இதழ் 69

ஆசிரிய சேவையைக் கைவிட்டு ஒருங்கிணைந்த பண்ணையில் சாதிக்கும் பெண்

கொழும்பு நகரில் ஓடும் இயந்திரத் தனமான வாழ்க்கை முறைக்குள் இருந்த விஜிதாவுக்கு, அவர் செய்துகொண்டிருந்த ஆசிரியர் பணியில் இருந்து வரக்கூடிய மாத வருமானம் போதுமானதாக இருக்கவில்லை. காசு கையில் வந்த அடுத்த ஐந்து ஆறு நாற்களிலேயே போன இடம் தெரியாமல் போய்விடும். மீதம் இருக்கும் இருபது, இருபத்தைந்து நாட்களைக் கடப்பது சவால் நிறைந்ததாக இருந்தது. தனி ஒரு பெண்ணாக இருந்து  மூன்று பிள்ளைகளின் கல்விக்கும், மருத்துவச் செலவுக்கும் அன்றன்றைக்குமான மேலதிகமான பணத்தேவையை பூர்த்தி செய்யவும் ஏதாவது இன்னுமொரு வேலையைச் செய்தாக வேண்டிய கட்டாயம் அவருக்கு உண்டாகியது. இதுவே பகுதிநேரமாக வெவ்வேறு வேலைகளை நோக்கி அவரை நகர்த்தக் காரணமாகவும் இருந்தது. தையல் செய்துபார்த்தார். அதிலிருந்தும் போதுமான வருமானம் வரவில்லை. வேற என்ன செய்யமுடியும் என்று  வெவ்வேறு தொழில் முயற்சிகளும் அவற்றில் இருந்து கிடைக்கக் கூடிய வருமானம்  மற்றும் தோல்விகளும் அவரை அங்குமிங்குமாக நகர்த்திகொண்டிந்தது.  2017 நெருக்கடிமிக்க  கொழும்பு நகரத்தில் இருந்து ஒரேயடியாக யாழ்ப்பாணத்துக் நகர முடிவெடுத்து பயணப்பொதிகளை ரயிலில் ஏற்றி அனுப்பிக்கொண்டு நானும் வந்து சேர்ந்தார். அங்குதான் அந்த சுவாரசியமான  பொறிதட்டின நிகழ்வு நடந்தது. அவருடைய பொதிகள் வந்துசேர்ந்த அதே ரயிலில் இருந்து சற்றுத் தள்ளி வேறு வித்தியாசமான பெட்டிகளும் இறங்குவதை அவர் கவனித்ததுடன் அது பற்றித் தெரிந்து கொள்ளும் ஆர்வத்துடன், அங்கு நின்றுகொண்டிருந்த ரயில் நிலைய அதிகாரியிடம் சுட்டிக்காட்டி ‘அவை என்ன?’ என்று கேட்டார். பெட்டிகளில் இருப்பவை கோழிக் குஞ்சுகள் என்று அவர் சொன்னதும், விஜிதாவுக்கு அதனைச் சுற்றி பல எண்ணங்கள் சுழன்றோடின. யாழ்ப்பாணத்துக்கு கொழும்பிலிருந்து தான் கோழிக்குஞ்சுகள் வருகின்றானவா! அந்தமாதிரியான நகரப்புறத்தில் பிராணிகள் வளர்ப்பது அவ்வளவு சாத்தியமில்லாத ஒன்று. இங்கு அதற்காக வெளி இருந்தும் இறக்குமதி செய்யப்படுவது அவருக்கு உறுத்தியது. அதற்கு தேவை இருக்கிறது அதை தான் ஏன் செய்யக்கூடாது என்று தோணியது. ஆனாலும் எதுவும் நினைத்த மாத்திரத்தில் சாத்தியமில்லை. அது ஒரு அசைவுப்புள்ளிதான்.

