இதழ் 75

யோகாசனம் எனும் அறிவியற்கலை பற்றிய அறிமுகமும் உண்மைகளும்…

யோகா (Yoga) என்பது இணைதல் அல்லது இணக்கமாக இருத்தல் என்ற பொருளுடைய வடமொழிச் சொல்லாகும். உடலையும் உள்ளத்தையும் இணைத்தல் முதற்படி, மனதையும் உயிரையும் இணைத்தல் இரண்டாம்படி, உயிரையும் பரம்பொருளையும் இணைத்தல் மூன்றாம்படி என்றவாறாக யோகம் உருவமைக்கப்படுகின்றது. இதனை அடைந்து கொள்ள மனதை ஒருமுகப்படுத்தல் முக்கியமானதாகும். இந்து மதத்தில் பிறப்பின் நோக்கம் பரம்பொருளுடன் இணைதலாகும். இயற்கையிலேயே மனிதனுக்கு இறைவனை நோக்கி உந்தும் மனோநிலை காணப்படுகின்றது. இவ் எண்ணத்தை ஈடேற்றிக் கொள்ள எங்களுடைய யோகிகளும், ஞானிகளும் முறைப்படுத்தி கட்டமைத்திருக்கும் ஒரு அறிவியல் அணுகுமுறையே யோகமாகும்.

குழந்தைகள் முதற்கொண்டு இல்லறத்தில் வாழும் மனிதர்கள், முதியவர்கள் உட்பட அனைவருக்கும் யோகம் அவசியம். எல்லா வகையான இன்பங்களை வாழ்க்கையில் துய்க்க யோகப்பயிற்சி உதவுகிறது. உடலும் உள்ளமும் இணைவதன் மூலமே வாழ்க்கையில் இன்பம் கிட்டுகின்றது. இதனை பதஞ்சலி முனிவர் “யோகா சித்த விருத்தி நிரோதா ” எனும் ஸ்லோகத்தில் மனதின் எண்ண அலைகளை கட்டுப்படுத்துவது யோகம் என குறிப்பிடுகிறார்.

உண்மையில் உடலுக்கானதும், உயிருக்கானதுமான நலம் பயக்கும் ஒர் நெறியே யோகாவாகும். உலகில் உள்ள ஒவ்வொரு மனிதனும் ஆரோக்கியமாகவும், அமைதியாகவும், பலவீனர்களாக இல்லாமலும் வாழ விரும்புகின்றனர். உடலையும் மனதையும் நோயின்றிக் காப்பதற்கான உபாயமாக யோகப் பயிற்சிகள் உள்ளன. யோகமானது தத்துவத் தளத்தின் ஊடாக முகிழ்ப்பெய்தி இருப்பினும் இன்று கலைமரபாக வாழ்வியல் நெறியாக வளர்ந்து வந்துள்ளது. இதனாலேயே யோக மகரிஷி கோபாலானந்தர் “முறையான பயிற்சி, முறையான உணவு, முறையான உடலைத் தளர்த்துதல், நல்ல சிந்தனையும் தியானமும், முறையான மூச்சுப் பயிற்சி என்பன உள்ளடங்கியதே யோகா” என்கிறார். யோகவானது மக்களின் உடல், உள்ளத்தை அடக்கியாளக்கூடிய அறிவியற்கலை என்பதனால் அதனை சாகாக்கலை என்பர்.

தற்காலத்தில் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப சாதனங்களின் அதிகரித்த வளர்ச்சி, மனித இனத்தை முன்னேற்றப் பாதைக்கு இட்டுச் செல்வதோடு அதற்குச் சமாந்தரமாக வாழ்வின் இருப்பிற்கு அச்சுறுத்தலாகவும் அமைகின்றன. நிலையான அபிவிருத்தி என்ற கருத்தியலுடன் பல கைங்கரியங்கள் பொதுநல மற்றும் சுயநல நலன்களின் அடிப்படையில் மேற்கொள்ளப் பட்டாலும் விழுமியங்களற்ற, முரண்பாட்டுப் போட்டி போன்றவை இயல்பாகியுள்ள சமூகத்தில் நிலைபேண் அபிவிருத்தி எத்தகையளவு பொருத்தப்பாடு உடையதாக அமையும் எனும் கேள்வி உதயமாகியுள்ளது.

