இதழ் 79

மறுமலர்ச்சியை ஏற்படுத்திய ஆன்மீக அன்னை சைவத் தமிழ் உலகின் வரலாற்று நாயகி

//நூற்றாண்டு விழா காணும் துர்க்கா துரந்தரி கலாநிதி. தங்கம்மா அப்பாக்குட்டி அவர்களது நினைவாக துமியில் இக்கட்டுரை மீள் பிரசுரமாகிறது. இலங்கையின் புகழ்பெற்ற சட்டத்தரணியாக இருந்த அமரர் கந்தையா நீலகண்டன் அவர்கள் எழுதிய இக்கட்டுரை அம்மையாரின் நினைவாக தெல்லிப்பழை துர்க்கையம்மன் தேவஸ்தானத்தினால் 2010 இல் வெளியிடப்பட்ட சிவத்தமிழ்ச் செல்வி வாசகம் எனும் நூலில் இருந்து எடுக்கப்பட்டது.//

நான்கு தசாப்தங்களுக்கு மேலாக சொற்பொழிவுப்பணி, எழுத்துப்பணி முதல் ஆலய அறங்காவல் பணி. குழந்தைகளுக்கும் முதியோருக்கும் வாழ் வளிக்கும் மக்கள் பணி என்பவைகளை சிறப்பாகச் செய்து எம் மண்ணில் ஒரு மறுமலர்ச்சியை ஏற்படுத்தியவர் தெய்வத் திருமகள் சிவத்தமிழ்ச்செல்வி கலாநிதி தங்கம்மா அப்பாக்குட்டி. அவர்கள்.

யாழ்ப்பாணத்தில் தெல்லிப்பழை என்னும் கிராமத்தில் 1925ஆம் ஆண்டு தை மாதம் 07 ஆம் நாள் பிறந்த சிவத்தமிழ்ச் செல்வி அவர்கள் மல்லாகத்தில் அமெரிக்க மிசன் பாடசாலையிலும், விசாலாட்சி வித்தியாலயத்திலும், அளவெட்டி சதானந்தா வித்தியாலயத்திலும் தொடக்கக் கல்வியை சுற்றார். சுன்னாகம் இராமநாதன் கல்லூரியிலே இடை நிலைக்கல்வி பயின்று 1941 முதல் 1944 வரை இராமநாதன் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் பயிற்சி பெற்றார். ஆரிய திராவிட பாஷாபிவிருத்திச் சங்கம் நடத்திய “பண்டிதர்” தேர்விலும், சைவ சித்தாந்த சமாஜம் நடத்திய “சைவப் புலவர்” தேர்விலும் வெற்றி பெற்றார். பண்டிதையாகவும் சைவப்புலவராகவும் திகழ்ந்த சிவத்தமிழ்ச் செல்வி 1946முதல் மட்டக்களப்பு சென்ற். சிசிலியா ஆங்கிலப் பாடசலையிலும், 1949 முதல் கொழும்பு பாத்திமா பெண்கள் பாடசாலையிலும், பின்பு அளவெட்டி சதானந்தா வித்தியாலயத்திலும் 1964முதல் தெல்லிப்பழை யூனியன் கல்லூரியிலும் ஆசிரியப்பணி செய்துள்ளார்.

சிவத்தமிழ்ச் செல்வியின் சொற் பொழிவுப் பணி அவருடைய அறிவுத் திறனையும் புலமையினையும் வெளிப் படுத்தியது. சைவ இலக்கியம். சைவ சித்தாந்தம், சமய ஒழுக்கம் முதலாகப் பல விடயங்கள் பற்றி இவர் யாழ்ப்பாணத்திலும் இலங்கையின் பல இடங்களிலும் சொற்பொழிவாற்றினார். எளிமையான தமிழ். இனிமையான குரல் எல்லோரையும் வசீகரித்தன. ஒவ்வொரு சைவத் தமிழ் வீட்டிலும் “தங்கம்மா” என்னும் பெயர் இடம்பெறலாயிற்று. “தங்கம்மா அப்பாக்குட்டியிடம் படிக்கப் போகிறேன்” என்று கூறும் அளவிற்கு அவருடைய சொற்பொழிவுப் பணி அமைந்தது. சிதம்பரத்தில் உள்ள உயர் பாடசாலை ஒன்றிலே அவர் ஆற்றிய உரை தமிழகமெங்கும் அவருடைய பெயர் அறியப்படலாயிற்று. அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திலே அவர் பேசிய பொழுது தலைமை வகித்த பேராசிரியர் சோ. சுப்பிரமணியப்பிள்ளை பின்வருமாறு கூறினார்.