யாழ்ப்பாணத்தில் வாடகை வீடுகளில் இருக்கும் போது எதுவும் சுதந்திரமாக செய்ய முடியாது. அதுவும் பிராணி வளர்ப்பு என்று வாயைத்திறந்தாலே வாயில் அடிப்பார்கள். வீட்டுக் காரரும் சரி ஊர் காரரும் சரி. எப்ப எண்டாலும் பிரச்சனை தான். கோழி வளத்தால் நிலமெல்லாம் கறுத்துப்போகும், வீட்டுக்குள்ள கால்வைக்கேலாது, எங்களுக்கு மூக்கிருக்கு, அங்கால வருது, இங்கால வருது என்று ஏகப்பட்ட கலகக் குரல் கேக்கும்.  அதற்கு விஜிதாவுக்கு பதில் சொல்லிக் கொண்டிருக்குமளவுக்கு தெம்பிருக்கவில்லை. அதனால் தன்ர தேவைக்கு ஒரு ஐஞ்சு கோழி வளப்பம் எண்டு முடிவெடுத்து வளக்க ஆரம்பித்தார். பிள்ளைகளுக்கு சத்தான சாப்பாடு வேணும். முட்டையும் இறைச்சியும் என்கின்ற ஒரு சின்ன நோக்கம் அப்போது இருந்தது. அப்பத்தான் மூக்கு விறைச்ச மாதிரி வீட்டுக்காரனுக்கு தெரிஞ்சு கோபம் வந்திட்டு. பிறகு சமாளிச்சு இதுக்குப்பிறகு இல்லை எண்டுற ஒப்பந்தத்தோட பிரச்சனை முடிஞ்சது.

அடிக்கடி விஜிதா யாழ்ப்பாண நகரத்தில இருக்கிற தன்ர தூரத்து சொந்தக் காரர் வீட்டுக்கு போய்வாறது வழக்கம். அங்க இரண்டு தாராக்கள் நடந்து திரியும். சின்ன வயசில விஜிதாவுக்கு தாராக்களில நல்ல ஈடுபாடு இருந்தது. அந்த வயசில ஸ்கூல் யூனிபோர்மோட திரிஞ்சு தாராக்களை துரத்தித்திரிந்த  கதையை அங்கு போனதும் ஞாபகத்துக்கு வர சொல்லிக்கொண்டு இருப்பார். அண்டைக்கு அப்பிடி தன் நினைவோடையில் நீந்தி மிதக்கும்போது, வீட்டுக்காராம்மா வாய்விட்டுது, ‘இதுகாலால ஒரே ஆக்கினை நீ கொண்டு போய் வளக்கிறது எண்டால் வள’ எண்டு. ஏதோ ஒரு புளுகத்தில பெட்டியிலபோட்டு இரண்டையும் வீட்டுக்குக் கொண்டு வாசலுக்கு வரேக்குள்ளதான் அங்க ஒரு பிரச்சனை இருக்கு எண்டது ஞாபகத்துக்கு வந்தது.  மாசமாசம் வீடு சுத்திப்பாக்க வாற வீட்டுக் காரனுக்குத் தெரியாமல் தாராக்களை எப்பிடி வளக்கிறது எண்டு தவிப்பா இருந்தது. தாராவ வைச்சு என்ன செய்யிறது எண்டு ஒண்டும் தெரியாமல் வெறும் வடிவுக்கு பாக்கிறத்துக்கு, செல்லமாக மணியம்மா மணிப்பா எண்டு பெயர் வைத்து வளக்க ஆரம்பித்தார். இரண்டு கல்லு அடுக்கி குளம்வேறு கட்டிவைத்து விட்டார். பிள்ளைகள் மாதிரி உரிமை குடுத்ததால அதுகள் வீடு வாசல் எல்லாம் சுற்றி சுற்றி எச்சம் போடுவதை வாடிக்கையாக வைத்திருந்தன. இதெல்லாத்தையும் கண்டதில இருந்து திட்டிக்கொண்டு இருந்த வீட்டுக்காரன் போனாப்போகுது, ‘இது இரண்டும் தான்’ என்று அழுத்திவிட்டுப் போனார். போன அடுத்த ஆறு மாதங்களுக்குள் ஒருதொகை தாராக்கள் வளவுக்குள் உலவுவதை பார்க்க அவருக்கு சகிக்கவில்லை. பங்குக்குத் தாராக்களின் இடைவிடாத சந்தங்களினால் எரிச்சலடைந்த ஊர்காரர்கள் போகவும் வரவும் நச்சரித்துக்கொண்டே இருந்தார்கள். இந்த மாதிரி தொல்லைகள் அதிகரிக்க அதிகரிக்க தொடர்ந்து அந்த வீட்டிலேயே குடியிருக்க முடியாமல் இருந்தது. தாராக்களை யாருக்காவது இலவசமாக கொடுத்துவிடலாம் என்கின்ற முடிவுக்கே வந்துவிட்டார். அதே நேரம் வேறு வழியும் தெரியவில்லை.