யோகாசனம் இத்தடைகளை உடைக்கக் கூடிய பெறுமானத்தினைப் பெறுகின்றது. இந்தியாவை மையப்படுத்தி உலகளாவிய ரீதியில் பரவலடைந்துள்ள ஓர் அறிவியல் நெறியாகக் காணப்படுகின்றது. இந்தியாவில் புராதன காலத்தில் குருகுல முறையில் கற்பிக்கப்பட்டு வந்த யோகா மனதினைப் பற்றிய விரிவான ஆராய்ச்சி,உடல்,செயல், மன உணர்ச்சிகளின் கட்டுப்பாடு மற்றும் இயற்கைக்கும் மனிதனுக்குமான ஒத்திசைவு முதலியனவும் இணைந்த ஒரு உருவாக்கமாக உள்ளது. இதனை மன விஞ்ஞானம் (science of mind ) எனவும் சுட்டிக்கூறுவர். உலகளாவிய ரீதியில் யோகாவின் கேள்வி உணரப்பட்டதன் காரணமாகவே யோகா தினமும் விமர்சையாக நாடுகளிடையே கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது. இயந்திரமயமாக்கல் உலகத்தில் உடலுழைப்பு குறைவடைந்துள்ளதோடு பல்வேறு நோய்கள்இ பொருளாதார நெருக்கடி, அவசரப்பதற்றம் மற்றும் மன அழுத்தம் எனும் நிலையில் மனிதர்கள் நெருடலுக்கு உள்ளாவாதாலும் இதற்;கு சிறந்த தீர்வாக யோகத்தை அடையாளப்படுத்தி காட்ட முடிகிறது.

யோகத் தத்துவத்தில் மந்திரஜோகம் ,இலயயோகம், கடயோகம், ராஜயோகம் என்பன குறிப்பிடப்படுகிறது. இவற்றில் இராஜயோகம் யோக சூத்திரத்தில் விரிவாகப்பட்டுள்ளன. இராஜயோகம் மூலாதாரத்தில் இருக்கும் குண்டலினிச் சக்தியை படிமுறையின் ஆறு ஆதாரங்களின் ஊடாக சித்தத்தின் உச்சியில் இருக்கும் சிவத்தோடு இணைப்பது என்பர். நம்பிக்கை மருத்துவம் என சுட்டப்படுவதும், நரம்பு, மனம் முதலியவற்றால் பாதிப்புற்றவர்களுக்கு மந்திர சிகிச்சை அளிப்பதுவுமே மந்திரயோகத்தில் உள்ளடங்கும். உடலியல் செயற்பாடுகளை ஒழுங்குபடுத்தும் அப்பியாச முறைமையே கடயோகமாகும். என்றவாறாக யோக தத்துவ வகைப்பாடு காட்டப்படுகிறது.

யோகமானது அட்டாங்கம் எனும் எட்டு உறுப்புக்களை உள்ளடக்கியதாக விளங்குகின்றது. இதனால் அட்டாங்கு யோகம் என்பர். இவை இயமும், நியமம், ஆசனம், பிராணயாமம், பிரத்தியாகாரம், தாரணை, தியானம், சமாதி என்பனவாகும். இவற்றினைப் பற்றிய தெளிவை திருமூலர் மூன்றாம் தந்திரத்தில் தெளிவுற விளக்கியுள்ளார்.

‘இயம நியமமே எண்ணிலா ஆதனம்
நயமுறு பிராணயாமம் பிரத்யாகாரஞ்
சயமிகு தாரணை தியானஞ் சமாதி
அயமுறும் அட்டாங்குமாவது மாமே”

எனும் திருமந்திர பாடலில் கண்டு கொள்ள முடிகிறது. இதனில் முதல் உறுப்பு இயமம் ஆகும். இயமம் என்பது தீயவற்றை செய்யாமல் விடுதல் ஆகும். இது யோக வழியின் முதல் நிலை. இயமத்தை மேற்கொள்பவர் உயிர்களைக் கொல்லார், பொய் உரைக்கார், திருடார், பிறரை மதித்து நடப்பார், அடக்கமுடையவராகவும், நடுநிலைமையில் நிர்க்க வல்லவர், பகிர்ந்து கொள்ளும் பண்பு கொண்டு, குற்றம்,கள், காமம் தவிர்த்து வாழ்வார்கள். என்பதை திருமந்திரம் “கொல்லான் பொய் கூறான் களவிலான் எண்குணம்…..” எனும் பாடலில் விளக்கி நிற்க்கின்றது.

