இதழ் 78

யாழில் உடுவில் மகளிர் கல்லூரிக்கு வயது 200!

-பெண் விடுதலையின் ஓர் மைற்கல்-

இன்று ஆட்சி அதிகாரத்தில் பெண்கள் முதன்மைப்படுவதையும் முதன்மைப்பட வேண்டும் என்ற வாதங்களையும் உலகம் ஏற்றுள்ளது. அதற்கான சான்றுகளையும் அவதானிக்க கூடியதாக உள்ளது. எனினும் ஒரு காலத்தில் பெண்கள் வீட்டுக்குள் முடக்கப்பட்ட காலங்களும் இருந்தது. ஒருவகையில் பொத்தி பாதுகாக்கப்பட்டர் என்ற வாதமும் உண்டு. மறுதளத்தில் சுதந்திரங்கள் முடக்கப்பட்டு சிறை வைக்கப்பட்டார்கள் என்ற வாதங்களும் காணப்படுகிறது. எனினும் சமகாலம் நிலைமைகள் மாறி விட்டது. வரலாற்றை புதுப்பிக்க முடியவில்லை. எனினும் உலகாளும் அமெரிக்க அதிகாரத்தை கைப்பற்ற மூன்று பெண் வேட்பாளர்கள் போட்டியிட்டார்கள் என்பதே முன்னேற்றமே ஆகும். எனினும் பெண்களை ஆட்சியதிகாரத்தில் அமர்த்துவதில் உலகிற்கு முன்னுதாரணம் இலங்கைத்தீவு என்பதில் இலங்கையர்களுக்கு என்றும் பெருமையே ஆகும். உலகின் முதல் பெண் பிரதமராக ஸ்ரீமாவோ-உம், உலகின் முதல் பெண் ஜனாதிபதியாக சந்திரிக்கா-உம் வரலாறு பதிவு செய்கின்றது. இத்தகைய வரலாறுகளை இலங்கையின் கல்வி நிலை வளர்ச்சியே உறுதி செய்தது எனலாம். அத்தகையதொரு வரலாற்று பதிவிலேயே 2024ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் உடுவில் மகளிர் கல்லூரி 200வது ஆண்டை நிறைவு செய்கின்றது. இது வெறுமனவே கல்வி நிறுவனம் ஒன்றின் வரலாற்றை மாத்திரம் பதிவு செய்யவில்லை. ஓர் சமுக மாற்றத்தையே குறித்து நிற்கின்றது.

புதுமைப்பெண்கள் என்ற கவிதை தலைப்பில் முண்டாசு கவிஞர் மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் வரிகளில்,

‘சாத்தி ரங்கள் பலபல கற்பாராம்;

சவுரி யங்கள் பலபல செய்வராம்;

மூத்த பொய்ம்மைகள் யாவும் அழிப்பராம்;

மூடக் கட்டுக்கள் யாவுந் தகர்ப்பராம்;

காத்து மானிடர் செய்கை யனைத்தையும்

கடவு ளர்க்கினி தாகச் சமைப்பராம்;

ஏத்தி ஆண்மக்கள் போற்றிட வாழ்வராம்;

இளைய நங்கையின் எண்ணங்கள் கேட்டீரோ!”

எனக்குறிப்பிடுவார். பழமைகள் தகர்த்தது புதுவிதி எழுதிட கல்வி எனும் ஆயுதம் கூரானது. அக்கூரிய ஆயுதம் ஒன்றின் பயணம் 200 ஆண்டை தொட்டுள்ளது பெருமைக்குரிய பதிவாகும்.