“இங்கே பேசியவர் ஈழத்துத் தங்கம். ஈழத்துத் தங்கம் என்றால் மிகுந்த மதிப்புடையது. 22 கரட் பெறுமதியுடையது. நம்பிக்கைக்குரியது. இந்தத் தங்கத்தின் விளக்கத்தை நீங்களும் கண்டீர்கள்.”

இவ்வாறு தமிழகத்திலே அறிமுகம் பெற்ற சிவத்தமிழ்ச்செல்வி மலேசியா, சிங்கப்பூர், இலண்டன் ஆகிய நாடுகளில் சொற்பெருக்காற்றி பலருடைய ஆதரவினையும், கௌரவங்களையும் பெற்றுக்கொண்டார். தமிழ்நாட்டில் ஆண்டு தோறும் நடைபெற்ற சைவ சித்தாந்த மாநாட்டுக்கு ஈழத்திலிருந்து அறிஞர்களை அழைப்பது வழக்கம். சிவத்தமிழ்ச் செல்வியின் ஆசிரியர் ஸ்ரீ சுந்தரராஜா அய்யங்கார். பண்டிதர் நாகலிங்கம் சேர் கந்தையா வைத்தியநாதன் என்னும் வரிசையில் சிவத்தமிழ்ச் செல்வியின் பெயரும் சேருகின்றது.

நாவலர் பெருமானுக்குப் பின் யாழ் மண்ணிலிருந்து பாரெல்லாம் சமயப் பிரசாரம் செய்த பெருமைக்குரியவர் கலாநிதி தங்கம்மா அம்மையார். அவரின் பிரசாரப் பணிகளைப் பலரும் பலவழிகளில் போற்றிக் கெளரவித்தனர் . 1957 இல் தாயாரையும் 1960 இல் தந்தையையும் இழந்த அவர் சென்னை சைவ சித்தாந்த சமாஜம் நடாத்திய சைவப் புலவர் பரீட்சையில் 1958 இல் சித்தி பெற்றார். 1965இல் தமிழ்நாடு சிதம்பரத்திலும், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திலும் உரையாற்றினார். துர்க்காதேவி தேவஸ்தான மகாகும்பாபிஷேகமும் அதே ஆண்டில் நடந்ததும் குறிப்பிடத்தக்கது. 1966 இல் மதுரை ஆதீனத்தில் “செஞ்சொற் செம்மணி” என்ற பட்டம் அவருக்கு வழங்கப்பட்டது. 1970இல் ஈழத்துச் சிதம்பரத்தில் “சிவத்தமிழ்ச் செல்வி” என்ற பட்டமும் பொன்னாடை பதக்கமும் பெற்றார். 1971ஆம், 1972ஆம், 1974ஆம் ஆண்டுகளில் மலேசியா, சிங்கப்பூருக்குச் சொற்பொழிவுப் பயணம் செய்த அவருக்கு அங்கு “திருவாசகக் கொண்டல்” என்ற பட்டம் கொடுக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டது. 1973இல் தென்னிந்தியாவில் திருவிடைமருதூரில் நடைபெற்ற திருமுறைக் கருத்தரங்குக்குத் தலைமை தாங்கினார்.

சிவத்தமிழ்ச் செல்விக்கு அகில இலங்கை இந்து மாமன்றம் கொழும்பில் “சிவஞான வித்தகர்” என்ற பட்டம் வழங்கி பெருமை தேடிக்கொண்டது. தெல்லிப்பழை துர்க்காதேவி தேவஸ்தானம் “துரக்கா துரந்தரி” என்ற பட்டத்தினையும் வழங்கியது. 1980இல் தமிழ் நாடு ஆரணியில் மங்கையர் மாநாட்டுக்குத் தலைமை தாங்கினார்.

