மேலே ஆகாசமும் கீழே மண்ணும் எல்லையாக இருக்க காண்பவை எல்லாவற்றிலும் சந்தத்திற்கேற்ற ஒரு அசைவை அதாவது நடனத்தை உங்களால் உணர முடிகிறதா? மேகத் திரையைக் கிளித்து, பாய்ந்து பாய்ந்து பளிச்சிடும் மின்னலின் நடனம் தெரிகிறதா? மேகத் தாளத்திற்கு உருகி விண்ணிலிருந்து நீர்த்துமிகள் மண்ணுக்கு வரும் நர்த்தனத்தின் அழகிற்கு இணை ஏது? வந்த நீர்த்திவலைகள் பாறைகளில் பட்டு தெறித்தாடுவதையும், வளைந்து நெளிந்து ஓடி ஓடி ஆடி, மேடு பள்ளங்களில் ஜதி மிதித்து, கடலோடு சத்தமிட்டு சங்கமிக்கும் வனப்பையும் வார்த்தைகளில் வடிக்கலாமோ? காற்றுப் பாட்டிற்கு தாண்டவம் ஆடும் அந்த மரத்தைப் பாருங்கள். நடன முத்திரை காட்டும் அதன் இலைகளைப் பாருங்கள். “லப் டப்” என்று எம் இதயமும் நாடிகளும் துடித்து துடித்து ஆடுவதாலும், குருதி ஓடுவதாலும் தான் இந்த உலகத்தில் உயிர் வாழ்க்கையே நடக்கிறது. இயற்கை மட்டுமல்ல, இயந்திரங்களிலும் அசைவுதான் அடிப்படை. இயந்திரப் பாகங்கள் அசைந்து ஆடாமல் எந்தப்பெரிய இயந்திரமும் தொழிற்படாது. எல்லாவற்றுக்கும் அடிப்படையான அணுவைச் சுற்றிக்கூட இலத்திரன்கள் நீள் வட்டப் பாதையில் நாட்டியம் ஆடுவதாகவே விஞ்ஞானமும் சொல்கிறது. எனவே உலக இயக்கமே நடனத்தினால்த்தான் நடக்கிறது.
“உலக வாழ்க்கை நடனம் நீ ஒப்புக்கொண்ட பயணம்
அது முடியும்போது தொடங்கும் நீ தொடங்கும்போது முடியும்.
மனிதன் தினமும் அலையில் அலையும் குமிழி
தெரியும் தெரிந்தும் மனமே கலங்காதிரு நீ
தாளம் இங்கு தப்பவில்லை யார் மீதும் தப்பு இல்லை
கால்கள் போன பாதை எந்தன் எல்லை”
உயிர்கள் யாவற்றுக்கும் இன்பம் வந்தால் துள்ளிக் குதிக்கின்றன; துன்பம் வந்தாலும் சோக நடனமாடுகின்றன. விருப்பு, வெறுப்பு, இன்பம், துன்பம், கசப்பு களிப்பு என எமது எந்த உணர்வையும் எமது முகபாவத்தாலோ, கையசைவாலோ, உடல் மொழியாலோ வெளிக்காட்டி விடுகிறோம். பேச்சுக்கு முதல் வரும் முகச்சுளிப்புகளும், இழிப்புகளுமே எங்கள் உணர்வுகளை கடத்த போதுமாய் இருக்கின்றன.
“வேதங்கள் ஆட மிகு ஆகமம் ஆடக்
கீதங்கள் ஆடக்கிளர்
அண்டம்ஏழாடப்
பூதங்கள் ஆடப்புவனம்
முழுது ஆட
நாதம் கொண்டு ஆடினான்
ஞானானந்தக்கூத்தே”
என்கிறார் திருமந்திரத்தில் திருமூலர். அசைவற்றுக்கிடந்த உலகமும் உயிர்களும் கூத்தனின் திருநடனம் கண்டு ஆடத்தொடங்கியதாம். அதாவது இயங்கத்தொடங்கியதாக சொல்கிறார். ஆம்! உலக இயக்கமே நடனத்தின் அடிப்படையானது என்பதை விஞ்ஞானம் ஒத்துக்கொள்ளப் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ஆன்மீகம் சொல்லியிருக்கிறது. உலகத்தின் மையமாக தில்லைப் பெரிய கோயிலைக்கருதி, மையத்தில் நின்று ஆடும் நடன சபாபதியாக ஆடல்வல்லான் என்கிற அழகு தமிழ்ப்பெயரோடு இறைப் பரம்பொருளை ஆன்மீகம் பல இடங்களில் சொல்லியிருக்கிறது.