இந்த நேரத்தில் தான் அந்தப் பகுதியில் வீதி அபிவிருத்தியில் பங்குவகித்துகொண்டிருந்த சீனப் பிரஜையின் கண்ணில் வாத்துக்கள் தென்பட்டன. அவர் விஜிதாவிடம் வந்து ஒரு தாராவை இரண்டாயிரம் ரூபாய் கொடுத்து வாங்கிக் கொண்டு போனார். விஜிதாவுக்கு தாராக்கள் விலைபோகும் என்பது அப்போதுதான் தெரிந்தது. அன்றைக்கு மாலையே ருசி பிடிபட்ட சீனப் பிரஜை மேலும் ஐந்து தாராக்களை வாங்கிக் கொண்டு போனார். அன்றைக்கு மட்டும் பன்னிரண்டாயிரம் ரூபாய் விஜிதா கைகளில் கிடைத்ததை வாழ்நாளில் மறக்கவே மாட்டார். ஒரே மாதத்தில் விஜிதாவின் தாரக்களை வாங்கி ஏப்பம் விட்டு விட்டார் அந்த சீனப் பிரஜை. கிடைத்த அந்த ஒரு வாடிக்கையாளரை வரும்போது ஏமாற்றக்கூடாது என்பதற்காக தாராக்களைத் தேடித்தேடி வவுனியாவரைக்கும் அலைந்து திருந்தார் விஜிதா. இப்பிடித்தான் தாரக்களின் பெறுமதி பிடிபட்டது. எங்கள் ஊரில் தாராக்களுக்கு செல்வாக்கு இல்லைதான். ஆனால் ஏற்றுமதிக்குக் கிறாக்கி இருப்பதை புரிந்துகொண்ட விஜிதா வியாபாரத்தை இன்னும் விஸ்திரமாக்க முடிவெடுத்தார். அந்த பிரஜைக்கூடாக தொடர்வுகளைப் பெற்று எல்லையை விரிவாக்கினார். இப்போது இன்னும் தேவை அதிகம் என்பதனால் தன்னுடன் இருபதற்கும் மேலானவர்களை இணைத்துக்கொண்டு அவர்களையும் வளப்படுத்தி தாராக்களை ஏற்றுமதி செய்யத் தொடங்கினார். தாய்லாந்தில் இருந்து குஞ்சுகளை இறக்குமதி செய்து அவற்றை வளப்படுத்தி மீண்டும் ஏற்றுமதி செய்யும் அளவுக்கு வளர்ந்தார்.

கோழிகளும் தாராக்களும் விலைபோகத்தொடங்கும் போது பண்ணை பெரிதாக்க வேண்டி இருந்தது. இப்போது ஆசிரியற்பணியில் இருந்து நிரந்தரமாக வெளியேறிவிட துணிச்சலாக முடிவெடுக்க முடிந்தது. வீடும் மாற்றலாகி போனபிறகு ஒருமித்து முழுநேரமாக அந்த சின்னப் பண்ணையை பெரிதுபடுத்தும் எல்லா வழிகளையும் கண்டறியத் தயாரானார்.

