இதழ் 57

சித்திராங்கதா -55

அரசியல் கைதி

இனிமையான நாட்கள் மீளுவன இல்லை. அன்று புரவியில் வருணகுலத்தானோடு சித்திராங்கதா வந்த நாள்; அவர்கள் இன்பத்தில் மூழ்கித் திளைத்த அந்த நாள் இனி எப்போதும் மீளாது என்று அவர்களிற்கும் தெரியும். ஆனால் அந்த இனிமையான நாளிற்குப் பின் எங்கள் ஆடலரசி சித்திராங்கதா என்ன ஆனார் என்று அறிவீர்களா?

கட்டியணைத்துவிட்டு அவளை விட்டுப் பிரிந்து சென்றான் வருணகுலத்தான் அன்று. வருணகுலத்தான் மனதில் அன்று ஆயிரம் குழப்பங்கள். அவன் குழப்பங்கள் எல்லாம் தெளிந்துவிட்ட நாளில் சித்திராங்கதாவை மீண்டும் ஒருமுறையாவது சந்திக்க நினைத்தான். போரிற்குச் செல்லமுதல் கோப்பாய் நடன கூடத்திற்கு பலமுறை வருணகுலத்தான் வந்து போனான். ஆனால் அவன் நினைத்தது சாத்தியப்படவே இல்லை.

விதியின் துர்ப்பாக்கியம் அவர்கள் காதலில் ஒரு கண்ணாமூச்சி விளையாடிவிட்டது. சித்திராங்கதாவை அவனால் ஒருமுறை கூட காண முடியவில்லை. அப்படி சித்திராங்கதா எங்குதான் இருந்தாள்?

ஒரு பெண் யாரும் எதிர்பார்க்காத ஒரு தீர்க்கமான முடிவினை எடுக்க நேர்ந்தால் அதற்கு இரண்டு பெரிய காரணங்களே இருக்க முடியும். ஒன்று இந்த கொடிய உலகம் அவளிற்கு கற்றுக் கொடுத்துவிட்ட ஒரு கசப்பான அனுபவம் . இன்னொன்று அவள் கண்ணெதிரே காண்கின்ற யாரோ ஒருவரின் வாழ்வியல் பாடம். நாம் இவரைப்போல் ஆக வேண்டும் என்கிற ஆசையை விட இவரைப்போல் மட்டும் ஆகிவிடக்கூடாது என்கிற அச்சமே சூழல் பெண்களிற்கு கற்றுக் கொடுக்கின்ற பெரிய பாடம்.

ஒரு நாட்டின் மகாராணியாக இருந்து காதலினால் இன்று கதியற்று நிற்கின்ற இராஜகாமினியை பார்த்துவிட்ட வந்த பரிதாபந்தான் ஒருபுறம் அவளை சில தீர்க்கமான முடிவுகளை எடுக்கத் தூண்டிக் கொண்டிருந்தது.

இன்னொருபுறம் தன் மீது நம்பிக்கை இழந்து ஊரார் உழறலை எல்லாம் உண்மை என்று நம்பி நோயில் நலிந்து வைத்தியசாலையே கதியாகிப்போன தந்தை எச்சதத்தர். சித்திராங்கதாவை இனி பார்க்கவே விரும்பவில்லை என்று அன்று சேவகனிடம் சொல்லியனுப்பியுள்ளார் எச்சதத்தர். அது அவள் சற்றும் எதிர்பாராதது. எல்லா சோகமும் ஒன்றுகூட்டி அவளை வெகுவாக சிதைத்துக் கொண்டிருந்தது. பெருந்தனிமை அவளை கொடூரமாக பற்றிக் கொண்டியிருந்த வேளைதான் ‘தஞ்சை வீரர் போரிற்கு புறப்படுகிறார்’ என்ற செய்தியும் அவள் செவிகளை எட்டியது.