1985இல் மணிவிழா நிகழ்வு இடம்பெற்றது. மணிவிழாவை யொட்டி சிவத்தமிழ் இன்பம். சிவத்தமிழ்ச் செல்வம். சிவத்தமிழ் ஆராய்ச்சிக் கட்டுரை ஆகிய மூன்று நூல்களும் வெளியீடு செய்யப்பட்டன. 1987 இல் இலண்டன் பயணம் சென்று சொற்பொழிவுகள் ஆற்றி “இலண்டனில் ஏழுவாரம்” நூல் வெளியீடும் இடம்பெற்றது. 1991இல் “கலாசூரி” என்ற பட்டத்தை அம்மை யாருக்கு அரசு வழங்கியது. 2000இல் சிவத்தமிழ்ச்செல்வி அம்மாவின் பவள விழா மலர் வெளியீடு இடம்பெற்றது. 2001இல் “பெண்மைக்கும் இணையுண்டோ” நூல் அவரினால் வெளியிடப்பட்டது. யாழ் பல்கலைக்கழகத்தினால் 04.10.1998 இல் கௌரவ கலாநிதிப் பட்டம் வழங்கிக் கெளரவிக்கப் பட்டது.

இருபத்தியேழு சொற்பொழிவுகள், பத்துச் சொற்பொழிகள், கந்தபுராணச் சொற்பொழிவுகள் என எட்டு நூல்களுக்கு இவர் ஆசிரியர். இவற்றுள் கந்தபுராணச் சொற்பொழிவுகள் 1978இல் சாகித்திய மண்டலப் பரிசினைப் பெற்றது. சமய இதழ்களிலும் கோயில் மலர்களிலும் பத்திரிகைகளிலும் பெருந்தொகையான கட்டுரைகள் எழுதியுள்ளார்.

தெல்லிப்பழையில் சிறிதாக இருந்த ஒரு கோயில் பாரெல்லாம் போற்றப்படும் பெரும் திருத்தலமாக வளர்வதற்குக் காரணமாயிருந்தவர் சிவத் தமிழ்ச் செல்வி அவர்கள். ஆசிரியராகவும், சமய பிரசாரகாரர் ஆகவும் இருந்த அவருடைய செல்வாக்கு தெல்லிப்பழையில் இளைஞரும் முதியோரும் ஒருங்கிணைந்த ஒரு பெரிய தொண்டர் சபை உருவாக காலாயிற்று. தெல்லிப்பழை துர்க்காதேவி ஆலயம் வானளாவ எழும்பியது. இந்த அன்னையினுடைய ஆளுமை அந்த ஆலயத்தின் வளர்ச்சியுடன் சமூக வளர்ச்சியையும் சேர்ப்பதற்கு வழிகாட்டிற்று.

தெல்லிப்பழை துர்க்காதேவி ஆலயத்தில் திருப்பணிச் சபை அங்கத்தவராக 1961இல் சேர்ந்தார். 1965இல் அத்திருத்தலத்தில் மகா கும்பாபிஷேகம் நடந்தது. 1966இல் துர்க்காதேவி தேவஸ்தான தனாதிகாரியாகத் பதவி ஏற்றார். 1977இல் துர்க்கா தேவஸ்தான நிர்வாகசபைத் தலைவர் பதவியை ஏற்ற அவரின் தலைமையில் 20.01.1977இல் சித்திரத்தேர் திருப்பணி வேலை ஆரம்பிக்கப்பட்டது. அடுத்த ஆண்டில் முதன் முதலாக அம்பாள் சித்திரத் தேரில் பவனி வந்தார். துர்க்காதேவி ஆலய மகாகும்பாபிஷேகம் 17.04.1981 அன்று நடந்தது. 1982இல் அவர் “துர்க்கா புஷ்கரணி” தீர்த்தக்குளப் பிரதிஷ்டையும் செய்வித்து சைவப்பெண் குழந்தைகளுக்கு துர்க்காபுரம் மகளிர் இல்லமும் அமைத்தார். 1986இல் “துர்க்காபுரம் மகளிர் இல்லம்” இரண்டு மாடிக் கட்டடம் அவரின் முயற்சியால் கட்டப்பட்டு திறந்துவைக்கப்பட்டது. 1992இல் யுத்த அனர்த்தம் காரணமாக மகளிர் இல்லப் பிள்ளைகளோடு மருதனார்மடம் இராமநாதன் கல்லூரியில் இடம்பெயர்ந்து அவர்களுடன் தங்கியிருந்தார். 1993இல் தெல்லிப்பழை துர்க்கை அம்மன் தேவஸ்தானத்தில் குண்டு வீச்சுக்களும் அனர்த்தங்களும் ஏற்பட்ட துயரச்சம்பவம் இடம்பெற்றது. அந்நிகழ்வு தெய்வத் திருமகளுக்கு ஏற்படுத்திய மன அழுத்தம் நாம் எல்லோரும் அறிந்ததே.

