இதழ் 81

பாடசாலை மாணவர்களுக்கான ஆளுமை விருத்தி மேம்பாட்டு உத்திகள்

ஆளுமை என்பதை ஒருவரிடம் காணப்படும் உடற் கவர்ச்சியின் அளவு என்று பலர் எண்ணுகின்றனர். அத்துடன் பிறரை காட்டிலும் குறிப்பிட்ட ஒரு பண்பிலோ, திறனிலோ மிகச் சிறந்து விளங்குவதனை சிறந்த ஆளுமை உடையவன் அல்லது உடையவள் என்கின்றனர். ஆனால் ஆளுமை தனியே இவ்வாறு அமைவதில்லை. அது பரந்துபட்ட விளக்கத்தை தரக்கூடியது. பொதுவாக ஆளுமை என்பது ஒருவர் பெற்ற உடல், உள, சமூக பண்புகள், மனப்பான்மைகள், மனநிலைகள் எல்லாம் இணைந்தது ஆகும், இது ஒவ்வொரு தனிமனிதனிடமும் காணப்படுவதுடன் மக்களின் உறவுகள், சமுதாய குழுக்கள், சுற்றுச்சூழல் ஆகியவற்றுடன் தொடர்புபட்டதாக காணப்படுகின்றது.


பாடசாலை மாணவர்கள் அறிவு, திறன், மனப்பாங்கு, விழுமியம் போன்றவற்றின் ஊடாக தம்மை தேர்ச்சி அடைய செய்வதே கல்வியின் பிரதான நோக்காகும். இவர்களை சமூகத்தில் நல்ல ஆளுமை மிக்க நபராக உருவாக்குவதில் பாடசாலையின் பங்கு அளப்பரியது. பாடசாலை மாணவர்கள் எனும் போது அவர்கள் 5 முதல் 18 வயது வரை கல்வி கற்பவர்களாக காணப்படுகின்றனர். இன்றைய காலகட்டத்தில் விஞ்ஞான தொழில்நுட்ப வளர்ச்சி நன்மைகளை ஏற்படுத்தினாலும் கூட சவால்களையும், போட்டி மிக்க நெருக்கடி சூழலையும் உருவாக்கி உள்ளது. இவ்வாறான நிலையில் ஒவ்வொரு மனிதனும் ஆளுமையை வளப்படுத்துவது அவசியம். பிரதானமாக பாடசாலை மாணவர்கள் ஆளுமையை உரிய முறையில் விருத்தி செய்து மேம்படுத்திக் கொள்வதன் ஊடாக பல சவால்களையும் எதிர்கொண்டு சாதிக்க வழிவகை செய்கின்றது.


அந்த வகையில் பாடசாலை மாணவர்களின் ஆளுமை (பண்புத்திறன்) விருத்தியை மேம்படுத்த உதவும் உத்திகளை நாம் பார்ப்போம்.


சுய முன்னேற்றப் பயிற்சிகள்
மாணவர்களை சுயமாக கற்றலை (Self-directed learning) மேற்கொள்ள ஊக்குவித்தல் பிரதானமாகின்றது. பாடசாலைகளில் வகுப்பறை கல்வி நடவடிக்கையின் போது அது தவிர்ந்த பிற சூழல்களிலும் (வீடு, தனியார் கல்வி நிலையங்கள்) இவ் சுயகற்றல் மாணவர்களின் ஆளுமை விருத்திக்கு வழிவகுக்கின்றது. அத்துடன் தோல்விகள், தவறுகள் விடும் சந்தர்ப்பங்களில் அதிலிருந்து கற்றுக்கொள்ளும் மனப்பாங்குகளை வளர்த்துக் கொள்ளும் போது மாணவர்கள் தம் சுய நம்பிக்கை, சுயவிழிப்புணர்வு என்பன விருத்தி அடைந்து அவர்களின் ஆளுமையும் விருத்தியடைகின்றது.


