடியாது என்பதையும் இக்கணத்தில் உறுதிபட உரைக்கிறேன்.”

‘மிக்க நன்றி வேந்தே,, இந்த அடியவனின் வேண்டுதலை ஏற்றமைக்கு மிக்க நன்றி. அப்படியொரு ஆபத்து இந்த நல்லை மண்ணில் எனக்கு நேர்ந்துவிடாது என்று என் மனம் முழுதாய் நம்புகிறது. அதேவேளை என் வியூகங்களிற்குத் துணையாய் யாழின் ஓர் வீரனையும் என்னோடு அழைத்துச் செல்ல தங்கள் அனுமதி வேண்டும்.” என்றான் வருணகுலத்தான்.

வருணகுலத்தான் யாரைப்பற்றி பேசுகிறான் என்பது சங்கிலியனிற்கும் மகிழாந்தகனிற்கும் விளங்கவில்லை.

‘யார் அந்த வீரன் தளபதியாரே? என் உத்தரவிற்காய் ஏன் காக்க வேண்டும். ஈழ வீரன் யாராக இருந்தாலும் தாம் அழைத்துச் செல்ல தமக்கு அதிகாரம் உண்டல்லவா?”

‘வேந்தே, சிறையில் இருக்கும் மிக்கபிள்ளை ஆராச்சியைப் பற்றித்தான் நான் அங்ஙனம் கூறினேன்.”

அதைக்கேட்டு மகிழாந்தகனால் அமைதி கொள்ள முடியவில்லை.

‘மிக்கபிள்ளை ஆராச்சியா? அந்த துரோகியா? அவன் இந்த நாட்டிற்காக போர் புரியப் போகிறானா? அவனை எப்படி நம்பத் துணிந்தீர்கள் தளபதி..?”

‘மகிழாந்தகரே, அவன் ஈழத்தின் சுதேச வீரன் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. எதிரிகள் அவனை மூளைச்சலவை செய்தே அவன் வீரத்தை வீணாக்க எண்ணினர். நாமும் அத்தவறை செய்தல் ஆகாதல்லவா? நான் மிக்கபிள்ளையை நேரடியாகவே சிறையில் சந்தித்தேன். தமிழர் நம் ஆட்சி செழிப்பு என்பது சங்கிலிய மகாராஜா அரியணையில் இருக்கும் வரைதான் என்று என்னால் முடிந்தவரை அவனிற்கு எடுத்துரைத்தேன். சிறையின் தனிமை அவனிற்கு தெளிவை கொடுத்திருக்கும் என்று நம்பினேன். அவன் பேச்சிலும் அதிகாரம் பறங்கியர் வசம் போவதை தடுத்து நிறுத்த வேண்டும் என்கிற வேகத்தைக் கண்டேன். ஆதலாலே அவனை அழைத்துச்செல்ல தங்கள் அனுமதியை வேண்டுகிறேன்.” என்று பணிவோடு கூறினான் வருணகுலத்தான்.

மகிழாந்தகனால் அதை நம்பமுடியவில்லை.

‘பறங்கியருடன் சேர்ந்து தன் மதத்தையே மாற்றிக்கொண்ட பச்சோந்தி அவன். அவன் கூறியதையா தாங்கள் நம்புகிறீர்கள்? சிறையிலிருந்து தப்பிக்க வேண்டும் என்று எதையும் கூறவல்ல அவனது நரித்தந்தரம் இது என்றே எனக்குத் தோன்றுகிறது.” என்றான் மகிழாந்தகன்.

‘இருக்கட்டும் மகிழாந்தகரே, ஆனால் அவனால் இப்போது என்ன செய்ய முடியும்? அவனிடம் தற்சமயம் எஞ்சியிருப்பது அவன் வீரம் மட்டுமே. மீண்டும் பறங்கியர் பக்கம் சாய்ந்தால் இழப்பு அவனிற்குத்தான் என்பதை அவன் நன்கு உணர்ந்திருப்பதாய் அறிகிறேன். நீண்ட யோசனைக்குப் பின் தான் மிக்கபிள்ளை என்னுடன் போரிற்கு வருவதே சாலச்சிறந்தது என்ற முடிவிற்கு வந்தேன். இனி மன்னர் தான் கூற வேண்டும்.” என்று கூறி அமைதியானான் வருணகுலத்தான்.

‘மிக்கபிள்ளையை விடுதலை செய்யக்கோரி பறங்கியர் சார்பில் அன்று பாதிரி டிமெல்லோ அரசவையில் கேட்டார். வன்னியர் விழாவில் வன்னி வேந்தன் கேட்டான். இன்று நீங்கள் கேட்கிறீர்கள். அவன் விடுதலைக்கு வாய்ப்பே இல்லை என்று இதுவரை மறுத்திருந்தேன். இப்போதும் நான் மிக்கபிள்ளையை துளி அளவும் நம்பவில்லை. ஆனால் தங்களை நம்புகிறேன். தாங்கள் கேட்டபடியே மிக்கபிள்ளை தங்களுடன் போரிற்கு வர அனுமதி அளிக்கிறேன்.” என்று உறுதியான குரலில் கூறினான் சங்கிலியன்.

மன்னரை வணங்கி நன்றி கூறினான் வருணகுலத்தான்.

ஆனால் மகிழாந்தகனால் அதை ஏற்க இயலவில்லை.

