தற்கால நவீன உலகில் அனைவரினதும் செயற்பாடுகள் மிகுந்த பரபரப்புடனும், வேகமானதாகவும் காணப்படுகின்ற காரணத்தினால் மற்றவர்கள் நலன் குறித்து அக்கறை செலுத்துவதன் ஊடாக மாத்திரமே எமது அன்றாட வாழ்வை செம்மையாக கொண்டு செல்ல முடியும். இதற்கு எம்முடன் துணையாய் இருப்பதும், சுய மேம்பாட்டிற்கான முயற்சியானதும், எமக்கு கிடைத்த வரமுமாய் இருப்பதே யோகாவாகும்.
புரிந்து கொள்ள இயலாத அறிவியலின் அடிப்படையில் உடலுக்கும,; மனதுக்கும் மனிதனுக்கும், இயற்கைக்கும் ஓத்திசைவைக் கொண்டு வருவதில் கவனம் செலுத்துவதுமான யோகாவானது ஆரோக்கிய வாழ்வின் அறிவியலுக்குமாகத் திகழ்கின்றது. ஏற்றுக்கொள்ளபட்ட முழுமையான முறையின் ஓரு பகுதியாக யோகா உலகம் முழுவதிலும் செயற்பட்டுக் காணப்பட்டு வருகிறது.

இத்தகைய யோகாவை ஓர் வாழ்க்கை முறையாக உள்ளீர்த்துக் கொள்ளும் போது அது வாழ்க்கையை வெற்றிகரமாக மாற்றியமைக்கும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. நாம் ஒவ்வொருவரும் சிறந்த ஆளுமையுடன் திகழவேண்டும் என எண்ணுபவர்களாகத்தான் இருக்கின்றோம். ஆனால் அவற்றை அடைவதற்கு துணை செய்பவற்றை அணுக எம்மில் எத்தனை பேர் முயற்சிக்கின்றோம் என்றால் அது மிக அரிதாகவேயுள்ளது. இவ்வாறு முயற்சிக்காது தோல்வியடைந்து விடுகிறோம் என்றும் எனக்கு அதிஸ்டமில்லை என்றும், பிறரால் தான் நான் முன்னேற முடியவில்லை என்றும் பேரம் பேசிக்கொள்வதால் எவ்வித உண்மையோ, பயமோ இங்கு எமக்கு கிடைப்பதில்லை. எனவே எமது சுய முன்னேற்றத்திற்கு ஏற்றதான வழியை யோகா காண்பிக்கிறது. எம் சாதாரண ஆளுமையை தனித்தன்மை கொண்ட சிறப்பான ஆளுமையாக மாற்ற வல்லதுமாக யோகா விளங்குகின்றது.
தற்கால உலகில் பல்வேறு விதமான சூழ்நிலைகளை தனிமனிதனாக முகங்கொடுக்க வேண்டிய அவசியம் எம் ஒருவொருக்கும் காணப்படுவது நாம் யாவரும் அறிந்ததே. எனவே இச் சந்தர்பங்களில் எழும் வெவ்வேறுபட்ட மனவெழுச்சிகளை கட்டுப்படுத்தும் தேவையுடன் சேர்த்து சிறந்த நடத்தையை வெளிப்படுத்தும் நற்சிந்தனையை உருவாக்கிக்; கொள்ளும் தேவைப்பாடு அனைவரிற்கும் உண்டு. எனவே இவற்றை ஒருவர் கொண்டிருக்க அல்லது வளர்த்துக் கொள்ள மனஅமைதி இன்றியமையாததாக காணப்படுகிறது. எனவே இவ் மனஅமைதியுடன் கூடிய ஒருமைப்பாட்டைப் பேணுவதற்கு யோகா சிறப்பாக வழிசமைக்கிறது.

எமக்கு ஏற்படும் பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாமல் நினைப்பது பலரில் உண்டு. இதற்கு காரணம் ஆழ சிந்திக்காமையும், அலைபாயும் மனதை கட்டுபடுத்த முடியாமையாகும். எனவே யோகாவின் மூலம் மனதை எளிதாக கட்டுப்படுத்த முடியும். இதனால் எமக்கு ஏற்படும் சவால்களை வெற்றிகரமாக முகங்கொடுக்க முடிவதுடன் எமது பிரச்சினைக்கான தீர்வை நாமே சுயமாக தீர ஆலோசித்து சிறப்பானதாய் பெற்றுக்கொள்ள முடியும்.
நாம் மனதளவில் நலமாய் இருக்க, உடலளவில் நலத்தை பேண வேண்டும். நாம் நோயின்றி வாழுகின்ற போதே மனதளவிலும் அமைதியாய் வாழ முடியும். எனவே எம்மில் ஏற்படும் பல்வேறு உடல் ரீதியான நோய்கள் உளத்தையும், உளரீதியான நோய்கள் உடலையும் தாக்கக்கூடியன. எனவே இவ்வாறான பலவகையான நோய்களை தடுக்கவும் குறைக்கவும் இல்லாது செய்யவும் யோகா உதவுகிறது. அத்துடன் உள, உடற்செயலியல் மேம்படுத்தலிலும் சிறப்பாய் துணைபுரிகிறது.
அந்த வகையில் யோகாவானது இசைவு, இணக்கம் ஆகியவற்றை அதிகரிக்கின்றது. தசைகளின் நலத்தையும், வலிமையையும் பேணுகின்றது. சுவாசத்தை சீராக்கி உயர்வீரியத்தை மிகுவிக்கிறது. உடல் எடையை குறைக்கிறது. இதய ரத்த நாளங்களின் திண்மையை பாதுகாக்கிறது. இவை மாத்திரமல்லாது உணர்ச்சி, ஓய்வு மனக்கட்டுப்பாடு, சிரத்தை தெளிவு, ஒழுங்கு படைப்பாற்றல். மன நிறைவு, தன்னம்பிக்கை, மன வலிமை, நேர்மறை, சிந்தனை, வாழ்வின் நோக்கு மற்றும் அர்த்தங்களை புரிதல் போன்ற பல்வேறு எண்ணற்ற நன்மைகளை யோகா எமக்கு அள்ளித்தருகிறது.
ஏனவே தற்கால சூழலில் காணப்படும் தவறான வாழ்க்கை முறைகளினால் ஏற்படும் குறைபாடுகளால் அல்லலுறாமல் நமது வாழ்வை சீர்படுத்தி வாழவும், உடல், உள நோய்களுக்கெதிராக போராடி சமாளிப்பதற்கும், எம்மை நாம் அடையாளங்கண்டு சுய மேம்பாட்டடையவும் ஏனையோருடன் சிறந்த தொடர்பாடலை மேற்கொள்ளவுமாக எமது சிறந்த சிந்தனை மற்றும் நடத்தை மாற்றத்தினூடாக வாழ்க்கையை வெற்றிக்கொள்ள வழிசமைக்கும் யோகாவை நாமும் பின்பற்றி நலமுடன் வளமாய் வாழ்வோமாக.