‘தூய்மை அருளூண் சுருக்கம் பொறை செவ்வை
வாய்மை நிலைமை வளர்த்தலே மற்றிவை
காமங் களவு கொலையெனக் காண்பவை
நேமியீ ரைந்து நியமத்த னாமே…….”

எனும் பாடலில் தூய்மை, கருணை, சுருங்கிய உணவு, பொறுமை, நேர்மை, உண்மை, உறுதியுடைமை ஆகியவற்றை கடைப்பிடிப்போம். காமம், களவு, கொலை ஆகியவற்றை விலக்குவோம் இவை அனைத்தும் நியமத்து இருப்பவர்கள் மேற்கொள்ள வேண்டிய விஷயங்களாகும். என்கின்றார் திருமூலர். அதாவது ஜோகிகள் கடைபிடிக்க வேண்டிய நியமங்களை விளக்கி காட்டியுள்ளார்.ஆசனம் என்பதை திருமந்திரம் ஆதனம் என சுட்டுகின்றது. ஆசனம் என்பது இருக்கை முறையாகும். இதனாலேயே “இருக்க இருக்க இருக்கை தெளியும்” என குறிப்பிடப்படுகிறது. 126க்கும் மேற்பட்ட ஆசனங்கள் காணப்படுவதாக யோக வாழ்வு இதழ்(ஆத்மா-1 வாழ்வு -4) குறிப்பிடுகின்றது. பிராணயாமம் என்பது மூச்சு பயிற்சியாகும். இது பிராணனை(உயிர் வாயு) பற்றிய அறிவு மற்றும் அதை நமது வயப்படி அடக்குதல் என்று பொருள்படும். இதனையே திருமந்திரம் 569வது பாடலானது

‘வளியினை வாங்கி வயத்தில் அடக்கில்
பளிக்கொத்துக்காயம் பழுக்கினும் பிஞ்சாம்
தெளியக்குருவின் திருவருள் பெற்றால்
வளியினும் வேட்டு வளியனும் மாமே”
எனக் குறிப்பிடுகின்றது.
பிரத்தியாகாரம் என்பது மனத்தை உள்நோக்கித் திருப்பும் பயிற்சியாகும். இதனை திருமூலர்

‘கண்டு கண்டுள்ளே கருத்துற வாங்கிடிற்
கொண்டு கொண்டுள்ளே குணம்பல காணலாம்”

‘பண்டுகந் தெங்கும் பழுமுறை தேடியை
இன்று கண்டிங்கே இருக்கலு மாமே”

எனும் பாடலில் மனத்தை வெளியே செல்ல விடாமல் தடுத்து உள்நோக்கி பார்த்தால் உள்ளே நமது இயல்பான ஒளி மிகுந்த குணங்களைக் காணலாம். பழங்காலத்திலிருந்து எங்கெங்கோ விரும்பித் தேடப்படும் பரம்பொருளை நாம் இன்றே இங்கே நமக்குள்ளே காணலாம் என்கிறார். தாரணை என்பது உந்தி, இதயம், உச்சி எனும் மூவிடத்தில் மனதை நிலை நிறுத்தலாகும். கட்டுப்படுத்தப்பட்டு எங்கும் மனதை அலைபாயாது அசைவற்றிருக்கும் சித்தம் எனவும் குறிப்பிடப்படுகிறது. 12 வினாடிகள் சித்தம் செய்யப்படாமல் இருந்தால் ஒரு தாரணை எனப்படும். 12 தாரணிகள் சேர்ந்ததே தியானம் ஆகும். இதனை திருமந்திரத்தில்

‘அரித்தவுடலை ஐம்பூதத்தில் வைத்து
பொருத்தஜம் பூதம் சத்தாதியிற் போந்து
தெரித்த மனாதி சித்தாதியிற் செல்ல
தரித்தது தாரனை தற்பரத்தோடே”

என்னும் பாடலில் ஆன்மா சிவத்துடன் பொருந்தி இருப்பதே தாரணை என்கிறார்.தியானம் என்பது உணர்வற்று, உடலற்று, சிந்தனையற்று, நினைவற்று, பாசமற்று, பார்ப்பது பார்க்காததுமாகி இரண்டும் அற்று பிரம்மத்திடம் மனமும் புத்தியும் லயித்திருப்பது இருப்பதே. அதாவது இடையறாத சிவ சிந்தனையுடன் இருத்தல் தியானம் எனப்படும்.ஆன்மா இறைவனுடன் ஒன்றுதலே சமாதியாகும். இதுவே இறுதி படி நிலை ஆகும். இதனை