இணை பாடவிதான செயற்பாடுகள்
தனியே பாடத்துறை சார்ந்த கற்றலை மேற்கொள்வதினால் மட்டும் ஆளுமையை விருத்தி செய்ய முடியாது. இணைபாடத்தின் ஊடாக சமூக நடத்தை, பழக்கவழக்கங்கள் தெரிந்து கொள்வதுடன் சமூகத்திற்கு ஏற்ற வகையில் வழிப்படுத்த உதவுகின்றது. பாடசாலையில் இடம்பெறும் கலை நிகழ்ச்சி, விளையாட்டுப்போட்டி, சாரணர் இயக்கம் முதலானவற்றில் ஆர்வத்துடன் பங்கு பெறுதல் மற்றும் செயற்திட்டங்கள் (கண்காட்சி, சிரமதானம், சுற்றுலா) பங்குபற்றுவதன் ஊடாக புதிய அனுபவங்கள், உற்சாகம், பொருந்தி வாழும் தன்மை, சேர்ந்து இயங்கும் தன்மை, விட்டுக் கொடுக்கும் தன்மை, தலைமைத்துவ பண்பு என்பன ஏற்படுகின்றது. பாடசாலைகளுக்கிடையிலான போட்டிகள் (இலக்கிய போட்டிகள், விளையாட்டுப் போட்டிகள், வினாடி வினாப் போட்டிகள், கலைப் போட்டிகள், பட்டிமன்றங்கள்) முதலானவற்றில் ஈடுபடுவதன் ஊடாக ஆளுமை விருத்தி மேம்பாடு அடைகின்றது.


நல்ல உறவுகளை உருவாக்குதல்
மாணவர்களுக்கு நல்ல நட்புகளை உருவாக்கி, அவற்றை கையாள கற்றுக்கொடுக்க வேண்டும். நல்ல நட்பானது சீரான வழிகாட்டலுக்கும், வெற்றிக்கும் உறுதுணையாகி அமைவது மட்டுமல்லாது பிரச்சனைகள் அல்லது தடைகள் நோக்கி செல்லாது நேர்வழியிலே செல்ல வழிகாட்டுகின்றது. மற்றும் உள்;ர், சர்வதேச மாணவர்களுடன் பரஸ்பர கலந்துரையாடல்களை (Exchange Programs) ஊக்குவிப்பதன் ஊடாகவே மொழி பரிமாற்றம், தொடர்பாடல் விருத்தி, கலாச்சார விருத்தி ஏற்படுவதுடன் ஆளுமையும் விருத்தியடைகின்றது.


நெறிப்படுத்தல் நடவடிக்கை
நேரம் எம் வாழ்வில் மிக முக்கியமாகின்றது. நேர மேலாண்மை (Time management) சரியாக பேணுவதன் ஊடாக பல விடயங்களை சரிவரச் செய்யவும், பல இன்னல்களை தவிர்க்கவும் உதவுகின்றது. நேரமேலாண்மையானது அன்றாட செயல்பாடுகளுக்கு நன்றாகவே உதவுகின்றது. எம் வாழ்வின் இலக்கை நிர்ணயித்து நடைமுறைப்படுத்துவதிலும் இதன்பங்கு அளப்பரியது.


தொழில்நுட்ப வளர்ச்சி
ஆரம்பத்தில் கூறியது போல இன்றைய உலகில் தொழில்நுட்ப வளர்ச்சி தடுக்க முடியாதாகிவிட்டது. இவ்வாறான போட்டி உலகில் எமக்கு இவை பற்றிய அறிவை மேம்படுத்தும் போது ஆளுமை நன்றாவே விருத்தியடைந்து செப்பனிடப்படுகின்றது. Computer Skills, Online Tolls பயன்பாடு, தொழில்நுட்ப கற்றல் முறைகள் (E-learning Platforms) கையாள்வதல், AI [Aritificial intelligence] பற்றிய அறிவு என்பன முக்கியமாகின்றன.


சமூக தொடர்பு திறன் மேம்பாடு
மாணவர்களுக்கு மக்களுடன் நெருங்கி இடைவினை (தொடர்பு) கொள்ளும் நிலை தற்போது உலகில் குறைவாகவே காணப்படுகின்றது. இவ்வாறான சந்தர்ப்பங்களில் ஆளுமை பாதிப்படையும். அதனால் மக்களுடன் நெருங்கிப்பழகி (Inter Personal Skills) மற்றும் (Communication Skills) உரையாடல் திறன், நம்பகத்தன்மை (Assertiveness), முறைசார் உரையாடல்(Formal Commuication) ஏற்படுத்திக் கொள்வதின் ஊடாக ஆளுமை விருத்தி மேம்படுகின்றது.


உளநல மேம்பாடு (மனநல மேம்பாடு)
தவறான உந்துதல்கள் மற்றும் தூண்டல்கள், தீய பழக்க வழக்கங்களை பின்பற்றுவதை தவிர்த்தல், சரியான மனவளர்ச்சியை கையாளுதல், அதாவது சூழ்நிலைக்கேற்ப உணர்வுகளை சரியான முறையில் வெளிப்படுத்தல். இதற்கு ஆசிரியர்கள், பெற்றோர்கள், பாடசாலை உளவளத்துணையாளரின் வழிகாட்டல் சிறந்தது. அத்துடன் பாரபட்சம், மூடநம்பிக்கைகளை தவிர்த்து அனைவரிடமும் அன்பு, நட்புடன் பழகுவதன் ஊடாக உளநலம் மேம்படுவதுடன் ஆளுமை விருத்தியும் அதிகரிக்கின்றது.