“இனித்தமுடன் எடுத்த பொற்பாதம் காணப்பெற்றால்
மனித்த பிறவியும்
வேண்டுவதே இம்மாநிலத்தே”
என அப்பர் பெருமான் அந்த தூக்கிய திருவடியின் அழகை காணும் பேறை வியக்கிறார். சாதாரண நாட்டியமா அவன் ஆடுவது! பூமியின் இயக்கமல்லவா அவன் நடனம்.
“அசையும் பொருளில் இசையும் நானே
ஆடும் கலையின் நாயகன் நானே
எதிலும் இயங்கும் இயக்கமும் நானே
என் இசை நின்றால் அடங்கும் உலகே.”
இதுவரை இந்த கட்டுரை சொன்னதை ஒற்றை வரியில் கவியரசர் கண்ணதாசன் சொல்லிவிட்டார். எதிலும் இயங்கும் இயக்கம் இறைவன் தான் என்று வரிகளில் நிறுவியவருக்காக திருவிளையாடல் படத்தில் சிவபெருமான் அசையாமல் நின்றதும் உலகமே ஸ்தம்பித்து நிற்பதாக ஒரு காட்சியை காட்டுவார்கள். பிரபஞ்ச இரகசியமே அங்கே காட்டப்பட்டு விட்டது. அசைவுகளும் அதிர்வுகளும் நிறைந்த நடனம் இல்லாமல் உலக இயக்கம் இல்லை. அதை ஆன்மீகம் சிவ தாண்டவம் என்கிறது. விஞ்ஞானம் ஜீவ நடனம் (bio dance) என்கிறது.
“நான் அசைந்தால் அசையும்
அகிலமெல்லாமே.”
என்று கண்ணதாசன் எழுதவும் சிவாஜி அசையவும் உலகம் மீள இயங்குவாதாக காட்டுவார்கள்.
படைப்பை ஒரு நாட்டியமாக கருதியமையாலேயே இறைமையை ஒரு நடனசபாபதி என்று நாம் கூறினோம். அவன் ஒரு நாட்டியக்காரன் இல்லையென்றால், இந்த நாட்டியத்தை எப்படி அவனால் நிகழச் செய்ய முடியும்? சிவனை நடராஜன் என்று நாம் கூறும்போது, ஒரு தனிமனிதர் நடனமாடிக்கொண்டிருப்பதாக நாம் சொல்வது கிடையாது. நடராஜனின் சித்தரிப்பில், அவரைச் சுற்றிலும் ஒரு வட்டம் இருப்பதை நீங்கள் கவனித்திருப்பீர்கள். எப்போதுமே வட்டம் என்பது பிரபஞ்சத்தின் குறியீடாக இருக்கிறது. ஏனென்றால் எந்த ஒன்று நகரும்போதும், படைப்பில் நிகழும் வெகு இயல்பான வடிவம் ஒரு வட்டமாகவே உள்ளது. தானாகவே நிகழும் எதுவும் ஒரு வட்டம் அல்லது ஒரு நீள் வட்டம் (ellipsoid)– சற்றே மாறுபட்ட ஒரு வட்டம் – ஏனென்றால் ஒரு வட்டம் என்பது குறைந்தபட்ச எதிர்விசை கொண்ட வடிவம். அதனாலேயே நடராஜ மூர்த்தம் வட்ட வடிவத்திற்குள் அமைக்கப்பெற்று இருக்கிறது.
