இதழ் 73

125 ஆவது பிறந்த நாள் காணும் இலக்கிய கலாநிதி. பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை

இலக்கிய கலாநிதி பண்டிதமணி .சி.கணபதிப்பிள்ளை அவர்களின் 125 பிறந்த தினம் 27.06.2024 கொண்டாடப்பட்டது. நாவலர் பெருமான் வழியில் வாழ்ந்த பெருமகன் இவராவார்.

சிவபூமியாம் யாழ்ப்பாணத்தின், மட்டுவில் கிராமத்திலே சின்னத்தம்பி வள்ளியம்மை தம்பதிகளுக்கு 1899ம் வருடம் யூன் இருபத்தேழாம் திகதி அவதரித்தவர் தான் கணபதிப்பிள்ளை. இப்பொழுது சந்திரமௌலீசர் வித்தியாலயம் என்றிருக்கும், அன்றைய மட்டுவில் அமெரிக்க மிஷன் பாடசாலையில் ஆரம்பக்கல்வியை ஆரம்பித்தார். 1902இல் அன்னை வள்ளியம்மை இயற்கை எய்த உறவினர் குருகவியின் அன்னை மகேஸ்வரியின் அரவணைப்பில் வாழ்ந்தார். 1912 இல் சின்னத்தம்பி மகனையும் அழைத்துக்கொண்டு சாவகச்சேரியிலே சென்று வாழத்தொடங்கினார். அக்காலத்தே சாவகச்சேரி பொன்னையா உபாத்தியாயரிடத்தே பாடங்கேட்கும் வாய்ப்பு கிடைத்தது.

1917இல் வண்ணார்பண்ணை நாவலர் காவிய பாடசாலையில் இணைந்து சுன்னாகம் குமாரசுவாமிப் புலவரிடத்தே பாடங்கேட்கும் அரிய வாய்ப்பு கணபதிப்பிள்ளைக்கு கிடைத்தது. பாடசாலையின் முகாமையாளராயிருந்த நாவலரின் தமையனார் புதல்வர் கைலாசபிள்ளையின் தொடர்பு கல்வி வளர்ச்சிக்கு மேலும் உதவுவதாயிற்று. புலவிரின் மறைவைத் தொடர்ந்து, வித்தகம் ச. கந்தையாபிள்ளையிடமும், வித்துவான் நா. சுப்பையாபிள்ளையிடமும் பாடம் கேட்கும் வாய்ப்பு கிட்டியது. 1926இல் மதுரைத் தமிழச் சங்கத்தார் நடாத்திய பண்டித பரீட்சையில் தேர்ச்சியெய்தினார்.

1927இல் கோப்பாய் அரசினர் ஆசிரியர் கலாசாலையில் சேர்ந்த பண்டிதமணி, பயிற்சி நிறைவாகியதும் 1929இல் திருநெல்வேலி சைவாசிரிய கலாசாலை விரிவுரையாளரானார். அங்கே உயர் ஆளுமையுடைய மயிலிட்டி சுவாமிநாதன், பொ. கைலாசபதி ஆகியோருடைய நட்பு கிடைத்தது. அக்காலத்தே பண்டிதமணி நடாத்தி வந்த மும்மொழிக் காவிய பாடசாலை ஒரு பல்கலைக்கழகமென ஒளிர்ந்தது. இலக்கிய ஆர்வலராயிருந்த பண்டிதமணிக்கு மௌனதவமுனிவர் பொ. கைலாயபதியின் தொடர்பு சைவசமயம் மற்றும் சித்தாந்தம் பற்றி சிந்திக்க வைத்தது.

கலாநிலையம், அங்கிருந்து வெளியான கலாநிதி சஞ்சிகை, யாழ்ப்பாணம் ஆரிய திராவிட பாஷா அபிவிருத்திச் சங்கம் என்பன என்பன பண்டிதமணியின் பேருழைப்பை பெற்றவை. 1951ம் ஆண்டு யாழ்ப்பாணம் பரமேஸ்வராக்கல்லூரியில் இடம்பெற்ற தமிழ் விழாவில், தமிழ் நுதலியது களவு, களவியல் நுதலியது தமிழ் என்னுந் தலைப்பிற் பண்டிதமணியாற் பேசப்பட்ட பேச்சு பலரதும் பாராட்டைப் பெற்றது. 1951.05.13 தினகரன், தமிழச்சாறு என்ற தலைப்பில் ஆசிரியத் தலையங்கம் எழுதியது. பண்டிதமணியின் உரை சிறிய அளவில் சலசலப்பை ஏற்படுத்திய போதும், பண்டிதமணி என்ற கௌரவிப்பை பெறச்செய்தது. தினகரன், கல்கி இதழாசிரியர்கள் தத்தம் இதழ்களில் ஆசிரியமணி என்று பொறித்து அதனை நிலவச்செய்தனர். 1959.06.27ம் திகதி முதல் பண்டிதமணி அவர்கள் தமது பயிற்சிக் கலாசாலை விரிவுரையாளர் பதவியினின்றும் ஓய்வுபெற்றுக் கொண்டார்கள்.

