இதழ் 78

உலகின் பேரழகின் இரகசியம் தெரியுமா?

இரசனை என்னும் ஒரு புள்ளியில் எத்தனையோ இதயங்கள் சந்தித்துக் கொள்கின்றன. கணந்தோறும் அப்படியான சந்திப்புகள் எங்கோ ஏதோ ஒரு வடிவில் நிகழ்ந்தவண்ணந்தான் உள்ளன. இரசனையின் அந்த முதல்புள்ளி எங்கிருந்து தொடங்குகிறது என்று என்னைக் கேட்டால் அது வண்ணங்களில் தான் ஆரம்பிக்கிறது என்பேன்.

வண்ணங்கள் – இயற்கை மனிதர்களோடு பேசும் மொழி. இரவும் பகலும் மாறி மாறி இயற்கை அந்த வண்ணங்களோடு விளையாடி எமக்குப் பல வேடிக்கை காட்டுகிறது.

வண்ணங்களின் இராஜகிரீடம் வானவில். பூமியை தான்தான் ஆள்வதாய் இயற்கை கர்வம் கொள்ளும் போதெல்லாம் அந்த கிரீடத்தை எடுத்து அணிந்து கொள்கிறது.

சூரியன் ஒரு வண்ணகலாவித்தகன். அவன் வரைகிற ஓவியங்களே உலகனைத்திலும் பரவி நிறைந்துள்ளன. அவன் அவிழ்த்துவிட்ட வண்ணங்களே பூமியில் கூடிக்குலாவி குழந்தை பெற்று குடும்பம் வளர்த்து எண்ணிலடங்கா வண்ணங்களாய் பெருகி நிற்கின்றன.

வண்ணங்கள் ஒளியின் பிள்ளைகள் தான். எல்லா வண்ணங்களிற்கும் ஒளி தேவைதான். ஆனால் சில ஒளிகளிற்கு சில நேரங்களில் வண்ணங்கள் தேவைப்படுகின்றன. எங்கெனில் இவ்விதழின் முன்னழகைப் பாருங்கள். ஓவியங்கள் நிறைந்த ஒளிவளர் விளக்குகளை காணுங்கள். வண்ணங்களாலான ஓவியத்திற்கு ஒளி தேவையா? அல்லது ஒளிக்கு ஓவியம் தேவையா என்று நின்று யோசிக்க வைக்கிறது அந்தக் காட்சி.

வண்ணங்கள் இல்லாத உலகை கற்பனை செய்து பாருங்கள். வேண்டாம்… நிறுத்துங்கள். வண்ணங்களலற்ற உலகை நீங்கள் கற்பனையில் கூட காண வேண்டாம். கற்பனையின் பேரழகே வண்ணங்களால் தான் நிறைந்துள்ளது.
வண்ணங்களற்ற உலகம் இங்கு யாருக்கும் வாய்க்க வேண்டாம்.

வெண்ணிலவையே ‘வண்ணங் கொண்ட வெண்ணிலவாய்’ வேண்டும் என்று கேட்ட பேராசைக் காரர்கள் நாம். வண்ணங்கள் அற்ற வாழ்க்கை யாருக்கும் அமையவேண்டாம்.
‘வண்ணங்கள் வண்ணங்கள் அற்ற
வழியில் வழியில் சிலர்
நடக்கிறார்…
நடக்கிறார்…
மஞ்சளும் பச்சையும் கொண்டு
பெய்து பெய்து மழை
நனைகிறார்..
நனைகிறார்..’

எல்லோர் வாழ்விலும் பெய்ய வேண்டும் அப்படியொரு வண்ணமழை.

இதில் முக்கியமானது என்னவெனில் வண்ணங்களின் இன்பத்தை அனுபவிக்க எந்தப் பட்டப்படிப்பும் தேவையில்லை. வண்ணம் சர்வதேச மொழி மட்டுமல்ல. சர்வ உடைமை மொழி.

மயிலைப்பாருங்கள். அது தோகை விரித்து ஆடும் வண்ணக்கூத்தைப் பாருங்கள். இதை விட எதை பேசுவதற்கு மயிலிற்கு மொழி வேண்டும்? அவை பேச வேண்டியதன் அவசியம் தான் என்ன? மொழியாலும் பேச முடியாத பரவசங்களை அவை தம் தோகையால் காட்டுகின்றனவே.

பறக்கும் பட்டாம்பூச்சி ஒரு மலரில் வந்தமரும் காட்சியை கண்டிருக்கிறீர்களா? வாழ்நாளின் இறுதி நாளிலாவது அதைக் கண்டுவிட்டுத்தான் நீங்கள் சாக வேண்டும். பூவோடு சங்கமிக்கும் வண்ணத்துப்பூச்சியின் வண்ணச்சங்கமம்- பூச்சிக்கும் பூவுக்கும் சிற்றின்பம்-கண்பவர்களிற்குத்தான் பேரின்பம்.

கருப்பையில் பிறந்து வரும் ஒவ்வொரு குழந்தையும் பூமியின் வண்ணக்கோலங்களை கண்டு நுகரவே கண்கொண்டு வருகின்றது. கண்ணற்று வந்து பிறந்துவிட்ட மழலைகளின் வண்ணங்கள் குறித்த கற்பனைகள் பற்றி எண்ணிப்பார்க்கவும் எம்மால் இயலாது. எம்மால் வண்ணங்களை பார்க்கமுடிந்தது. இரசிக்கமுடிந்தது. அந்த வண்ணங்களில் நனைந்து தோய்ந்தே வளர்ந்து வரமுடிந்தது. படைத்தவனிற்கும் காப்பவனிற்கும் நன்றி சொல்ல எமக்கு இந்த ஒரு காரணம் போதாதா?