1994இல் அவர் தன் பிறந்தநாள் அறநிதியத்தின் சார்பில் அறிஞர்களைக் கௌரவிக்க ஆரம்பித்தார். 1995இல் கைதடிச் சைவச் சிறுவர் இல்லத்திலும், உசன் கந்தசாமி கோயில் வளாகத்திலும் இடம்பெயர்ந்து தங்கியிருக்கும் நிலைமை ஏற்பட்டது. 1996இல் மருதனார் மடம் இராமநாதன் கல்லூரியில் மீண்டும் வந்து தங்கினார். துர்க்காதேவி தேவஸ்தான மூன்றாவது மகா கும்பாபிஷேகம் 07.09.1997இல் இடம்பெற்றது. சிவத்தமிழ்ச் செல்வி சைவத் தமிழ் ஆய்வு நூலகம் உயர்நீதிமன்ற நீதியரசர் திரு.சி.வி.விக்னேஸ்வரன் அவர்களால் 07.01.2002 இல் திறந்து வைக்கப்பட்டது.

தெல்லிப்பழை துர்க்காபுர அம்மன் தேவஸ்தான புண்ணிய பூமியிலிருந்து பாரெல்லாம் ஆன்மீக ஒளி பரப்பிய ஞான விளக்கு அணைந்து விட்டது. எனினும் அவர் எங்கள் ஒவ்வொருவரினதும் உள்ளத்தில் ஏற்றிவைத்த அந்த ஆன்மீகச் சுடர் என்றும் தொடர்ந்தும் ஒளிவீசும். அம்மையார் பூதவுடல் மறைந்துவிட்டாலும் அந்த புனித அன்னை எங்கள் இதயங்களிலும் ஒவ்வொரு எண்ணத்திலும் தொடர்ந்து வாழ்வார். வாழ்ந்து எங்களை வழிகாட்டி வருவார்.

தெய்வத்திருமகள் ஓர் ஆன்மீகப் பரம்பரையை உருவாக்கி வளர்த்து விட்டிருக்கிறார். அகில இலங்கை இந்து மாமன்ற உப தலைவர் செஞ்சொற் செல்வர் ஆறு திருமுருகன் அந்தப் பரம்பரையின் தளபதியாக தொடர்ந்து மக்கள் பணியை வளர்த்தெடுப்பதற்கு வழிகாட்டிச் சென்றிருக்கிறார் தாயார் தங்கம்மா.

எங்கள் சமூகத்திலே ஒரு சாதாரண ஆசிரியராகப் பணியாற்றத் தொடங்கிய ஒருவர் கல்வி கேள்விகளிலே வல்லவராகவும். ஆலயப் பணியையும், சமூகப் பணியையும் இணைத்து உலகளாவிய புகழ் பெற்றவராகவும், தனக்குப் பின்னே இப்பணியைச் செய்ய ஒரு பரம்பரையையே உருவாக்கியவரா கவும், சமயத்தொண்டுக்கும், சமூகத் தொண்டுக்கும் சைவ இலக்கிய சாஸ்திர சொற்பொழிவுத் தொண்டிற்கும் தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்தவராகவும் விளங்கிய சிவத்தமிழ்ச்செல்வி பண்டிதை தங்கம்மா அப்பாக்குட்டி அவர்களுக்கு யாழ் பல்கலைக்கழகம் கௌரவ கலாநிதிப் பட்டத்தை வழங்கி கௌரவித்தது. அது அம்மாவுக்கு கிடைத்த கௌரவம் என்று சொல்வதிலும் பார்க்க யாழ் பல்கலைக்கழகம் தனக்கு ஒரு மகிமையைத் தேடிக் கொண்டது என்பதே பொருந்தும்.