‘சமாதிய மாதியில் தான் செல்லக் கேட்கின்
சமாதிய மாதியில் தாம் எட்டு சித்திக்கும்
சமாதியமாதியில் தங்கினோர்க்கு அன்றே
சமாதிய மாதி தலைப்படும் தானே “

எனும் பாடலில் திருமூலர் அட்டக யோகத்தில் குறிப்பிட்ட படிமுறைகளை தவறாது கடைப்பிடித்தால் அடையும் நிலை என்கின்றார். இவ்வாறாக எட்டு படிமுறைகளும் ஆரோக்கியமான யோகத்திற்கு முக்கியமானவை ஆகும்.

யோகத்தின் பலனை படிப்படியாக அடையும் முறைகளை காலாதிகாலமாக எம் முன்னோர்கள் எடுத்துக் கூறி வந்தமையினை காண முடிகின்றது. மேல் குறிப்பிட்ட அட்டாங்கு யோக முறையிலாக திருமூலர் தெளிவுற விளக்கி உள்ளதோடு வள்ளலார் ராமலிங்கம் “ஜோதிமயமாக எங்கும் நிறைந்த இறைவன் நமது உடலின் உள்ளேயும் ஜோதிமயமாக தலை நடுவில் சிற்றம்பலத்தில் இருக்கும் அருட்பெருஞ்ஜோதியை வழிபடுவதின் மூலமாகத்தான் இறை அனுபவம் பெற முடியும்” என்கிறார். அதாவது உடல், மூளை, மனம் மூன்றையும் ஒருங்கிணைத்தலே யோகமாகும் என்கிறார். சமஸ்கிருதத்தில் உள்ள பதஞ்சலி முனிவரின் “யோகா அபிராசம்” என்னும் நூலிலும் “ஆசனம், பிராணயாமம், தியானம் செய்வதன் மூலம் ஆரோக்கிய வாழ்க்கையை பெறலாம்” எனும் கருத்து நிலவுவதாக குறிப்பிடப்படுகிறது. மேலும் பகவத் கீதையில் கிருஷ்ணன் யோகத்தை பற்றி அர்ஜீணனுக்கு கூறும் போது

‘அளவு கடந்து உண்பவனுக்கும், அறவே உண்ணாதவனுக்கு, மிகைப்பட உறங்குபவனுக்கு, மிகைப்பட விழித்திருப்பவனுக்கும் யோகம் இல்லை” என்கின்றார்.

‘புத்தியிலே சார்பு எய்தியவன் இங்கு நற்செய்கை, தீய்செய்கை இரண்டையும் துறந்து விடுகிறான். ஆதலால் யோக நெறியிலே பொருந்துக. யோக செயல்களிலே திறமையாகு”

என கீதையில் (அத்த 2.50 ) யோகம் கர்மங்களில் வல்லமை உடையது ஆகையால் யோகங்களில் நின்று தொழில்களை செய் என்கிறார் கிருஷ்ணப் பரமாத்மா என்றவாறாக நேர்த்தியான நூல்களின் யோகப் பார்வை காட்டப்படுகிறது.

யோகப் பயிற்சி தேகப்பயிற்சி (உடற்ப்பயிற்சி) என்பவற்றில் மக்களிடையே ஒருமித்த கருத்து காணப்படுகின்றது. இது உண்மையில் தவறான ஒன்றாகும். யோகப் பயிற்சிக்கு போக பயிற்சிக்கு வேறுபாடுகள் அதிகளவாக காணப்படுகின்றன. அதாவது இரண்டையும் ஒருவர் செய்யக்கூடாது மூளையை உபயோகித்து வேலை செய்பவர்களுக்கு யோகாசனம் சிறந்த வரப்பிரசாதம். “தேகப்பயிற்சியாளர்களுக்கு நோய் வரும் யோகப் பயிற்சியாளர்களுக்கு நோய் வராது” என்கிறார் ஆண்டியப்பன்.

