இதழ் 63

மரண ஊர்வலத்தில் வெடி வெடிக்கும் கலாசாரம் பேராபத்து

தமிழர் பகுதிகளில் அண்மைக்காலமாக மரண ஊர்வலங்களில் சாரை சாரையாக வெடி வெடிக்கும் கலாசாரம் அதிகரித்து வருவது மக்கள் மத்தியில் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. தம்மிடம் உள்ள பணபலத்தை காட்டும் ஒரு வழியாக இன்று மரண யாத்திரைகளில் இறந்தவர் வீட்டில் இருந்து இடுகாடு வரை வீதியெங்கும் வெடி வெடித்துச் செல்வதை பரவலாகக் காணக்கிடைக்கிறது. மரணச் சடங்குகளின் ஒரு அம்சமாக இந்த வெடி கொளுத்தும் கலாசாரம் மாறிவிடுமோ என்கிற அச்சம் ஏற்படத் தொடங்குகிறது.

பொதுவாக மகிழ்ச்சிக்கான ஒரு வெளிப்பாடாக கருதப்பட்டு வந்த இந்த வெடி வெடித்தல் எவ்வாறு மரண யாத்திரைக்கான வழியனுப்பலாகிப் போனதென்று எவருக்கும் தெரியவில்லை. வெடி வெடிப்புக்களைக் கேட்டால் இறந்தவரை மகிழ்ச்சியாக அனுப்பி வைப்பதற்காக என்று காரணம் கூறுகிறார்கள். இந்த வெடி சத்தத்தால் இறந்தவரே எழுந்து வந்துவிடுவார் என்று அந்த இரைச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் கூறுகின்றனர். பாடசாலைகள், மருத்துவமனைகள் மற்றும் நீதிமன்றங்கள் என எந்த பாகுபாடும் இன்றி வெடிகளை கொளுத்தி ஒட்டு மொத்த சமூகத்திற்கும் இடையூறு விளைவிக்கிறார்கள். வாகனங்களே ஒலி எழுப்பத் தடை விதிக்கப்பட்டுள்ள இந்த முக்கியத்துவம் மிக்க இடங்களை இம்மியளவும் இந்த வெடி வெடிப்பவர்கள் கவனிப்பதாக இல்லை. அண்மையில் இவ்வாறு மரண யாத்திரையில் வெடி கொளுத்தியதால் அச்சுவேலி பகுதியில் தீ விபத்து ஒன்றும் ஏற்பட்டுள்ளது.

ஒரு இறுதி ஊர்வலம் சென்ற பாதையை திரும்பிப் பார்த்தீர்களே என்றால் வெடிக் கடதாசிகள் நிரம்பி வழியும். எந்தவித குற்ற உணர்ச்சியும் இன்றி சுற்றுச்சூழலை இவ்வாறு மாசுபடுத்திக் கொண்டிருக்கிறார்கள். அதுமட்டுமா, ஏற்கனவே பல வழிகளில் செயற்கை இரசாயனங்கள் எங்கள் மண்ணில் வீசப்பட்டுக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் தேவையே இல்லாமல் வெடிமருந்து இரசாயனங்களையும் எமது மண்ணில் கலக்கச் செய்வது எமது எதிர்கால சந்ததிக்கு நாம் செய்யும் மிகப்பெரிய துரோகமாகும். இறந்தவர் உடலிலிருந்து நோய்க்கிருமிகள் எந்தவிதத்திலும் வெளியேறிவிடக்கூடாது என்றுதான் நவ துவாரங்களையும் அடைக்கும் வகையில் கைக்கட்டு, கால்க்கட்டு, வாய்க்கட்டு, நாடிக்கட்டு, தலைக்கட்டு, தொப்புள்க்கட்டு, முழங்கால்க்கட்டு, கோவணக்கட்டு என்று எட்டுக் கட்டுகளை எமது உடலைச்சுற்றி கட்டினார்கள். இவ்வாறு எமது மரணச் சடங்குகள் இயற்கைக்கு பாதிப்பாகாதவாறு இருந்தது என்பதை நாம் மறத்தல் கூடாது.

தன் குடும்பத்தவருக்கோ, உறவினருக்கோ அல்லது தெரிந்தவர்களுக்கோ எந்தவித இடையூறும் ஏற்படாதவாறு தாம் நன்றாக இருக்கும் போதே தம் சீவன் போய்விட வேண்டும் என்பதுதான் பலரது இறுதி விருப்பமாக இருக்கிறது. அப்படியிருக்கையில் அவர்களின் மரண ஊர்வலம் எல்லோருக்கும் இடையூறாக பாரிய சத்தங்களுடன், சுற்றாடலையும் மாசாக்கி நடந்தால் அவர்கள் ஆத்மா எப்படி சாந்தியடையும்? சாந்தியடைய வேண்டும் என்றால் அமைதியாகத்தானே ஊர்வலம் நடக்க வேண்டும்?

எமது மண்ணில் அடிப்படை வசதிகள் இன்றி வாழ்பவர்கள் நிறையப்பேர் உள்ள போது வீணாக இவ்வளவு பணத்தை வெடிக்கு விரயம் செய்தல் தர்மமாகுமா? இறந்தவர் ஞாபகார்த்தமாக எத்தனையோ நல்ல காரியங்களை செய்யலாம். பயன்பெற்றவர்கள் மனதார வாழ்த்தும் போது இறந்த ஆத்மாவும் மகிழ்ச்சி அடையும். இறந்தவர்கள் ஞாபகமாக அன்னதானங்கள் செய்யலாம். இல்லாதவர்களுக்கு புத்தாடைகள் வழங்கலாம். நிலத்தடி நீர் வற்றிக் கொண்டிருக்கும் இந்த காலத்தில் மழைநீரை உறிஞ்சி மண்ணிற்குள் அனுப்பும் தொட்டிகள் அமைக்கலாம். எல்லோரும் போற்றும் காரியங்கள் எத்தனையோ இப்படி செய்யலாமெனும் போது வீணாக விழலுக்கு இறைப்பது போல இவ்வாறு வெடி கொளுத்துவது எந்த விதத்திலும் அறச் செயலே அல்ல.

எமது சடங்குமுறையே இல்லாத ஒன்றை, எமது சூழலை மாசாக்கும் ஒன்றை கைவிட்டு, இறந்த ஆத்மாவின் இறுதி யாத்திரையை அமைதியாக யாருக்கும் இடையூறின்றி நடாத்தி, இயலுமானால் அந்த ஆத்மாவின் பெயரால் அறப்பணிகள் செய்து, இறந்த ஆத்மாவை சாந்தியடையச் செய்வோம்.

Related posts

வெற்றிகரமாக நடைபெற்ற பயிற்சிப்பட்டறை

Thumi202121

சித்திராங்கதா -59

Thumi202121

தமிழ் சமுதாயத்தில் உள ஆற்றுப்படுத்தலை மேற்கொள்வதில் ஏற்படுகின்ற சவால்கள்

Thumi202121

1 comment

Leave a Comment