இதழ் 56

பரியாரியார் Vs அய்யர் – 05

காதல் கதைக்காக ஒரு மாதமாக காத்திருந்தவர்களே… இதோ… இந்த காதலைக் கொண்டாடும் மாதத்தில் எங்கள் பரதன் கௌசல்யா காதலின் கதையைக் கேளுங்கள். ஆனால் முன்னரே சொன்னது போல் இந்த காதல் கத்தரிக்காய் இன்னும் முத்தவில்லை. ஆக, சந்தைக்கு கொண்டுவந்து விடாதீர்கள்.

சினிமாக் காதல்கள் போல கண்டதும் கருவுற்றதல்ல இந்தக் காதல். படிப்படியாக உருப்பெற்ற காதல் இது. மண்ணில் விழுந்த விதையை முளைக்க வைக்கும் மழை நாள் ஒன்றில் தான் அவர்கள் காதலுக்கான விதையும் முளைவிட்டது.

பாடசாலை சென்றுவிட்டு கௌசல்யா தன் நண்பியுடன் வரும் வழியில் நல்ல மழை. சைக்கிளை மகிழ மரத்தடியில் நிறுத்திவிட்டு மகிழ மரக்குடையில் இடைக்கிடையே விழும் மழைத்துளிகளை மட்டும் வாங்கிக்கொண்டு தோழியர் இருவரும் நனைந்திருந்தார்கள்.

தீக்காயங்களுக்கு தீர்வாக என்றாவது பயன்படும் என்று பரமு மழைத் தண்ணீரை சேமிப்பது வழமை. அதற்காக பானை ஒன்றை கொண்டுவந்து முற்றத்தில் வைத்த போது தான் படலை வாசலில் பள்ளி உடையில் பெண் பிள்ளைகள் இருவர் நனைந்து கொண்டிருப்பதை பார்த்தாள். விடாமல் கொட்டிய மழையில் அவர்கள் முகம் சரியாக தெரியவில்லை. வாங்கில் கிடந்த இன்னொரு குடையையும் எடுத்துக் கொண்டு அவர்களுக்கு அருகில் சென்ற போதுதான் அய்யர் வீட்டு கௌசல்யாவை அடையாளம் கண்டுகொண்டாள். உயரம் பெரிதாய் இல்லை. . நிறமும் பெரிதாய் இல்லை. ஆனால் பூத்திருந்த முகம் கௌசல்யாவுக்கு பேரழகைக் கொடுத்தது. கோயிலில் கௌசல்யா பஞ்சபுராணம் பாடும்போது பரமு பலதடவை பார்த்திருக்கிறாள். பரியாரியார் வீட்டுக்கு மருந்துக்கு அம்மாவோடு வரும் போது கௌசல்யாவும் பரமுவை பார்த்திருக்கிறாள். மற்றக் குடையை கொடுத்து அவர்களை பரமு வீட்டிற்குள் அழைத்து வந்தாள்.

நனைந்திருந்த நங்கையர் இருவரின் தலையையும் துவட்டிக்கொள்ள துணிகளைக் கொடுத்த பரமு சுடச்சுட தேநீர் கொடுக்க நினைத்தாள். ஆனால் அய்யர் வீட்டுக்காரர் அடுத்த வீட்டில் எதுவும் குடிப்பதில்லையே? தான் கொடுத்து அவர்கள் வேண்டாமென்றால் என்ன செய்வது? எதற்கும் கேட்டுப்பார்ப்போம் என்று கேட்டாள்.

” அதெல்லாம் வேணாம் அன்ரி… உங்களுக்கு ஏன் வீன் கரைச்சல்?”

அந்த பதில் என்ன அர்த்தத்தில் சொல்லப்பட்டதென்பது என்பது கௌசல்யாவுக்கு மட்டும் தான் தெரியும். அதே போல அந்த பதில் என்ன அர்த்தத்தில் புரிந்து கொள்ளப்பட்டதென்பதும் பரமுவுக்கு மட்டும் தான் தெரியும். இந்த சாதீயம் தரும் சங்கடங்களில் இதுவும் ஒன்று. ஆனால் வீடு தேடி வந்தவர்களுக்கு தண்ணீர் கொடுக்காமல் இதுவரை அனுப்பாத பரமுவால் திரும்ப வற்புறுத்த முடியவில்லை. பரமு தன்னை தாழ்ந்தவளாக ஏற்றுக்கொண்டிருக்க வேண்டும். ஏதும் பேசாமல் கௌசல்யாவை பார்த்தாள்.

ஆனால் அவளோ அங்கிருந்த சுவர்களைப் பார்த்துக் கொண்டிருந்தாள். அங்கே சுவர்களில் வரைந்திருந்த ஓவியங்களில் தன்னை மறந்தவளாக அவற்றை கௌசல்யா ரசித்துக் கொண்டிருந்தாள். தன் மகன் வரைந்த ஓவியங்களை ஒருத்தி ரசித்துப் பார்ப்பதைப் பார்த்த பரமு சற்றே கர்வமுறத் தொடங்கினாள்.