அந்த பொழுதில் அந்த செய்தி அவளை எப்படி உருக்குலைத்தது என்று சொல்லுவது எளிதல்ல. தன்னிடம் ஆணையிட்டு சென்ற மணாளன் தன் கருத்தை சற்றும் சிரத்தை கொள்ளாது போரிற்கு புறப்பட முடிவாகிவிட்டார் என்ற செய்தி அவளிற்கு சாதாரணமான வேதனையை வழங்குமா என்ன?

பலமுறை அஸ்வதமங்கலத்தின் கால் குழம்பு ஓசை அவள் நடனகூடத்தை நோக்கி கேட்ட போதெல்லாம் தன்னை தானே மனைக்குள் மறைத்துக் கொண்டாள் சித்திராங்கதா. உள்ளத்துள் குடைகிற போரொலியை தாங்கிக் கொண்டு தன் கண்களிற்கு தானே திரையிட்டுக் கொண்டாள்.

‘என் பேச்சை நீ மீறி விட்டாய். பெருங்களங்கம் எனக்கு ஏற்படுத்தி விட்ட நீ என் முகத்தில் கூட நீ முழிக்க எனக்கு சம்மதமில்லை’ என்று உறுதியாக எச்சதத்தர் கூறிவிட்டதாக அன்று சேவகன் வந்து சித்திராங்கதாவிடம் சொன்னான். கூடவே ‘அரச ஆணையை மதித்து அதன்படி நடக்க வேண்டும். அன்றில் எனக்கு புத்திரி என்று எவருமில்லை’என்று அறுதியாக கூறியிருந்தார் எச்சதத்தர்.

தன் தந்தை கூட தன்னை புரிந்து கொள்ளாத அவலத்தை அவள் யாரிடம் சென்று முறையிடுவாள்? அவளிற்கு வேறு யார் இருக்கிறார்கள்? யாரோ ஒருவர் இருந்தார். அவர் தனக்காக எப்போதும் இருப்பார் என்ற நினைப்பில் ஒரு நிம்மதி கொண்டிருந்தாள். ஆனால் அந்த மாவீரமும் தன் பேச்சை- தன் கருத்தை துச்சமென அவமதித்து போரிற்கு புறப்பட்டுவிட்டாராம் என்பதை அவளால் நம்பவும் முடியவில்லை.

‘அன்று இராஜகாமினி தேவி எத்தனை விதமாக கூறி எத்தனை உண்மைகளை எடுத்துரைத்தும் என்ன பயன்? தஞ்சை வீரர் போரிற்கு போக முடிவு செய்து விட்டார் என்றால் அதற்கு என்ன அர்த்தம்? அரச ஆணையும், அரச பணியுந் தானே அவரிற்கு பெரிய விடயம்… இன்று நானோ… என் கருத்தோ… என் காதலோ.. என்று எதுவும் அத்தனை முக்கியமல்ல அவரிற்கு…
இனி யாரைத்தான் நம்புவது இவ்வுலகில்? யார்தான் துணை எனக்கு?’ என்று அவள் வேதனையில் உருகிக் கொண்டிருக்கும் போதுதான் ஒருநாள் அரண்மனையிலிருந்து சேவகர்கள் இருவர் வந்தனர்.

‘சங்கிலிய மகாராஜா பெருவணிகர் எச்சதத்தர் பூரண சுகம் பெறும் வரை சித்திராங்கதா பாதுகாப்பாக அந்தப்புரத்தில் தங்க வேண்டும்’ என்று கேட்டுக் கொண்டதாக கூறினார்கள்.

அதைக் கேட்டதும் சித்திராங்கதா விரக்தியில் சிரித்தாள். ‘இனி இந்த ஆடலரசிக்கு பாதுகாப்பு என்ற வேண்டியிருக்கிறது ? அன்பின் சிறகுகள் அனைத்தையும் பிடுங்கியெறிந்து விட்ட பின் என்ன பாதுகாப்பை வழங்கப்போகிறார் தங்கள் அரசர்? தத்தளித்துக் கொண்டிருக்கும் இந்த ஜீவனிற்கு பரிதாபம் காட்டுகிறதா உங்கள் பாதுகாப்பு? அந்தப்புரமல்ல ; எந்தப்புரத்திலும் இந்த சித்திராங்கதா தங்கமாட்டாள். அவளிற்கு எந்தப் பாதுகாப்பும் தேவையில்லை என்று போய்ச் சொல்லுங்கள். என் உள்ளத்தை புரிந்து கொள்ளாத இந்த அரசு பாதுகாப்பை மட்டும் அளித்து எதை நிரூபிக்க போகிறார்களாம்? எதுவும் தேவையில்லை என்று சொல்லிவிடுங்கள்’ என்று சேவகர்களிடம் கூறி அந்த அரச ஆணையை மறுப்பதாய் அறிவித்து விட்டாள் சித்திராங்கதா.