சில நேரங்களில் வாழ்வு எங்கோ ஒரு இடத்தில் திசை மாறும் போதுதான் அது சாயம் போன வண்ணமாய் வாழ்வை வறளச் செய்கிறது. சாயம் போன அந்தவாழ்விலும் சாரமாய் எஞ்சியிருப்பது வண்ணமயமான சில ஈர நினைவுகள் தானே.

சாயம் போன ஓர் ஆணின் வாழ்க்கைக்கு வண்ணமூட்டுகிறாள் ஒரு பெண். பெண்ணின் வாழ்வில் ஊறிப்போன சில வண்ணங்களை திருத்தியமைக்கிறான் ஓர் ஆண். வண்ணங்களால் வாழ்வு அழகாகிறது.

ஆடி ஓடி உழைத்துக்களைத்த மனிதனை தன் மாயவித்தைகளை காட்டி -தன்னழகை அனுபவிக்க வைத்து -இயற்கை மனிதனை ஆட்சி செய்யும் மாதம் மார்கழிமாதம். இந்தமாதந்தோறும் வண்ணங்களின் கொண்ணாட்ட குதூகலங்கள் எல்லோர் வீடுகளிலும் ஏதோ ஒரு வடிவத்தில் நிறைந்திருக்கும். வாசல் நிரப்பும் மார்கழிக் கோலங்களாகவோ, மரமாய் ஒளிவீசும் கிறித்தவ கோலாகலங்களாகவோ எப்படியோ இந்த வண்ணக்குவியல்கள் வீடுகளை நிரப்பியிருக்கும் காலம் இது. வண்ணங்கள் வீடுகளில் நிறையும் போது மனங்களின் எண்ணங்களும் மகிழ்வில் நிறைகின்றன. வண்ணங்களின் அதீத ஆற்றல் அதுவே. அவை மனிதனிற்கு எல்லாவகையிலும் மகிழ்ச்சியை மட்டுமே தரவல்லன.

இந்த வண்ணங்களிற்கு எத்தனையோ விதமாய் வரைவிலக்கணம் கொடுக்க மனிதன் முயன்று பார்த்தான். சில வண்ணங்கள் எதிர்மறை எண்ணங்கள் என்றும் கூட சொல்லிப்பார்த்தான். கறுப்பு வண்ணம் துயரத்தின் குறியீடு என்றான்.
அந்தக் காக்கைச் சிறகினிலே நந்தலாலன் கரியமுகம் காணும் வரை…. குத்திக் கொல்லும் பார்வையிலே கொன்று தீர்க்கும் அவள் கருவிழிகள் காணும் வரை… வான் பார்த்த உழவன் கறுத்து நின்ற மேகக்கூட்டம் கண்டு களித்த வரை… கறுப்பை துயரமென்றே நம்பினான் மனிதன். வண்ணங்களை தன் வலைக்குள் சிக்கவைக்க மனிதப்பிறவியால் முடியுமா என்ன?

சிவப்பு நிறம்… அபாயம் என்றான். வீதியில் விரைந்து போகிறவனை நில் என்று சொல்ல சிவப்பை வைத்தான். ஓர் இடத்தில் ‘நில்’ என்று சொன்ன சிவப்பு இன்னோர் இடத்தில் ‘வா’ என்று சொன்னது. மனிதன் சிவப்பிடமும் தோற்றுவிட்டான்.

இனி நிறங்களில் குறை சொல்வானா மனிதன். நிறங்களில் கறையில்லை. கறை கண்டு குறை சொல்ல மனிதன் முயன்ற கதைதான் ஏராளம்.

கொச்சையான வார்த்தைகளையும் பச்சையாய்ச் சொல்வான். பாவமேதுமறியா பசும்புல்லின் தளிர் நிறம் பச்சைக்கு ஏன் இந்தப் பழி… அக்கரைக்கு இக்கரை பச்சை. இச்சை கொண்ட மனிதனிற்கு எக்கரையும் பச்சைதான். பழியை பச்சையில் போடாதீர்கள். உங்கள் இச்சையில் போடுங்கள்.

ஓவியத்திற்கு வண்ணம் தீட்டுவது போல் உலகிற்கு உங்கள் வண்ணங்களை தீட்டாதீர்கள். ஓவியங்கள் பேசாமல் உங்கள் வண்ணங்களை ஏற்றுக் கொள்ளும். உலகம் அப்படியல்ல.

மனிதர்களிடத்திலும் இயற்கையிடத்திலும் உள்ள வர்ணங்களை அதன் இயல்போடே இரசியுங்கள்.. அவை காட்டுகிற விசித்திரக்கோலங்களை கொண்டாடி நுகருங்கள். வண்ணங்களில் குழையுங்கள். திளையுங்கள்.. வாழ்வை வண்ணமயமாய் ஆக்கிக் கொள்ளுங்கள்..

Related posts

இலங்கை கிரிக்கெட் அணியில் சாதிக்கும் தமிழ் வீரர்கள்

Thumi202121

ஈழத்து மாணவன் கண்டுபிடித்த இலத்திரனியல் வாக்களிப்பு இயந்திரம்

Thumi202121

குழந்தைகளுக்கு வாழையிலையில் விருந்துண்ண கற்றுக் கொடுங்கள்

Thumi202121

Leave a Comment