பெண்கள் வீட்டுக்குள் முடக்கப்படுவது, குறிப்பிட்ட ஒரு பிராந்தியத்திலோ அல்லது குறிப்பிட்ட ஒரு சமூகத்திலோ சுருக்கப்படவில்லை. முழு உலகிற்கும் பொதுவானதொரு இயல்பாகவே ஒரு காலத்தில் காணப்பட்டது. எனினும் நிலைமைகள் இன்று பல நிலைகளில் மாறிவிட்டது. அம்மாற்றத்திற்கான விதைகளில் ஒன்றே 1824ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தின் உடுவிலில் அமெரிக்க மிசனரியை சேர்ந்த ஹரியற் வின்சிலோ அம்மையாரால் ‘உடுவில் மகளிர் கல்லூரியாக’ இடப்பட்டது. இது தற்போது யாழ்ப்பாணக் கல்லூரியாக அடையாளப்படுத்தப்படும் அன்றைய மட்டக்கோட்டை செமினரிக்கு எதிர் பாகமாக நிறுவப்பட்டதாகவும் விபரிக்கப்படுகின்றது. ஆரம்பத்தில் இப்பாடசாலை ‘பெண்கள் மத்திய கல்லூரி’ என்றே அழைக்கப்பட்டுள்ளது. இலங்கையில் குறிப்பாக வடக்கு புலத்தில் மிசனரிகளின் உள்ளகப் போட்டியிலும், இந்து-கிறிஸ்தவ வெளியக போட்டியிலும் கல்விக்கூடங்களை உருவாக்கிய காலமாகும். இவ்வரிசையின் முன்னணியில் இலங்கையின் வடக்குப் பகுதியில் உள்ள உடுவில் என்ற சிறிய கிராமத்தின் ஒரு பகுதியாக உடுவில் மகளிர் கல்லூரி உள்ளது. ஹரியற் வின்சிலோ அதன் முன்னோடி முதல்வர். அக்காலப்பகுதி பெண் கல்வி ஊக்குவிக்கப்படாத காலமாக அமைந்திருந்தது. குமரி ஜெயவர்த்தனவின் ‘மூன்றாம் உலக நாடுகளில் பெண்ணியவாதம் மற்றும் தேசியவாதம்’ (Feminism and Nationalism in Third World) என்ற நூலில் பிரித்தானிய் குடியேற்ற நாட்டுச் செயலாளர் சேர் ஜேம்ஸ் எமர்சன் டென்னன்ட் (Tennent) கூற்றுப்படி, ‘மாணவர்கள் முதலில் குறைந்த சாதி மற்றும் ஏழைகளே இணைந்தார்கள். ஆனால் பள்ளி பின்னர் மாவட்டத்தில் சொத்து மற்றும் செல்வாக்கின் பெற்றோரின் மகள்களை ஈர்த்தது.’  ஆரம்பத்தில் ஏழைகளிடம் ஈர்க்கப்பட்டது என்பதை கடந்து வலிந்து இணைக்கப்பட்டார்கள் என்பதுவே நிதர்சனமான பார்வையாகும். 1841 வாக்கில், பிரிட்டிஷ் சர்ச் மிஷனரி சமுகம் நல்லூரில் (யாழ்ப்பாணம்) பெண்கள் உறைவிடப் பள்ளிக்கூடத்தை தொடங்கியது. மேலும் மாணவர்களுக்காக பிரச்சாரம் செய்ய வேண்டிய அவசியமில்லை. பள்ளியில் சேர விண்ணப்பித்த ஏராளமானவர்கள் இருந்தனர். இவற்றுக்கான அடிப்படையை உடுவில் மகளிர் கல்லூரியும் அதன் நிறுவுனர் ஹரியற் வின்சிலோ அம்மையாருமே வழிகோலினார்கள் என்பது மறுக்க முடியாத நிதர்சனமாகும்.