எச்சதத்தர் மேல் கூட அவளிற்கு கோபம் என்று எதுவும் இல்லை. என்ன நடந்தாலும் தன் உள்ளத்து எண்ணம் களங்கமற்றது என்பதை தன்னை உயிராய் வளர்த்த தந்தை புரிந்து கொள்வார் என்று அவள் நம்பியிருந்தாள். ‘என் தந்தைக்கு என்னைக் காட்டிலும் இந்த நாடு தான் பெரிது என்று ஆகிவிட்டதல்லவா? ஏன்? எனக்கு மட்டும் இந்த நாட்டில் அக்கறை இல்லை என்று எண்ணிவிட்டார்? நாட்டு நன்மைக்காகவே அனைத்து காரியங்களை நானும் ஆற்றினேன் ? அதை யாரும் இங்கு புரிந்து கொள்ளவில்லையே?’ என்று தனக்குள்ளே எழும் கேள்விகளால் மாண்டு கொண்டிருந்தாள் சித்திராங்கதா.

இந்த நாடு மீது தான் கொண்ட அக்கறையை இனி யாருக்க எப்படி புரியவைக்கமுடியும் என்பதுதான் அவளிற்கு புரியவில்லை. ஆனால் அவள் புரிதலில் அவளிற்கு எந்தக் குழப்பமும் இல்லை. தன் காதலிலும் எந்த குறையும் அவள் அறியவில்லை. இருப்பினும் வருணகுலத்தான் எதையும் புரிந்து கொள்ளாதது ஏன்? தன் கருத்தை தஞ்சைவீரர் எதற்காக புறந்தள்ளினார்? அன்று அந்தப்புரவியில் கட்டியணைத்தபடி சத்தியம் செய்த மாவீரர் இன்று எல்லாவற்றையும் புறந்தள்ளிவிட்டு போரிற்குப் புறப்பட்டு விட்டார் என்பதை அவளால் எந்தக் கோணத்திலும் புரிந்து கொள்ள முடியவில்லை.

ஒரு முறையற்ற வேந்தனின் ஆட்சியால் வீழ்ந்து கொண்டிருக்கும் இந்த நாட்டை மீட்க வந்த தஞ்சைப்பெருவீரர் வருணகுலத்தான் என்று அவள் கண்டிருந்த கனவு இப்போது மெள்ள மெள்ள தவிடுபொடியாகிக் கொண்டிருந்தது.

‘இனி என்ன ஆகப்போகிறது? பறங்கியருடனான போரில் என்னதான் முடிவு வரப்போகிறது? போரில் வெற்றி வாகை சூடி வருவாரா தளபதி? வரட்டுமே… யாருக்கு வேண்டும் அந்த வல்வரவு? அன்று வாழ்வோர் மகிழ்வாய் அவரிற்கு மாருதவல்லியை மணஞ்செய்து வைப்பர்.. அன்று தேவி இராஜகாமினி கூறியது போல் கோட்டையின் பெருஞ்சொத்தல்லவா மாருதவல்லி. மாமன்னரின் மகளல்லவா அவள். போரில் வெற்றிபெற்றவர்க்கு அப்பெருஞ்சொத்தை பரிசளிப்பர் அரசாள்வோர். நாட்டின் இளவரசியை மணக்க ஆணையிட்டால் மறுப்பாரா தஞ்சை தளபதி? மறுக்கா விட்டால்…. மறுக்க முடியவில்லை என்று கூறி விட்டால்.. இந்த ஆடலரசி? அரங்கேற்றமறியாத ஆடலரசி வீணான கற்பனைகளால் வீணாய் போவது தான் விதியா?’ என்று அவள் உள்ளம் பலவாறாக குடைந்து கொண்டே இருந்தது.