‘வேந்தே, இந்த விடயத்தில் தாங்கள் இராஜமந்திரியாரின் அபிப்பிராயத்தை அறிய வேண்டியதும் அவசியமல்லவா? ஏனெனில் மிக்கபிள்ளையால் அன்று அதிகம் பாதிக்கப்பட்டது ராஜமந்திரி அல்லவா? மாருதவல்லியை கடத்திச் சென்ற குற்றவாளியை விடுதலை செய்து போரிற்கு அனுப்புவதை இராஜமந்திரியார் ஏற்க மறுக்கலாம் அல்லவா?”

‘மகிழாந்தகா,,, இராஜமந்திரியார் மீது எந்நேரமும் அளவுகடந்த சந்தேகம் கொண்டிருந்த நீயா இன்று இங்ஙனம் கூறுவது? இது தான் எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது.
ஆனாலும் மிக்கபிள்ளையை சிறைபிடித்த விவகாரத்தில் இராஜமந்திரியாரிலும் அதிகம் பாதிக்கப்பட்டவன் நான் தான்.”

ஏதோ சிந்தனையில் மூழ்கினான் சங்கிலியன்.

சிறிது நேரத்தில் நிதானம் திரும்பியவனாய்
‘என் முடிவே இராஜமந்திரியாரது முடிவாகும். இதில் ஐயம் கொள்ளத் தேவையில்லை மகிழாந்தகா!” என்றான்.

‘தங்கள் ஆணையை மறுத்தமைக்கு மன்னிக்க வேண்டுகிறேன் மன்னா” என்று தலைகுனிந்து நின்றான் மகிழாந்தகன்.

‘சேனாதிபதி! நீ மன்னிப்பு கோரவேண்டிய அவசியம் ஏதுமில்லை. போரிற்கு அனைத்து ஆயத்தங்களும் இனி தாமதமின்றி ஆரம்பமாகட்டும். விரைந்து செல். பறங்கியனிற்கு இந்த நல்லைக் கோட்டையின் வீரம் புரிகிற வரை போர் நிற்கப்போவதில்லை. தொடங்கட்டும் பணிகள்” என்று உரத்த குரலில் ஆணையிட்டான்.

‘உத்தரவு அரசே!” என்று கூறி விரைந்து சென்றான் மகிழாந்தகன்.

மாமன்னர் சங்கிலியர் வருணகுலத்தான் தோள்களை பற்றியவாறே

‘தாங்கள் என்னுடன் இருப்பதுவே இன்று என் பெரும்பலமாக உணர்கிறேன்” என்று கூறி வருணகுலத்தானை ஆரத்தழுவிக் கொண்டார்.

சுற்றிலும் யாருமில்லாத அந்த தனியான இடத்தில் வருணகுலத்தான் சங்கிலிய மகாராஜாவை பார்த்து தைரியமாக அந்தக் கேள்வியை கேட்டான்.

‘ஊரிற்குள் தலைமறைவாய் வாழும் என் படைவீரர்கள் மூலம் மக்களிடையே பரவி வரும் பல விசம வதந்திகளை கேட்டறிந்தேன். முறையற்ற விதத்தில் பல கொலைகளை செய்தே சங்கிலிய மகாராஜா இந்த ஆட்சிபீடத்தை கைப்பற்றினாராம். அதில் ஒரு பிஞ்சுக்குழந்தை கூட கொல்லப்பட்டிருக்கிறதாம். அதர்ம வழியில் ஆட்சிபீடமேறிய ஒருவரே சிம்மாசனத்தில் இருப்பதால் அவரை அப்புறுத்தப்படுத்துவற்கு பறங்கியர் பக்கம் நிற்பதே மேல் என்று மக்கள் சிலர் கருதுவதாய் அறிகிறேன்”.

வருணகுலத்தான் கூறுவதை எந்த ஆச்சரியமும் இன்றி சங்கிலிய மகாராஜா பொறுமையுடன் கேட்டுக் கொண்டிருந்தார்.

‘மேலும்.. நான் தேவி ராஜகாமினியை சந்திக்க நேர்ந்தது. தேவி சொன்னவற்றை கேட்டபோதும் அதுவே உண்மை என்பது போல் ஐயம் என்னுள்ளும் பிறக்கிறது. ஐயத்தோடு என் பயணம் தொடர்ந்தால் தஞ்சை ரகுநாதநாயக்க மகாராஜா எனக்கிட்ட பணியில் ஏதோ குறையாக்கி விடுவேனோ என்கிற தடுமாற்றம் என்னுள் இருப்பது உண்மையேயாகும். எனக்கொரு தெளிவு வேண்டும் வேந்தே! ராஜகாமினி தேவியின் கூற்றுக்கள் பொய் என்று தம் நாவினால் சொன்னாலே எனக்கு போதும் மகாராஜா” என்று கூறி அமைதியானான் வருணகுலத்தான்.

‘இல்லை வருணகுலத்தாரே, அவைகள் பொய்யல்ல. ராஜகாமினி கூறியது, தாம் அறிந்தது எல்லாமே உண்மைதான்.” சங்கிலியன் முகத்தில் ஒரு நீண்ட புன்னகை நிலைகொண்டிருந்தது.

மர்மம் விலகும்…

Related posts

ஈழச்சூழலியல் 38

Thumi202121

பரியாரியார் Vs அய்யர்

Thumi202121

வினோத உலகம் – 17

Thumi202121

Leave a Comment