அமெரிக்கா ஹாவாய் சுப்பிரமணிய சுவாமி ஆச்சிரமம் 2005ஆம் ஆண்டுக்கான சிறந்த இந்துப்பணி விருதை வழங்கி கௌரவித்துள்ளது. கடந்த வருடம் அமெரிக்காவிலிருந்து இங்குவந்த வணக்கத்திற்குரிய தொண்டுநாதன் சுவாமிகள் அன்னையை நேரிலே தரிசித்து கௌரவச் சின்னத்தை வழங்கிக் கௌரவித்தமையும் குறிப்பிடத்தக்கது. இவர் அகில இலங்கை இந்து மாமன்றத்தின் துணைத் தலைவராகவும், பின்னர் இறுதிமூச்சுவரை அறங்காவலர் சபை உறுப்பினராகவு மிருந்து மாமன்றத்திற்கு கௌரவம் தந்துகொண்டிருந்தார்.

அகில இலங்கை இந்து மாமன்றம் தனது பொன்விழாவை யொட்டி “தெய்வத் திருமகள்” என்ற பட்டத்தை வழங்கி அன்னையை கௌரவித்து பெருமை கண்டது. அன்னை தங்கம்மா அப்பாக் குட்டி இலங்கை இந்துசமய வரலாற்றின் ஒரு பெரிய அத்தியாயம். ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் பெருமான் காட்டிய வழியில் யாழ் மண்ணிலிருந்து அவர் ஒரு புரட்சியை (இல்லை வெறும் புரட்சி யில்லை) ஒரு பெரும் மறுமலர்ச்சியை ஏற்படுத்தியவர். மாமன்றப் பொன் விழாவையொட்டி அகில இலங்கை இந்துமாமன்றம் 2005 யூலையில் இந்து மாநாடு நடாத்தத் திட்டமிட்டது. 2005 ஜனவரியில் யாழ் பல்கலைக்கழக சமூகம் பெரியோர்கள் அறிஞர்கள் அழைத்து ஆலோசனைக் கூட்டம் நடத்தி யாழ் மண்ணில் இந்து சமயத்திற்குப் பெருமை தேடித்தந்த இருவரைக் கெளரவிக்க விரும்புவதாக அங்கே விதந்துரைப்புக் களைக் கோரியபோது சகலரும் ஒருமனதாக சிவத்தமிழ்ச் செல்வி தங்கம்மா அப்பாக்குட்டியினதும், ஞானவித்தகர் அருட்கவி விநாசித்தம்பியினதும் பெயரையும் மட்டுமே முன்வைத்தனர். அதன்படி மாநாட்டில், மாநாட்டை ஆரம்பித்து வைக்க அழைக்கப்பட்டு உரை நிகழ்த்திய அன்னையைத் “தெய்வத் திருமகள்’ எனப் போற்றிப் பாராட்டிக் கௌரவித்தோம். அப்பட்டத்தை அளிக்கும் வேளையில் அவரை சம்பிரதாயமாக அறிமுகம் செய்து நெறிப் படுத்தும் அரிய பொன்னான சந்தர்ப்பம் சிறியேனுக்குக் கிடைத்தது ஆண்டவனருளே. எந்தவொரு பட்டமும் வேண்டாம் என மறுத்து நின்ற எங்கள் தாய், யாழ் மண்ணில் மாமன்றம் பொன்விழா மாநாடு நடாத்துகின்றபோது எமது பட்டத்தை ஏற்று மாமன்றத்தைக் கௌரவிக்க வேண்டும் என்று அன்புடன் மன்றாடி நின்றோம். அந்த அன்பு வேண்டுகோளை அவர் ஏற்றுக்கொண்ட மகிழ்வான கணப்பொழுது என்றும் எமது மனத்திரையில் இருந்து அழியமாட்டாது.