எல்லாவற்றிற்கும் இனி ஒரே முடிவு தான். தீர்க்கமான அந்த முடிவை மேற்கொள்ள அவள் துணிந்துவிட்ட அந்த நொடிதான் அவளை சிறைபிடிக்க அரண்மனை காவலர்கள் வந்தனர்.

‘வீரர்களே… ஈழ நாட்டு முறைசார் வேந்தர் யாரும் மங்கையரை சிறைபிடிக்கும் முறை அறியாதவர்கள். தங்கள் வீரிய வேந்தரிற்கு அம்முறைகள் பற்றிய அறிவு அவ்வளவாய் இல்லை போலிருக்கிறதே. இல்லாவிட்டால் கேட்டுத் தெரிந்து கொள்ளச் சொல்லுங்கள். இப்படிப் பெருங்களங்கமாற்றாமல் விரைந்து விலகிச் செல்லுங்கள்..’ என்று ஏளனத்தோடு சொன்னாள் சித்திராங்கதா.

‘பெண்ணே, இது அரச ஆணை.. மீறுவதற்கு உனக்கோ- எமக்கோ உரிமை கிடையாது. நீ எம்முடன் வந்தாக வேண்டும். மீறினாலும் நாம் அழைத்துச் சென்றே ஆக வேண்டும்.’

‘ஓகோ.. அந்தளவிற்கு வளர்ந்துவிட்டதா உங்கள் வீரம்? ஒரு மங்கையிடம் நீங்கள் அத்தனைபேரும் உங்கள் வலுவை காட்டப்போகிறீர்கள்… அப்படித்தானே… என்னே உங்கள் வீரம்? … மெச்சுகிறேன்..’

‘பெண்ணே, அதிகம் பேசாதே… நீ இப்போது நாட்டின் அரசியல் கைதி. வீணாக எம் நேரத்தை விரயமாக்காமல் விரைந்து எம்முடன் வந்துவிடு’

‘கைதி… ஆடலரசி சித்திராங்கதாவை இப்போது நல்லை இராச்சியத்தின் அரசியல் கைதி ஆகிவிட்டார்கள் உங்கள் அரசாள்பவர்கள். பிரமாதம்…. கலையை இழிந்து இந்த கலையரசியை சிறைபிடிக்க துணிந்த உங்கள் அரசின் போக்கை பற்றி நான் பேசுவதற்கே வெட்கமடைகிறேன். காற்றை கைது செய்ய புறப்பட்டு வந்த மூடர்களே, உங்களோடு விவாதிப்பதில் எனக்குத்தான் அவமானம். தாம் ஆற்ற வந்த அருஞ்செயலை ஆற்றுங்கள்… சுற்றி ஊரார் அனைவரும் வேடிக்கை பார்க்கட்டும்… தங்கள் பெருமையும் வீரமும் பார்முழுதும் பரவட்டும்… ம்… இன்னும் ஏன் தாமதம்? வீரர்களே.. இதோ இந்த மங்கையை கைது செய்து அழைத்துச் செல்லுங்கள். ‘ சுற்றி நின்ற அனைவருக்கும் கேட்கும்படு உரத்துக் கூறினாள் சித்திராங்கதா.

வீரர்கள் எதுவும் பேசாமல்- பேசமுடியாதவர்களாய் சித்திராங்கதாவை சுற்றி நின்றனர். காவல் வீரர்கள் சூழ சித்திராங்கதா கோட்டை நோக்கி அழைத்துச் செல்லப்பட்டாள்.

Related posts

மாணவர் மத்தியில் கொரோனாவின் தாக்கம்

Thumi202121

ஆரம்பமாகிறது WPL

Thumi202121

பள்ளிக்கூடங்களை மூடாதீர்கள்..!

Thumi202121

Leave a Comment