நாவலர் பரம்பரையின் எச்சமாகி நின்ற பண்டிதமணி நாவலரின் சைவ வாழ்வியல், சைவாசாரக் கோட்பாடுகளின் வழி வாழ்ந்தவர். சமயக் கொள்கைகளில் இறுக்கமான பிடிப்புள்ளவராகி நின்றவர். எதையும் நுண்ணியதாகச் சிந்திப்பவர். மேடைப் பேச்சுக்கள் மூலமும், கட்டுரைகள் மூலமும் அவர் சிந்தனைகளை மக்களிடம் செல்ல வைத்தவர். நாவலர், நாவலருங் கோயிலும், ஆறுமுகநாவலர் என்னும் நூல்கள் வாயிலாகவும் நாவலர் சிந்தனைகளை பரந்துபடச் செய்தவர்.

ஶ்ரீலஶ்ரீ ஆறுமுக நாவலர் பெருமானைப் போன்றே நைட்டிக பிரமச்சாரியாக வாழ்ந்த பண்டிதமணி அவர்கள் எழுதிய கந்தபுராணம் தக்ஷகாண்ட உரைக்கு இலங்கை சாகித்திய மண்டலம் பரிசில் வழங்கி கௌரவித்ததோடு, அவரை சாகித்திய மண்டலத்தின் உறுப்பினராயும் இணைத்துக் கொண்டது.

பண்டிதமணியின் சிந்தனையிற் றோன்றியவை அனைத்தும் நூலுருப்பெறவில்லை. பெற்றவற்றை தமிழ் சமயம் என இரு தொகுதியில் அடக்கலாம். இருவர் யாத்திரிகர், இலக்கிய வழி, பாரத நவமணிகள், கம்பராமாயணக் காட்டி என்னும் கவிநயக் கட்டுரை, கம்பராமாயணக் காட்சிகள், அன்பினைந்திணை, சைவ நற்சிந்தனைகள், கந்தபுராண கலாச்சாரம், கந்தபுராண போதனை, சிவராத்திரியில் சிந்திக்கத் தக்கவை, சமயக் கட்டுரைகள், கோயில், அத்வைத சிந்தனை என்பன நூலுருப்பெற்றவற்றுள் சிலவாம்.

பண்டிதமணியின் புலமைக் களஞ்சியங்களான கட்டுரைகள் பெருமளவில் ஆங்காங்கு வெளிவந்துள்ளன. யாழ்ப்பாணம் பண்டிதமணி நூல் வெளியீட்டுச் சபை முன்னின்று இந்நற்செயலை முன்னெடுத்து வருகின்றது. கலைக்களஞ்சியத்தில் நாவலர் பற்றி எழுதியது, சிதம்பரம் கும்பாபிடேக மலரில் ஞானப்பிரகாசர் பற்றி எழுதியது, கலைமகள் மலரில் பஞ்சகன்னியர் என்னுந் தலைப்பில் எழுதிய கட்டுரையும் மிக உயர்வானவை என்று பலராலும் பேசப்பட்டவை.

கவிதைகள் புனைவதிலும் சிறந்த ஆற்றல் பெற்றிருந்த பண்டிதமணி அவர்கள் திருவூஞ்சற் பதிகங்கள் பல பாடியுள்ளார். தனங்கிளப்பு காரைத்தூ விநாயகர் திருவூஞ்சலின் காப்புச் செய்யுளை இங்கு காண்போம்.

//திருமாலும் நான்முகனுந் தேவர் கோவும்
தெய்வதநான் மறைகள்சிவா கமங்கள் யாவும்
ஒரு காலுந் தேடிமுழு துணர வொண்ணா
உமையொருபா கத்தொருவன் உவந்து தந்த
ஒருகோடும் இருசெவியும் மூன்று கண்ணும்
ஓமெனுநால் வாயைந்து கரமுங் கொண்ட
பெருமானைக் காரைதூப் பதியில் மேவும்
பெருங்கருணைத் தடங்கடலைப் பேணி வாழ்வாம்//

பண்டிதமணியின் பெயரை அலங்கரிக்க முதுபெரும் புலவர், மகாவித்துவான், சைவசித்தாந்த சாகரம் முதலான பட்டங்கள் அவரை வந்து சேர்ந்ததுண்டு. அவற்றிற் மேலாய் இலங்கை பல்கலைக்கழகம் 1978இல் வழங்கிய இலக்கிய கலாநிதி என்னும் மேன்மைமிகு பட்டம் மக்கள் வழங்கிய பண்டிதமணி என்பதுடனாகி நிலை பேறுடையதாயிற்று. 1999ம் ஆண்டில் இலங்கை அரசு பண்டிதமணிக்கு முத்திரை வெளியிட்டு கௌரவித்தது. பண்டிதமணியவர்கள், 1986.03.13 வியாழக்கிழமை தன் 86ம் அகவையில் இறையடி சேர்ந்தார்கள்.

பலநூறு தமிழாசிரியர்களின் ஞானகுருவாக விளங்கிய இலக்கிய கலாநிதி சி. கணபதிப்பிள்ளை அவர்கள் தமிழர் வரலாற்றில் என்றும் இடம்பெற்றிருந்தார்.

Related posts

பக்தி பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்ட சிவத்தமிழ்ச்செல்வியின் 16ஆவது குருபூசை நிகழ்வுகள்

Thumi202121

வினோத உலகம் – 36

Thumi202121

முன்னோர்கள் ஒளித்து வைத்துள்ள பொக்கிசங்கள்!

Thumi202121

Leave a Comment