அமெரிக்கன்மிஷனைச் சேர்ந்த வண. உவின்சிலோ அவர்களும் அவரது மனைவி திருமதி. ஹரியற் வின்சிலோ இணைந்து உடுவில் பெண் விடுதிப் பாடசாலையின் ஆரம்பகர்த்தாக்களாகத் திகழ்கின்றனர். 1820இல் உடுவிலில் பணியாற்றுவதற்கு வருகைதந்த இவர்கள் ஒல்லாந்தரது தேவாலயத்திற்கு அருகில் இருந்த வீட்டில் குடியமர்ந்து அவ்வீட்டு விறாந்தையிலே நாளாந்தப் பாடசாலையை நடாத்தி வந்தனர். அந்நாட்களில் ஹரியற் அம்மையாரிடம் இரு பெண்கள் நாள் தோறும் கற்றுவந்ததாகவும், ஒருநாள் அவர்கள் வீடு செல்லவேண்டிய நேரத்தில் புயல் வீசியதனால் வீடுசெல்லாது அங்கேயே தங்கிவிட்டனர். அவ்வேளை அப்பிள்ளைகளிலொன்று ஹரியற் அம்மையார் கொடுத்த உணவை வாங்கி உண்டது. அதை அறிந்த அப்பிள்ளையின் தந்தை, ‘சாப்பாட்டினைச் சாப்பிட்டு சாதிக் கட்டுப்பாட்டை அழித்தபடியால், அவர்களை ஏற்றுத் தனது வீட்டில் வசிக்க இடமளிக்க முடியாதெனவும், அவளுக்கு விவாகம் செய்து கொடுக்க முடியாது எனவும் கூறி அவர்களையே அப்பிள்ளையை வைத்துக்கொள்ளுமாறு’ கூறி விட்டுச் சென்றார். அப்பிள்ளையை ஏற்றுக்கொண்ட ஹரியற் அம்மையார், கல்வி போதித்ததுடன் வேறும் சில பெண்பிள்ளைகளை இணைத்து கற்பிக்கத் தொடங்கினார். இச்சம்பவமே உடுவில் பெண் விடுதிப் பாடசாலையின் தோற்றத்திற்கு காரணமாக அமைந்திருந்தது.

உடுவிலில் பெண்விடுதிப் பாடசாலை ஆரம்பமானதைத் தொடர்ந்து சுதேச பாடசாலையிலிருந்து வந்த 27 பெண்கள் இதன் முதல்வகுப்பில் சேர்க்கப்பட்டனர். 5 தொடக்கம் 11 வயது வரையுள்ள பெண்கள் அடங்கிய அப்பாடசாலையை ஹரியற் அம்மையார் சிறப்பாக நடாத்திவந்தார். 1828ஆம் ஆண்டு 50 பிள்ளைகளும் 1837ஆம் ஆண்டு 200 பிள்ளைகளும் கல்வி பயின்றதாக இவர் தனது குறிப்பில் குறிப்பிடுகின்றார். அம்மாணவியரின் உணவு, உடை, படிப்பிற்கான செலவு ஆகியவற்றை அமெரிக்கன் மிஷனே ஏற்றுக்கொண்டது. அதேவேளை அவர்களுக்கு உதவும்வகையில் அமெரிக்காவிலிருந்த கொடை வள்ளல்கள் ஒவ்வொரு பிள்ளைக்கும் வருடா வருடம் 20 டொலர்களை அனுப்பிவந்தனர். இச்சலுகைகளைப் பெற்றுவந்த பெண் பிள்ளைகளுக்கு கிறிஸ்தவப்பெயர்கள் சூட்டப்பட்டு அவர்கள் கிறிஸ்தவர்களாக மாற்றப்பட்டனர்.

இம்மாணவியர்கள் திருமண வயதை அடைந்த பின் அவர்களுக்கு திருமணம் நடைபெறுகின்ற சந்தர்ப்பத்தில் அவர்களுக்கான சீதனம் சீர்வரிசைகள் என்பன மிஷனரிகளாலேயே வழங்கப்பட்டது. ஒவ்வொரு பெண் பிள்ளைகளுக்குமான சீதனப்பணமாக 100 இறைகால் (75ருபா) முதல் முப்பது . ஆண்டுகளாக வழங்கப்பட்டு வந்தது. இன்றும் உடுவில் மகளிர் கல்லூரியில் கல்வி கற்கும் பெண்களுக்கு மிஷனரியினர் உதவிகிடைத்து வருவது குறிப்பிடத்தக்கது. எனினும் இந்து மத்தியதர வர்க்க மாணவர்களும் கல்வி கற்கும் நிலைமைகள் காணபடுகிறது.