2005 ஜூலை 15ஆம் திகதியன்று யாழ். தேசிய கல்வியியற் கல்லூரியில் நடைபெற்ற அந்த இந்து மாநாட்டின் ஆரம்ப நிகழ்வில் சிவத்தமிழ்ச்செல்வி, தெய்வத் திருமகள் கலாநிதி தங்கம்மா அப்பாக்குட்டி அவர்கள் நிகழ்த்திய தொடக்கவுரையில் கூறியிருந்தார்

“எங்களுடைய வாழ்க்கையிலே நாங்கள் தர்மம் செய்ய வேண்டும். தர்மம் செய்ய விரும்ப வேண்டும். அந்த தர்மம் சைவத்திலே கூறப்பட்ட ஒரு ஒழுக்கம். தர்மம் தலை காக்கும் என்பது எங்களுடைய தாரக மந்திரம். அறஞ் செய்ய விரும்பு என்று சொன்னார் ஒளவையார். நீ செய்யாவிட்டாலும் கவலையில்லை. செய்ய வேண்டும் என விரும்பு என்று சொன்னார். அந்த விருப்பத்தை ஏற்படுத்துகின்ற ஒரு நல்ல தகுதிவாய்ந்த சமயம் எங்கள் சமயமாகும். இந்த சைவ சமயத்திலே பிறந்த பெருமை எங்களுக்குண்டு. அந்த வாழ்வை நாங்கள் மாசுபடச்செய்யக் கூடாது. இப்பொழுது மாசுபடச் செய்கிறார்கள் என்ற ஒரு கூற்றை அங்கும் இங்கும் பார்க்கிறோம். கேட்கிறோம். அந்த மாக உண்மையிலேயே ஏற்படுத்தப்படக் கூடாது.

நாங்கள் மாசுக்களைக் களைந்து நல்லன வற்றைச் செய்யக்கூடியதான ஒரு வாய்ப்பை உள்ளத்திலே ஏற்றுக்கொள்ள வேண்டும். என்னுடைய வளர்ச்சி என்றால், அது தனிமனிதனின் வளர்ச்சி அல்ல. நாட்டின் வளர்ச்சி, சமூகத்தின் வளர்ச்சி, நான் வளர்ந்து, மக்களையும் வளர வாய்ப்பளிக்க வேண்டும் மக்களையும் வளர வாய்ப்பளிப்பது என்றால் சமூகப்பணியை நாங்கள் உயிராக மதிக்க வேண்டும். சமூகப் பணி செய்து ஈதல் அறம் தீவினை விட்டீட்டல் பொருள். எஞ்ஞான்றும் காதல் கருத்தொருமித்து ஆதரவுபட்டதே இன்பம். அதனை நினைந்து அறம், பொருள், இன்பம், வீடு என்ற நால்வகைப் பயனையும் அனுபவிக்க வேண்டிய நிலையிலே முடிவான பயனுக்கு எம்மை இழுத்துச் செல்கின்ற வீட்டின்பத்திற்கு எங்களை தகுதியுள்ளவர்களாக ஆக்கிக் கொள்ள வேண்டும். அதற்கு இந்த உலகம் தான் எங்களுக்கு இடம் தந்திருக்கிறது. இங்கிருந்துதான் நாங்கள் எங்களை தகுதியுள்ளவர்கள் ஆக்கிக்கொள்ள வேண்டும்.

“நான் இப்போது மோட்சத்திற குப் போக விரும்பவில்லை. எத்தனை பிறவி எடுத்தாலும் மக்களுக்கு தொண்டு செய்யத்தான் விரும்புகிறேன்” என்றார் சுவாமி விவேகானந்தர். அந்தக் கூற்றிலே எத்தனையோ உண்மை இருக்கிறது. நாங்கள் மக்களுக்குப் பணி செய்ய வேண்டும். அதன் பயனை இறைவன் எங்களுக்குத் தருவான்.”

இளைப்பாறிய உயர் நீதிமன்ற நீதியரசர் சி.வி. விக்னேஸ்வரன் அவர்கள் சிவத்தமிழ்ச்செல்வி சைவத்தமிழ் ஆய்வு நூலகத்தை 2002இல் தெல்லிப்பழையில் திறந்து வைத்தபோது கூறினார்.