தன்னம்பிக்கையை வளர்த்தல்
பாடசாலைகளில் மாணவர்களின் திறன்களை பாராட்டுதல் மற்றும் ஊக்கப்படுத்தலின் மூலமாக தன்னம்பிக்கை வளர்கின்றது. மாணவர்கள் பங்கு பெறும் சிறு சிறு போட்டிகள், ஏன் நல்ல செயற்பாடுகள், பழக்கவழக்கங்கள், கருத்துக்களை முன்வைக்கும் சந்தர்ப்பங்களிலும் வாழ்த்துதல், கைதட்டுதல், புகழ்தல் என்பன மூலம் அவர்களின் தன்னம்பிக்கையை மேலும் அதிகரிக்க முடியும்.


பரிந்துரைகள், வழிகாட்டல்
முதியோர்களிடமிருந்து மற்றும் ஆசிரியர்களிடமிருந்து அவர்களின் கருத்துக்கள் மற்றும் வழிகாட்டல்களை மதித்து நடப்பது நல்லது. அது மட்டுமல்லாது வல்லுனர் பேச்சுகள் (Expert Talks) மற்றும் தொழில் முனைவோர்களின் சந்திப்புகள் முதலானவற்றில் பங்கு கொள்வதன் மூலம் ஆளுமை மேம்படுகின்றது.


ஆரோக்கியமான வாழ்க்கை முறை வழிகாட்டல்
உடல் நலம், உள நலத்தை பேணும் பழக்கவழக்கங்களினை (Healthy Habits) கற்பது சிறந்தது. தினசரி உடற்பயிற்சி செய்தல் மற்றும் யோகாசனம், தியானம், இஷ்ட தெய்வ வழிபாடுகள், இனிய இசை கேட்டல் என்பன மனதை ஒருநிலைப்படுத்த உதவுகின்றது. மனஅழுத்தத்தை (Stress) குறைக்கவும் இவை உதவுகின்றது.


திறன் வளர்ச்சி நடவடிக்கைகள்
குழுவேலை (Team Work) மூலம் தலைமைத்துவம் (LearderShip) மற்றும் ஒத்துழைப்புத் திறன் வளர்கின்றது. குழுச்செயற்பாட்டின் போது ஒற்றுமை, விட்டுக் கொடுப்புடன் பொறுப்புணர்வும் ஏற்படுகின்றது. தனிநபர் மற்றும் குழு அடிப்படையிலான திறன் பேச்சு (Pubilc Speaking); மற்றும் சிந்தனையாழ்வு (Critical Thinking) பயிற்சிகளை அதிகம் கற்றுக் கொள்வதன் ஊடாக ஆளுமை விருத்தி நன்றாகவே மேம்பாடு அடைகின்றது.


உதவும் திறன் வளர்ப்பு
முதலில் தனக்குத்தானே உதவும் திறன் உடையவராக இருத்தல் வேண்டும். தன்னை செயற்படுத்தல், கட்டுப்படுத்தல் மட்டுமன்றி தனக்குத்தானே உதவுபவராக காணப்படுதல் நன்று. அத்துடன் வகுப்பறை குழுச்செயற்பாடுகளில் மாணவர்களை தமக்குத் தாமே உதவும் குழுவுடன் இணைத்தல் மூலம் இவர்களிடம் இப்பண்பு வளர்கின்றது. இதனால் ஆளுமை விருத்தி அடைகின்றது.

இவ்வாறான பல்வேறுபட்ட உத்திகளின் அடிப்படையில் பாடசாலை மாணவர்களின் மத்தியில் ஆளுமை விருத்தி அடைந்து சமூகத்தில் ஆளுமை மிக்க நபராக திகழ வழிவகை செய்கின்றது.

ந.கோபிராம்.
உளவியல்துறை மாணவன்,
யாழ்பாணப் பல்கலைக்கழகம்.

Related posts

நீரின்றி அமையாது உலகு

Thumi202121

அவுஸ்திரேலியாவை வெள்ளையடித்த இலங்கை அணியின் இளம் சிங்கங்கள்

Thumi202121

தாய்மைகள் போற்றும் தெய்வத் தாய்மை

Thumi202121

Leave a Comment