தேகப்பயிற்சிக்கு அதிக அளவு உணவு தேவை யோகப் பயிற்சிக்கு குறைந்த அளவு உணவு எடுத்து கொள்ளல் போதுமானது. யோகப் பயிற்சி மூலம் தவறான பழக்கவழக்கங்களை நீக்க முடியும் தேகப்பயிற்சியில் சாத்தியமற்றதாகும். தேகப் பயிற்சி கோப குணத்தையும், மூக்க குணத்தையும் ஏற்படுத்தும் யோகப் பயிற்சி சாந்த குணத்தை ஏற்படுத்தும். யோகப் பயிற்சியால் உடலில் நோய் தடுப்பு சக்தி அதிகமாகும் .தேகப் பயிற்சிக்கு நோய் தடுக்கும் சக்தி கிடையாது, தேகப் பயிற்சி மணிக்கணக்காக செய்ய வேண்டும். யோகப் பயிற்சி 15 நிமிடம் செய்தால் போதுமானது. எந்த வயதிலும் யோகப் பயிற்சி செய்யலாம் தேகப்பயிற்சி ஒரு குறிப்பிட்ட வயதுக்கு மேல் செய்ய முடியாது., தேகப் பயிற்சிக்கு கருவிகள் இடம் வேண்டும். யோகப் பயிற்சிக்கு இவை தேவை இல்லை.தேகப் பயிற்சியில் சக்தி விரயம். யோகப் பயிற்சியில் சக்தி கூடும்., யோகப் பயிற்சியில் வெளித்தசை, உள்ளுறுப்புகள் பலப்படுத்தப்படும் தேகப்பயிற்சி வெளி தசைகளுக்கு மட்டும் உகந்தது. தேகப் பயிற்சியால் களைப்பு ஏற்படும் யோகப் பயிற்சியினால் உற்சாகம் ஏற்படும். என்றவாறாக வேறுபாடுகளை குறிப்பிட்டலாம்.

யோகாசனமானது பூரண அறிவு விளக்கங்கள் கொண்டு செய்யப்பட வேண்டும். அதனை சிறந்த குருவிடம் முறைப்படி கற்றுக்கொள்ள வேண்டும். யோகம் செய்பவன் குரு சொற்படி ஒழுக்கமானவனாக, சீராக பாடங்களைப் பயிற்சி செய்பவனாக இருக்க வேண்டும். அப்போதுதான் யோகத்தில் முன்னேற்றம் அடைய முடியும். ஜோகாவானது உடல், உள, ஆன்மிக ரீதியிலும் பல்வேறு நன்மைகளை அடைவதற்கு உதவுகின்றது. அதாவது ஆயுளை அதிகரிக்க செய்கிறது, ஞாபக சக்தியை அதிகரிக்கிறது, நோயற்ற வாழ்விற்கு வழி கூறுகிறது, உடலை அழகாக வனப்புரச் செய்கிறது, பிணிகள் எதையும் குணப்படுத்துகிறது, ஆண்மையை அதிகரிக்கச் செய்கிறது, மனதை நல்வழியில் செலுத்துகிறது, சோர்வையும், சோம்பலையும் ஒழிக்கிறது, மனதிற்கு சாந்தியை கொடுக்கிறது, இளமையுடன் பொலிவுடன் ஆரோக்கியமாக வாழ உதவுகிறது, தன்னம்பிக்கையை வளர்க்கிறது, உடலில் சீரான இரத்த ஓட்டம் உடல் உறுப்பு செயற்பாடுகளுக்கு உதவுகின்றது.

எனவே யோகம் பற்றிய தெளிவூட்டல்களும் விழிப்புணர்வும் எங்களிடத்தே அவசியமாகின்றது. மேற்குலக மருத்துவச் சந்தையால் ஏற்படும் விபரீதங்களை தடுப்பதற்கு எம் பண்பாட்டு வெளிப்பாடாக உருவெடுத்துள்ள யோகாசனம் பற்றிய கருத்துருவாக்கத்தை மக்களிடம் சென்றடையச் செய்யவேண்டிய பொறுப்பானது எங்கள் தேசத்தில் வாழும் சமுதாயப்படுத்தல் சக்திகளிடம் உள்ளதென்பது உணரப்பட வேண்டும் அவ் வகிபங்கினை உணர்ந்தே யோகாசனம் பற்றிய இக் கருத்துப்பதிவினை வரைந்துள்ளேன். தோடர்ந்தும் இவ் வகையான கோட்பாட்டுக்கருத்தியல் மூலமும் நடைமுறை விளக்கங்கள் மூலமும் உங்களோடு கருத்துப் பரிமாற்றத்தை மேற்கொள்வேன்.

Related posts

என் கால்கள் வழியே… – 08

Thumi202121

வைத்திய நிபுணர் சரவணபவாவுக்கு யாழ். விருது வழங்கி கௌரவிப்பு

Thumi202121

புதினம் கேட்டியளோ…

Thumi202121

Leave a Comment