“தமிழும் சைவமும் இன்று போதிய அளவு பேணப்படாது இருப்பது எங்கள் தூரதிர்ஷ்டமாகும். பேணப்படாது விட்டிருந்தாலும் பாதகமில்லை. ஆனால் அண்மைக் காலங்களில் தமிழுக்கும் சைவத்திற்கும் அழுக்கும் இடர்பாடும் தரப்பட்டுள்ளன. யாழ் நூலக எரிப்பு. திருக்கோயில்கள் கேட்பாரற்றுக் கிடக்குந் துர்நிலை, நளையும் ஆடுகளைக் கண்டு கதறி அழும் ஓநாய்க் கூட்டங்களின் அட்டகாசம் என்பன இவற்றுள் சில. அவற்றைவிட போரானது பெண்களையும் குழந்தைகளையும் வயோதிபர்களையும் வெகுவாக வாட்டி வதைத்து இம்சித்துள்ளது. தமிழ் மொழிக்கும் சமய அறிவுக்கும், சமய வாழ்விற்கும். சமூக வாழ்விற்கும் பெருத்த இடர்பாடு ஏற்பட்டிருக்கும் அண்மைக் காலத்தில் எங்களுக்கெல்லாம் திலகவதியார் போன்று எம்மை சைவத்தின்பால் ஈர்க்கவும், எம் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவும் சிவத்தமிழ்ச் செல்வியார் அரும்பாடுபட்டு வந்துள்ளார். இடர்பட்ட இம் மக்கள் சேவையே இறைவனின் சேவை என்ற பண்டைய பண்பாட்டின் வழிநின்று பல அருஞ்சேவைகளை அண்மைக்காலமாகச் செய்துவரு கின்றார்.”

தமிழகத்தைச் சேர்ந்த அறிஞர் பெருமகன் சைவ சித்தாந்த கலாநிதி, இலக்கிய கலாநிதி டி.என். இராமச்சந்திரன் பின்வருமாறு போற்றி ஏற்றிய பெருமைக்குரியவர் எமது அம்மையார்.

“சைவச் செல்வியார் தங்கம்மா அப்பாக்குட்டி அம்மையார் அவர்களை நாள் பெரிய புராணப் பெண்மணிகளில் ஒருவராகவே காண்கிறேன். திருமுறையும் மெய்கண்ட சாஸ்திரமும் அவருடைய மூச்சுக்காற்று, எம் இறைக்கும் சைவ அடியார்களுக்கும் பணி செய்யவே அவருக்கு சுருவி காரணங்கள் அளிக்கப் பட்டுள்ளன. இச் சூழலிலும் இறைபணி இயற்றிவரும் இவருக்கு நீண்ட ஆரோக்கியமும் மங்களகரமுமான வாழ்வையும் அம்மையப்பர் அகுளவேண்டும் என்று நான் பிரார்த்திக்கிறேன்.”

தெய்வத் திருமகளைப் போற்றிடப் புலவர் ம.பார்வதிநாதசிவம் அவர்கள் பாடிய பாடலிலிருந்து சில வரிகள் இதோ.

“எது தர்மம் எது தர்மம் என அறியும் ஆர்வத்தோர் தங்கட்கெல்லாம் இது தர்மம் இது தர்மம் எனத் தமது சொற்பொழிவால் வாழ் வாற்காட்டிப் பொதுவாழ்வில் தனி வாழ்வில் தர்மத்தை என்றென்றும் விளக்கி நிற்கும் அதி உயர்ந்த சிந்தனை சேர் சிவத்தமிழின் செல்வி புகழ் வாழ்க நீடே”

இப்போது அமரத்துவம் அடைந்துவிட்ட பேராசிரியர் பிரம்மஸ்ரீ கா. கைலாசநாதக்குருக்கள், அம்மை யாரின் கந்தபுராணச் சொற் பொழிவுகள் தொகுப்பு நூலுக்கு வழங்கிய கருத்து ரையில்.

இவ்வுரைகளின் ஆசிரியரைத் தமிழ் கூறும் நல்லுலகம் சிறப்பாகச் சைவ உலகம் நன்கு அறியும். இவர் பெரிதும் பேச்சுத் திறமை படைத்தவர். சைவ சாஸ்திரங்களில் துறை தேய்ந்தவர். சைவ ஒழுக்கத்தையும் பெரிதும் பேணி நிற்பவர். சைவத் தொண்டொன்றே இலட்சியமாக என் கடன் பணி செய்து கிடப்பதே” என்பது குறிக்கோளாகச் சைவத் தொண் டிற்கே தம்மை அர்ப்பணித்துச் சையு வாழ்வு வாழ்ந்து வருபவர். தம்மிடம் சிறந்து விளங்கும் சொற்செல்வத்தை இறைவன் புகழ் பரப்புவதற்காகவே செலவு செய்பவர் சிவத்தமிழ் செல்லி தங்கம்மா அப்பாக்குட்டி அவர்கள் செய்துவரும் இத்திருத்தொண்டின் தரம் அளப்பரியது” என்கிறார்.