“இதெல்லாம் என் மகன் பரதன் கீறினது. எந்த சுவரையும் சும்மா இருக்க விடமாட்டான். ஸ்கூல்ல.. தங்கப்பதக்கம் எல்லாம் வாங்கி இருக்கிறான்.”

கௌசல்யா கேட்காமலே தானாகவே பரமு சொல்லிக் கொண்டாள். அவள் முகம் முழுவதும் பூரிப்பு. மகனின் கலை அவளை இப்போது சற்று உயரத்தில் வைக்க வைத்துவிட்டது. ஒரு இயல்பான சந்திப்பை சாதி ஏற்றத்தாழ்வுகள் எப்படிப் பாதிக்கிறது பார்த்தீர்களா? அய்யர் வீட்டுப் பெண் வந்ததிலிருந்து எல்லாவற்றையும் சாதீயக் கண்ணோடே பார்க்கிறாள் பரமு. ஆனால் அந்த அய்யர் வீட்டு பெண்ணோ கலைக்கண்ணோடு அந்த ஓவியங்களில் ஒன்றித்துப் போயிருந்தாள்.

மழையோடு விளையாடியபடியே வீடு வந்த பரதனுக்கு தன் ஓவியங்களை ஒருத்தி வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருப்பதை பார்த்ததும் அதிர்ச்சி. நனைந்து போய் வந்திருந்த மகனை தன் திட்டல்களால் பரமு துவட்டினாள். ஒரு பெண்ணுக்கு முன்னால் தன்னை அம்மா திட்டுவது பரதனுக்கு சுத்தமாகப் பிடிக்கவில்லை. அது பரமுவுக்கும் விளங்கிவிட்டது.

“ஏம்மா கௌசல்யா.. நீ இவ்வளவு நேரமும் ரசிச்ச ஓவியங்களை கீறினவன் இவன்தான் மா”

அறிமுகப்படுத்தி வைத்தாள் பரமு. சட்டென்று இருவரும் ஒரு தடவை கண்களால் பார்த்துக் கொண்டார்கள்.

“அட… இவளா…”
“அட… இவனா…”

இருவருமே நினைத்துக் கொண்டார்கள். ஆனால் சொல்லவில்லை. ஏற்கனவே ஒருவரை ஒருவர் பலதடவை கண்டிருக்கிறார்கள். ஆனால் முகவரியோடு அறிமுகமாவது இன்று தான்.

மழைநாளில் முளைவிட்ட அந்த சந்திப்பு மெல்ல மெல்ல வளரத் தொடங்கியது. பரதனின் ஓவியங்களைப் பிடித்த கௌசல்யாவுக்கு பரதனையும் பிடித்துக் கொண்டது. ஆனால் அந்த அன்புக்கு என்ன பெயர் வைப்பதென்று தெரியவில்லை. வயதுக் கோளாறுகளின் சேட்டைகள் பற்றி வீட்டில் ஆச்சி அடிக்கடி பாடம் எடுத்ததால் அவள் அந்த அன்புக்குள் தன்னை சிறைப்படுத்திக்கொள்ள விரும்பவில்லை. ஆனால் நாளாக நாளாக பரதன் மீதான அவள் அன்பு அவளை அறியாமலே அவளை ஆட்கொள்ளத் தொடங்கியது.

தன் வீட்டுச் சுவர்களிலும் ஓவியம் வரையுமாறு அழைத்து வீட்டாருக்கு அறிமுகம் செய்து வைத்தாள். ஏன் பரதனை வீட்டாருக்கு அறிமுகம் செய்து வைக்க வேண்டும்? அவளுக்கே இதற்கான விடை தெரியவில்லை. குழப்பமாக இருந்தது. அவளது கட்டுப்பாட்டுக்குள் அவள் இல்லை. அப்படியென்றால் அவளை இயக்குவது யார்?

இதை நிலமைதான் பரதனுக்கும். அவள் வீட்டில் அழைத்து ஓவியம் வரையச் சொன்ன போது அவன் வரைந்த ஓவியங்களில் ஒன்று மழையில் மரத்தடியில் நனைந்து நின்ற குயில் ஒன்று. கௌசல்யா நன்றாக பாடுவாள். அவளின் குரல் அவனுக்கு அவ்வளவு பிடிக்கும். அவளை சிங்காரக்குயில் என்றுதான் பரதன் அழைப்பான். சிங்காரக்குயிலை கௌசல்யா வீட்டில் சித்திரக்குயிலாக்கி காதலை அடையாளப்படுத்திக் கொண்டார்கள் இருவருமே. ஆனால் இருவருமே வெளிப்படுத்தவில்லை.

நாட்கள் நகர்ந்துகொண்டே சென்றன. காதலும் வலுத்துக்கொண்டே சென்றது. பாரம் தாங்காமல் ஒருநாள் போட்டுடைக்கப்பட்டது. எதிர்பார்த்தவைதான் நடந்ததா?
எதிர்பாருங்கள்..

குயில் கூவும்…

Related posts

மட்டக்களப்பில் வேலையின்மையும் வறுமையும்

Thumi202121

தினமும் கொண்டாடுவோம் காதலை!

Thumi202121

உடலை உருக்குலைக்கும் போதைப்பொருட்கள்

Thumi202121

Leave a Comment