பண்ணைகள் பற்றிய தேடலும் அலைச்சலும் ஓரளவு அனுபவமும் அடுத்தடுத்து வெற்றிப்படிகளை ஏறிக் கடப்பதற்கு வழி செய்தன. ஆசிரியாராக இருந்து பண்ணை வளப்புக்கு என்று மாறும்போது அதற்கான ஆதரவு முதலில் அவரது குடும்பத்தாரிடம் இருந்து கிடைக்கவில்லை. நல்ல தொழில் இருந்து விடுபடல் என்பது அவர்களுக்கு முரணாக இருந்தது. சகோதரங்கள் வங்கியிலும் அரச சேவைகளிலும் ஈடுபட்டுக்கொண்டு இருந்தார்கள். இவளுக்கு எதுக்கு இந்த வேண்டாத வேலை என்று புலம்புவதும் கேட்டுக்கொண்டுதான் இருந்தது. அதுமாதிரி உள்ளூரில் பண்ணை பற்றிய பார்வை வேறு ஒன்றாக இருந்தது. ‘பண்ணையாளர்’ என்று யாரும் சொல்வதும் குறைவு, அது கௌரவமான ஒன்றாகவும் பார்க்கப்படவில்லை. கோழி வழக்கிறவர், ஆடு வளக்கிறவர், மாடு வளக்கிறவர் என்கின்ற சொற்பிரயோகங்கள் தான் இங்கு அதிகம். மதிப்புக்குறைவாக கருதும்போதும் அவரவர் கருத்துக்களைப் பகிரும்போதும் அதனைத்தாண்டி இந்தக் காதால் கேட்டு அந்தக் காதால் விட்டுவிட வேண்டும் என்று தெளிவாகவே விஜிதா இருந்தார்.

செய்ய செய்ய பண்ணை வளர்ப்பு கடல்போல விரிவதையும் தன் அனுபவத்தின் போதாமையும் அடிக்கடி அவருக்கு தயக்கத்தை உருவாக்கிக் கொண்டு இருந்தது. முன்வைத்த காலை பின்வைக்கக் கூடாது என்ற எண்ணம் இன்னும் கற்றலை அகலப்படுத்தியது.

நாளுக்கு நாள் வாடிக்கையாளர்கள் பெருகிக் கொண்டே போனபோது விஜிதா திக்குமுக்காடிப்போனார். அத்தளவுக்கு உற்பத்தி காணாது. சிறிய பண்ணையில் தொடர்ச்சியான உற்பத்திகளை பெரிய அளவில் பெறுவது என்பது அவருக்கு சவாலாக இருந்தது. பண்ணையை அதற்காகத் தயார்ப்படுத்த வேண்டும். உடனடியாகப் பலப்படுத்த வேண்டும். .நவீனப்படுத்தலுக்காக கோழிக் குஞ்சுகளை பொரித்தெடுப்பதற்க்கான கருவியை கொள்வனவு செய்ய முடிவு செய்து விலை விசாரித்தால் லட்சங்களில் கூறினார்கள்.  அந்தளவுக்கு பணத்தை செலவிடும் அளவுக்கு அவர் இருக்கவில்லை. அதற்கு மாற்றாக  தனது மகனின்  உதவியுடன் ரெஜிபோமினைக் கொண்டு அத்தகைய கருவி ஒன்றை உருவாக்கி செலவை குறைத்தார். படிப்படியாக உற்பத்தியை பெருக்கிகொண்டார்.    

சொற்ப கோழி இனங்களையே தெரிந்து வைத்திருந்த விஜிதாவுக்கு அதற்குப் பிறகும் கோழி இனங்கள் இருப்பது ஆச்சரியத்தைக் கொடுத்தது. எல்லாவறையும் தன் பண்ணையில் வளர்க்க வேண்டும் என்று தேடித்தேடி வாங்கிக்கொண்டுவந்தார். அரிதானவை இங்கு கிடைக்கக் கூடியமாதிரி இருக்கவேண்டும் என்ற எண்ணத்தின் விளைவாக இருபத்தி ஐந்துக்கும் மேற்பட்ட கோழி இனங்களை கொண்டுவந்து வளர்த்து விற்பனை செய்ய ஆரம்பித்தார். அதே போல முயல்கள், கால்நடைகள் என்று பண்ணை விரிந்தது. அதே பக்கத்தில் தாராக்களின் விற்பனை சரிவடைந்து போனது. கொரோனா மற்றும் அரசபோருளாதார சிக்கல்கள் ஏற்றுமதி இறக்குமதியில் பதிப்பை உண்டாக்கியதன் விளைவு அதுவாகும். இப்படித்தான் ஒருங்கிணைந்த பண்ணை ஒன்றில் ஒன்றைச் சார்ந்து உருவானது. ஒன்றில் இழப்பதை ஈடுசெய்யும் புத்திசாலித்தனம் விஜிதாவுக்கு அப்போது நன்றாகவே கைகூடி இருந்தது. வாங்குதல் விற்றல் என்பதற்கும் அப்பால் விலங்குகள் பறவைகளைப் பாதுகாத்தல் என்பதும் எண்ணமாக உருவாக பண்ணை மறுபக்கம் சரணாலயமாகவும் இருக்கத் தொடங்கியது. 