தலங்கம ஜெயந்திரபுரத்தில் இந்து ஆன்மீக ஒளிபரப்பி இராமச்சந்திரா துர்க்கா துரந்தரியைப் பற்றி குறிப்பிடுகையில் கூறியிருந்தார்.

“தமிழ்ப் பெண்ணினம் சிறக்க வாழ்ந்த சைவ மங்கையர் திலகம். அன்னாருக்குச் சில ஆதீனங்களும் சங்கங்களும் சமய நிலையங்களும் பல பட்டங்களைச் சூட்டிப் பாராட்டியுள்ளன. எம்மைப் பொறுத்தமட்டில் அம்மையாரை ஸ்ரீ துர்க்கா துரந்தரி என அழைப்பதுடன் பூரண திருப்பி யடைகிறோம். அன்னாரின் வாழ்க்கை அத்தேவியின் கையிற்கே அர்ப்பணிக்கப் பட்டிருப்பதை உள்ளுணர்வில் தெரிந்துகொண்ட காரணத்தால் இப்படி வரைகிறோம்.”

மேற்கூறியவண்ணம் சகலரும் போற்றி வணங்கிய எங்கள் சமுதாயத்தில் ஒரு மறுமலர்ச்சியை ஏற்படுத்திய – ஓர் ஆன்மீக அன்னை அருளொளியாக ஒளிபரப்பி எங்களுக்கு வழிகாட்டி மிளிர்ந்தார். அவர் ஒரு வரலாற்று நாயகி. அந்த ஒளி விளக்கு 15.06.2008 ஞாயிற்றுக் கிழமை நண்பகல் அணைந்துவிட்டது. இருளில் தவிக்கும் அனாதைகள் நாங்கள். வேதனைகளும் சோதனைகளும் வாட்டும் ஒரு சகாப்தத்தில் இது எங்களுக்கு ஒரு பேரிடி. இப்பேரிழப்பினை பொறுக்க மனமில்லை. எங்களுக்கு சக்தி இல்லை. ” ஆண்டவா எங்களைக் காப்பாற்று !”என் ஏங்கிப் பிரார்த்தித்து நிற்கின்றோம்.

வடக்கை குண்டு மழைகளும் கொடும் யுத்தமும் உலுக்கிச் கலக்கிய போதும் தான் வளர்த்துவரும் பிள்ளைகளை உயிரிலும் மேலாக நினைத்து தன் உயிரை துச்சமென மதித்துக் காப்பாற்றினார். பல இடங்களுக்கு இடம்பெயர்ந்து அவர்களை வாழவைக்க நேரிட்ட போதும் மனத்துணிவுடன் செயலாற்றிய துணிவுமிக்க பெருமாட்டி அவர். “மக்கள் சேவையே மகேஸ்வரன் பூசை” என்ற புனித வாக்கிற்கு வடக்கில் உண்மையில் உயிர் தந்தார். சிவத்தமிழ்ச்செல்வி. அந்த வழியில் ஏனைய ஆலய தர்மகர்த்தாக்களும் இந்து நிறுவனங்களும், தொண்டாற்ற வேண்டும். ஒரு சிலர் அந்த வழியில் நின்றாலும் அது போதாது. இன்னும் அப்பணி வளர வேண்டும். அதுவே அன்னையாருக்கு நாங்கள் செலுத்தும் உன்னத அஞ்சலியாக அமையும்.

திரு. கந்தையா நீலகண்டன், தலைவர், அகில இலங்கை இந்துமாமன்றம்
(23.06.2010)

Related posts

இருக்கும் இடத்திலேயே எல்லாம் இருக்கிறது.

Thumi202121

புவியில் ஆள் செய்யாததையும் நாள் செய்யுமாம்

Thumi202121

ஓய்வு பெறுகிறார் கிரிக்கெட் நிபுணர் அஸ்வின்

Thumi202121

Leave a Comment