இதழ் 75

ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்று இல்லை

நோய் தீர்க்க வல்ல ஆடல்வல்லானை வைத்தியநாதன் என்று போற்றுகின்ற எமது பண்பாடு நோய் தீர்க்கும் மருத்துவர்களை வைத்தியர்கள் என்று அழைத்து இறைவனுக்கு ஒப்பானவர்கள் எனப் போற்றுகிறது என்றால் மருத்துவத்துறைக்கும் மருத்துவர்களுக்கும் எமது பண்பாட்டு கலாசாரத்தில் அன்று தொட்டு இன்றுவரை வழங்கப்படும் முக்கியத்துவம் உணர்கூடியதாக இருக்கும். இந்தப் போற்றுதல் வேறு எந்த மொழியிலும் இனத்திலும் காணுதல் அரிது.

மனிதர்களுக்கு தொல்லை அளிக்கும் மொத்த நோய்கள் 4448 என்று அகத்தியர் முதலான பதினெண் சித்தர்கள் கண்டறிந்தபடி சித்த மருத்துவத்தில் வகுக்கப்பட்டுள்ளது. இந்த பிணிகளைத் தீர்க்க திருவுளங்கொண்டு கயிலாயத்திலிருந்து இறைவி தைலப் பாத்திரமும், சஞ்சீவியும், வில்வமரத்தடி மண்ணும் ஏந்திவர உடன் இறைவன் தாமே மருந்தாகவும், மருத்துவராகவும் இந்தப் பூமிக்கு வந்ததாக சைவாகமங்கள் கூறுகின்றன. ஆக, ஆதியில் வைத்தியம் பார்த்தவர் வைத்திய நாதனான இறைவனே என்றும், அதன் தொடர்ச்சியாக வைத்தியம் பார்த்தவர்களை/ பார்க்கின்றவர்களை வைத்தியநாதனான சிவப் பரம்பொருளாகவே பார்க்கும் வழக்கம் எங்களுடையது. இதனால்த்தான் எந்த சபையிலும்/ கூட்டத்திலும் சரி வைத்தியர்களுக்கு முன்னுரிமையும் உச்ச மரியாதையும் அளிக்கப்பட்டு வருகிறது.

ஆனால் சமீபகாலமாக மருத்துவத்துறையின் மகத்துவமும் புனிதத் தன்மையும் சற்றே அதன் உயர் நிலையில் இருந்து இறங்கி வரத் தொடங்கியிருக்கிறது. பணம் ஈட்டும் வழிகளை வியாபாரம் என்பார்கள். வருமானம் கருதாத தொண்டை சேவை என்பார்கள். மருத்துவ சேவையை மருத்துவ வியாபாரமாக சிலர் எண்ணி அதற்குள் ஊடுருவி அதன் பாதையை மாற்றத் தொடங்கிவிட்டார்கள். இதனால் பணம் கறக்கும் தனியார் வைத்தியசாலைகள் மூலைக்கு மூலை உருவாக ஆரம்பித்து விட்டன. வியாதிகளை உருவாக்கி எதிர் தேசங்களை தமது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க வல்லரசுகள் மருத்துவ யுத்தம் செய்து கொண்டிருப்பதாக கூறுகிறார்கள். மருத்துவத்துறை வளர்ந்து கொண்டுதான் இருக்கிறது. அதி உச்ச தொழில்நுட்பங்களை பயன்படுத்தி நோய்களை கண்டறிந்து குணப்படுத்தும் சிகிச்சை முறைகள் கண்டுபிடிக்கப்பட்டு வருவது மறுப்பதற்கில்லை. ஆனால் அதற்கு நிகராக புதுப்புது நோய்களும் வளர்ந்து வருகின்றன.

ஒருபானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் இல்லை. எனவே ஒரு சில மருத்துவ ஒழுக்கம் அற்ற மருத்துவர்களால் பல ஒழுக்கம் நிறைந்த அர்ப்பணிப்பு மிக்க மருத்துவர்களை நாம் உதாசீனம் செய்து விடக்கூடாது. உயரிய சேவை செய்யும் மருத்துவர்களை மனம் நொந்தால் அது மகாபாவம். எனவே, தவறு இழைப்பவர்களை வைத்து ஒட்டு மொத்த வைத்தியர்களையும் உதாசீனம் செய்ய கூடாது. அதற்கு மிகச்சிறப்பான உதாரணமாக யாழ் மாநகர சபை இவ்வருடம் செயற்பட்டிருக்கிறது. நல்லூர்க் கந்தன் பெருந் திருவிழாவை முன்னிட்டு யாழ்.மாநகர சபையின் சைவ சமய விவகாரக் குழுவால் வருடந்தோறும் வெளியிடப்பட்டு வரும் நல்லைக்குமரன் மலரின் 32 ஆவது இதழ் வெளி யீட்டு விழாவும் யாழ் விருது வழங்கும் நிகழ்வும் நடைபெற்றது. இதன் போது வைத்திய நிபுணர் சரவணபவாவுக்கு யாழ். விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. எமது மக்களின் மகப்பேற்றுக்கு தன்னாலான மருத்துவ உதவிகளை வழங்கும் வைத்தியர் சரவணபவா அவர்களுக்கு இவ்விருது தாமதமாக கிடைத்திருப்பதாக பலர் கூறுகிறார்கள். ஆனால் வைத்தியத்துறையின் சேவைத் தன்மை கேள்விக் குறியாக உள்ள இத்தருணத்தில் உன்னத சேவையாளன் ஒருவருக்கு கிடைத்த யாழ் விருது எனும் அங்கீகாரம் உரிய காலத்தில் கிடைத்திருப்பதாகவே துமி கருதுகிறது. மருத்துவ சேவையை தன்னலமற்று புரியும் ஏனையவர்களுக்கு இது ஒரு முன்னுதாரணமாக இருக்கும்.