உடுவில் மகளிர் பாடசாலை மூலம் கல்விப்பணியை முன்னெடுத்துவந்த மிஷனரியினர் அதற்குக் கிடைத்த வரவேற்பின் காரணத்தால் யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளிலும் விடுதிப்பாடசாலைகளை நிறுவும் பணியை முன்னெடுக்கத் தொடங்கினர். அவ்வகையில்

யாழ்ப்பாணத்தின் வரணி, உடுப்பிட்டி எனப் பல பாகங்களில் பெண்கள் பாடசாலைகள் நிறுவப்பட்டது.

அமெரிக்கன் சிலோன் மிஷனினால் பரிபாலிக்கப்பட்ட பல பாடசாலைகள் நாடு சுதந்திரம் பெற்ற பின்னர் தென்னிந்தியத் திருச்சபையின் யாழ்ப்பாண ஆதீனத்துடன் தொடர்புபட்ட பாடசாலைகளாக மாற்றம் பெற்றன. தற்போது யாழ்ப்பாணக் கல்லூரியும், உடுவில் மகளிர் கல்லூரியும் தனித்தனியான ஆளுநர் சபைகளைக் கொண்டிருக்கின்றன. இந்த ஆளுநர் சபைகளிலே தென்னிந்தியத் திருச்சபையின் யாழ். ஆதீனத்தினைச் சேர்ந்தோர் பெரும்பான்மையான உறுப்பினர்களாக இருக்கின்றனர். ஆனால், இந்தக் கல்லூரிகளை நிருவகிப்பதற்கான நிதி அமெரிக்காவின் பொஸ்டன் நகரிலே இருக்கின்ற அமெரிக்கன் சிலோன் மிஷனின் தாய் நிறுவனத்தினால் தொடர்ந்தும் வழங்கப்படுகிறது.

ஆசியாவின் மிகப்பழைய, விடுதி வசதிகளோடு கூடிய பள்ளிக்கூடமாக உடுவில் மகளிர் கல்லூரி காணப்படுகிறது. பெண்களைக் கற்பிப்பது தொடர்பாக சமூகத்தில் இருந்த எதிர்ப்புகளின் மத்தியிலும் அங்கு கற்கும் பெண்களின் தொகை மெதுமெதுவாக உறுதியாக அதிகரித்தது. ஹரியற் தனிப்பட்ட பல இழப்புக்களால் துன்பப்பட்டார். யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்த காலத்தில் ஐந்து பிள்ளைகள் தொற்று நோயால் இறந்தார்கள். ஆண்மகன் கடல் பயணத்தில் இறந்து போனார். முடிவில் தனது 33ஆவதுவயதில் இளவயதில் ஹரியற் இறந்து போனார். அவரோடு சேர்ந்து பணிபுரிய இலங்கை வந்த அவரது சகோதரிகளும் அவரின் மரணத்தின் பின்னர் இறந்து போனார்கள். தன்னலமற்ற ஆளுமைகளின் உயர் ஈடுபாட்டிலேயே உடுவில் மகளிர் கல்லூரியின் உருவாக்கமும் பாரிய சமுக மாற்றமும் உருவாகியது