ஜெனீவா அருகே சுவிட்சர்லாந்து – பிரான்ஸ் எல்லையில் அமைந்துள்ள ஐரோப்பிய அணு ஆராய்ச்சி நிறுவனம் (CERN) உலகின் மிகப்பெரிய மற்றும் நம்மைச் சுற்றியுள்ள பொருட்களை மிகவும் நுட்பமான அறிவியல் கருவிகளைக் கொண்டு ஆய்வு செய்கிறது. நடராஜர் சிலை ஒன்று 2004ஆம் ஆண்டு ஜூன் 18 அன்று அங்கு நிறுவப்பட்டது. “சிதம்பரம் நடராஜர் ஆடிக்கொண்டிருக்கும் ஆனந்தத் தாண்டவம் என்ற கோலம் ‘காஸ்மிக் டான்ஸ்’ என்று பல வெளிநாட்டு அறிஞர்களால் அழைக்கப்படுகின்றது. அணுவின் அசைவும் நடராஜரின் நடனமும் ஒன்றாக கருதபடுகிறது. ஒட்டு மொத்த அண்டத்தின் குறியீடாக நடராஜர் அமைந்துள்ளார்,” என்பதை குறிப்பிடவே சுவிட்சர்லாந்தின் ஐரோப்பிய ஆராய்ச்சி கூடத்தில் நடராஜர் சிலை வைக்கப்பட்டுள்ளதாக கருதப்படுகிறது.
சிவனின் ஆனந்த தாண்டவமாக கருதப்படும் நடராஜ வடிவம் போல மொத்தமாக நூற்றியெட்டு தாண்டவ வடிவங்கள் இந்து சமயத்தில் உள்ளது. நடன கலையில் தலைவனாக இருந்து பரத முனிவருக்கு பரதநாட்டியம் கற்பித்த சிவபெருமான், ஆனந்த தாண்டவத்திற்கும், பிரளய தாண்டவத்திற்கும் இடையே இந்த நூற்றியெட்டு தாண்டவங்களை ஆடுகிறார். சிவபெருமான் பரதநாட்டியத்தின் கரணங்களான 108 கரணங்களையும் ஆடியதாக கூறப்படுகிறது. ஆணின் நடனம் தாண்டவம் என்று பெயர் பெறுவதால், இந்தக் கரண நடனங்கள் நூற்றியெட்டு தாண்டவங்கள் என்று அழைக்கப்படுகின்றன.
“கூத்தும் இசையும்
கூத்தின் முறையும்
காட்டும் என்னிடம்
கதை சொல்ல வந்தாயோ
பாட்டும் நானே பாவமும் நானே”
தில்லைக் கூத்தன் என்று போற்றப்படும் இறைவனின் இந்த நூற்றியெட்டு தாண்டவ வடிவங்கள் பற்றிய தேடல் மிகக் கனதியானது. ஆடல்வல்லானாகிய நடராஜப் பெருமானின் தாண்டவங்களில் 46 ஆவது கரணமான , ”விருச்சிகரேசிதம் ” என்னும் காரணத்தின் அற்புத கலைவடிவத்தின் சிலை வடிவத்தையே அட்டையில் காண்கிறீர்கள். காலைத் தேள் போல வைத்து இரு கைகளையும் ஸ்வஸ்திகமாக அமைத்து, இருமருங்கும் நீட்டி நின்று ஆடுவது விருச்சிகரேசிதமாகும். தமிழரின் பாரம்பரியங்களை எடுத்தியம்பும் சிவபூமி யாழ்ப்பாண அரும்பொருட்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள சிலையே இது.
மேலைத்தேசத்தவரும் கண்டு வியக்கும் கலை சார்ந்த எமது விஞ்ஞான அறிவியலைப் பற்றிய எமது தேடல் அதிகமாக்கப்பட வேண்டும். பொக்கிஷங்களாக நிறைய புதைந்தே இருக்கின்றன. அவற்றை வெளிக்கொணர வேண்டியது எம் ஒவ்வொருவரதும் தார்மீக கடமை.
“ஆடல் கலையே தேவன் தந்தது
தேவனின் ஆடலில்தான் ஜீவன் வந்தது…”