யாழ்ப்பாணம் இந்து ஆரம்பப் பாடசாலையில் ஆரம்பக் கல்வியையும், யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் இடைநிலைக் கல்வியையும் கற்று கொழும்பு பல்கலைக்கழக மருத்துவபீடத்திற்குத் தெரிவாகி வைத்தியரான இவர் லண்டன் சேர்ஜேம்ஸ் பஜட் பல்கலைக்கழகத்தில் மகப்பேற்றுத் துறையில் நிபுணத்துவம் பெற்றார். கிளிநொச்சி வைத்தியசாலையில் பெண் நோயியல் விடுதியை ஆரம்பித்து பாமரப்பெண்களும் மருத்துவ சேவையைப் பெற்றுக் கொள்ள வித்திட்ட இவர் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் மகப்பேற்றுப் பெண் நோயியல் விடுதியை ஆரம்பித்துப் பல வருடங்கள் பெண் நோயியல் வைத்திய நிபுணராகச் சிறப்பாகச் சேவையாற்றினார். அதுமாத்திரமன்றி 2014 ஆம் ஆண்டு முதல் நெடுந்தீவு, நயினாதீவு, புங்குடுதீவு போன்ற கஷ்டப் பிரதேசங்களில் அமைந்துள்ள வைத்திய சாலைகளிலும், 2018 ஆம் ஆண்டு முதல் காரைநகர், மண்டைதீவு, ஊர்காவற்றுறை ஆகிய பிரதேச வைத்திய சாலைகளிலும் மாதமொரு தடவை தனது வைத்திய சேவையை வழங்கி வருகின்றார். தற்போது யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் மகப்பேற்று பெண் நோயியல் வைத்திய நிபுணராக விளங்கி சீரிய சேவைகள் புரிந்து வருகிறார்.

குறித்த நிகழ்வில் வைத்திய நிபுணர் தனது வாழ்க்கைத் துணைவியுடன் இணைந்து உயிரிய விருதான யாழ் விருதைப் பெற்றுக் கொண்டார். இதேவேளை, யாழ். விருது 2006 ஆம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போது வைத்தியர் சரவணபவா கூறுகையில், யாழ். போதனா வைத்தியசாலையில் தற்போது மகப்பேற்று விடுதிகள் இல்லை. இது மிகவும் துன்பகரமான செய்தி. தற்போது காணப்படும் விடுதிகள் மகப்பேற்று விடுதிகளுக்கான போதிய வசதிகளுடன் கூடி ய விடுதிகளல்ல. கடந்த 2013ம் ஆண்டு போதனா வைத்தியசாலை மகப்பேற்று விடுதி இடிக்கப்பட்டது. பல முயற்சிகள் எடுத்த போதும் இன்றுவரை மகப்பேற்று விடுதி மீள கட்டப்படவில்லை. இந்த வருடத்தின் தொடக்கத்தில் சுகாதார அமைச்சர் யாழ்.போதனா வைத்திய சாலைக்கு வந்திருந்தபோது மகப் பேற்று விடுதியை மீள அமைத்துக் கொடுக்குமாறு கோரிக்கை விடுத்தேன். அதற்கான எந்தவொரு முயற்சிகளும் எடுக்கப்படவில்லை. யாழ். போதனா வைத்தியசாலையில் மகப்பேற்று விடுதி அமைக்கப்படாமை தமிழ் சமூகத்திற்கு ஆரோக்கியமான ஒன்றல்ல. எனவே உழைப்பவர்கள் அனைவரும் ஒன்றுபட்டு சிறு தொகை நிதி உதவியாவது வழங்கி மகப்பேற்று விடுதியை மீள கட்டியெழுப்புவதற்கான ஆரம்ப நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும். எனவும் யாழ் போதனா வைத்தியசாலையில் புதிய மகப்பேற்று விடுதி அமைக்கப்படாவிட்டால் அடுத்த வருடம் ஜனவரி மாதம் உணவுத் தவிர்ப்பை மேற்கொண்டு உயிர் துறப்பேன் எனவும் என யாழ்.போதனா வைத்தியசாலையின் பெண் நோயியல், மற்றும் மகப்பேற்று வைத்திய நிபுணர் ந.சரவணபவா கூறியுள்ளார்.

எனவே இவர் போன்ற பல அர்ப்பணிப்புள்ள மருத்துவர்களுக்கு மட்டும் சமூகம் உயர் கௌரவங்களை வழங்க வேண்டும். அப்போதுதான் அல்லாதவர்கள் திருந்துவார்கள். கொண்டாட வேண்டியவர்களை கொண்டாடும் அதே நேரம் கண்டிக்க வேண்டியவர்களை கண்டியுங்கள். அப்புறப்படுத்த வேண்டியவர்களை அப்புறப்படுத்துங்கள். ஏனென்றால் ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்று இல்லை.

Related posts

வினோத உலகம் – 38

Thumi202121

மறக்கப்படுமா மன்னாரின் மட்பாண்ட கைத்தொழில்..?

Thumi202121

யோகாசனம் எனும் அறிவியற்கலை பற்றிய அறிமுகமும் உண்மைகளும்…

Thumi202121

Leave a Comment