உடுவில்மகளிர்கல்லூரியின்  200 ஆண்டுகால வரலாற்றில் 10 அதிபர்கள் பணி புரிந்திருக்கிறார்கள். ஹாரியட் வின்ஸ்லோவுக்குப் பிறகு எலிசா அக்னியூ அதிபராகப் பொறுப்பேற்றார். அதைத் தொடர்ந்து சூசன் ஹவ்லாண்ட் மற்றும் உடுவில்லின் கடைசி அமெரிக்க அதிபராக லுலு புக்வால்டர் ஆகியோர் பதவி ஏற்றனர். மிகுந்த பெருமையுடனும் நம்பிக்கையுடனும் மிஸ் புக்வால்டர், உடுவிலின் முதலாவது இலங்கையைச் சேர்ந்த அதிபரான மிஸ் ஆரியம் ஹட்சன் பரமசாமிக்கு பள்ளியின் தலைமைப் பொறுப்பை வழங்கினார். இவரைத் தொடர்ந்து 1970இல் திருமதி. சரஸ்வதி சோமசுந்தரமும் 1982இல் செல்வி செல்லையாவும் பதவியேற்றனர். அவரைத் தொடர்ந்து செர்ரி மில்ஸ், சுனீதா பற்றீசியா ஜெபரட்ணம் ஆகியோர் அதிபர்களாக கடமையாற்றி உள்ளனர். இவர்கள் அனைவரும் கல்லூரியின் பாரம்பரியத்தைக் கட்டியெழுப்புவதில் தங்களுடைய அழியாத அடையாளங்களை விட்டுச் சென்றிருக்கிறார்கள். இவர்களின் தொடர்ச்சியாகவே உடுவிலின் தற்போதைய அதிபராக திருமதி.ரோஷனா குலேந்திரன் காணப்படுகிறார்.

தற்போது பாடசாலையில் சுமார் 1330 மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். பள்ளியில் முதன்மை, இடைநிலை மற்றும் மேலதிக கல்வித் திட்டம் என மூன்று குறிப்பிட்ட பிரிவுகள் உள்ளன. இடைநிலைப் பிரிவு மாணவர்களைத் தமிழ் மற்றும் ஆங்கில வழித் தேர்வுகளுக்குத் தயார்படுத்துகிறது. மேலதிக கல்வித் திட்டம் (FEP) திறன் மேம்பாட்டின் மூலம் மாணவர்களை வலுப்படுத்துவதை இலக்காகக் கொண்டுள்ளது. மேலதிகக் கல்வித் திட்டம் கணக்கியல் தேர்வுகளுக்கான (AAT) வகுப்புகளை நடத்துகிறது மற்றும் இசை, ஆங்கிலம் மற்றும் கணினி வகுப்புகளையும் நடத்துகிறது. வலைப்பந்து, கூடைப்பந்து மற்றும் ஹொக்கி ஆகியவை உடுவில் மகளிர் கல்லூரி மாணவிகள் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்கும் விளையாட்டுகளாகும். நாடகமும் அரங்கியலும் உடுவில் பெண்கள் கல்லூரியின் மற்றுமொரு சிறப்பாக அமைகிறது. உடுவில் ஷேக்ஸ்பியரின் நாடகம் மற்றும் பாடசாலையினால் எழுதப்பட்டு தயாரிக்கப்பட்ட ஏனைய நாடகங்களின் தயாரிப்புகளுக்காக மாகாண மட்டத்தில் தொடர்ந்து பரிசுகளை வென்றுள்ளது.

தமிழ் சமுகப்பரப்பில் பெண்களுக்கு முதன்மையான நிலை காணப்படுகின்றது. மண்ணை, மலையை, நீரை பெண்களாய் பார்க்கும் மரபு உண்டு. இதன் பின்னணியில் பெண்களிடம் ஒருங்குசேர்ந்த அன்பும் கருணையுமே முதன்மையானதாகும். இப்பின்னணியில் தமிழர் மரபை பாதுகாக்கும் நோக்கில் கடுமையான அன்பு கொண்ட மாணவர்களை வெளியில் அனுப்புவதற்கு பாடசாலை தொடர்ந்து முனைகிறது. உலகில் இப்பொழுது நேர்மையும் விசுவாசமும் எல்லா நிலைகளிலும் அருகிக்கொண்டுவரும் இத்தருணத்தில்  ‘உண்மை உன்னை விடுதலை செய்யும்’ என்ற பாடசாலையின் இலட்சிய வாசகமானது மகத்தான முக்கியத்துவத்தோடு அங்கே எதிரொலிக்கிறது.

Related posts

இலங்கை கிரிக்கெட் அணியில் சாதிக்கும் தமிழ் வீரர்கள்

Thumi202121

என் கால்கள் வழியே… – 11

Thumi202121

உலகின் பேரழகின் இரகசியம் தெரியுமா?

Thumi202121

Leave a Comment