பண்ணை பெரிதாகும் போது பண்ணைகளில் இருக்கும் பறவைகளுக்கும் விலங்குகளுக்கும் அடிக்கடி நோய்களும் தொற்றுக்களும் ஏற்படும். சில பொழுதுகளில் அவற்றினூடாக பெரும் உற்பத்திப் பொருளாதார இழப்புக்கள் ஏற்படுவதுண்டு. இவற்றைத் தவிர்ப்பதற்கு சரியான பராமரிப்பும் நோய் முகாமைத்துவம் அவசியம். இதெல்லாம் உயிரிழப்புக்களுக்கு பிறகு அதற்கும் தயாராக வேண்டி இருந்தது. விஜிதா அதனை உள்ளூர் முறைப்படியே எதிர்கொண்டு முடிந்தவரை இயற்கை பொருட்களைக் கொண்டே தீர்வு காண முயன்று வெற்றியும் கண்டார். விஜிதாவின் கைமருத்துவம் வேலைசெய்தது. பொதுவாக முயல்களுக்கு வரக்கூடிய, முடி உதிர்வு, சொறி நோய்களுக்கு வேப்பெண்ணையுடன் தேங்காய் எண்ணெய் சேர்த்து பூசினார். கோழிக்குஞ்சுகள் பொரித்ததும் நோய்கள் ஏற்படாமல் வலுப்பட  மிளகு நச்சீரகமும் மஞ்சள் தண்ணீர் கொடுத்தார், கற்பூரவள்ளி, குப்பைமேனி போன்ற தாவரங்களை கிடைக்கிற காலத்தில் எடுத்துப் பொடியாக்கி அவற்றுக்குக் கொடுத்து அவற்றுக்கு நோய் எதிர்ப்புத்தன்மையை அதிகப்படுத்தினார். . மழை, பனி காலங்களில் கோழிகளுக்கு சளி பிடிக்கும் போது அவற்றைத்  தனிமைப்படுத்தி வெற்றிலையும் மிளகும், கற்பூரவள்ளிச் சாறு சின்ன வெங்காயம், வேப்பிலைச்சாறு போன்றவற்றைக் கொடுத்து நோயில் இருந்து காப்பாற்றினார். இப்படியாக ஆங்கில மருத்துவமே அவருக்கு தேவைப்படவில்லை. இயற்கை முறையில் ஆரோக்கியமான பறவைகள் விலங்குகள் வளர்ப்பு என்பதில் அவரிடம் எந்த மாற்றுக் கருத்தும் இருந்ததில்லை.

ஆசிரியர் தொழிலை கைவிட்டதில் அவருக்கு எந்த வருத்தமில்லை. சேவைக் காலத்துக்குப்  பிறகு பெயர் மங்கிவிடும் வேலையை விட, மனநிறைவோடு  பண்ணை வளர்ப்பில் சாதித்தது, தான் யார் என்று இந்த உலகுக்கு அடையாளம் காட்டியது ‘தனக்கு பெருமையே’ என்று விஜிதா மகிழ்ச்சியோடு மனநிறைவோடு கூறிக்கொள்ளுகிறார்.   

அவரது இந்த சவால்களைத்தாண்டிய  தொழில்முயற்சியின் வெற்றியும் அவரது கதையும்   புதிய சுயதொழில்முனைவோருக்கு உத்வேகம் தரும் ஒன்றாக இருக்கிறது.

DOCUMENTARY LINKhttps://www.youtube.com/watch?v=6AWr0zAfz4w

Related posts

பிடியெடுப்பின் போது மறைக்க முடியாத முகம்.

Thumi202121

இலக்கியம் முதல் இன்று வரை பெண்மையின் பேராற்றல்

Thumi202121

மடந்தை ஒழிப்போம் மானிடா…!

Thumi202121

Leave a Comment